நூறுநிலங்கள் -கடிதங்கள்

 

nuru

 

நூறுநிலங்களின் மலை வாங்க

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

 

மனது சற்றே சலிப்புறும்போது  தங்களின் பிரயாணக் கட்டுரைகளை மீள்வாசிப்பு செய்வது ஒரு பழக்கமாகியிருக்கிறது.

 

//வெள்ளிமுடி சூடிய மலைச்சிகரங்கள் காலமின்மையில் அமைந்திருந்தன. மிகமெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது. நானும் காலமற்றவனானேன். என் சிந்தனை கரைந்தழிய கண் மட்டும் உயிருடன் எஞ்சியது. ஏதோ ஒன்று நிகழ்ந்து மெல்ல மெல்ல மறைந்தது. // நூறு நிலங்களின் மலை…

 

அந்த கட்டுரைத் தொகுப்பிலேயே நானும் மறைய முற்பட்ட இடமாக இந்த வரிகளை மீண்டும் மீண்டும் என்னுள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன்.  பயணம் செய்த களைப்பில் கண்ணில் மாலை வெயிலில் ரங்தூன் மடாலயம் தெரிய குளிரில் போர்த்தியபடி படுத்திருந்த கணத்தை, மனிதர்கள் அருகிய வெளியில் மனதில் ஒரு பிரமாண்ட மௌனத்தை  வெகுவாக அருகில் உணர்ந்தேன்.  ஒரு சௌந்தர்ய சொப்பன சாயங்காலம்!  மலைகளின் சரிவில் பெரும் விரிப்புபோல  நிழல்களின் அழகு.  ஒருமை மனதில் தானே அமைவதற்கான வெகு நெருக்கமான சூழல்.

 

 

இளம்வயதில் ஞாயிற்றுக்கிழமைகளில் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்று ஒரு ஆங்கிலத் தொடர் வரும்.  மேலிருந்து வரும் ஒருகருவியின் ஒளிக்கற்றைகளில் சென்று நின்றால் அப்படியே கலைந்து மறைந்து வேறு ஒரு இடத்தில் தோன்றுவார்கள்.  அதற்கு இணையான அனுபவத்தை தவறாமல் தங்கள் பயணக்கட்டுரைகள் அளிக்கின்றன.  சட்டென்று சூழலினின்று விலகி வேறுஒரு இடத்தில் பொருத்திக்கொள்ளும் தருணம்.

 

அந்த வகையில் என் மனதுக்கு மிகவும் அணுக்கமான ஒரு பதிவு ” நூறு நிலங்களின் மலை”.  குளிர்மலைப் பிரதேசங்களின் மீதான என் ஆழ்மனது நெருக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.  புத்தகம் படுத்துக்கொண்டே படிக்க மிகவும் உகந்ததென்றாலும் ( கனவு எளிதில் வசப்படுமல்லவா) அதில் கறுப்பு வெள்ளை படங்கள்தானிருந்தன.  இணையத்தில் தங்கள் பதிவில் வண்ணப்படங்கள் மேலும் அந்த அனுபவத்தை அணுக்கமாக்கின.

 

படித்துக்கொண்டே வரும்போது  நீங்கள் பயணிக்கும் இடங்களின் பெயர்களை இன்னொரு விண்டோவில் திறந்து  இந்திய வரைபடத்தில் குறித்துக்கொண்டே வருவேன்.  பிறகு அதைச்சார்ந்த காணொளிகளை இணையத்தில் தேடிப்பார்ப்பேன்.  உங்கள் எழுத்தைச் சார்ந்து வரும் என்று எனக்குத் தோன்றும் காணொளியைத் தேர்வுசெய்து அதன் ஒலியை முழுமையாகக் குறைத்துவிடுவேன்.  மனதில் உங்கள் எழுத்துகள் ஓட அந்தக் காணொளியைப் பார்ப்பது உங்கள் வார்த்தைகளின் நிகழ்சித்திரமாக  மேலும் அந்த  விவரிக்க இயலாத அனுபவத்தை எனக்கு சிறப்பாக்குகிறது.  கிட்டத்தட்ட அருகில் அமைந்ததென்று நான் நினைத்த ஒரு இணைய  காணொளி சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

 

https://www.youtube.com/watch?v=7oYSVUM0bwQ

 

திருதராஷ்ட்ரன் கண்ட குருஷேத்திரமாக எனக்கே எனக்கான அனுபவத்தை தங்கள் எழுத்தின்மூலம் நிகழ்த்தியமைக்கு நன்றி!

 

 

அன்புடன்

நா. சந்திரசேகரன்

அன்புள்ள ஜெ

 

நூறுநிலங்களின் மலை  கட்டுரைகளை உங்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வாசித்திருந்தேன். ஆனால் அதை நூல்வடிவில் வாசித்தது வேறொரு அனுபவமாக இருந்தது. இணையத்தில் வாசிக்கையில் உங்களுடனேயே வந்துகொண்டிருக்கும் அனுபவம் அமைந்தது. ஆனால் நூலில் ஓர் ஒன்றுதல் ஏற்பட்டது

 

இமையமலை என்றாலே பொதுவாக பக்திப்பயணமாகத்தான் எழுதுவார்கள். பக்தி ஏதுமில்லாமல், தலபுராணங்களோ வரலாரோ இல்லாமல் வெறும் இயற்கைவர்ணனையாகவே அமைந்திருந்தது இந்நூல். ஆகவே ஒரு காலமில்லாத கனவு போல் இருந்தது

 

எஸ்.ராஜ்சேகர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21
அடுத்த கட்டுரை1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா