நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்

images (5)

 

1992ல் நான் தருமபுரியில் பணியாற்றினேன். இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினர். அன்று அத்தனை தொழிற்சங்கவாதிகளுக்கும் பொது எதிரி பி..வி.நரசிம்மராவ்தான். பொதுவாகவே அரசியல் செயல்பாடு என்றால் மக்களின் அதிருப்தி, அச்சம் ஆகியவற்றை ஊதிப்பெருக்குவதுதான். “எப்போதுமில்லாத நெருக்கடிச் சூழலில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கிறோம்” என்ற ஆப்தவாக்கியம் அன்றும் இன்றும் என்றும் அரசியல் மேடைகளில் முழங்கிக்கொண்டேதான் இருக்க்கிறது. தொழிற்சங்கம் ஊழியர்களின் அதிருப்தியைத்தான் தூண்டிக்கொண்டே இருக்கும். ராஜீவ்காந்தி பதவிக்கு வந்து தாராளமயமாதலை நோக்கி தேசம் திரும்பியதும் கூடுதலாக அச்சத்தைத் தூண்டத் தொடங்கியது. நரசிம்மராவ் பதவியேற்று சிலமாதங்களில் உண்மையாகவே அச்சத்தை அனைவருமே உணரத் தொடங்கினோம்.

பொதுத்துறை தனியார்மயம் நோக்கிச் சென்றது. ஏற்கனவே இந்திய தபால் துறையும் தொலைதொடர்புத்துறையும் இரண்டாகப்பிரிக்கப்பட்டுவிட்டன. தொலைதொடர்புத்துறை வரைறைசெய்யப்பட்ட பொதுநிறுவனமாக ஆகும் என்றும் அதில் அயல்முதலீடு அனுமதிக்கப்படுமென்றும் பேச்சு இருந்தது. தனியார்மயம் பலதுறைகளிலும் வரக்கூடும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவில் நுழையும். கூடவே புதிய தொழில்நுட்பம் வரும். அன்று ‘கம்ப்யூட்டர்’ என்ற சொல் ஓர் அரக்கனின் பெயர் போல ஒலித்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள் என்று கூறினர் இடதுசாரி நிபுணர்கள்.. “இப்ப நம்ம பில்லிங் செக்ஷனிலே வேலைபாக்கிறவங்க நாப்பது பேரு… இனி ஒரு கம்ப்யூட்டரும் ஒரு ஆளும் போதும். மிச்சபேர் வெளியே போகவேண்டியதுதான்” என்றனர் தொழிற்சங்கத்தலைவர்கள்

download (1)

உச்சகட்ட திகில். நரசிம்மராவ் அயல்நாட்டு முதலீட்டாளர்களின் கையாள் என்றும் தரகுமுதலாளித்துவத்தின் கூட்டிக்கொடுப்பாளர் என்றும் எங்கள் சங்கத்தலைவர்கள் சொன்னார்கள். துண்டுப்பிரசுரங்கள் தரவுகளை அள்ளி இறைத்தன. புதிய பொருளியல்கொள்கையால் திவாலான நாடுகளின் கதைகள். இந்தியாவின் அத்தனை நிறுவனங்களையும் வந்து நுழையும் அயல்நாட்டு பெருநிறுவனங்கள் அப்பளம் போல நொறுக்கி விழுங்கும்,நேரு உணவிட்டு வளர்த்த பொதுநிறுவனங்கள் இறைச்சி விலைக்கு விற்கப்படுகின்றன. அழிவு வரவிருக்கிறது, பேரழிவு!

பின்னர் உணர்ந்தேன், அவை அனைத்துமே பொய்யான அச்சங்கள் என்று. தொலைதொடர்புத்துறை பி.எஸ்.என்.எல் என்னும் நிறுவனமாக ஆகியது. முழுமூச்சாக நவீனமயமாக்கப்பட்டது. முன்பெல்லாம் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். பகிடி என்னும் மறைமுக லஞ்சமும் உண்டு. ஓரிரு ஆண்டுகளிலேயே கண்ணெதிரில் கேட்டவர்களுக்கெல்லாம் தொலைபேசி அளிக்கப்படலாயிற்று. ஒவ்வொன்றும் மாறின. ஆனால் ஒருவருக்குக் கூட வேலை இல்லாமலாகவில்லை. மாறாக பல்லாயிரம்பேர் மேலும் மேலும் தேவைப்பட்டார்கள். தொலைக் கோபுரங்கள் நிறுவவும். தொலைபேசி சேவைகளை வழங்கவும். தொலைத்தொடர்புத்துறையிலேயே மறைமுக வேலைவாய்ப்புக்கள் பத்துமடங்காகப் பெருகின.

sonianarasimharaom

1981ல்தான் நான் முதல்முறையாக இந்தியாவை ‘தரிசித்தேன்’ இந்தியா என்பது நெஞ்சு நடுங்கும் பட்டினியாலானது என கண்கூடாக அறிந்தேன். எண்பதுகள் தமிழகத்துக்கும் மிக மோசமான காலகட்டம். விவசாயத்தை நம்பி வாழமுடியாமலாகியது. பல லட்சம்பேர் கிராமங்களில் இருந்து வெளியேறி இந்தியநகரங்களில் சேரிகளில் குடியேறினர். கேரளம் அப்போது வளைகுடாப் பணத்தால் மேலெழத் தொடங்கியிருந்தது. ஆகவே கட்டுமானப் பணிக்காக கூலிகளாக கிட்டத்தட்ட எட்டுலட்சம்பேர் கேரளத்தில் குடியேறினர். அதேகாலகட்டத்தில் பெங்களூரிலும் கர்நாடகத்தின் பிறநகர்களிலுமாக ஐந்து லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் குடியேறினர். மும்பையில் பத்துலட்சத்துக்கும் மேல் தமிழர்கள் பொருளியல் அகதிகளாகச் சென்றகாலம் அது.

