1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

nara

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

அன்பின் ஜெ,

முதலில் எழுதிய கட்டுரை, பாதியிலேயே நிற்கிறது; ஒரு கட்சி சார்பாக இருப்பது போல் உள்ளது என்னும் பின்னூட்டம் வந்த்து. அந்தக் கட்டுரையை எழுதும் போது, 1980 துவங்கிய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என்ன என எனக்குள் தொகுத்துக் கொள்ளும் முயற்சிதான் அது.

ஆனால், சீர்திருத்தங்களும், திட்டங்களும் 1991 க்குப் பின்னும் நிகழ்ந்தன என்பதையும் தொகுப்பதுதான் சரியாக இருக்கும்.

1996 முதல் 2004 வரை ஒரு காலகட்டம் – காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி.

இந்தக் கட்டுரை காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் பங்களிப்பின் தொகுப்பு.

உங்கள் பார்வைக்கு 

பாலா

vaj

1996 முதல் 2004 வரை – பொருளாதாரத் திட்டங்கள், சீர்திருத்தங்கள், வளர்ச்சி..

1996 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு நிலையை உருவாக்கியது. பாஜக 140 இடங்களைப் பெற்று, பெரும் கட்சியாக உருவெடுத்தது.  பாஜக வை ஆட்சியமைக்க அழைத்த குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் ஷர்மா, பெரும்பான்மையை நிரூபிக்க, வாஜ்பேயி அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்தார். ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாமல், வாஜ்பேயி, ராஜினாமா செய்தார். அதற்கடுத்த பெரும்பான்மைக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியமைக்காமல், ஜனதா தளம் உருவாக்கியிருந்த, ஐக்கிய முண்ண்ணிக்கு, வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. ஐக்கிய முண்ணனி ஆட்சியமைத்தது.  கர்நாடகத்தைச் சேர்ந்த தேவே கௌடா பிரதமரானார். அவர் 1997 ஆம் ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அதன் பின்,  ஐ.கே குஜ்ரால்,  1998 மார்ச் வரை பிரதமராக இருந்தார். இந்தக் காலத்தில், தமிழகத்தின் ப.சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) நிதியமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்திலும், முந்தைய நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்ந்தன.

கனவு பட்ஜெட்:

1997-98 ஆம் ஆண்டு, ப.சிதம்பரம் தாக்கல் செய்த  பட்ஜெட், 1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அடுத்த படியாக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 1991 போல் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 19.5 பில்லியன் டாலர்கள்; முந்தய மூன்று ஆண்டுகளில், இந்தியா சாரசரியாக 7% வளர்ச்சி; தொழில்துறை 10.6% வளர்ச்சி என ஒரு சாதகமான பொருளாதாரச் சூழல். நிதிமையச்சர் மிகத் துணிவுடன், அடுத்த நிலை பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தார்.

பொருளாதாரத் தளங்களில், லாஃபர் வளைவு (Laffer Curve) என்னும் கருதுகோள் உண்டு. இது, ஆர்தர் லாஃபர் (Arthur Laffer) என்னும் பொருளியல் நிபுணர் முன்வைத்தது. குறைவான வரிவிகிதம், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, நாட்டின் வரி வருவாயை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான வரிவிகிதம் பொருளாதார நடவடிக்கையை முடக்கி, வளர்ச்சியைக் குறைத்து, மொத்த வரி வருவாயைக் குறைக்கும் என்பதே அது.

அந்தத் திசையில், பட்ஜெட்டில், நிறுவன மற்றும் தனிமனித நேர்முக வரிகள், பெருமளவு குறைக்கப்பட்டன.

தனியார் நிறுவனங்களுக்கான வருமான வரி 40% லிருந்து, 35% ஆகக் குறைக்கப்பட்டது. வரிமீது விதிக்கப்பட்ட 7.5% கூடுதல் வரி முற்றிலுமாக விலக்கப்பட்டது. நிறுவனப் பங்குகளில் வரும் ஈவுத் தொகை (Dividend) மீதான வருமான வரி விலக்கப்பட்டது. அதன் மீது, நிறுவனங்கள், 10% வரி கொடுக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரும் ஈவுத் தொகை வருமானத்துக்கு வரி முற்றிலும் கிடையாது.

தவிர, தொலைத்தொடர்புத் துறை மற்றும் எண்ணெய், எரிவாயு, தனியார் தொழிற்பேட்டைகள் போன்ற முக்கியத் துறைகள், கட்டமைப்புத் (infrastructure industries) தொழில்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்குக் கொடுக்கப் பட்டது.

