நூல்களை அனுப்புதல்…

sura

அன்புள்ள ஜெ

இணையச்சூழலில் ஒரு விவாதம். நண்பர்கள் நடுவே அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அனுப்புவது சரியா என்று. சிலர் நூல்களை சினிமாக்காரர்களுக்கு அனுப்புகிறார்கள், அதெல்லாம் இழிவு என்று பேசப்பட்டது. நூல்வெளியீட்டுவிழாக்களே தவறு என்று ஒரு பேச்சு ஓடியது. நானெல்லாம் நூல்களை எவருக்குமே அனுப்பியதில்லை என்று ஒருவர் சொன்னார். நான் என் கவிதைத் தொகுதியை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். நீங்கள் பதிலும் போட்டிருந்தீர்கள். ஆனால் அதை என்னை முன்னிறுத்தும் செல்ஃப் புரமோஷன் என நினைக்கிறீர்களோ என்று சந்தேகமாக இருந்தது. ஆகவே இந்தக்கடிதம்

செந்தில்குமார்

gnanani

அன்புள்ள செந்தில்குமார்,

1985 ல் நகுலன் எனக்கு அவருடைய நூல் ஒன்றை அனுப்பியிருந்தார். நான் சங்கடத்துடன் சுந்தர ராமசாமியிடம் அதைப்பற்றிச் சொன்னேன்.  புன்னகைத்து, “அவர் வேற என்ன செய்வார், அவரே அச்சடிச்சது, மட்கிப்போறதைவிட யாராவது படிச்சா நல்லதுதானே?” என்றார்.

அதுதான் அன்றைய நிலை. பெரும்பாலான நூல்கள் ஆசிரியரால் வெளியிடப்படுபவை. குறைந்தது 400 பிரதி அச்சிடவேண்டும். 100 பிரதிகளை கடைகளுக்குக் கொடுக்கலாம். எஞ்சியவை தெரிந்த வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும்தான்.

இலக்கியம் ஓர் அகங்கார அடையாளம் அல்ல. அது ஒரு அறிவுச்செயல்பாடு. அப்படி நம்பினீர்கள் என்றால் பிறருக்கு அளிக்க என்ன தடை? ஓர் இயக்கச்செயல்பாட்டில் நீங்கள் துண்டுப்பிரசுரத்தை அளிக்கமாட்டீர்களா என்ன? எத்தனை பேர் படிக்கிறார்களோ அத்தனை நன்று என்றுதானே நினைப்பீர்கள்? உங்கள் எழுத்தைப் பரவலாக்குவதென்பது உங்களுக்குப் புகழ்தேடுவது மட்டும்தானா? அது உங்கள் எண்ணத்தைப் பரப்புவது, உங்கள் செயல்பாட்டை விரிப்பதும்கூடத்தானே? முதன்மையாக அது ஒரு பண்பாட்டுச்செயல்தானே?

 நாஞ்சில்நாடன்
நாஞ்சில்நாடன்

இல்லை, நான் இலக்கியப்படைப்பை அளித்தால் என்னை குறைவாக நினைப்பார்கள் என்பதெல்லாம் தாழ்வுமனப்பான்மை. தன் படைப்பைப்பற்றி தன்னம்பிக்கை கொண்டவர்கள் எங்கும் தன் நூலுடன் சென்று நிற்க முடியும்.

மூத்த எழுத்தாளர்களுக்கு நூல்களை அனுப்புவது, கைப்பிரதியை அனுப்புவது, அவர்களின் கருத்துக்களைக் கேட்பது எல்லாம் உலகமெங்கும் இலக்கியச் சூழலில் நிகழ்ந்து வருபவை. இலக்கியம் என்பது ஓர் ஒட்டுமொத்தச் செயல்பாடு என அறிந்தவர்கள் முந்தையோரின் கருத்துக்களைச் செவிகொள்வார்கள். அதற்காக முயல்வார்கள்.

மலையாள எழுத்தாளர் ஆனந்த் தான் எழுதிய முதல்நாவலின் கைப்பிரதியுடன் எம்.கோவிந்தனைப் பார்க்கச்சென்ற கதை கேரளத்தில் புகழ்பெற்றது. ஆனந்த் அதுவரை எதுவுமே எழுதியதில்லை. அவருக்கு தென்னிந்தியாவில் எவரையுமே தெரியாது. கோவிந்தனைப் பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தார். வீட்டில் கோவிந்தன் இல்லை. கைப்பிரதியை சன்னல் வழியாக உள்ளே போட்டுவிட்டுச் சென்றார். அவரிடம் மாற்றுப்பிரதிகூட இல்லை. கோவிந்தன் அதை வாசித்து, பிரசுரிக்க முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனந்த் எழுத்தாளராக அறிமுகமானார்.

பாவண்ணன்
பாவண்ணன்

நான் எழுதவந்தபோதே பிரசுர நிறுவனங்களின் பின்புலம் அமைந்தது. ரப்பர் நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. 10 பிரதிகள் அளிப்பார்கள். அவற்றை ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, ஞானி, நாஞ்சில்நாடன், அசோகமித்திரன் என என் மதிப்புக்குரியவர்களுக்கு உடனே அனுப்பிவைப்பேன். பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர் என ஒரு எழுத்தாளச் சுற்றமும் அன்றிருந்தது. பிரதிகள் போதாது. எனவே மேலும் பிரதிகள் காசுகொடுத்து வாங்குவேன்.

