தாகூரின் கோரா

gora

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அன்பு வணக்கங்கள். ஜாதிமதபேதத்திற்கு எதிராக அன்பைக் கோரும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் “கோரா” நாவல் வாசித்தேன். நாவலின் சாராம்சம் “மதச்சார்பற்ற அன்பு”. இரண்டு வருடங்களுக்கு முன்பு நவீன இலக்கியத்திற்குள் தங்கள் அறம், கொற்றவை, ரப்பர், காடு மூலம் நுழைந்து இப்போது வெண்முரசில் “வெய்யோன்” வரை வந்திருக்கிறேன். தினமும் தங்களின் இணைய எழுத்துக்கள் மேலும் மேலும் வாசிப்பின் இனிமையைத் தூண்டுகின்றன. தல்ஸ்தோயைப் போல தாகூரைப் போலத் தாங்களும் மனித இனத்தின்மேல் கருணைக்கண்கொண்டு எழுதுவதாகவே உணர்கிறேன்.

பாலாஜி பிருத்விராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் வாசித்து என் நிலைப்பாடு பின்வருமாறு மாறியது. உருவமில்லா மெய்மையே தெய்வம் என்றும் அதை நோக்கிய பயணத்தில் தன் சுகங்களைத் தியாகம் செய்து எத்தனை துயரங்கள் இடர்பாடுகள் வந்தாலும் உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்பவர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்றும். அதனால் நான்  தெய்வமாக வழிபடும் இயேசு, புத்தர், மேரி இவர்களெல்லாம் தெய்வத்திற்கு நிகரானவர்களாகிவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் மெய்மை நோக்கிச் செல்லுகையில் தன் இன்ப துன்பங்களை சகித்துக்கொண்டவர்கள். இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற எளிய மனிதர்களின் விழைவினால் உருவமில்லா மெய்மைக்கு உருவமாகியிருக்கிறார்கள் என்ற புதிய எண்ணம் தோன்றியிருக்கிறது.

இயேசுவைப் போல் பகைவனிடத்திலும் அன்புகாட்டுவதோ புத்தரைப்போல் ஆசையை அடக்குவதோ  மேரியைப்போல் பொறுமையும் மனத்திடனும் கொண்டிருப்பதோ எளிய மனிதர்களால் இயலாது. இனிமேலும் அவர்கள் இடத்தை யாராலும் நிரப்பவும் இயலாது. ஆனால் இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டிருப்பவர்கள் இவ்வுலகில் பிறந்து அறிஞர்களாகவும் கலைஞர்களாகவும் தத்துவவாதிகளாகவும் தலைவர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் இலட்சியவாதிகளாகவும் புரட்சியாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் வாழ்ந்து மனித குலத்திற்குத்தாம் செய்ய வேண்டிய கடமையாக தர்மமாக எண்ணி செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இவர்கள் அனைவருமே தெய்வத்திற்கு நிகராகக் கொள்ளக்கூடியவர்கள்.

இவ்வுணர்வெழுச்சியில் தன் வாழ்வை அடிக்கடி சுயபரிசோதனை செய்துகொண்டு மெய்மையை அடையும் இலட்சியத்துக்காகப் போராடிய காந்தி அவ்விடத்துக்கு உயர்கிறார். அதேபோல் தன் இனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவேண்டும் என நினைத்த மண்டேலா போன்ற பெருந்தலைவர்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கத்தக்கவர்கள்.

இவர்கள் போல் களத்தில் இறங்கி செயல்படாமல் மொழியாக்கங்கள் மூலம் உலக இலக்கியங்கள் படைத்தவர்கள், “எழுத்தாளர்கள்”. களத்தில் இறங்கி பணியாற்றுவதைவிட எழுத்தில் மெய்மையைக் காணச்செய்வது மிகமிகக் கடினம். நான்கூட நினைப்பதுண்டு. நம்மால் முடிந்த உதவியை ஒருதொண்டாக சேவைபோல் நினைத்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து பணிபுரிவோம் என்று. ஆனால் கோராவை வாசித்தபிறகு அது அவ்வளவு எளிதல்ல எனப் புரிந்தது. அத்தனை சேவையுள்ளமும் அறிவுத்தெளிவும் கொண்ட கௌர்மோகனாலேயே மனிதர்களை சமாளிக்க முடியவில்லை. ஏன் வலிந்து பிராமணன்  போன்ற தோற்றமுள்ள ஒருவன் நம்மிடத்திற்கு வந்து நமக்கு தொண்டாற்றவேண்டும் என சந்தேகிக்கிறார்கள். அவன் மதரீதியான பல விளக்கங்கள் அளித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

