பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

ஹாவ்லக் எல்லிஸ்
ஹாவ்லக் எல்லிஸ்

தி.ஜானகிராமன் விக்கி

சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கிறார்கள். அவர்களில் சிலரே அடுத்தகட்ட வாசிப்புக்கு வருகிறார்கள்

 

இன்று எழுதுபவர்கள் தாங்கள் துணிச்சலாக எழுதுபவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் அவ்வாறு  ‘துணிந்து’ எழுதுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அத்துணிவான எழுத்து இருபதாண்டுகளுக்குள் சாதாரணமாக ஆகிவிடுகிறது, அடுத்த தலைமுறை வந்து மேலும் துணியவேண்டியிருக்கிறது.

 

உண்மையில் இதில் துணிவென்று ஏதும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் சமூகவெளியில் பாலியல்வெளிப்பாட்டுக்கு ஒர் எல்லை ஒருவகையான பொதுப்புரிதலாக உருவாகி நிலைகொள்கிறது.. அந்த எல்லையை எந்த அளவுக்கு மீறவேண்டும் என்பதை அந்தப்படைப்பின் ஆசிரியன் முடிவெடுக்கிறான். அதற்கு அளவீடாக இருப்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கவேண்டும் என்ற கணிப்புதான்.

 

உதாரணமாக, மென்மையான உள்ளமோதல்களைச் சொல்லும் ஒரு காதல்கதையில் அப்பட்டமான உடலுறவுக்காட்சி விரிவாக விவரிக்கப்பட்டிருந்தால் அதன் அழகியல் ஒருமை சிதையும். வாசகனிடம் உருவாக்கும் அதிர்வு அந்த படைப்பை அந்த பாலுறவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கவைக்கும். அவனுக்கு அதிர்ச்சியை அளித்து அதிலுள்ள நுண்மையான காட்சிகள் அவனுடன் தொடர்புறுத்தமுடியாமல் செய்யும். மென்மையான வண்ணங்கள் நடுவே அடர்வண்ணங்களைச் சேர்ப்பதுபோலத்தான் அது. எந்த வண்ணத்தையும் ஓவியத்தில் பயன்படுத்தலாம். எவ்வாறு கலக்கிறோம் என்பதே கேள்வி.  இ

 

இந்த அளவீடு மாறிக்கொண்டே இருக்கும் விதம் வியப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கவிதைகளில் உடல்வர்ணனைகளும் உடலுறவு வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. தமிழிலும் சரி, சம்ஸ்கிருதத்திலும் சரி பெண்ணுடலின் வர்ணனைகள் கட்டற்று சென்றிருக்கின்றன. மானின் குளம்புபோல என பெண்குறியை வர்ணிக்கும் இடம்வரை. ஆனால் எங்கும் ஆண்குறி வர்ணனை இல்லை. ஏனென்றால் அது அன்றைய சமூகத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். சுவைத்திரிபு உருவாகியிருக்கலாம்.

 

நவீன இலக்கியம் உருவானபோது பாலியலெழுத்து கடுமையான தணிக்கைக்கு உள்ளானது – வாசகனாலும் எழுத்தாளனாலும். ஆகவே இடக்கரடக்கல்கள் உருவாயின. அன்றைய விக்டோரிய ஒழுக்கவியல் ஒரு காரணம் என்றாலும் அதைவிட முக்கியமான காரணம் நவீன இலக்கியம் அச்சு வழியாக மேலும் பரவலாகச் சென்றது, இன்னும் பெரிய மேடையை அடைந்தது என்பதுதான். பழங்காலக் கவிதைகள் சிறிய அரங்குகளுக்கும், அவைகளுக்கும் உரியவை. அங்கே கவிச்சுவை நுகரவந்த அறிஞர்களே இருந்தனர். நவீன இலக்கியத்தில் பொதுமக்கள் வாசகர்களாக அமைந்தனர். ஆகவே ‘தெருவில்நின்று’ பேசுவனவே இலக்கியத்திலும் அமையவேண்டும் என்ற உளநிலை அமைந்தது.

 

ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்த எல்லையை முட்டி விரிவாக்கிக் கொண்டே இருந்தது. தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.

 

ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் ஒரு காட்சி சற்று அழுத்தமான பாதிப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பும் எழுத்தாளன் முன்பு எழுதப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட சற்றே முன்னகர்ந்து அதைச் சித்தரிப்பான். மிகவும் முன்னகர்ந்துவிட்டால் அது சுவைத்திரிபு ஆகிவிடுமென்றும் அறிந்திருப்பான். நம் சமூகத்தின் அளவுகோல் மேலைநாடுகளை விட இன்னும் இறுக்கமானது. ஆகவே நாம் பாலியலை எழுதும்போது மேலைநாடுகள்போல எழுதுவதில்லை. எழுதினால் அது அதைமட்டுமே பேசும் நாவலாக ஆகிவிடும். ஒரு ஓவியத்திரைச்சீலையில் நீலமோ. கருமையோ கையாளப்பட்டால் அந்த ஓவியத்தின் மையநிறமே அதுவாக இருக்கவேண்டும் என்பதுபோல. ஆகவே பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்

 

ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைபேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல்வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும் அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் வாசிக்கத்தக்கவை

 

உதாரணமாக ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உளஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாக காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக்கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே.