அன்றெல்லாம் தமிழகத்திலிருந்து கிளம்பும் அத்தனை ரயில்களிலும் சட்டிபானை குழந்தைகளுடன் பஞ்சைப்பராரிகளான தமிழர்கள் இருப்பார்கள். என் புறப்பாடு தன்வரலாற்றில் அச்ச்சித்திரத்தை எழுதியிருக்கிறேன். வண்ணநிலவன் முதல் கோணங்கி வரை பலர் கரிசல்மண்ணிலிருந்து பஞ்சம்பிழைக்கப்போனவர்களின் கதைகளை எழுதியிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சென்றவர்களின் கதையை கந்தர்வன் எழுதியிருக்கிறார். இன்று இலக்கியமன்றி அந்த துயர்நிலைக்குச் சான்றே இல்லை. அதெல்லாம் திராவிடப் பொற்காலம் என நாலாந்தர அரசியல்பிரச்சாரகர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

1997ல் நான் வடஇந்தியாவுக்குச் சென்றபோது முற்றிலும் மாறான காட்சியைக் கண்டேன். இந்தியாவில் பட்டினி மறைந்திருந்தது. எங்கும் உடலுழைப்புக்கு ஓர் அடிப்படைக்கூலி கிடைத்தது. அதில் பாதியைக்கொண்டு ஒரு குடும்பம் வாழத் தேவையான தானியங்களை வாங்க முடிந்தது. உண்மையாகவே கண்கூடான ஓர் அதிசயம் அது. அதைப்பற்றி நான் எழுதியபோது தாராளமயமாக்கலை எதிர்த்துக்கொண்டிருந்த என் தோழர்கள் ஏற்க மறுத்தனர். வறுமை மிகுந்திருக்கிறது என அவர்கள் நம்ப விழைந்தார்கள். தாராளமயமாதல், சுதந்திரப்பொருளியல் மீதான நம்பிக்கையை நான அடைந்தேன். இடதுசாரிகள் மேல் பெருமதிப்பிருந்தாலும் இடதுசாரிப்பொருளியல் அதிகாரிகளிடம் அதிகாரத்தை அளித்து ஊழலுக்கே வழிவகுக்கும் எனத் தெளிந்தேன்.

அந்த மாற்றத்தை உருவாக்கியவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமாராகப் பணியாற்றிய பி.வி.நரசிம்மராவ். இன்றுவரை இந்தச் சாதனையின் புகழை அவரைத்தவிர பிற அனைவருக்குமே அளித்துவிட்டார்கள் நம் அரசியல்வாதிகள். தமிழகத்தின் பொருளியல் வெற்றியின் சிற்பி என எவரெவரோ சொல்லப்படுகிறார்கள். அது அன்றைய இந்தியப் பொருளியல் மாற்றத்தை திறம்பட பயன்படுத்திக்கொண்ட நம் தொழில்துறையின் வெற்றி என்பதை மறைத்துவிடுகிறார்கள் பிரச்சாரகர்கள். நாமக்கலும் ஈரோடும் கரூரும் சிவகாசியும் ஹோசூரும் அடைந்த வளர்ச்சி என்பது அன்று அச்சூழலால் உருவானதே. நரசிம்மராவை தலைவராகக் கொண்டு அன்று அந்த வளர்ச்சியைச் சாத்தியமாக்கிய காங்கிரஸ் கட்சியே இன்று நரசிம்மராவ் பெயரைச் சொல்வதில்லை.

images (6)

வரலாறு பெரும்பாலும் தர்க்கங்கள் அற்றது. பொதுமக்கள் இன்றில் வாழ்பவர்கள், ஆகவே நேற்றை அறியாதவர்கள். ஆயினும் நரசிம்மராவ் போல தீயூழ் கொண்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. இந்தியா கண்ட மாபெரும் ஆட்சியாளர் அவரே, இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றவர்களில் நேருவுக்குப்பின் அவரே முக்கியமானவர். ஆனால் அவர் பெயரே கிட்டத்தட்ட வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அதை மீட்டு எடுத்த நூல் வினய் சீதாபதி எழுதிய ‘நரசிம்மராவ்- இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி’ [மூலம் ] தமிழில் ஜே.ராம்கி. 

அரசியல் வரலாற்றாசிரியரும் வழக்கறிஞருமான வினய் சீதாபதி டெல்லி அசோகா பல்கலை ஆசிரியர். தேசிய சட்டக்கல்லூரியிலும் ஹார்வார்ட் பல்கலையிலும் பயின்றவர். பிரின்ஸ்டனில் அரசியல்தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.நரசிம்மராவின் தனிப்பட்ட காகிதங்கள் உட்பட அரசு ஆவணங்களை வாசித்து தொகுத்து எழுதப்பட்ட இந்நூல் இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதில் மிகப்பெரிய திறப்பை உருவாக்குவது.