மறைமுக வரிகளான இறக்குமதி வரி (Import Duty) அதிகபட்ச வரி 50% லிருந்து 45% ஆகவும், கலால் வரி (Excise Duty) அதிக பட்ச வரி, 20% லிருந்து 18% ஆகவும் குறைக்கப்பட்டன.

இந்தக் குறைப்பைச் சரிசெய்ய, சேவை வரிகள் பல புதுத் துறைகள் (போக்குவரத்து, மனித வள மேம்பாட்டுத் துறை..) மீது விதிக்கப்பட்டன.

தனிமனித நேர்முக வரிவிகிதங்கள், 15%, 30%, 40% லிருந்து, 10%, 20%, 30% என மாற்றியமைக்கப்பட்டன.

இந்த அளவு, ஒரு ஒட்டு மொத்த, வரியளவுக் குறைப்பு, மிகத் துணிச்சலான முன்னெடுப்பு எனக் கருதப்படுகிறது. தனிமனித மற்றும் நிறுவன வரிவிகிதங்கள், இந்த பட்ஜெட்டில், மற்ற உலகநாடுகளுக்கு இணையாக மாற்றப்பட்டன.

இது ஒரு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்டது என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெருகிறது.

வாஜ்பேயி ஆண்டுகள்:

ஐக்கிய முண்ணனி ஆட்சி கவிழ்ந்ததன் பின் 1998 ஆண்டு தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து, வாஜ்பேயி, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைத்தார்.  அந்த ஆண்டு மே மாதம், அணுகுண்டுப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள், இந்தியா மீது தொழிநுட்பத்தடைகளை விதித்தார்கள். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாஜ்பேயி அரசுக்கு அளித்து வந்த, தன் ஆதரவைத் திரும்பப் பெற்று விட, ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்த முறை, பல அரசியல் வேறுபாடுகள் இருந்தும், கூட்டணி ஆட்சி நீடித்தது.

வாஜ்பேயியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பெரும் பொருளாதார நடவடிக்கை, தங்க நாற்கரமாகும். இது, நாட்டின் நான்கு பெரும் நகரங்களை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலைத் திட்டம். இது தவிர, கிராமிய சாலை இணைப்புத் திட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை போன்றவை வாஜ்பேயி காலத்தில் நிகழ்த்தப் பட்ட தனித்துவப் பொருளாதாரத் திட்டங்கள். தவிர, நரசிம்ம ராவ் காலத்தில் துவங்கப் பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தப் பட்டன.

தங்க நாற்கரம்:

தில்லி, மும்பை, சென்னை கல்கத்தா ஆகிய இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களை இணைக்கும் 5846 கிலோமிட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம், இந்தியாவின் மிகப் பெரும் நெடுஞ்சாலைத் திட்டமாகும். உலகின் ஐந்தாவது பெரிய நெடுஞ்சாலையும் கூட. 1999 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம், இந்தத் திட்டம் 2000 ஆண்டு துவங்கியது. இது முதலில், நான்கு வழிச் சாலையாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 2009 ஆம் ஆண்டு 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு, 35000 கோடி செலவில் முடிக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை, 13 மாநிலங்கள் வழியே, 84 பெரும்/சிறு தலைநகர்கள், வணிகத் தொழில் நகரங்களை இணைத்தது.  இந்தத் திட்டத்தின் பெரும் பயனாளிகள் ஆந்திரம் (1014 கி.மீ), உத்திரப்பிரதேசம் (756 கி.மீ), ராஜஸ்தான் (725 கி.மீ), கர்நாடகம் (623 கிமீ) ஆகும்.

90 களில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர், தொழில் மற்றும் வணிகக் கொள்கைகள், தனியார் துறையை பெருமளவு ஊக்குவித்தன. அவற்றின் கொள்திறனும், செயல் திறனும் அதிகரித்தது. ஆனால், அந்தக் உற்பத்தியைக் கொண்டு செல்லும் சாலைக்கட்டமைப்பு இல்லாமல், நேரம் மற்றும் நிதி விரயங்கள் தனியார் துறையைப் பெரிதும் பாதித்தன. இந்தத் திட்டம், அந்தச் சிக்கலைப் பெருமளவு போக்கியது எனச் சொல்லலாம்.

