ஸ்டெப்பி ஓநாய் – ஹெர்மன் ஹெஸ்ஸே
இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை குறித்தே அதிகம் கவனம் கொள்கிறது என நினைக்கிறேன். ஒருவகையில் அதைத் தக்கவைக்க அதற்கான நியாயங்களைச் சொல்கிறது. நம்மை சுற்றி நடக்கும் போலிப் பாவனைகளும், சுயநலங்களும் தான் நம்மை அப்படி உருவாக்கி வைத்திருக்கிறதென சொல்லி ஒருவகையில் நம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தி மனிதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை நோக்கி நகர்த்துகிறதென எனக்கு பட்டது.
ஆனால் இதற்கினையான மானுட சரிவை, இயலாமையைப் பேசும் யதார்த்தவாதப் படைப்புகளோ அவ்வெண்ணத்தை உருவாக்குவதில்லை. யோசிக்கும் போது இரண்டு காரணங்கள் தோன்றுகிறது. எப்படியோ அது புறச்சூழலில், இயற்கையில் கொள்ளும் லயிப்புகள் மூலமும் அல்லது அதன் முகங்களாக வரும் எளிய நேரடியான கதாப்பாத்திரங்களின் மூலமாகவும் அதை சமன் செய்கிறது. படைப்பை வாசித்து முடிக்கும் போது அத்தனை வெறுமைக்கு நடுவிலும் கனிவு துளிர்ப்பதை தவிர்க்க முடியாமல் செய்கிறது. அத்தனை சிறுமைகளுக்கு நடுவிலும் மானுடம் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
ஹெர்மன் ஹெஸ்ஸே வின் ஸ்டெபி ஓநாய் நாவலை வாசிக்க ஆரம்பிக்கும் போது அதன் ஆரம்ப பக்கங்களிலிருந்து இது முழக்க முழுக்க ஒரு இருத்தலியல் படைப்போ என்ற ஆச்சிரியம் தோன்றியது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவரது சித்தார்த்தா வை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அதில் அவரது விடுதலை குறித்தான தேடல் மிகவும் உத்வேகமூட்டியது. ஆதனால் இது வெறும் இருத்தலியல் சிக்கலை மட்டும் பேசும் நாவலாக இருக்காதென எண்ணியே தொடர்ந்து வாசித்தேன்.
நினைத்தது போலவே இது வெறும் மனித மனத்தின் நெருக்கடியை மட்டும் இது பேசவில்லை. அங்கு ஆரம்பித்து அதிலிருந்து மேலெழுவதற்கான தேடலை முன்னெடுக்கிறது. நாவலின் மையக் கதாப்பாத்திரமான ஹாரி தான் இந்த பூர்ஷ்வா சமூகத்தில் ஒரு உதிரி என நினைக்கிறான்.
கலாச்சார சுரணைற்ற, பொருள்மைய்ய மனநிலை கொண்ட இந்த பெரும்பான்மையானவரின் உலகில் தனக்கு இடமில்லை என்ற உணர்வுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் 48 வயதுக்காரன் ஹாரி. இசையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடுள்ளவன். அவ்வப்போது கவிதை எழுதுபவன். எதற்கும் சமரசமில்லா தன் ஆளுமையின் உருவாக்கத்தின் பொருட்டாக தனது தொழில் தோல்வி, அதன் விளைவால் தன்னுடைய மனைவி விவாகரத்து என பலிகொடுத்து இறுதியாக ஒரு வாடகைத் தனியறையில் இருந்து அவன் பொழுது கழிகிறது.
அவனுடய உலகம் பெரும்பான்மையிடமிருந்து விலகியிருப்பதுதான் அவன் முதற்பெரும் பிரச்சனை. இசையிலும் இலக்கியத்திலும் அவன் கொள்ளும் நுண்ணுவர்க்கு நேரெதிராக அவர்களின் நிலையுள்ளது. மொஸார்டின் தீவிர ரசனையாளனான அவனுக்கு கிடைப்பெதெல்லம் ஆழமற்ற அமெரிக்க இறக்குமதியான உள்ளோட்டமில்லாத என அவன் எண்ணும் ஜாஸ் இசையின் ரசிகர்கள் நிறைந்த சுற்றம் தான். இந்த உரசல் அவன் ஆளுமையின் அனைத்து பக்கங்களிலும் வெளிப்படுகிறது. இந்த சராசரி உலகுடன் தான் உரையாடுவதற்கு ஏதுமில்லையென தன் வாசல்களை மூடிக்கொள்கிறான். அக்காலாட்டத்தின் அனைத்து கலைஞர்களைப் போல தனிமை அவனை சூழ்ந்து கொள்கிறது. அந்த புறவாசல் மூடல்களாலும், தனிமையாலும் தனக்கான ஈடுபாடுகளில் ஆழ்ந்து சென்று கூர்மையான பார்வையை உருவாக்கிக் கொண்டு தன் ஆழுமையை மேலும் வளர்தெடுக்கிறான்.