 

ஆனால் பாலியல் அறியாமையின் வெளிப்பாடுகள் நிறைய. சமீபத்தில்  கர்நாடகத்தில் அருவிப்பயணத்தின்போது காரில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு சென்றோம். நான் ஜெயகாந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதைச் சொன்னேன். ‘பெண்களுக்கு காமத்தில் உடலின்பம் கிடையாது, உள்ளத்தால்தான் இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்றார் ஜெயகாந்தன். அவரை நேரில் மறுக்கமுடியாது. நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் ஓர் இடம் வரும். பெண்களுக்குப் பாலியல் இன்பம் என்பது உடலில் அல்ல ‘அய்யோ இந்த ஆம்புளைக்கு என்னாலே எவ்ளவு சந்தோஷம்’ என்று நினைப்பதில்தான் என்கிறார் ஆசிரியர்.

 

இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எண்பதுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். எழுபதுகளில் டாக்டர் பிரமிளா கபூர் என்ற ஆய்வாளர் தன் மாணவிகளைக்கொண்டு ஒரு பாலியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினார். இந்தியப்பெண்களில் மிகப்பெரும்பான்மையின பாலுறவுச்சம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என்றது அந்த ஆய்வு. பலர் வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட அதை அடையாதவர்கள். ஆண்களில் அனேகமாக எவருக்கும் அப்படி ஒன்று பெண்களுக்கு உண்டு என்றே தெரியாது.அன்று மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு அது

Alfred_Kinsey_1955
கின்ஸி

 

இன்றும் அதே அறியாமை நிலவுகிறது. சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி நாவலில் ஒரு  ‘பாலியல்வித்தகன்’ ஒரு ‘கள்ளமில்லா’ பெண்ணுக்கு தன்னின்பம் செய்துகொள்ள தொலைபேசி வழியாகக் கற்றுக்கொடுக்கிறான்.அவன் சொல்லும் அந்த  ‘நுட்பமான’ வழி என்பது சுட்டுவிரலை உள்ளே விட்டு அசைப்பதுதான்.பெண்களுக்கு பெண்குறியின் உட்பகுதியில் நுண்ணுணர்வே இல்லை என்றும், பெண்கள் தன்னின்பம் கொள்ளும் வழிகளே வேறு என்றும் அந்த திறனாளனுக்குத் தெரியவில்லை. இதை அப்போது அந்நூலுக்கு எழுதிய மதிப்புரையிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

பெரும்பாலும் எளிமையான பாலியல்புனைகதைகளில் இருந்தே தமிழ் இளைஞன் பாலியலறிவை அடைகிறான். அவை ஆண்களின் பகற்கனவை சீண்டும்பொருட்டு எழுதப்படுபவை.  எழுத்தாளன் என்பவன் சற்றேனும் முறையாக பாலியலைக் கற்றிருக்கவேண்டும். எண்பதுகளில் நான் வாசிக்கவந்தபோது மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்

 

அந்த இருபெயர்களையுமே இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தமையால்தான் இந்தக்குறிப்பு.அவர்களைப்பற்றி எவரும் தமிழில் எழுதியும் நான் வாசித்ததில்லை. எண்பதுகளின் இறுதியில்நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்திலேயே அவர்களின் நூல்களை தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேன்.

 

ஹென்றி ஹாவ்லக் எல்லிஸ் [Henry Havelock Ellis 1859 – 1939] உளவியலுக்கு ஃப்ராய்ட் எப்படியோ அப்படி பாலுறவியலுக்கு முன்னோடியான அறிஞர். லண்டனில் பிறந்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவர். பொதுவாக இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்தார்.கார்ல். மாக்ர்ஸின் மகள் எலியனேர் மார்க்ஸ் எல்லிஸின் அறிவுலகத் தோழமைகளில் ஒருவர். பெர்னாட் ஷாவுடனும் தொடர்பிருந்தது.ஒருபாலுறவைப் பற்றிய தன் முதல் நூலை இன்னொருவருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் எழுதினார். பின்னர் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

 

பாலுறவு குறித்து அன்றுவரை இருந்த பெரும்பாலான நம்பிக்கைகளும் புரிதல்களும் மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. அது ஒரு மானுடச் செயல்பாடு என்றவகையில் தரவுகளின் அடிப்படையில் புறவயமாக அதை அணுகவேண்டும் என்ற கண்ணோட்டமே எல்லிசை ஒரு மாபெரும் முன்னோடியாக ஆக்கியது. தரவுகளைச் சேர்த்து அறிவியல் முறைமைப்படி ஆராய்ந்தபோது ஏராளமான பழைய நம்பிக்கைகள் சிதைந்தன. குறிப்பாக பெண்களின் பாலுணர்வு, பாலுறவுச்சம் குறித்த புதிய கொள்கைகள் வெளியாயின.