இந்தியப்பொருளியல் 1991 ல் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது –அப்படி ஒன்று இந்தியவரலாற்றில் முன்பும் பின்பும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட நாடே சிலமாதங்களில் திவால் ஆகும் நிலை. அதற்கான காரணங்கள் பல. இந்தியா ஏற்றுமதிக்கு சோவியத் ருஷ்யாவையே நம்பியிருந்த நாடு. சோவியத் ருஷ்யா 1985 முதல் தொடர்ச்சியான பொருளியல்நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. 1991ல் முற்றாக வீழ்ந்தது. கூடவே இந்தியாவும் வீழ்ச்சி அடைந்தது. அன்னியச்செலவாணி குறைந்தது. ஆகவே நாணயமதிப்பு சரிந்தது.

மறுபக்கம் அன்னிய முதலீடு முற்றிலுமே இல்லாமலிருந்தது. காரணம் அன்றிருந்த மையப்படுத்தப்பட்ட பொருளியல்நிர்வாகம், லைசன்ஸ்ராஜ் என்று அழைக்கப்பட்டது அது. பொருளியலை அரசு நேரடியாகக் கட்டுப்படுத்தியது. அதாவது பொருளியல் அரசதிகாரிகளால் ஆளப்பட்டது. ராஜீவ் காந்தி காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த அன்னியமுதலீடுகள் கூட தொடர்ச்சியான அரசியல் நிலையின்மை, முடிவெடுக்கமுடியாத அரசு ஆகியவற்றால் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டிருந்தன. கூடவே வளைகுடாப் போரினால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிச் செலவு பலமடங்கானது.

singh_Rao

அச்சூழலில் நரசிம்மராவ் பதவிக்கு வந்தார். இந்தியா தன் பொருளியல் வழிமுறைகளை மாற்றியே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. நரசிம்மராவ் போன்ற அரசுநிர்வாகத்தில் நீண்டகால அனுபவமும், நிதானமும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத அடக்கமும், அனைத்துத் தளங்களிலும் பேரறிவும் கூடவே அரசியல்சூழ்ச்சித்திறனும் கொண்ட ஒருவர் அன்று ஆட்சிக்கு வந்தது இந்தியாவின் மாபெரும் பேறு. அனைத்தையும் விட இன்னொன்றும் இருந்தது அவரிடம், அவர் ‘மக்கள் அரசியல்வாதி’ அல்ல. ஆகவே மக்களிடம் வாக்கு பெறுவதை மட்டுமே எண்ணி பொருளியல்முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கவில்லை.

அந்தச் சித்திரத்தை மிக விரிவாக அளிக்கிறது வினய் சீதாபதியின் இந்நூல். பதவிக்கு வந்ததுமே நரசிம்மராவ் அனைத்து கட்சித் தலைவர்களையும் கூட்டி நிலைமையை விளக்கினார். அவர்கள் வாயடைந்து போனார்கள். நிலைமை மோசம் என அவர்களுக்கு தெரியும். ஏற்கனவே சந்திரசேகர் நாட்டின் தங்கக் கையிருப்பை அடகுவைத்து கடன் பெற்றிருந்தார். அந்நிலையிலிருந்து மீள நரசிம்மராவ் உருவாக்கிய திட்டத்தை அவர்களால் மறுக்கமுடியவில்லை. இடதுசாரிக் கட்சிகளுக்கும் உண்மை தெரியும் என்கிறது இந்நூல், அரசியல்வெளியில் அவர்கள் உருவாக்கிய எதிர்ப்பு ஒரு பாவனைதான்

இந்நூலின் ஏழாவது அத்தியாயமான பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் நரசிம்மராவ் எப்படி தன் இலக்கை நோக்கிச் சென்றார் என்பதை விளக்குகிறது. பழைய பொருளியல் பார்வை கொண்டிருந்தவரான பிரணாப் முக்கர்ஜி நிதியமைச்சராக விரும்பினார். அரசியல்சூழ்ச்சி வழியாக அதை _ முறியடித்தார். மன்மோகன் சிங்கை அழைத்து நிதியமைச்சராக்கினார். மாண்டேக்சிங் அலுவாலியா போன்று திறமைமிக்க பொருளியல் வல்லுநர்களை பதவிக்குக் கொண்டுவந்தார். சீரான தொடர்முயற்சிகள் வழியாக இந்தியப்பொருளியலை தலைகீழாக மாற்றியமைத்தார்

நரசிம்மராவ் பதவி நீங்கியபோது ஐந்தாண்டுகளில் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பத்து மடங்காகியது. சாலைகளின் நீளம் இரண்டு மடங்காகியது. விமானப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காகியது. தொலைபேசி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை இருபது மடங்காகியது வேலையில்லாமை பத்திலொருபங்காகச் சுருங்கியது. முக்கியமாக நாட்டிலிருந்து பட்டினி விலகியது

vajpayee-PVN

இதை ராவ் சாதித்தது எப்படி என விரிவாக விளக்குகிறது இந்நூல். இந்நூலை வாசிக்கவேண்டியது அதிலுள்ள நேரடியான அரசியல், நிர்வாகவியல் நுட்பங்களுக்காகவே. நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு ரட்சகன் வந்து அனைத்தையும் ஆணையிட்டே சீரமைத்துவிடுவான் என நம்புகிறோம். ’நாடோடி மன்னன்‘ முதல் ’முதல்வன்’ வரை நம் சினிமா இந்த ரகசியக் கனவையே பயன்படுத்திக்கொள்கிறது. ஆக்ரோஷமாக பேசி கனவுகளை விதைப்பவர்களை நாம் தலைவர்களாகத் தெரிவுசெய்கிறோம். அல்லது எதிர்ப்பலையை உருவாக்குபவர்களை தலைவர்களாக ஆக்குகிறோம். அதாவது ஜனநாயகத்தில் தலைவர் என்பவர் தலைமைப்பண்பு கொண்டவர் அல்ல, நம்மிடம் சிறப்பாகப் பேசும் கலை அறிந்தவர்தான். நம்மை ஏமாற்றக் கற்றவர்தான்.