இதனுடைய மறு எல்லையாக சமூகத்தில் கூடி வாழ படைக்கப்பட்ட அந்த ஆதி விலங்கு அந்த நீண்ட தனிமையின் இருளால் துன்புறுகிறது. எப்போதாவது நிகழும் படைப்பூக்கத்தின் உச்சத் தருணங்களைத் தவிர தன் தினசரி வாழ்நாளின் பெரும்பகுதி சோர்வும் விரக்தியுமாக கழிகிறது. அந்த இருளுக்குஅதன் அழுத்தத்திற்கு அஞ்சி அதிலிருந்து அவ்வப்போது மீளவே அந்த இடத்தில் தங்குகிறான். ஒரு சராசரி மனிதனாக அவன் கடந்த காலத்தின் ஒளிக்கீற்று அவனது இளமைப் பருவம் தான். அதன் இளைப்பாரலில் இருக்கவே எந்த பூர்ஷ்வா சமூகத்திடமிருந்து விலகி தன்னை உருவாக்கிக் கொண்டானோ அதே சூழலில் போய் தங்குகிறான். அங்கு இருக்கும் தூய்மையும், கட்டுப்பாடும், அன்றாட வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கும் சமூகத்தின் மத்தியில் தங்குகிறான். இருந்தும் அவனது அறை ஒழுங்கின்றியும், சிகரெட் நெடியுடனும், சுற்றிலும் சிதறிய புத்தங்களுமாகவே இருக்கிறது. அவ்வப்போது தனிமையின் அழுத்தம் தாளாமல் ஆறுதல் தேடி அந்த குடியிருயிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தின் படிக்கட்டில் சில மணித்துளிகள் அமர்ந்திருப்பான்.
இந்த விரக்தியின் புகலிடமாக அவனுக்கு மதுவிடுதிகள் அமைகின்றன. ஒரு மாலை பொழுது அப்படியான மதுவிடுத்திக்கு செல்லும் வழியில் ஒரு பாழடைந்த சுவரைப் பார்க்கிறான். ஒரு பழைய கோதிக் பாணியான சர்ச்சின் பகுதியான அந்த சுவற்றின் உச்சியில் “மாயாஜால நாடக அரங்கு – பைத்தியக்காரர்களுக்கு மட்டும்” என எழுதியிருக்கிறது. அதிலிருந்த மர்ம ஈர்ப்பால் சில நிமிடங்கள் அங்கேயே உறைந்து நின்று பின்பு சலிப்புடன் தனது வழக்கமான மதுவிடுதிக்கு செல்கிறான். திரும்பவும் அங்கும் அதே வாதை. அங்கு இருக்கும் வெறும் புலனின்ப உள்ளீடற்ற களியாட்டங்களுக்கு தனக்குள் ஓயாமல் எதிர்வினையாற்றி வெறுமையுடன் திரும்புகையில் அதே சுவற்றுக்கு அருகில் வருகிறான். அப்போது அங்கு அவனிடம் வரும் விசித்திரமான மனிதன் ஒரு துண்டுப்பிரசுரம் வடிவில் ஒரு குறிப்புக் காகிதங்களை கொடுத்துவிட்டுப் போகிறான்.
வீட்டிற்கு வந்து படிக்கையில் கிட்டத்தட்ட தன்னைப் பற்றிய குறிப்பு போலவே இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ஹாரி என்ற இரட்டை ஆளுமை கொண்டவனைப் பற்றி அது குறிப்பிடுகிறது. ஒன்று சராசரி மனிதன். தனக்கான விழுமியங்களையும், நெறிகளையும் பின்பற்றி சமூகத்துடன் வாழ நினைப்பவன். மற்றொன்று ஒரு ஸ்டெப்பி ஓநாய். கலாச்சாரம் கொடுத்த எதையும் ஏற்றுக் கொள்ளாத புலன் சார்ந்த தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பயமும் தனிமையும் நிறைந்த ஓநாய்.