களத்தில் இறங்கிப் பணிபுரிபவர்களிடத்தில் இம்மாதிரியான சிக்கல்கள். தொண்டு என்பது ஏற்றுக்கொள்வோருக்கு மட்டுமானதல்லவே. ஆனால் எழுத்து மூலம் மனித இனத்திற்கு மெய்மையை உணர்த்தவேண்டும் என வந்துவிட்டால் அது அனைவருக்குமானது அல்ல நிச்சயமாக. மனதளவில் இளமை முதற்கொண்டே அதற்கென தாகமும் தேடலும் கொண்டவர்களுக்காக மட்டுமே. அவர்கள் எவ்வாறு மனிதர்களில் சாதிமதம் பார்ப்பதில்லையோ அவ்வாறே தன்மொழி பிறமொழியென பிரித்துப் பார்ப்பதில்லை. அவனுடைய குறிக்கோள் மெய்மை மட்டுமே.

ஆரம்பத்தில் நான் வாசிக்க வருகையில்  என் தாய்மொழியைத் தாண்டி அடுத்த மாநிலத்து ஆக்கங்கள் பிற நாட்டு இலக்கியங்கள், அவை தமிழில் இருந்தாலும்  அவற்றை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஆனால் தங்கள் மெய்மை நோக்கிய எழுத்து என்னை தமிழ்நாட்டைத் தாண்டி கேரள, வங்காள இலக்கியத்திற்கும் நம் பாரத தேசத்தைத் தாண்டி ரஷ்யதாகூர் இலக்கியத்திற்கும் அழைத்துச் சென்றது. தகழி சிவசங்கரப்பிள்ளை, ரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி, லியோ டால்ஸ்டாய், பியோதர் தஸ்தவ்யேஸ்கி இவர்களின் படைப்புகளுக்குள் நுழைந்தேன்.

பலநாட்களாக “கோரா” வை நூலகத்தில் அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு செல்வதோடு சரி. ஏனோ அந்த வார்த்தை எனக்கு அணுக்கமாகவில்லை. ஆனால் மூன்று மாதங்களாக பொறுமையுடன் “போரும் அமைதியும்” வாசித்து  வாழ்வின் முழுமைத் தரிசனத்தை நான் கண்டடைந்தபோது எனக்குள் எழுந்த பேரானந்தமும் மனவெழுச்சியும் இன்னுமின்னும் வாழ்க்கைத் தத்துவங்களை அறிவதிலேயே நாட்டம் கொண்டது.

காண்டீபம் அவ்வாறு மெய்மை நோக்கிய நாவல். அடுத்து வெய்யோனிலும் கர்ணனி்ன் பாத்திரப்படைப்பு இறுதியில் மெய்மை நோக்கியே நிறைவுபெறுகிறது. அடுத்த வரிசை நாவல் “பன்னிரு படைக்களம்” கைக்கு வருவதற்குள் கோரா என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆவலுடன் எடுத்து வந்து வாசிக்க ஆரம்பித்தேன். அது கல்கத்தாவில் வசிக்கும் கௌர்மோகனின் சுருக்கப்பெயர். அவன் ஒரு ஹிந்துவாக இருக்கும்போது  பாரததேசத்தைப் பற்றிய அவன் கொள்கைகளையும் தான் ஒரு ஐரிஷ்காரன் என்று தெரிந்ததும் மதத்தைப் பற்றி அவன் அடைந்த திறப்புக்களையும் வாசிக்கையில் உண்மையான விடுதலையின் அர்த்தம் புரிந்தது.

அவன் உயிர்நண்பனான வினயன் ஒரு பிராமணன். ஆனால் கோராவை மீறி, ஹிந்து சமூகத்தைச் சாராத பிரம்மசமாஜப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். இருவருக்குமிடையில் நிகழும் உரையாடல்கள் ஹிந்து சமூகத்திற்கும் பிரம்மசமாஜ சமூகத்திற்குமிடையே நடக்கும் உரையாடல்கள். ஹிந்து சமூகத்தில் ஆசாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என கோராவின் கூற்றிலிருந்து புலப்படுகிறது. கோராவின் அண்ணன் மஹிம் பாத்திரமானது என் பெண்ணின் திருமணம் நல்லவிதமாக முடியட்டும். அதன்பிறகு யார்வேண்டுமானாலும் எந்த மதம் வேண்டுமானாலும் மாறிக்கொள்ளுங்கள், என்று கூறுவதிலிருந்து சடங்கு சம்பிரதாயங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தெரியவருகிறது.