ஆட்சிநிர்வாகம் என்பதும் பொருளியல் வளர்ச்சி என்பதும் அரசியல் கவர்ச்சி என்பதிலிருந்து முற்றிலும் வேறானவை என இந்நூலின் பக்கங்கள் வழியாகப் பார்த்துச் செல்கிறோம். நரசிம்மராவுக்கு இருந்த எதிர்விசைகள் என்னென்ன? நேருவின் நினைவை அப்போதும் கொண்டிருந்த காங்கிரஸ் சோஷலிசக் கோஷத்தை கைவிடத் தயாராக இல்லை, கைவிட்டால் வாக்கு கிடைக்காது. ஆகவே ராவ் தான் செய்வதெல்லாம் நேரு சொன்னவையே என மீண்டும் மீண்டும் சொன்னார்.

இந்திய அரசின் தூணாக இருந்த அதிகாரிவர்க்கமும் இந்தியப் பொருளியலின் அடித்தளமாக இருந்த பொத்துறையின் நிர்வாகிகளும் மாற்றங்களை விரும்பவில்லை. இந்தியாவின் லைசன்ஸ் ராஜை சார்ந்து தொழில்செய்த தொழிலதிபர்கள் அன்னிய முதலீட்டை அஞ்சினர். அவர்களே கட்சிக்கு நிதியளிப்பவர்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு. அனைத்துக்கும் மேலாக ராவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

ராவ் அனைத்து எதிர்ப்புகளையும் சந்தித்து வென்றார். பெருஞ்சூழ்ச்சியாளர் மட்டுமே இத்தளத்தில் வெல்லமுடியும். லட்சியவாதிகள் தோற்றுப்போய் அத்தோல்வியை பெருமைப்படுத்திக்கொள்வார்கள். ராவ் பெரும்பாலும் தன் திட்டங்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. தன் எண்ணங்களையே வெளிப்படுத்தவில்லை. செய்தபின்னரே செய்தவற்றைப்பற்றிச் சொன்னார். திறமையான அமைச்சர்களைப் பேசவிட்டார். வேறுபெயரில் தன்னை எதிர்த்து தானே கட்டுரை எழுதி அதன்மேல் எழும் எதிர்வினைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.ஆனால் தெளிவான இலக்கும் அதற்கான உறுதியும் கொண்டிருந்தார்.

ராவ் எதிலுமே அவரசப்படவில்லை. உள்ளூர உறுதிகொண்டிருந்தார், ஆனால் அந்த உறுதி என்பது இறுதிவெற்றியை அடைவதில்தானே ஒழிய அதைநோக்கிச் செல்லும் வழிகளில் அல்ல. சிறிய அளவில் செய்து பார்த்து விளைவுகளைக் கவனித்து மெல்லமெல்லத் திருத்திக்கொண்டு முன்னெடுத்தார். குறைகளைக் களைந்துகொண்டே இருந்தார். எங்கும் அதிரடியாக எதையும் செய்யவில்லை. ஆனால் முடிவெடுத்தபின் பின்வாங்கவுமில்லை

திறமையானவர்களை தெரிவுசெய்து அவர்களை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டது ராவின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் வேலைசெய்து வெற்றியடைந்தால் அப்புகழை அவர்களே அடைய அனுமதித்தார். மன்மோகன் சிங் இந்தியப்பொருளியல் மாற்றத்தின் வழிகாட்டியாக புகழ்பெற ராவ் அளித்த ஒப்புதலே காரணம் என மன்மோகன் சிங் சொல்கிறார். ஒவ்வொரு அமைச்சருக்கும் அவருக்கான வாய்ப்பும் வெற்றியை உரிமைகொள்ளும் வரலாற்றுத்தருணமும் அளிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் செல்பேசி சேவை 1995ல் அறிமுகமான போது அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் சுக்ராம் நரசிம்மராவிடம் பிரதமர் அதில் முதல் பேச்சை நிகழ்த்தவேண்டும் என கோருகிறார். ஆனால் ராவ் தொலைதொடர்புத்துறை அமைச்சரான சுக்ராமே பேசவேண்டும் என ஆணையிடுகிறார். சுக்ராம் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசுவிடம் அப்பேச்சை நிகழ்த்தினார்.

pv2

ராவ் விளைவுகளிலேயே குறியாக இருந்தார். எல்லா தளத்திலும் எச்சரிக்கையுடனும் இருந்தார். தொலைதொடர்பு உட்பட பலதுறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அவர் ஏற்கவில்லை. மாற்றங்களால் அழிவுகள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தனி சிரத்தை எடுத்துக்கொண்டார். ஏனென்றால் ஏற்கனவே வறுமையிலிருக்கும் இந்திய அடித்தள மக்களிடம் கடுமையான முடிவுகள் எடுக்கப்போவதாகச் சொல்லி மேலும் துயரை ஏற்றக்கூடாதென்னும் தெளிவு அவருக்கிருந்தது. தனியார்மயம், தாராளமயத்தால் ஒருவருக்குக்கூட வேலை போகலாது என்றும் உறுதிகொண்டிருந்தார்.