குறிப்பை வாசிக்கும் ஹாரியும் தன்னை பற்றி அவ்வண்ணமே குறிப்பிடுகிறான். மேலும் வாசிக்குபோது அக்குறிப்பில் வரும் ஹாரியின் இந்த இரட்டை ஆளுமையால் அவன் கொள்ளும் சிக்கல்களும், அந்த நிலை மற்றும் அவன் வாழும் பூர்ஷ்வா சூழலைப் பற்றிய அவதானிப்பையும் அக்குறிப்பு விளக்குகிறது. கிட்டத்தட்ட நாவலில் மொத்த சிக்கல்களும் கருத்து வடிவில் இந்தப் பகுதியில் சொல்ப்படுகிறது. அதற்கு மேல் புனைவுத் தளத்தில் அது எவ்விதம் வளர்கிறது என்பதே அடுத்தடுத்த பகுதிகளில் ஆராயப்படுகிறது.
இந்த இரட்டை ஆளுமையால் ஹாரி மிகுந்த அல்லற்படுகிறான். எப்போதெல்லாம் அவன் உணர்ச்சிவசப்படுகிறானோ அல்லது விழுமியங்கள் பக்கம் நிற்கிறானோ அப்போதெல்லெம் அந்த தனிய ஓநாயின் பார்வை அவன் நிலைப்பாட்டின் மேல் ஐயம் கொள்ள வைக்கிறது. அதெல்லாம் வெறும் பாவனை மட்டும் தானா எனக் கேட்டு சஞ்சலப் படுத்துகிறது. அதே போல் அவன் கொள்ளும் புலனின்பங்களின் தருணங்களிலெல்லாம் எதிர் பக்கமிருக்கும் அந்த கலாச்சார மனிதன் அவனை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறான்.
இந்த உழற்றல் அவனுக்குள் மட்டுமல்லாமல் அவனது சுற்றத்தோரிடமும் நீட்சி பெறுகிறது. அந்த கலாச்சார முகத்தைப் பார்த்து அவனுடன் பழகியவர்கள் அவனது ஓநாய்ப் பண்பைப் பார்த்து பயந்து வெளியேறி விடுகின்றனர். அவனது அப்பட்டமான புலனிச்சையால் கிடைத்த சுற்றத்தார் சட்டென எழும் அந்த விழுமியங்கள்சார் மனிதனைக் கண்டு விலக்கம் கொள்கின்றனர். இந்த இரண்டின் முரண்பாட்டால் அவனுள் அமைதியே இல்லை. ஆனால் அபூர்வமாக இந்த இரண்டும் சமரசம் கொள்ளும் அந்த அற்புதத் தருணங்களில் அமைபவையே அவனுடைய லட்சியப் பொழுதுகள். அவனுடைய படைபூக்கமும், இசையில் அவன் திளைக்கும் அபூர்வ நிமிடங்களும் அப்போது அவனுக்கு கிடைக்கும்.
ஹாரியின் சிக்கலை கூறும் அதே வேளையில் முரண்பட்டு அவனை ஆராயவும் செய்கிறது. உண்மையில் பூர்ஷ்வா மனநிலை என்பது வெறும் பொருள்சார் வாழ்க்கையும், கலாச்சார சுரணமின்மை மட்டுமல்ல. மனிதன் எடுக்கும் வசதியான நிலைப்பாட்டு அம்சமும் பூர்ஷ்வா தன்மைதான் என்கிறது. எந்த ஒரு அதீதமான தீவிரத்திற்கும் தன்னை முழுமையாக ஆட்படுத்தாமல் அன்றாட வறட்டு மனநிலையிலேயே தன்னை வைத்திருப்பதும் ஒருவகை பூர்ஷ்வாக் குணம் தான். ஒருவகையில் ஹாரியும் பூர்ஷ்வாதான். ஏனெனில் சராசரிகளின் தண்மைகளை விமர்சனம் செய்யும் அவன் அதற்கு நேரெதிரான விளிம்பு மக்களின் மத்தியிலில்லாமல் அவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டே அதனுடைய அனுகூலங்களையும் பெறுபவன் என்கிறது.