ஆனால் நான் நூல்களை இதழ்களுக்கு மதிப்புரைக்கென அனுப்பியதே இல்லை. அது கூடாது என்று அல்ல. அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன். எனக்கு அதைச்செய்ய அன்று தோன்றவில்லை. இன்று அவசியமில்லை.

நூல்களை முக்கியமான மனிதர்களுக்கு அனுப்பலாமா? அவர்கள் உங்களுக்கு எவ்வகையில் முக்கியம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. வாசகர் என எண்ணும் ஒருவருக்கு, அன்பின்பொருட்டு அளிப்பதில் பிழை ஒன்றுமில்லை. வாசிக்கும் வழக்கமில்லாத பெரியமனிதர்களை நயம்செய்யும்பொருட்டு அனுப்புவது பயனற்றது, சொல்லப்போனால் சிறுமையையே அளிக்கும். அவர்களுக்கு உங்கள் நூல்கள் எவ்வகையிலும் முக்கியமாகத் தோன்றாது.

nirmalyaa

நான் அவ்வாறு எந்தப் பெரியமனிதருக்கும், சினிமாக்காரருக்கும், அரசியல்வாதிக்கும் நூல்களை அனுப்பியதில்லை.  அவர்களில் வாசிக்கும் வழக்கம் கொண்டவர்கள் நூல்களைப் பணம்கொடுத்து வாங்கி வாசிப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.

மூன்று உதாரணங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் என்மேல் மதிப்பு கொண்டவர். என் நூல்களை உடனே வாங்கிப்படித்து கடிதங்களும் எழுதுவார். அவருக்கு நூல்களைச் சிபாரிசு செய்ய ஒரு குழுவே இருந்தது. மணிரத்னம் அவருக்குத்தேவையான நூல்களை உடனே வரவழைத்து தீவிரமாகப் படித்துவிடுவார், வாயே திறக்கமாட்டார். கருப்பையா மூப்பனாரும் நூல்களை வாங்கி வாசிப்பவர். அவருக்கும் நூல்களை பரிந்துரைக்க குழு உண்டு. பிறர் அனுப்புவதனால் அவர்கள் நூல்களை வாசிப்பதே இல்லை.

சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நாஞ்சில்நாடன் அவருடைய எல்லா நூல்களையும் எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார். என்னுடன் மனத்தாங்கலில் இருந்தபோதும் சுந்தர ராமசாமி எல்லா நூல்களையும் எம்.எஸ். வசம் கொடுத்தனுப்பியிருக்கிறார். தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் அவர்களின் நூல்களை எனக்கு அனுப்புவதுண்டு. யுவன் சந்திரசேகர் அவன் நூலை எனக்கு அனுப்பாவிட்டால் கூப்பிட்டு நாஞ்சில்நாட்டுக் கெட்டவார்த்தையே சொல்வேன்.

என் நண்பர் நிர்மால்யா [மணி] என் நூல்களை அனுப்பிப் பெறுவது ஓர் உரிமை என்றே நினைப்பவர். அத்தனை நூல்களையும் அனுப்பியிருக்கிறேன். முறைப்படி வந்துசேராவிட்டால் மனத்தாங்கல் அடைவார். அவரளவுக்கே எனக்கு அணுக்கமானவரான நண்பர் அன்பு எல்லா நூல்களையும் வாங்கிப்படிப்பார். இன்றுவரை ஒருநூல்கூட அளித்ததில்லை

krishnan article vallavan oruvan

இன்று ஏகப்பட்ட நூல்கள் வந்துவிட்டன. ஆகவே பொதுவாக நூல்களை எவருக்கும் அனுப்புவதில்லை. நினைவு வைத்துக்கொள்வதும் கடினம். சிறில் அலெக்ஸ், எம்.ஏ.சுசீலா போன்றவர்கள் அவர்களுக்கு நான் சமர்ப்பணம் செய்த நூல்களை ஓராண்டுக்குப்பின்னரே அறியவந்து வாங்கி வாசித்தார்கள். ஈரோடு கிருஷ்ணனுக்கு புல்வெளிதேசம் நூலை நான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அதை காசுகொடுத்து வாங்கமாட்டேன் என அவர் நிலைபாடு எடுக்க, கொடுக்கமாட்டேன் என நான் நிலைபாடு எடுக்க இரண்டாம்பதிப்பு வந்தபோது நான் இறங்கிவந்து ஒருபிரதி அளித்தேன். படித்துப்பார்த்து  ‘நல்லாத்தான் இருக்கு’ என்றார்.

என் வீட்டுக்கு வரும் நண்பர்கள், வாசகர்களுக்கு அவர்களுக்கு நான் அளிக்கவிரும்பும் நூலை கொடுக்கும் வழக்கம் உண்டு. அது அத்தருணத்தை நினைவுகூர்வது மட்டும் அல்ல, அவர் வாசித்தாகவேண்டும் என நான் நினைக்கும்நூலாகவும் இருக்கும்

நூல் வணிகப்பொருள் அல்ல. வணிகப்பொருளுக்கு நுகர்வும் அதற்கேற்ற விலையும் மட்டும்தான் உண்டு. நூலுக்கு பல அர்த்தங்கள். அது ஒர் அன்புப்பரிசு, ஓர் அறிவுப்பரிமாற்றம். பல தருணங்களில் அதைவிடவும் மேல். அதை எவருக்கு எப்படி அளிக்கவேண்டும் என்பது உங்கள் அகத்தால் நீங்கள் முடிவுசெய்யவேண்டியது.

ஜெ

முந்தைய கட்டுரைதாகூரின் கோரா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25