இந்தக் கட்டமைப்பினால், பெரும் கொள்ளளவு திறன் கொண்ட வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தன. 9 டன் லாரிகளே இருந்த காலத்தில் இருந்து 16-25 டன் வரை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தன. நீண்ட தொலைவுத் தடங்களில், பயண நேரம் 15-20% வரை குறைந்தது. தரமான சாலைகளால், வாகனங்களின் தேய்மானம், உதிரிப் பாகங்கள் தேவை கணிசமாகக் குறைந்தது. வண்டிகளின் மைலேஜ் அதிகரித்தது.

இதனால், இந்தச் சாலைகளின் அருகில் இருந்த தொழிற்சாலைகளின் கொள்திறன் மற்றும் செயல்திறன் அதிகரித்தது என, “High way to Success: The impact of the Golden quadrilateral Project for the Location and performance of Indian manufacturing என்னும் தலைப்பில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. இது, உலக வங்கி பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் எஜஸ் ஹனி (Ejaz Ghani) மற்றும் ஆர்த்தி க்ரொவரும் (Arti Grover), ஹார்வர்ட் மேலாண் பள்ளியைச் சார்ந்த  வில்லியம் ஆர் கெர் (William R. Kerr) என்பவரும் இணைந்து, National Bureau of Economic research என்னும் அமெரிக்க நிறுவனத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியாகும்.

மேலும், நிலக்கரி, சிமெண்ட், மின் உற்பத்தி நிறுவனம் போன்ற கச்சாப் பொருட்களை அதிகம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள், தங்கள் கச்சாப் பொருள் இருப்பை குறைக்க முடிந்தது என்றும் இன்னும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  இதை சௌகதோ தத்தா (saugato Datta, World Bank group, 2008) என்னும் ஆய்வாளர் விரிவாக ஆராய்கிறார்.  தங்க நாற்கரச் சாலையோடு தொடர்புடைய நகரங்களில் (19) உள்ள நிறுவனங்களையும், தொடர்பில்லாத நகரங்களில் (18) உள்ள 1091 தொழில் நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை, இந்தத் திட்டத்துக்கு முன்பும் (2002) பின்பும்(2005) ஆராய்ந்து அவர் முடிவாக வைக்கும் அவதானிப்புகள் இவை:

  1. தங்க நாற்கரச் சாலையினால் இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளில், கச்சாப் பொருள்களின் அளவு 7 நாட்கள் வரை, தங்க நாற்கரச் சாலைகள் வந்த பின் குறைந்திருக்கிறது. இது கிட்ட்த் தட்ட 15 – 25% சேமிப்பு. இந்த அளவுக்கு, நிறுவனம், கச்சாப் பொருட்களை வாங்க ஆகும் நிதியைக் குறைத்திருக்கிறது.
  2. சாலையினால் இணைக்கப் பட்ட தொழிற்சாலைகள், தங்களுக்கு கச்சாப் பொருட்கள் அளிக்கும் சப்ளையர்களை மாற்றும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. புது சப்ளையர்கள் வரும் போது, கச்சாப் பொருள் வாங்கும் விலை குறையும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மேலும், நெடுஞ்சாலை அமைத்தலும், மேலாண்மையுமே ஒரு பெருந்தொழிலாக எழுந்து வந்ததும், அதனால் உண்டான வேலைவாய்ப்புகளும் இன்னுமொரு நேர்மறை விளைவு.

பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைத்திட்டம்:

இது, வாஜ்பேயியின் ஆட்சியில் துவங்கப்பட்ட இன்னுமொரு முக்கியமானதிட்டம் ஆகும். சமவெளிகளில், 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், 1.7 லட்சம் கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் சாலைகளை இணைக்கும் திட்டம். இது, 2017 டிசம்பர் மாதம் வரை 82% நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பயனை அடைந்தன. இதை ஆய்வு செய்த, திட்டக் கமிஷன், கீழ்க்கண்ட அவதானிப்புகளை முன்வைக்கிறது.

(https://rural.nic.in/sites/default/files/Study%20of%20PMGSY.pdf)

  1. இணைக்கப் பட்ட கிராமங்களில், 50% மேற்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்
  2. 68% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள்.
  3. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, வாகனப் பேருந்துகள் 31% கிராமங்களில் துவங்கியிருக்கிறது.
  4. 40% சதவீத கிராமங்களில், சிறு சரக்கு வாகனப் போக்குவரத்து துவங்கியிருக்கிறது.
  5. உணவு தானியங்கள் விளைவது குறைந்து காய்கறிகள்/ பழங்களின் சாகுபடி அதிகரித்து இருக்கிறது.
  6. உர உபயோகம், ட்ராக்டர் / டில்லர் உபயோகம் அதிகரித்து இருக்கிறது.
  7. உழவர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பது அதிகரித்திருக்கிறது. அவர்களது வருமானமும் அதிகரித்திருக்கிறது.