அடுத்ததாக அக்குறிப்பு ஹாரி கொள்ளும் இந்த இரட்டை ஆளுமை என்பது ஒருவித பொய்த்தோற்றம் என்கிறது. உண்மையில் அவன் கொள்ளும் அந்த ஸ்டெப்பி ஓநாய் உருவகம் என்பது அவன் நேர்கொண்டு சந்திக்கத் துணிவில்லாத அனைத்து ஆளுமைகளின் தொகுப்பு என்கிறது. யாருக்கும் ஒற்றை ‘ஆளுமை’ என்பது கிடையாது. பிறந்த குழந்தைக்குக்கும் மிருகத்துக்கும் கூட. ஏதாவது ஒரு பக்கம் அவன் உள்ளம் சாயுமென்றால் அதற்குள் அழுந்தியிருக்கும் எண்ணற்ற வெவ்வெறு ஆளுமைகள் மேலெழுந்து வரும். ஹாரியின் துயரென்பது அவனால் உருவகப்படுத்தப்பட்ட
இந்த இரட்டை ஆளுமைகளுக்கு மத்தியில் ஓயாமல் ஊசலாடிக்கொண்டிருப்பதே. அவனுடைய விடுதலை தன்னை சுருக்கி ஒற்றை ஆளுமையாக ஆக்கமுடிவதில் இருக்கிறது என நினைக்கிறான். பிறந்த குழந்தைப் போல். நம்முடைய ஆதிக்கு. அது இயற்கை அன்னையின் மடிக்கு மீண்டும் திரும்புவது என நினைக்கிறான். ஆனால் விடுதலை என்பது பின்னோக்கி செல்வதல்ல அது முன்னால் இருக்கிறது. அனைத்தையும் சுருக்கி அதை எய்துவதல்ல. அனைத்தையும் விரித்து விரித்து முன் சென்றடைவது. கிட்டத்தட்ட உலகம் அளவுக்கே. அது கடும் தியாகத்தாலும், துன்பங்களைக் கடந்தும் செல்வது. தன்னை உருக்கி மறுவார்ப்பு செய்வதது.
அது புத்தன் செய்தது. அந்த மீட்புக்கான வழியில் கொள்ளும் முக்கியப் பண்பாக நகைத்தலை சொல்கிறது. அமரத்துவத்தின் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் அதை கைவரப்பெற்றவர்கள். வாழ்க்கையின் அனைத்து துன்பங்களிலும் உழன்று மீட்பற்ற நிலையில் எதுவும் செய்ய இயலாத நிலையில் எழும் அந்த சிரிப்பு நம்மை சூனியத்தில் கரைந்து போய்விடாமல் காக்கும்.
குறிப்பை படித்த ஹாரி மேலும் கடும் வேதனைக்கு உள்ளாகிறான். இதுவரை தான் கொண்டிருந்த குறைந்த பட்ச பிடிப்பையும் இது அடித்து நொறுக்கிவிட்டது. இப்போது அவன் முன்னால் உள்ளதது இரண்டு வழிகள். ஒன்று நீண்ட பயனத்தின் முடிவில் உள்ளது. அங்கு செல்ல இது வரை தான் பெற்ற துன்பங்களை விட பல மடங்கு கொடுத்து புடம் போட்டு மேழெல வேண்டும். அதற்கான மனதிடம் இந்த வயதில் தனக்கு இல்லையென நினைக்கிறான். மற்றொன்று வந்த வழியே திரும்ப்தல். மீண்டும் ஆதிக்கு செல்லுதல். முதற்சுழிக்குள் சென்று மறைதல். ஆனால் அதை செய்யவும் தனக்குள்ளிருக்கும் ஒன்று கூசுகிறது. ஒரு பரிசை காலில் போட்டு மிதிப்பதைப் போல அச்செயல் என நினைக்கிறான்.
விரக்தியில் வெளியே செல்லுமவன் ஒரு சாவு ஊர்வலத்தைக் காண்கிறான். அது இறுதியில் புதைக்கப்பட வேண்டிய இடத்திற்கு சென்று அங்கு இறுதி சடங்குகள் நிகழ்கின்றன. அதிலுள்ள அந்த பிடிப்பற்ற செயற்கைத் தன்மை அவனுக்கு கசப்பை உண்டாக்குகிறது. அவர்களின் உடல்களில் தெரியும் சலிப்பு, இறந்த உயிருக்கு கொடுக்கும் மதிப்புமற்ற தன்மை, அவர்கள் கொள்ளும் அவசரம் என அனைத்தும் அவனை சோர்வுறச் செய்கிறது. அவன் அங்கிருந்து கிளம்புகையில் தன் கல்லூரி ஆசிரியரை காண்கிறான். அவரின் அழைப்பை மறுக்க தையிரியமில்லாமல் செயற்கையான புன்னகையை வரவழைத்துக் கொண்டு (அதை அவன் பூர்ஷ்வா மனநிலை என்கிறான்)அவரின் வீட்டிற்கு செல்கிறான்.
அங்கு காணும் கதேவின் உருவப்படம் அவனை கொதிக்க வைக்கிறது. தங்களை கலைரசிகர்களாக காட்ட விரும்புவர்களின் வரேவற்பறையில் அணிசெய்ய தந்திரமாக மாற்றப்பட்ட கதேயின் போலிப்படம் அது. அதில் அவரின் ஆன்மா இல்லை. கலைந்த தலைமுடி நன்றாக திருத்தப்பட்டு ஒரு காட்சிப் பொருளாக மாற்றப்பட்டுள்ளதைக் கண்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பணிவுடன் நடந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் போர் பற்றிய தன்னுடைய கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் தன்னுடைய ஆதரவை விலக்கி அதற்கான மறுப்புகளையும் வசைகளையும் அதிலேயே வெளியிட்டத்தைக் காட்டி ஆசிரியர் அவனை நுட்பமாக அவமதிப்பதைக் கண்டும் அமைதி கொள்கிறான்.இறுதியில் பொறுக்க முடியாமல் தன் மறுப்பை கண்டிப்புடன் கூறிவிட்டு வெளியேறும்போது சிறு ஆசுவாசம் பிறக்கிறது. தன் ஓநாய் முகத்தைக் காட்ட முடிந்ததில் மகிழ்சி கொள்கிறான்.
அங்கிருந்து வெளியேறும் போது திரும்பி வீட்டிற்கு சென்றால் தற்கொலை பற்றிய பயம் மேலெழும் என்பதால் ஒரு மதுவிடுதிக்கு செல்கிறான். வழக்கமான சூழ்நிலை. அவன் வெறுக்கும் ஜாஸ் இசை, அதற்கு நடனமாடும் மக்கள். அன்று நிகழ்ந்த தொடர் கசப்புகளால் சோர்வுற்று தலைசுழல நிற்க முடியாமல் அருகிலுள்ள மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் அனுமதி கேட்டு அங்கு அமர்ந்து கொள்கிறான். உள்நுழைந்ததிலிருந்து அங்கு வரும் வரை அவனையே பார்துக்கொண்டிருந்தவள் அங்கு அமர்ந்தவுடன் மெல்ல உரையாடலைத் துவக்குகிறாள்.
தன்னுடைய சிக்கலை சரியாக தொட்ட அவளின் கூர்மையைக் கண்டு வியக்கிறான். கேட்டதற்கு தானும் அவனைப் போலத்தான் எனக் கூறுகிறாள். பகடியாக அவனுடய சிக்கலை குறிப்பிட்டு அப்படி எவ்வளவு தூரம் வாழ்வின் ஆழத்தை பார்த்திருக்கிறாய் தற்கொலை செய்து கொள்ள என கிண்டலடித்து தன்னுடன் ஆட அழைக்கிறாள். அவன் தனக்கு ஆடத் தெரியாதெனக் கூறவே, சீண்டலாக அவன் ஆசிரியரின் மனைவிக்கு கதேவைப் பற்றி தெரியாத்தைப் போல எனக் கூறி அடிவாங்கிவிட்டு அம்மாவிடம் வந்து ஆறுதல் தேடும் சிறுவன் போல நீ தற்கொலை பக்கம் செல்கிறாய் என் செல்ல ஹாரி எனக் கொஞ்சுகிறாள். தனக்கு சிறு வயதில் யாரும் நடனம் பயில சொல்லித் தரவில்லை என அவன் கூற சிரித்துக் கொண்டே குடிக்க மட்டும் யார் சொல்லிக் கொடுத்தது என கேட்கிறாள்.