ராவ் மாறாத கொள்கைவாதி அல்ல. எழுபதுகளில் அவருக்கு சோஷலிசநம்பிக்கை இருந்தது. தொண்ணூறுகளில் அவர் முற்றாகவே அதைக் கைவிட்டார்.இலட்சியவாதி என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் பொருளில் ராவ் அவ்வகைப்பட்டவரும் அல்ல. அவருக்கு சில இலட்சியங்கள் இருந்தன. அவர் ஆந்திர முதல்வராக இருந்தபோதே நிலச்சீர்திருத்தம்,வறுமை ஒழிப்பு போன்றவற்றை இலக்காக்கி செயல்பட்டிருக்கிறார். அரசியல் எதிர்ப்புகளால் தோல்வியும் அடைந்தார். அக்கனவுகளையே தொண்ணூறுகளில் பிரதமரானபோது நடைமுறைப்படுத்தினார். அவரை நடைமுறைவாதி என்று சொல்லவேண்டும். அரசியலில் இருந்து அவர் கற்றுக்கொண்ட நடைமுறைவாதம் அது. அந்த நேரடியான நடைமுறைவாதமே பயனளித்தது

இந்நூல் ராவின் புகழ்பாடும் நூல் அல்ல.  ராவின் நடைமுறையிலுள்ள சூழ்ச்சிகள், மோசடிகள் ஆகியவற்றையும் விரிவாகப்பேசுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களை காசுகொடுத்து வாங்கி பெரும்பான்மையை ஈட்டிக்கொண்டார். ஜார்கண்ட் பாராளுமன்ற உறுப்பினர் சிபு சோரனுக்கு அவர் லஞ்சம் கொடுத்தது வெளிப்பட்டு அவருக்குப் பெரிய கறையை உருவாக்கியது. வாழ்நாளின் இறுதிவரை அந்த வழக்கால் அவர் வேட்டையாடப்பட்டார். பிரணாப் முகர்ஜி உட்பட தன் அரசியல் எதிரிகளின் ரகசியங்களைச் சேகரித்துக்கொண்டு அவற்றைக்கொண்டு அவர்களை மிரட்டி ஓரங்கட்டினார். எதிர்ப்பவர்களை அவர்களின் எதிரிகளைச் சேர்த்துக்கொண்டு மௌனமாக ஒழித்துக்கட்டுவது ராவின் வழிமுறை. அர்ஜுன் சிங் போன்ற பலரை அவர் வேருடன் அழித்தார்.

அவரை வீழ்த்தியது அவர் செய்த இரண்டு சூழ்ச்சிகளின் எதிர்விளைவுகள். அவரை பிரதமராக்கியபோது சோனியாவின் எதிர்பார்ப்பு அவர் போஃபர்ஸ் வழக்கை முடித்துவைக்கவேண்டும் என்பது. ஆனால் அதுமுடிந்தால் நேரு குடும்பத்தின் அரசியல் நுழைவு உருவாகும் என அஞ்சிய ராவ் சோனியாவிடம் அதை முடித்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டே முடிக்காமல் வைத்திருந்தார். அது சோனியாவுக்குத் தெரியவந்தபோது கட்சியின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார்

download (2)

நரசிம்மராவ் மிக உச்சகட்டமாக விமர்சிக்கப்பட்டது ராமஜன்மபூமி –பாபர் கும்மட்டம் பிரச்சினையின்போது அவர் எடுத்த நிலைபாட்டின் குளறுபடிகளுக்காக. அவர் பாரதிய ஜனதாவை ஆதரித்தவர் என்றும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் ஓட்டுவங்கி முழுமையாக அழிய அவரே காரணம் என்றும் காங்கிரஸ் இன்றும் நினைக்கிறது. இந்நூலில் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் அது உண்மையல்ல என்று வினய் சீதாபதி வாதிடுகிறார்.

நரசிம்மராவின் வழிமுறை எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசிப்பதும் அவர்களை நம்புவதும்தான். அது பொருளியல் நடவடிக்கைகளில் கைகொடுத்தது. அவர் அதேபோல பாரதிய ஜனதாவை, குறிப்பாக எல்.கே.அத்வானியை நம்பினார். அவர்கள் அவரை ஏமாற்றினர். பாபர் கும்மட்டம் இடிக்கப்படுவதற்கு முன்பு அவரால் ஊக அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கமுடியாது. அவர் மரபுகளில் நம்பிக்கைகொண்ட , அதில் ஊறிய முதியவர். நடைபெற்றது அவரை மீறி. அவர் அத்வானியிடம் தனிப்பட்ட முறையில் பாபர்கும்மடம் இடிக்கப்படாது என உறுதி பெற்றார். ஆனால் அத்வானி அவரை ஏமாற்றினார். முன்னரே பாபர் கும்மட்ட இடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது. பாபர் கும்மட்ட இடிப்பு நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில்  நிகழ்ந்தமை அவருக்குப் பழி சேர்த்தது. அதன்பொருட்டு ராவ் அத்வானியை மன்னிக்கவேயில்லை. அத்வானியை சிக்கவைத்த ஹவாலா வழக்கின் பின்னணியில்கூட ராவின் வஞ்சம் இருந்தது.

ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் ஊழல்செய்வதவரல்ல என்றே இந்நூல் காட்டுகிறது. அவர்மேல் பலவகையான ஊழல் குற்றச்சாட்டுகள் அன்று கூறப்பட்டன, குறிப்பாக அவர் மகன் ராஜேஸ்வர ராவ் மீது. ஆனால் பதவி இழந்து கட்சியால் கைவிடப்பட்டு தனிமையான ராவ் வழக்குச் செலவுகளுக்காக தன் டெல்லி வீட்டை விலைபேசும் நிலைமையில் இருந்தார் என்கின்றன ராவின் தனிப்பட்ட குறிப்புகள்.

இந்நூல் ஒரு நாவல்போல ஆரம்பிக்கிறது. ராவின் இறுதி டெல்லியில்23 டிசம்பர் 2004ல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் முறையான அஞ்சலியைச் செலுத்தவில்லை. அன்றைய காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் ராவின் இறுதிச்சடங்கு டெல்லியில் நிகழக்கூடாது, டெல்லியில் அவருக்கு நினைவுடம் அமையக்கூடாது என்று உறுதியாக இருந்தார். ஹைதராபாதுக்குச் சடலத்தை கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தினார்

download

ராவ் இறந்தது காலை 11 மணிக்கு. மாலை 6 30க்குத்தான் சோனியாவும் மன்மோகன்சிங்கும் பிரணாப் முகர்ஜியும் அஞ்சலி செலுத்த வந்தார்கள்.அவருடைய சடலம் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் அதன் முகப்பில் சாலையிலேயே சற்றுநேரம் அஞ்சலி செலுத்தும்பொருட்டு வைக்கப்பட்டிருந்தார்.. அவருடைய சடலம் உள்ளே வரக்கூடாது என்பதற்காக சோனியா முதலியோர் வாசலுக்கு வெளியே வந்து மரியாதை செலுத்தினார்கள். பலமுறை கோரியும் கதவு திறக்கப்பட முடியாது என்ற மறுமொழியே கிடைத்தது.. மன்மோகன் சிங்கிடம் ராஜேஸ்வர ராவ் டெல்லியில் இறுதிச்சடங்கு செய்ய அனுமதி கோரியபோது அவர் பார்க்கலாம் என்றார். ஆனால் அவரால் சோனியாவின் சினத்தை மீறமுடியவில்லை.

அவருடைய சடலம் ஹைதராபாதுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கே அவர் சிதையேற்றப்பட்டார். ஆனால் முறையாக எரியூட்டப்படவில்லை. அவருடைய பாதி எரிந்த சடலம் செய்தியாக ஆகியது. தெலுங்கானா மக்கள் பெருந்திரளாக வந்து ராவுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்கள் ராவ் அவமதிக்கப்பட்டதாகவே கருதினர். இன்று ராவ் தெலுங்கானாவின் பெருமைக்குரிய மண்ணின்மைந்தனாகவே எண்ணப்படுகிறார்.

நரசிம்மராவ் மனமுடைந்து இருந்த நாட்களில் முடிகிறது இந்நூல். “நான் என்ன தவறுசெய்தேன்? நான் செய்ததெல்லாமே நாட்டுக்காகத்தான்!” என்று அவர் சோனியாவிடமே குமுறுகிறார். ஆனால் இறப்புக்குப்பின்னரும் ராவ் பழிவாங்கப்பட்டார். அவருடைய சாதனை மறைக்கப்பட்டது. தாராளமயமாக்கம் ராஜீவ்காந்தியும் மன்மோகன்சிங்கும் செய்த சாதனையாக சொல்லப்பட்டது.

வினய் சீதாபதியின் நூல் நரசிம்மராவின் பிறப்பு முதல் அவருடைய அரசியல் வாழ்க்கையை விரிவாக ஆராய்கிறது. அதில் எந்த இரக்கமும் காட்டப்படவில்லை. அவருடைய இரு ரகசியப் பெண்தொடர்புகளைக்கூட விரிவாகவே பேசுகிறது. ஆகவே மேலும் நம்பகமானதாக ஆகிறது. இப்படி நம் தலைவர்கள் எவரைப்பற்றியும் ஒரு நூல் எழுதப்பட்டதில்லை

நரசிம்ம ராவ் முதன்மையாக நிர்வாகி. அதற்கான அனைத்துத் திறமைகளும் கொண்டவர். மிக விரிவான படிப்பாளி. பலமொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். புனைபெயர்களில் பொருளியல், அரசியல் கட்டுரைகள் ஏராளமாக எழுதியவர்.. The Insider (1998) என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். எந்த புதுத் தொழில்நுட்பத்தையும் விரைவாகக் கற்றுக்கொள்ளக்கூடியவர்..அமைச்சராக அனைத்து துறைகளிலும் வெற்றிகண்டவர்

இந்நூல் காட்டும் _ எந்த வகையிலும் மக்களைக் கவர்பவர் அல்ல. பெரிய பேச்சாளரோ வசீகரமான ஆளுமையோ அல்ல. உம்மணாமுஞ்சி என்றே சொல்லவேண்டும். கட்சியின் உறுப்பினராக இருந்தமையால் மட்டுமே அவர் தேர்தல்களில் வென்றார்.  இந்திராவோ ராஜீவோ வந்து பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர் கட்டிவைத்த பணத்தைக்கூட இழந்திருப்பார். கட்சியில் அவர் பதவிகளில் நீடித்ததே தலைமை மீதான ஆழமான விசுவாசத்தால்தான். எதையுமே மறுத்துப்பேசுபவரோ மான அவமானம் பார்ப்பவரோ அல்ல. கிட்டத்தட்ட அடிமை

images (5)

 