புதிய தொலைத் தொடர்புக் கொள்கை:

80 களில் சாம் பிட்ரோடா துவங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, 90 களில் பெரும் வளர்ச்சி அடைந்திருந்த்து. 1990 ஆம் ஆண்டு, 0.6 ஆக இருந்து தொலை பேசி இணைப்புக் குறியீடு, 1996 ல் 1.54 ஆக வளர்ந்த்து. இது லேண்ட் லைன்களுக்கான குறியீடு. 1995 ஆம் ஆண்டு கைபேசி இணைப்பு இந்தியாவில் துவங்கப்பட்ட்து. இந்தியாவில் உள்ள பல் வேறு மாநிலங்களிலும், கைபேசித் தொடர்புக்கான லைசென்ஸ்கள் தனியாருக்குத் தரப்பட்டன.  4 மெட்ரோ நகரங்கள், 18 மாநிலங்கள் எனப் பிரிக்கப்பட்டு, இதற்கான உரிமங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

ஆனால், 90 களின் இறுதியில் எதிர்பார்த்தது போல, கைபேசிச் சேவைகள் எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக ஊரகத் தொடர்பு எதிர்பார்த்தது போல பரவலாக நிகழவில்லை. தொலைபேசித் துறையின் தொழில்நுட்பமும் மாறியிருந்தது. 94 ல் ஏலம் விடப்பட்ட தொகைக்கேற்றார் போல, தொழில் வளர்ச்சி நிகழவில்லை.

1999 ஆம் ஆண்டு, புதிய தொலைத் தொடர்புக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. அதிக ஏலத்தொகை ஒரு பாரமாக இருப்பதை மாற்றி, குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம், அதன் பின் வரும் வருவாயில் பங்கீடு, லேண்ட் லைன், கைபேசிச் சேவை, இணையச் சேவை போன்றவை இணைப்பு, கைபேசிச் சேவையில் அரசு நிறுவனங்களின் நுழைவு, தொலைபேசிச் சேவையில் 49% அந்நிய முதலீடு, தொலைத் தொடர்பு கருவிகள் உற்பத்திக்கும் 100% அந்நிய முதலீடு அனுமதி போன்ற முதலீட்டுக்கு அணுக்கமான கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.  இதனால், இத்துறையில், பல நிறுவனங்கள் உள்ளே நுழைந்தன.  1999 ஆம் ஆண்டு 3430 கோடியாக இருந்த அந்நிய முதலீடு, 2007 ஆம் ஆண்டில் 45970 கோடியாக உயர்ந்தது.

நிறுவனங்களின் போட்டி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்தன. உள்நாட்டுத் தொலைதூரக் கட்டணங்கள் நிமிடத்துக்கு 30 ரூபாயிலிருந்து(1997), 2.40ரூபாயாகக்(2007) குறைந்தது. வெளிநாட்டுத் தொலைபேசிக் கட்டணம், நிமிடத்துக்கு 75 ரூபாயிலிருந்து (1997), 6.40 ரூபாயாகக் குறைந்தது.  இது, இத்துறையில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.

தகவல் தொலைத்தொடர்புத் துறை நவீனமயமாக்கம், 80 களில் துவங்கி, 95 ல் கைபேசிச் சேவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அரசின் கொள்கையைக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து, அதை முன்னெடுத்த வகையில், 1999 ஆம் ஆண்டில், புதிய தொலைத்தொடர்புக் கொள்கை ஒரு முக்கியமான கொள்கைச் சீர்திருத்தம் ஆகும்.

man

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பத்தாண்டுகள் (1991-2011)

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்பான (1981-1990) பத்தாண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை (5.7%) விட, பின்பான (1991-2001) பத்தாண்டுகளின் வளர்ச்சி (6%), சற்றே அதிகம்.

பொருளாதாரச் சீர்த்திருத்தங்களுக்குப் பின்பான ஐந்தாண்டுகளில் (1991-96), வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில், (1996-2001), இந்த வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்து விட்டது.