எவ்வளவு கூப்பிட்டும் ஹாரி மறுத்துவிட, அவனை அங்கேயே சிறிது நேரம் தூங்கச் சொல்லிவிட்டு அவள் ஆடச் செல்கிறாள். அமைதியான தன் வீட்டிலேயே உறக்கம் வராத ஹாரி அதிசயமாக அவ்வளவு இறைச்சல்களுக்கிடையிலும் தூங்குகிறான். அதில் வரும் கனவு இப்படைப்பில் வரும் மைய்யப் படிமங்களில் ஒன்று. கனவில் கதேவை சந்திக்கிறான், அவனில் இருக்கும் இயல்பான தன்முனைப்பு மேலெழ கதேவின் கலையை விமர்சிக்கிறான். வாழ்வில் மனிதனை அனைத்து விசைகளும் அழுத்தி நசுக்க அவரோ மனித்னின் உயர் விழுமியங்களான நம்பிக்கை மற்றும் தியாகத்தை போற்றுவதால் அவரது படைப்புகள் அனைத்தும் சத்தியமற்ற போலி எழுத்துக்கள் என்கிறான். சக மேதாவிகளான மோஸார்ட் முதலியவர்கள் சிறு வயதிலேயே மறைய 82 வயது வரை வாழ்ந்த சுயநலக்காரர் எனக் கொந்தளிக்கிறான். அவனைக் கனிவுடன் பார்த்து 82 வயது வரை வாழ்ந்தது தன் குற்றம் இல்லை எனக் கூறி அத்தனை வயது வரை வாழ்ந்ததை எந்த வகையிலாவது நியாயப்படுத்த் வேண்டுமானால் தன் 82 வயது வரை தன்னுளிருந்த் சிறுவனை தான் இழக்கவில்லை என்கிறார்.
மலர்ந்து சிரித்து ஒரு சிறுவனைப் போல் ஆடிக் களிக்கிறார். மூப்பின் அத்தனையும் பின்னகர ஆடிக்கொண்டே வந்து அவன் காதில் ‘நீ தேவையில்லாமல் இந்தக் கிழவனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறாய். அதுவும் இறந்தவர்களை. அமரத்துவதின் இந்த உலகில் விளையாட்டல்லாத எதற்கும் இடம் இல்லை’ எனக் கூறி தன் நடனத்தை தொடர்கிறார்.
கிட்டத்தட்ட அந்தப் பெண் சொன்ன இன்னொரு வடிவம் தான் கதே கூறியது. ஹாரியின் அத்தனை துன்பங்களையும் ஒரு சிறுவனின் கோள்சொல்லாக பார்க்கும் அன்னையின் பார்வை அது. நமக்குள்ளேயே அந்த அன்னையை நாம் வைத்திருந்தால் இவ்வளவு காயம் ஏற்பட்டிருக்காது போலும்.
நடனம் முடிந்து திரும்பி வந்த அவள் தான் கிளம்புவதாகக் கூற ஹாரி தன்னை தனியே விடவேண்டாமென்றும் வீட்டிற்கு சென்றால் மீண்டும் தற்கொலை எண்ணம் தலைதூக்கும் எனக் கெஞ்சுகிறான். அந்த விடுதியின் அறைகளில் தங்க சொல்லிவிட்டு அவனுடைய சுயமைய நோக்கை கிண்டலுடன் குறிப்பிடுகிறாள். அத்தனை நேரத்தில் தன் பெயரை கூட அறிந்து கொள்ள தேவையில்லையென நினைத்த அவனது சுயநலத்தை சொல்லிக் காண்பிக்க அவளிடம் மன்னிப்பு கூறி அவளது பெயரைக் கேட்கிறான். அடுத்த முறை சொல்வதாகக் கூறி அப்போது கண்டிப்பாக தன்னுடன் நடனம் ஆடவேண்டும் எனக் கூறி விடைபெறுகிறாள்.