உதாரணமாக ஒரு சம்பவம். ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராவ் அவரைச் சந்திக்கச் சென்றார். அங்கே ராஜீவின் தோழரான ஒரு வெள்ளைக்கார விமான ஓட்டி இருந்தார். ராவ் முதியவருக்குரிய வகையில் காலைத்தூக்கி நாற்காலியில் வைத்து கால்விரல்களை நெருடிக்கொண்டிருந்தார். அந்த வெள்ளையருக்கு அது அருவருப்பாக இருந்தது. ராஜீவிடம் அவர் அதைச் சொல்ல ராஜீவ் அன்று வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ராவை மிகக் கடுமையாக திட்டி வெளியே செல்லும்படிச் சொன்னார். ராவ் அந்த வெள்ளையரிடம் மன்னிப்பு கோரினார். நேரில் விடுதிக்குச் சென்றும் வருத்தம் தெரிவித்தார்

ராவ் பிரதமராக ஆனது ஒரு தற்செயல். அவர் உள்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் சாதனை படைத்தவர். பஞ்சாப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தவர். காஷ்மீர் பிரச்சினையையும் ஓயவைத்தவர். சீனாவுடன் நட்பு அத்தியாயத்தை தொடங்கிவைத்தவர். தன் அரசியல்வாழ்க்கை முடிந்துவிட்டது என உணர்ந்திருந்த நிலையில்தான் பிரதமர் வாய்ப்பு வந்தது. அது வட இந்தியாவில் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு கொண்டிருந்த அர்ஜுன் சிங் போன்றவர்களை நம்பமுடியாது என்று சோனியா எண்ணியதனால் வந்த வாய்ப்பு. அதை ராவ் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

நரசிம்மராவ் மீதான நம் பிழையான மதிப்பீடுகளைக் களைந்து அவரை ஒரு தேசியத்தலைவராக, சாதனையாளராக நிலைநிறுத்தும் நூல் இது. ஆனால் அதைவிட முக்கியமாக சில அடிப்படை புரிதல்களை நமக்கு அளிக்கும். நாம் எப்போதுமே இலட்சியவாதிகளான அரசியல்வாதிகளையே போற்றுகிறோம். அவர்கள் சமகாலத்தை இருளாக்கிக் காட்டுகிறார்கள். எதிர்கால ஒளியை பெருக்கிக் காட்டுகிறார்கள். உணர்ச்சிகரமானவர்களாக, அலைபாய்பவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் நடைமுறையில் தோல்வியே அடைகிறார்கள். நேரு வெற்றிபெற்றது நடைமுறைவாதியான படேலின் உதவியால். படேலுக்குப் பின் நேருவால் சமாளிக்கமுடியவில்லை. மாபெரும் இலட்சியவாதியான நெல்சன் மண்டேலா நிர்வாகியாக படுதோல்வி அடைந்தவர். நடைமுறைவாதிகளின் பங்களிப்பை நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். அவர்களை சுவாரசியமற்றவர்கள், சதிகாரர்கள் என எண்ணுகிறோம்

அதோடு ஊடகங்களுக்கும் லட்சியவாதிகளையே பிடிக்கிறது. ஆவேசமான பேச்சும் அரசியல்போராட்டங்களும் செய்திகளுக்கு மிக உகந்தவை. ஊடகர்கள் மக்களின் உணர்வுகளை பெருக்குபவர்கள். ஆகவே லட்சியவாதிகளை மிகைப்படுத்தி நடைமுறைவாதிகளை சிறுமைப்படுத்தி நமக்குக் காட்டுகிறார்கள்

இந்தியா போன்ற பலநூறு இனங்களும் பற்பல மொழிகளும் கொண்ட அரசியல்வெளியில் எப்போதும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே போராட்டங்கள் வழியாகவே இங்கே தலைவர்கள் உருவாகிறார்கள். இவர்களில் சிலரே லட்சியவாதிகள். பெரும்பாலானவர்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை தூண்டிவிடும் போலி இலட்சியவாதிகள். பிரிவினைஉணர்ச்சிகளையும் கசப்புகளையுமே அவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்கள் நமக்கு தலைவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை நெருங்கிவிட்டால் சுயநலம்மிக்கவர்களாகவோ திறமையற்றவர்களாகவோ குழப்பவாதிகளாகவோ அமைந்து பேரழிவை உருவாக்குகிறார்கள்.

ஒருவர் சிலநாட்கள் சிறையில் இருந்துவிட்டால் நமக்கு அவர் தலைவராகத் தெரிவது ஏன்? செய்துகாட்டும் ஒருவரை விட உணர்ச்சிக் கூச்சலிடும் ஒருவரை நாம் ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? உணர்ச்சிகள் எளிதில் தொற்றுபவை. எதிர்மறையான உணர்ச்சிகள் மேலும் எளிதாக பரவுபவை. நாம் நம் தலைவர்களை இவ்வாறு உணர்ச்சிகர முட்டாள்தனங்களால் உருவாக்கி எழுப்புகிறோம். யதார்த்தம் நமக்குக் கசப்பானது. ஆகவே அதைப்பேசும் யதார்த்தவாதியை நாம் நம்புவதில்லை. நமக்குத்தேவை வீரநாயகர்கள். நம்மை இன்று அமைச்சர்களே ஆளவேண்டும்,  ஆனால் அரசர்களை தெரிவுசெய்கிறோம். தலைவன் என்றால் வாளும்கேடயமுமாக  ‘எதிரி’களுக்குச் சவால்விடுபவன் என எண்ணிக்கொள்கிறோம்.

