திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

saravanan

‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன். பழையகால தியானக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தபோது அந்தவரி கண்ணில் அறைந்தது. அதை ஏன் எழுதினேன், எங்கிருந்து பெற்றேன் என நினைவிருக்கவில்லை. ஆனால் சிலநாட்கள் அந்த வரி உடனிருந்து உழற்றிக்கொண்டே இருந்தது.

பின்னர் அவ்வரியை என் அனுபவங்களினூடாக ஆராயத்தொடங்கினேன். நான் துறவுக்குநிகராக அலைந்த நாட்களில் பார்த்தவர்கள் ஒருபக்கம் அனைத்தையும் விட்டு வந்தவர்கள், எவ்வகையிலோ மெய்மையை தொட்டவர்கள். அன்றேல் அதைநோக்கி எழுந்தவர்கள். மறுபக்கம் திரிபடைந்தவர்களும்கூட. துறவியையும் குற்றவாளியையும் உளநோயாளியையும் பிரித்தறிதல் மிகக்கடினம். மெய்த்தேடல் அவர்களை திரிபடையச்செய்தது என்றும், இவ்வுலகிலிருந்து அவர்களை விலக்கியது என்றும் அன்று எண்ணிக்கொண்டிருந்தேன். திரிபுகளால் இவ்வுலகிலிருந்து அகன்றதே அவர்களை அங்கே கொண்டுசென்றது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன். இரண்டுமே சரிதான்.

அன்றாடத்தின் அடுக்குத்தொடரான இவ்வாழ்வில் அதை அறிவது என்பதற்கே இடமில்லை. அறிவதற்குரிய விலக்கத்தை வாழ்க்கை அளிப்பதில்லை. விலக்கம் வந்தபின்னர் இயல்பாக வாழ்வது அமைவதுமில்லை. அவ்விலக்கம் சிலருக்கு அவர்களின் பிறப்பியல்பாலேயே அமைகிறது. பேரழகர்கள் விலகித்திரிபடைவதுண்டு. பெருங்குரூபிகளும் அவ்வாறு ஆவதுண்டு. எதிர்பாராத பெரிய அடிகள், உலுக்கும் தற்செயல்கள், உண்டுசெரிக்கவே முடியாத ஒவ்வாமைகள், துரத்தும் குற்றவுணர்வுகள் வழியாக திரிபடைந்தவர்கள் உண்டு. அவர்கள் முலைசுவைக்கச் செல்கையில் அன்னையால் உதைத்துவிரட்டப்பட்ட குழந்தைகள். அவர்களிலிருந்துதான் கடுங்கசப்பான அச்செடி முளைக்கிறது. மலரழகும் கனிச்சுவையும் கொண்டு அது முழுமைபெற மீண்டும் ஒரு நீண்ட பயணம் தேவையாகிறது.

திரிபிலிருந்து எழும் தேடலின் கதை சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன். இருவகையில் இக்கதை இதுவரை அவர் எழுதிய படைப்புகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டு மேலெழுந்திருக்கிறது. அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை. அவ்வகையில் வாசிப்பார்வத்தை ஊட்டுபவை. கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை.

மாறாக சுபிட்ச முருகன் ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று. அமைப்பு உள்ளடக்கம் என பலவகையிலும் அசோகமித்திரனின் மானசரோவர் என்னும் நாவலுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது இது

சுபிட்சமுருகனில் சரவணன் சந்திரன் நாவலுக்கு இன்றியமையாத படிமங்களினூடாகச் செல்கிறார். செயற்கையாக உருவாக்கப்படாது இயல்பாகவே படிப்படியாக விரியும் மையப்படிமம். நாவல் தொடங்குவதே மஞ்சள்மின்ன எழுந்து நின்றிருக்கும் ராஜநாகத்தில். மஞ்சள்மேல் பித்துகொண்டவளின் முகம். மஞ்சள்முகம். சொல்பொறுக்காது பொசுங்கியவள். முகம் மட்டும் கருகவில்லை. கரிய எரிந்த தேக்குக் கட்டையொன்றின் உச்சியில் மரப்பாச்சியின் மஞ்சள் பூத்த முகத்தைச் செதுக்கியிருந்த மாதிரிக் கிடந்தது உடல்” என ஒற்றைவரியில் கடந்துசெல்லும் குரூரமான ஒரு தருணம்.