அடுத்த சந்திப்பில் எதேச்சையாக அவன் பத்திரிக்கைக்கு எழுதிய போர் எதிர்ப்பு குறித்தான கட்டுரையையும் அதற்கான எதிர்வினையையும் வாசிக்கிறாள். அதைப் பற்றி அவர்களுடைய உரையாடல் நீள்கிறது. ஹாரி உணர்ச்சி பொங்க வீராவேசமாக பேசுகிறான்.போரின் அவலங்கள் பற்றி உயர்தட்டிலிருப்பவர்களின் சுயநலங்கள் பற்றி எப்படி தேசப்பற்று என்னும் திரை வரவிருக்கும் பேரழிவை காணமுடியாமலாக்குகிறதென தொடர்ந்து குமுறுகிறான். அதற்கு அவளும் ஆம். மற்றொரு பெரும்போர் வரவிருப்பதை அனைவரும் உணர்ந்தும் தடுக்கமுடியாததன் ஆற்றாமையை சொல்கிறாள். யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிறாள். ஆனால் அதற்கு ஹாரி சீற்றம் கொண்டு உங்களைப் போல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என கோபப்படுகிறான்.
அவனை சமாதானம் செய்து உன்னுடைய பாதை அதன் இலக்கை அடையாவிட்டாலும் உன் வாழ்க்கை தோல்வி அல்ல. பெரியவற்றுக்காக வாழ்தலின் மனநிலையே வெற்றி தான். இறப்பு என்பது இந்த சிறிய வாழ்க்கைச் சுடரை மேலும் அழகாக்குகிறது எனக் கூறிவிட்டு அவனை இயல்புபடுத்துகிறாள். நம் வாழ்வின் இன்பத்தை விளைவிலல்லாமல் செயலில் நிறுத்தினால் அனைத்தையும் நேர்மறையாகவும் நிறைவாகவும் வாழ முடியுமென அவ்விடம் உணர்த்துகிறது. ஹாரியின் சிக்கலும் இது தான். அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் தன் வதைக்கான நிமித்தமாக மாற்றிக்கொள்கிறான். தன்னுள்ளிருக்கும் ஓநாய் தன் புண்ணையே கீறிக்கீறி ருசிக்கிறது.
சந்திப்பின் இறுதியில் அவளுடைய பேரைக் கேட்கிறான். அதற்கு அவள் நன்றாக யோசித்துப் பார். அது உனக்குள்ளே இருக்கிறது. சமயத்தில் நான் ஆணாக உனக்குத் தெரியவில்லையா என வினவிகிறாள். உடனே ஹாரி ஆம். உன்னை முதலில் பார்த்தலிருந்தே நீ யாரையோ நினைவுபடுத்தியபடியே இருந்தாய். இப்போது தான் அது தெளிந்தது. நீ என் சிறுவயது தோழன் ஹெர்மன் போலவே இருக்கிறாய். அப்படியானால் உன் பெயர் ஹெர்மோனி யா? எனக் கேட்கிறான். அவள் ஆம். நான் உன் முன் நிற்கும் ஒரு கண்ணாடி போல். ஆழத்தில் நீயும் நானும் ஒன்று தான் எனக் கூறி சிரிக்கிறாள். நம்முடைய முதல் சந்திப்பில் நான் கூறுவதனைத்தையும் நீ செய்வதாக சொல்லியிருக்கிறாய். ஒரு நாள் நீ எனைக் கொல்ல வேண்டும் என ஹெர்மோனி கூறிகிறாள். அதிலுள்ள விசித்திரத்தை உணராமல் சரியெனக் கூறி அந்தத் தருணத்தை கடந்து செல்கிறான்.
இந்நாவலின் வடிவம் மூன்று அடுக்குகள் கொண்டது. நாவல் ஆரம்பிப்பது ஹாரியின் வீட்டு உரிமையாளப் பெண்ணின் உறவினர் பார்வையில். அவரும் வீட்டு உரிமையாளருடன் தங்கியிருக்கிறார். ஓரிரு முறை ஹாரியை பார்த்திருக்கிறார். அவரே கதைசொல்லி. அவர் ஹாரியைப் பற்றி சொல்வது முதல் அடுக்கு. ஒரு ‘பூர்ஷ்வா’ பார்வையில் ஒரு அந்நியனின் சித்திரத்தை விவரிக்கிறது அப்பகுதி. ஹாரி வீட்டை காலி செய்கையில் அவன் விட்டுச்சென்ற குறிப்புத் தொகையை அவர் எடுத்து வாசித்துப் பார்க்கிறார். அதில் வரும் கதைசொல்லி ஹாரி. அது நாவலின் இரண்டாவது அடுக்கு. இதில் ஹாரி கைக்கு வரும் ஸ்டெப்பி ஓநாய் பற்றிய குறிப்புகள் மூன்றாவது அடுக்கு.
