ரகசியச் சலங்கை

isai

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்,இசை …வாங்க

ஒரு கவிதைத் தொகுதிக்குரிய தலைப்பு அல்ல இசையின் புதிய தொகுப்புக்கு. ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமூகசீர்திருத்தக் கருத்துக்களின் குவியல் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அட்டையும் விந்தையானது. வழக்கமாக கவிதைத் தொகுதிகளின் அட்டையிலுள்ள குறியீட்டுநவீன ஓவியம் இதில் இல்லை. ஓவியமும் முகநூல்பக்கமும் ஊடுபாவாக அமைந்த க்லவைச்சித்திரம். கிறிஸ்துவுக்கு பின்பக்கம் காட்டிப் படுத்திருக்கும் சிறுமியின் கோட்டோவியம் அளிக்கும் உணர்வு தனித்துவமானது

இசையின் கவிதைகள் மெல்லிய தற்கேலியையும், கள்ளமின்மையையும் தன் புனைவுப்பாவனையாகக் கொண்டவை. பகடி என அவற்றை வகைப்படுத்தலாகாது, பகடிக்குள் இருப்பது எப்போதுமே விமர்சனம். பகடிக்கலைஞர்கள் மிகமிக நுட்பமாக தங்கள் ஆணவத்தை மறைத்துக்கொள்பவர்கள். ஆகவேதான் பகடிக்கலைஞர்களை பிறர் பகடி செய்தால் மிக மெல்லிய கிண்டலுக்கே கடுமையாகப் புண்பட்டுவிடுவார்கள். அது ஏற்கனவே புண்பட்டுவிட்டமையால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் தன்னிலை

இசையின் கவிதைகளுக்குள் விமர்சனம் இல்லை, அதற்கான உறுதியான தன்நிலையும் இல்லை. அவை தன்னை மெய்யாகவே எளிதாக உணரும் கணங்களை எழுதிக்காட்டுபவை. உண்மையான பிரியத்தை உள்ளுறையாகக் கொண்டவை. என்னளவில் பகடி என்பது இலக்கியவகைமையில் ஒருபடி கீழானது. மேலான கவித்துவத்தை விட பலமடங்கு குறைவானது. இக்கவிதைகளிலுள்ளது புன்னகை. பிரியத்தின் புன்னகை. கசப்பையும் பிரியமாக வெளிப்படுத்துவது. துயரை உள்ளே வைத்துக்கொள்வது.

வல்லதே 

எல்லாம் வல்லதுவே…

எல்லாம் வல்லதைப் போன்ற அரசே…

அரசைப் போன்ற காதலியே…

நான் உன் விளையாட்டுச் சாமானம்தான்

ஆயினும்,

அவ்வளவு வேகமாக சுவற்றில் அடிக்காதே.


என தன்னை அறையும் அக, புற விசைகளுடன் புன்னகையுடன் சொல்லும் பாவனை அனைத்துக் கவிதைகளிலும் உள்ளது. மீண்டும் மீண்டும் இக்கவிதைகளுக்குள் செல்லத்தூண்டுவது அப்புன்னகைதான்.

vaz

தமிழ்க்கவிஞர்களில் இருவர் முற்றிலும் துயரற்றவர்கள். நவீனக் கவிதை என்பதே கசப்பின், தனிமையின், துயரின் வெளிப்பாடு என்று இருந்த சூழலில் எழுந்தவர்கள். நவீனக்கவிதையின் தலைமகன்களாகவும் திகழ்பவர்கள். தேவதேவனிடம் துயரில்லை. எளியமானுடத் துயர்களை வானளாவும் உள எழுச்சியால் பேருவகையாக மாற்றிக்கொண்டவர் அவர்.  ‘இந்த  பப்பாளிப்பழம்’ இன்றைய சூரியன் என உணரும் உளவிரிவு அவரை துயரற்றவராக்கியது. கோயில்பட்டியின் மண்டைபிளக்கும் உச்சிவெயிலை ‘மத்-தியான வெயிலின் தித்திப்பாக உணர்ந்தமையால் தேவதச்சன் துயர்களை கடந்தார்.

தேவதச்சனின் புன்னகையுடன் ஒப்பிடத்தக்கது இசையின் கவிதைகளிலுள்ள சிரிப்பு. ‘இந்தக் கொடும் பனிக்காலம் இப்படிக் கொட்டித்தீர்ப்பதெல்லாம் நம் தேநீரை இன்னும் கொஞ்சம் சுவையூட்டத்தான் தம்பி’ என உணரும்போது அவர் மத்தியான்ன வெயிலைச் சுவைக்கும் தேவதச்சனுக்கு மிக அருகே சென்றுவிடுகிறார். ‘ஓடும் நீரில் எது என் நீர்?” என்று கேட்ட சுகுமாரனின் கவிதைகளிலிருந்து ‘ சம அளவுள்ள தேநீருடன் என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில் எந்தடம்ளர் எனது டம்ளர்?’ என்று கேட்கும் இசையின் கவிதைக்குள்ள தூரம் இந்தக்காலகட்டத்தின் உளமாற்றம் என தோன்றுகிறது

இத்தொகுதி முழுக்க என்னைக் கவர்ந்தது அன்றாடம்தான். அன்றாடத்தின் ஒவ்வொரு துளியையும் பிறிதொன்றாக மாற்றுபவை தேவதேவன் கவிதைகளும் தேவதச்சன் கவிதைகளும். அன்றாடத்திலிருந்து எழுந்தபின்னர் அஞ்சி மீண்டும் வந்தமையும் எளிமையின் அழகால் கவிதையாகின்றன இசையின் வரிகள்

மனையாட்டி

மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில்
தன்னிச்சையாக
மொட்டை மாடிக்குப் போனான்
கருநீல வானத்தில் கரைந்து நின்றான்
குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்
நட்சத்திரங்களில் மினுமினுத்தான்
அவள் வீட்டில் இருக்கையில்
இவ்வளவு பெரிய வானம்
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி  ஜொலிக்கும் நிலவு
இவையெல்லாம் எங்கே ஒளிந்துகொள்கின்றன என்று
ஒருகணம் யோசித்தான்
மறு கணம்
அஞ்சி நடுங்கி
miss u  என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்

ஒருமுறை பார்வதிபுரம் பேருந்தில் அமர்ந்திருக்கையில் என் அருகே ஒல்லியான ஒருவர் இருந்தார். புருவத்தையும் மீசையையும் நன்கு மழித்திருந்தார். முகத்தில் எஞ்சியிருந்த அரிதாரத்தின் செம்மை அவர் நடனக்கலைஞர் என்று காட்டியது. உள்ளூர் திருவிழாக்களில் ஆடவந்தவர். அவருடைய கையிலிருந்த தோல்பைக்குள் சலங்கை இருந்தது. நாகர்கோயில் வட்டச்சுற்றுப்பேருந்து சாலையில்லாத வழியின் கற்களின்மேல் துள்ளித்துள்ளிச் செல்ல மெல்லிய சலங்கை ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. முதலில் அது என்ன என்று வியந்து பின் அறிந்ததும் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். என் கற்பனையில் ஒரு நடனம் எழுந்தது

தன்னுள் எப்போதும் நடனச்சலங்கையைக் கொண்டிருக்கும் கவிஞனுக்கு வாழ்த்து

இசையின் இணையதளம்
இசையின் வரிகள்
ஒரு செல்லசிணுங்கல்போல….
இசையும் மணிகண்டனும் – கடிதங்கள்
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
இசைக்கு மெய்ப்பொருள் விருது
ஞானக்கூத்தன் பற்றி இசை
முந்தைய கட்டுரை1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22