பிரம்மசமாஜத்துத் தலைவராக இருக்கும் ஹாரான்பாபு தன் சமாஜத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்யத்துணிகிறார்.  ஆனால் பிரம்ம சமாஜத்துப் பெண்கள் லலிதாவும் ஸுசரிதாவும் பிரம்மசமாஜ சமூகத்திற்கு எதிராக ஹிந்து பிராமணனான வினயனையும் எந்தமதமுமில்லாதவனாக மாறிவிடும் கோராவையும் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளில், சமூகத்தைவிட ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

tagore
இந்நாவலில் சமூகத்தைவிட சாதியைவிட மதத்தைவிட மனிதனே முக்கியம், அன்பே பிரதானம் என பிரம்மசமாஜத்துப் பெண்களின் குடும்பத்தலைவர் பரேசபாபுவும் அன்னையில்லா வினயனுக்கு அன்னை போன்றவளும்   பெற்றோர் இல்லாத கோராவை வளர்த்ததால் ஹிந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவளுமான பெண்மணி அனந்தமயியும் வாழ்ந்துகாட்டுகிறார்கள். பரேசபாபுவை தன் குருவாகவும் அனந்தமயியை தான் காணத்துடித்த பாரத தேசத்தாயாகவும் கோரா கண்டுகொண்டு அவர்களை வணங்கி அவர்களின் பாதத்தூளிகளைக் கொண்டபோது என் கண்களும் கலங்கியது.

இந்நாவல் இந்தியாவின் முக்கிய மதங்களைப் பற்றியும் மதங்களின்மேல் மக்கள் கொண்டிருக்கும் மூர்க்கமான பற்றைப் பற்றியும் பெண்கல்வி பற்றியும் பேசுகிறது. பெண்களின் பங்கு இல்லாமல் எந்த நாட்டையும் சீர்திருத்தவியலாதென கோரா கண்டுகொள்கிறான். இயல்பாக அது இந்நாவலில் நிகழ்கிறது. கோரா, வினயன், லலிதா, ராதாராணி இவர்களின் சமூகத்துடனான போராட்டங்கள் ஒவ்வொருவரையும் எது பெரிது எது உயர்வானது என சிந்திக்க வைக்கும். பரேசபாபுவும் அனந்தமயியும் தாகூர் கண்டடைந்த மெய்மையாளர்கள். ஒரு இனிய தருணத்துடன் நாவல் முடிவுற்றாலும் பரேசபாபு லலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்,  “திருமணத்திற்கு பிறகுதான் துணிவுதேவை. வாழ்வு முழுவதிலும் இத்தகைய தீரமான செயல்களை நடத்த வேண்டும். ஏனென்றால் சாகசத்துடன் தம் வாழ்வை புதுவழியில் திருப்பிப் புதிய பிரச்சனைகளை ஆராய்பவராலேயே சமூகம் உயர்வடையும்” என்று சொல்வதிலிருந்து அவர்களின் பிற்கால வாழ்க்கையில் சமூக நெருக்கடி தொடராமல் இருக்காது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில் இது எக்காலத்திற்குமான நாவலாக நிலைகொள்கிறது. எந்த சமூகத்தினராயினும் நுண்ணோக்குடையோர் இந்நாவலை வாசிக்கையில் ஓர் அகப்போராட்டம் நிகழும். அவர்களுக்கானது இந்நாவல்.

அன்பை நோக்கி அப்போராட்டம் முன்னகர்கையில் அக்கணம் எழுத்தாளன் வாசகனால் தெய்வநிலைக்கு நிகராக  உயர்த்திவைக்கப்படுகிறான். நான் இந்நாவலை வாசித்து கண்கலங்கியபோது மானசீகமாக தாகூர் அவர்களின் பாதங்களில் பணிந்து வணங்கினேன்.

அன்பு

கிறிஸ்டி.

முந்தைய கட்டுரைபயணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூல்களை அனுப்புதல்…