பாம்புகளையே உணவாகக்கொண்டு வாழும் ராஜநாகம் எப்போதும் அவனுக்குப்பின்னால் உள்ளது. இறுதியில் விரியன்களை விழுங்கிப் பலிகொண்டு அடங்குகிறது. இந்நாவல் இதன் சுருக்கமானச் சித்தரிப்பால் சொல்லாமல் விட்ட அனைத்தையும் வாசகன் முழுமைசெய்துகொள்வது இப்படிமத்தின் நுண்மையான பரிணாமத்தால்தான். இந்நாவல் சரவணன் சந்திரனின் பிறநாவல்கள் எதிலுமில்லாத அளவுக்கு உளக்கொந்தளிப்புகளை கனவென்றும் நினைவோட்டமென்றும் சொல்லிச்செல்கிறது. அவையனைத்தும் இந்த மையப்படிமத்தை மேலும் மேலும் பெருக்குகின்றன. தன்னைத் தான் ஊதிப்பெருக்கி எழுந்து நின்றிருக்கிறது ராஜநாகம்

பிறிதொன்று, இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

கதிரென விளைவது மண்ணில் உப்பென இருக்கிறது என்பார்கள். ஒரு தனிமனிதனில் அவன் ஊழ் என்று குவிவது தலைமுறை தலைமுறையாக உறுத்து வந்து சேர்கிறது. குலமூதாதையரில் ஒருவரில் தோன்றிய கூடாக்காமம் அவரில் வஞ்சமாக எழுந்தது. கசப்புகளாக, ஐயங்களாக, வன்மங்களாக உருமாறியது. இறப்புகளும் இழப்புகளுமாக தன்னைப் பெருக்கிக்கொண்டது. அக்குடியைச் சூறையாடி அவனில் இனி என்ன என்று வந்து நின்றிருக்கிறது. அவனை மோதிச் சிதறடித்து பிறிதொருவனாக ஆக்குகிறது.

குற்றவுணர்வின் உச்சம். அது தனியொருவனின் குற்றவுணர்ச்சி அல்ல, ஒரு குலத்தின், தலைமுறை அடுக்குகளின் குற்றவுணர்ச்சி. அவனில் அது உடற்செயலின்மையாக வெளிப்படுகிறது. நேரடியாகப் பார்த்தால் குற்றவுணர்ச்சியால் உடல்தளர்வது என விளக்கலாம்தான். ஆனால் அது குறியீடென மேலும் பொருள்பெறுகிறது. மிக நுண்மையான ஒன்றின் அழிவு. உடலை உள்ளம் கைவிடுவது அது. உடல் வெறும் உடல்மட்டுமேயாகி நின்று திகைக்கிறது. வெறும் உடலென்கையில் எத்தனை அபத்தமான ஒரு பிண்டம் தான் என அறிந்து பதைபதைக்கிறது

அதைவிட காமம் என்பது மிகமிக ஆழமாக பிறிதொருவருடன் உறவு கொள்ளும் ஆற்றல் அல்லவா? அதை இழந்தவன் அடையும் தனிமையைப்போல் பிறிதொன்று உண்டா? அனைத்துவாயில்களும் சுவரென்று ஆகி மூடிக்கொள்ள உள்ளே சிக்கிக் கொண்டவன் அல்லவா அவன்? நினைவுகளை மீட்டி அவன் தன் உடலை வெளியே இருந்து திறந்துகொள்ள முயல்கிறான். கனவுகளைக்கொண்டு உள்ளே இருந்து உடைத்தெழ முயல்கிறான். தொடர்புறுவதற்கு அவன் கொள்ளும் அத்தவிப்பினால்தானே பெண்ணின் தொடுகைக்கு, கூந்தல் மணத்துக்கு அவன் அலைவது. உடல்திறந்து வெளியேற உயிரும் உடலும் கொள்ளும் தத்தளிப்பு அது. அனைத்துச் சுவர்களையும் உள்ளிருந்து முட்டிமுட்டி தலையால் அறைந்து ஓசையின்றி கூச்சலிடுகிறது.