 

உதாரணமாக கந்து [ clitoris] பெண்களின் பாலுறவுவிருப்பத்தின் மையம் என்ற நம்பிக்கை அன்று இருந்தது. அது ஓர் நரம்பு முடிச்சே ஒழிய மையமல்ல என்று எல்லிஸின் ஆய்வுகள் காட்டின. பெண்களின் பாலுணர்வில் அவர்களின் பெண்ணுறுப்பின் உட்பகுதிகள் எவ்வகையிலும் பங்கெடுக்கவில்லை என்று நிறுவின. ஒருபாலுறவு போன்றவை உளப்பிறழ்வுகளோ தீயபழக்கங்களோ அல்ல, இருபாலுறவுபோலவே இயல்பான மூளைசார்ந்த தனிவிருப்பங்கள்தான் என்றும், புறத்தே தெரிவதைவிட ஒருபாலுறவு சூழலில் அதிகம் என்றும் அவருடைய ஆய்வுகள் காட்டின. அக்காலத்தில் எல்லிஸின் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆபாச இலக்கியம் படைத்தமைக்காக அவர் சட்டநடவடிக்கைக்கும் உள்ளானார்.

 

எல்லிஸின் ஆய்வுகளை நிறுவன உதவியுடன் மிகவிரிவான முறையில் ஆய்வுசெய்து அறிக்கைகளை உருவாக்கியவர் ஆல்ஃப்ரட் கின்ஸி. Alfred Charles Kinsey  [ 1894 –  1956] . அமெரிக்க உயிரியலாளர்.  1947 இவர் இண்டியானா பல்கலையில் நிறுவிய பாலுறவியல் ஆய்வு நிறுவனம் மானுடரின் பாலியல்பழக்கவழக்கங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டது. இது  Kinsey Institute for Research in Sex, Gender, and Reproduction என அழைக்கப்பட்டது. தன் மாணவர்களையும் தொழில்முறை தகவல்சேகரிப்பாளர்களையும் கொண்டு பெருமளவில் தரவுகளைச் சேகரித்து ஒருங்கிணைத்து தன் கொள்கைகளை உருவாக்கி முன்வைத்து  நிறுவினார் கின்ஸி.

 

Sexual Behavior in the Human Male (1948) மற்றும்  Sexual Behavior in the Human Female (1953) ஆகிய இரு நூல்களும் கின்ஸி அறிக்கைகள் என்றபேரில் பொதுவாக சமூக, மானுடவியல் அறிஞர்கள் நடுவில்கூட பெரிதாக வாசிக்கப்பட்டன. அன்று திருவனந்தபுரம் தெருக்களிலேயே போலிப்பதிப்பாக இவை வாங்கக்கிடைத்தன. உலக அளவில் மானுடப் பாலியல்பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடி வழிகாட்டிகளாக இவை கருதப்படுகின்றன. சட்டம், ஒழுக்கவியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின

 

 

கின்ஸியின் கணக்கெடுப்புகளைப் பற்றி பலவகையான ஐயங்களும் மறுப்புகளும் பின்னர் உருவாயின. அவர் நோயாளிகளையும் குற்றவாளிகளையும் தனியாகப்பிரித்து கணக்கிடவில்லை. பெரும்பாலும் வித்தியாசமான பாலுணர்வும் பழக்கங்களும் கொண்டவர்களை நேர்காணல் செய்தார். பாலுறவு குறித்த செய்திகளை அளிப்பவர்கள் நேர்மையாக சொல்லவேண்டுமென்பதில்லை, பலசமயம் அவர்கள் மிகையாக்கவோ நியாயப்படுத்தவோதான் பேசுவார்கள் – இவ்வாறெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றுவரை மானுடப்பாலுணர்வு குறித்து அறிவியல்நோக்கில் உருவாகியிருக்கும் பெரும்பாலான புரிதல்களுக்கான தொடக்கம் கின்ஸிதான்.

 

இன்று இவ்வறிதல்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. உடற்கூறியலில் பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. நரம்பியல் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாலியல்கல்வியின் தேவை உலகளாவ உணரப்பட்டிருக்கிறது. பாலியல் நிபுணர்கள் ஊடகங்களில் தோன்றி விளக்குகிறார்கள். பாலியல் அறிதல் பரவலாகியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் பாலியல்தளங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. இவை பாலுறவியலுக்கு நேர் எதிரான பகற்கனவு சார்ந்த புரிதலை உருவாக்குகின்றன. அவற்றைத்தான் இளைஞர்கள் மிகுதியாக பார்க்கிறார்கள். வருத்தமென்னவென்றால் எழுத்தாளர்களும் அவற்றையே பார்த்துக் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய், அறம், கலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21