அதிலும், 1994-97 வரையான மூன்று ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி 7+% சதவீதமாக இருந்தது.  அதற்கு முக்கிய காரணம்,  பொருளாதாரத்தில் அரசும், தனியார் துறையும் இணைந்து செய்த அதிக முதலீடு தான் (பொருளாதாரத்தில் 23%) காரணம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் திட்டக் கமிஷனின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அரசு முடிவு செய்த இலக்கான 7.5 – 8% சதவீத வளர்ச்சிக்கு, பொருளாதாரத்தில் இன்னும் அதிக முதலீடு செய்யப்பட்டால் ஒழிய,  7-8% வளர்ச்சியை அடைவது கடினம் என்பது அவரது கருத்து.

1996-2004 வரையான காலகட்டத்தில் முதலீடுகள் தனியார் துறையிலும், அரசுத் துறையிலும் வந்தன. ஆனால், அவற்றின் பலன் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பொருளாதார வளர்ச்சி வடிவில் வெளிப்பட்டது.

1997-98 பட்ஜெட்டில், சிதம்பரம், தனியார் துறை வருமான வரியை 8 சதம் குறைத்தார். அதுமட்டுமல்லாமல், லாபத்தில் தரப்படும் ஈவுத் (dividend) தொகைக்கான வரியை விலக்கினார். இந்த நடவடிக்கை,  தனியார் நிறுவனத்தின் நிகர லாபத்தை அதிகரித்தது. முதலீட்டாளர்களிடம் சேரும் ஈவுத் தொகை லாபமும் அதிகரித்தது. இது பெரும்பாலும், மீண்டும் தொழில் முதலீடாக, கொள்திறனை அதிகரிக்கவோ அல்லது, புதுத் தொழில் துவங்கவோ வந்தது.

அந்தப் பட்ஜட்டில், தொலைத் தொடர்புத் துறை, தனியார் தொழிற்பேட்டைகள் முதலானவற்றுக்கான முதலீட்டிற்கு 10 ஆண்டுகள் வரிச்சலுகை கொடுக்கப்பட, அவற்றில் தனியார் துறையினர் பெருமளவில் முதலீடு செய்தனர்.

அதே பட்ஜட்டில் அதிக பட்ச தனிநபர் வருமான வரியையும், 10% குறைத்தார். இதனால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கையில் அதிகப் பணம் கிடைத்தது. இந்தச் சமயத்தில், மிகப் பெரும் எழுச்சியைக் கண்ட மென்பொருள் துறையும், தொலைத் தொடர்புத் துறையும், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நல்ல  ஊதியத்தை வழங்கினர்.  இந்த பணம், வீடுகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றின் தேவைகளைப் பன்மடங்கு அதிகரித்தது.

1999 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, தொலைத்தொடர்புத் துறை பல மடங்கு வளர உதவியது. தொலைத் தொடர்புக் கருவி உற்பத்தியில் அந்நிய முதலீடு, 2007 ஆம் ஆண்டில் 45970 கோடியாக உயர்ந்தது.

2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தங்க நாற்கரச் சாலையில், அரசு 35000 கோடி முதலீடு செய்தது. தொழில்துறையில் செயல் திறனும், கொள்திறனும் அதிகரித்தன. போக்குவரத்துச் செலவும் நேர விரயமும் பெரிதும் குறைந்தன.

இந்த முதலீடுகளும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும், 1991-2001 காலகட்டத்தில் இருந்த 6% பொருளாதார வளர்ச்சியை, 2003-2008 காலகட்டத்தில், 8% ஆக முன்னெடுக்கப் பெரும் உந்துசக்தியாக இருந்தன.

Reference:

  1. Budget Speech, P.Chidambaram, 1997-98
  2. Highway to Success: The impact of the Golden Quadrilateral Project for the location and performance of Indian Manufacturing – Ejaz Ghani Arti Grover Goswami William R. Kerr,

National Bureau of Economic Research,  Cambridge.

  1. Economic Reforms in India since 1991 – Has gradualism worked? –Montek Singh Ahluwalia, Journal Of economic perspectives, Summer,2002
  2. The Impact of Policy and Regulatory decisions on Telecom Growth in India – Stanford University, July-2008
  3. New Telecom Policy,1999 – Ministry of Telecommunications.
  4. Impact Assesment of Pradhan Mantri Gram sadak yojana for the planning commission.
முந்தைய கட்டுரைநூறுநிலங்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைரகசியச் சலங்கை