அந்தத் திரிபின் உக்கிரமான சித்திரத்தை விரைவான சொற்களில், சுருக்கமான விவரணைகளினூடாகச் சொல்லிவிட்டதென்பதனால்தான் சுபிட்சமுருகன் ஓர் இலக்கியப்படைப்பாக மாறுகிறது. அந்தப் பெருந்துன்பம் வழியாகக் கடந்துசென்று கனிகிறது இப்பயணம். கனியாகும் மலர் ஒருபகுதியை அழுகி உதிர்த்துவிடுகிறது. எத்தனை இடங்களில் அடிபட்டு சிதைந்துச் சிதைந்து எஞ்சுகிறது அவன் அகம் என்று பார்க்கையில் அவன் வாங்கும் அந்த அடிகளனைத்தும் ஒரு தியானத்தின் படிநிலைகளோ என எண்ணத் தோன்றுகிறது. சிலர் உள்ளே அவ்வடிகளை வாங்கக்கூடும். அவன் தசைகளிலும் எலும்புகளிலும் பெற்றுக்கொள்கிறான்

supi

விரிவாக எழுந்துவரக்கூடும் காட்சிகளையும் ஒற்றைவரியாகச் சொல்லிச் செல்வது சரவணன் சந்திரனின் புனைவெழுத்தின் வழியாக உள்ளது. .பாடையில் தூக்கிக் கொண்டு போன போது தலையைக் குலுக்கி ஆட்டினாள் அத்தை. “காடு சேர மாட்டேங்குறா” என தலையைக் கயிற்றை வைத்துக் கட்டினார்கள் – என நினைவிலிருந்து எழும் ஒரு காட்சிக்கீற்று. உடையப்பன் ஓங்கிக் குரலெடுத்து குத்த வைத்து அழுதான். “எல்லா பயகல்கிட்டயும் அடிவாங்குற இந்தப் பொழப்பு எனக்கு பிடிக்கலையே. ஆஞ்சநேயா என்னைத் தொரத்தி விட்டுருப்பா. நான் என்ன விரும்பியா செய்றேன்” என அகம் வெளிப்படும் ஒரு தருணம். இவற்றினூடாக எளிதாக ஒழுகிச்சென்று நாம் சேரும் ஓரிடமே இக்கதையின் ஆழம்.

அரிதாகவேனும் அபத்தமும் அங்கதமும் வெளிப்படும் தருணங்களும் இந்நூலில் உண்டு. இயலாதுபோன துயரின் உச்சிநின்று தொலைக்காட்சிச் செய்திவாசிப்பாளரான தன் இணையிடம் “இடுப்பில் புண்ணோடு வந்து படுத்துக் கொண்டு தத்துவம் பேசுகிறார். உடன் இருப்பவர்களையும் பயத்தில் ஆழ்த்துகிறார். நாளை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று செய்திவாசிக்கச் சொல்பவன் தன்னைத்தானே நோக்கி எள்ளிச்சிரிக்கும் தருணம் ஓர் உதாரணம்

எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்றவரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு.

மறுபிறப்பு என்பது மீண்டும் ஒரு கருப்புகுதலுக்குப் பின்னர், மீண்டுமொரு பேற்றுநோவுக்குப்பின்னரே இயல்வது. ’வானில் சூல் கொண்டிருந்த கரும் பானை வெடித்துச் சிதறியது. மின்னல் வெட்டிய வானம் வெள்ளை வேட்டி போல ஒளிப் பிரவாகமானது. ஒளியே மூலம். தனிப் பெரும் கருணை. எதுவாக? மழையாக இருந்தேன் அப்போது’ என நிறைவடைகையில் வட்டச்சுழல்பாதை மையத்தை அடைந்துவிட்டிருக்கிறது. அதன் விசை என்பது மையத்தை அடைவதற்கானதுதான்

ஜெயமோகன்

சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன் நாவலுக்கு எழுதிய முன்னுரை

சுபிட்ச முருகன் வாங்க

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

முந்தைய கட்டுரை’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?
அடுத்த கட்டுரைஅஞ்சலி- ந.முத்துசாமி