ஆனால் அவ்வாறு நம்மால் தெரிவுசெய்யப்படுபவர்கள் சென்றமையும் அந்த ஆட்சிபீடம் என்பது முற்றிலும் வேறான ஒன்று. அது எந்த இலட்சியத்தாலும் புரிந்துகொள்ளப்பட இயலாதது. பல்லாயிரம் அன்றாடச்சிக்கல்கள் நிறைந்தது. ஒன்றுக்கொன்று முரண்படும் ஏராளமான விசைகளின் சமநிலையாக செயல்படுவது. அதைப்புரிந்துகொண்டு மெல்லமெல்ல கையகப்படுத்தி நினைப்பதைச் செய்யவைப்பதென்பது ஒரு தொழிற்சாலையின் இயந்திரங்களைக்கொண்டு சிம்ஃபனி இசையை எழுப்புவதுபோல. இலட்சியவாதிகள், போராளிகள் அங்கே கேவலமாகத் தோற்றுவிடுகிறார்கள்.

photofeature17_121616101809

மிகச்சிறந்த உதாரணம் அசாம் கணபரிஷத்தின் தலைவர் பிரஃபுல்ல குமார் மகந்தா. அஸாம் மாணவர் இயக்கத்தை ஒருங்கிணைத்த போராளி. ஆவேசமான பேச்சாளர். அஸாமே அவர் தலைமையில் திரண்டது. அவர் 1985ல் அஸாம் முதல்வராக ஆனார். மிக இளம்வயதில் முதல்வராக ஆனவர் அவர்– 33 வயதில். அஸ்ஸாமின் வரலாற்றிலேயே மிகமோசமான, செயல்படாத , ஊழல்மிக்க அரசாக இருந்தது அவர் அமைத்தது. அரசை அவரால் ஆளவே முடியவில்லை. 1996 ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார். அப்போதும் திறனற்றவராகவே நீடித்தார்.

அஸ்ஸாம் போராட்டத்தின் இழப்புகள் அந்த வளம் மிக்க மாநிலத்தை இருபத்தைந்தாண்டுகாலம் பின்னால் கொண்டுசென்றன. அதன் விளைவாக ஆட்சிக்கு வந்த மகந்தா அவர் வாக்களித்த எதையுமே செய்யமுடியவில்லை. அஸ்ஸாம் கணபரிஷத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 204ல் அவர் அஸ்ஸாம் கணபரிஷத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

நாம் நம் அரசியல் பார்வைகளை மாற்றிக்கொள்ளாத வரை இந்தியாவில் மெய்யான வளர்ச்சியும் நலமான வாழ்க்கையும் உருவாகப் போவதில்லை. நமக்குத்தேவை பொய்யான அதிருப்தியையும் வஞ்சத்தையும் உருவாக்கி நம்மை கொந்தளிக்கச்செய்யும் ‘போராளி’தலைவர்களோ ஒளிமிக்க எதிர்காலத்தை சுட்டிக்காட்டி பேசும் மிகையான இலட்சியவாதிகளோ அல்ல. செய்துகாட்டுபவர்கள்.. அவர்கள் செய்து காட்டியதைக்கொண்டே நாம் அவர்களை நம்பவேண்டும். மேலும் வாய்ப்பளிக்கவேண்டும். எதிர்மறை உணர்ச்சிகளும் காழ்ப்புகளும் அறுதியாக இழப்பை நோக்கியே கொண்டுசெல்லும். வாயாடிகள் பரிதாபமாகத் தோற்ற இடத்தில் உம்மணாம்மூஞ்சி வென்றதன் கதை இந்நூலில் சொல்லப்படுகிறது.

காந்தியைப் பற்றி பேசும்போது ஜே.சி.குமரப்பா சொன்னார். காந்தி இலட்சியவாதியும் நடைமுறைவாதியும் சரிபாதியாகக் கலந்தவர் என. அது அபூர்வமானதுதான். காந்தி வாழ்நாளெல்லாம் போராடியவர். மகத்தான கனவுகளை வைத்திருந்தவர். ஆனால் முற்றிலும் நடைமுறைவாதி. ஆகவேதான் பெரிய அமைப்புகளை அவரால் உருவாக்க முடிந்தது. அவருடைய செயல்பாடுகளில் நேர்பாதி  ‘நிர்மாணத்’ திட்டங்களே. ஒவ்வொரு போராட்டத்தையும் குறைந்தபட்ச இழப்புகளுடன் மிகமெல்ல முடிவுவரை கொண்டுசெல்ல முடிந்தது.

கணிசமான காந்தியர்களும் அவ்வாறுதான். அமைப்புகளை உருவாக்கி நிலைநிறுத்தியவர்கள், இறுதி எல்லை வரை சலிக்காமல் சென்றவர்கள் அவர்கள். மெய்யான லட்சியவாதியின் இலக்கு என்பது எங்கோ இருப்பது அல்ல. இல்லகை அடைவதுவரை வெறும் சொல்லே தீனி என லட்சியவாதி சொல்லவும் மாட்டான். செயலே லட்சியத்தின் அடிப்படை. செயல்கள், வெற்றிகள் வழியாகவே அங்கே சென்றடைய முடியும்

.nana

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி 

கிழக்கு பதிப்பகம்

 

Vinay Sitapati
வினய் சீதாபதி

 

தொடர்புள்ள கட்டுரைகள்

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

 

 

முந்தைய கட்டுரைகிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24