இம்மாதிரியான அடுக்குகள் வெறும் உத்திகளாக மேற்பார்வைக்கு ஒரு சிக்கலானப் பிரதியின் தோற்றத்திற்காக பயன்படுத்தப்படாமல் நாவலில் வடிவ ஒருமைக்கும் தர்க்க ஒழுங்குக்கும் பயன்படுத்தப்படுகிறது. முதல் அடுக்கு முழுக்க முழுக்க யதார்த்தம் சார்ந்தது. இரண்டாம் அடுக்கு ஹாரியின் குறிப்புத்தொகை என்பதால் அனைத்தும் உண்மையாக நடந்திருக்கவேண்டுமென்பதில்லை. அதை ஒரு புனைவுப் பிரதியாகவும் எடுத்துக்கொண்டு அதன்மூலம் அதில் வரும் சம்பவங்களிலுள்ள விசித்திரத்தன்மையை நாவல் கடந்திருக்கிறது. மூன்றாவது அடுக்கு முற்றிலும் கட்டுரைக்கான நடை கொண்டது. நாவலில் மைய சிக்கல் மற்றும் அதற்கான சாத்தியாமான தீர்வுத் தேடல்களை இப்பகுதி கோடிட்டுக்காட்டுகிறது. நாவலின் முதல் பாதிக்குள் இப்பகுதி வருவதால் இதை கருத்தியல் அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சம்பவங்கள் மூலம் தன் தேடலை முன்னெடுக்கிறது.
ஹெர்மோனி அவனுக்கு நடனம் கற்றுத்தருகிறாள். அதன் மூலம் முற்றிலும் புதிய உலகத்திற்குள் ஹாரி வருகிறான். அது முற்றிலும் கொண்டாட்டமானது. அனைத்து சிக்கல்களையும் ஒருவகையான அங்கதத்தன்மையுடன் கடந்து செல்கிறது. அதன் போக்கில் தனக்குள் அழுந்தப்பட்டிருக்கும் பல்வேறு சிறு ஆளுமைகளை கண்டடைகிறான். அவைகளும் தன்னுள் இருப்பதாகவும் அதன் தேவைகளையும் இப்புதிய வாழ்க்கை பூர்த்தி செய்வதைக் கண்டு கொள்கிறான்.
இந்த உலகத்தில் இரண்டு புதிய நண்பர்கள் அவனுக்கு கிடைக்கிறது. முதலாமவள் மேரி. பேரழகி. அவளுடன் நடனமாட விளைந்தும் தன் வயது காரணமாக அவளிடம் செல்ல சிறு தயக்கம் காட்டுகிறான். பின் ஹெர்மோனியின் வற்புறுத்தலால் அவளிடம் சென்று தன்னுடயை முதிர்ச்சியற்ற நடனத்தின் மேல் சந்தேககம் கொண்டபடி அவளுடன் ஆடுகிறாள். மிகச்சிறந்த நடனக்காரியான அவள் அவனுடய அத்தனை பிசிறுகளையும் தன் அசைவுகளால் ஈடுசெய்து அவனை பிரமிக்க வைக்கிறாள்.
ஒருநாள் தன் வருகைக்கு முன்பே தன் படுக்கையில் இருக்கும் மேரியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். ஹெர்மோனியின் விருப்பத்தின்பேரில் அவள் வந்திருப்பதை அவனால் உணரமுடிகிறது. மேரியுடன் அவன் உறவு நெருக்கம் கொள்கையில் அவர்களின் உலகம் அறியவருகிறது. இயல்பாகவே புலன்வேட்கைகள் அதிகமாக நாட்டம் இருக்கும் அவர்கள் தன் அன்றாடத்திற்காக ஏதோவொரு குமாஸ்தா வேலையை செய்து கொண்டு வறட்டு வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக அவர்கள் தீவிர உணர்ச்சிகளால் தங்களை சூழ்ந்துகொள்பவர்கள். சில காலங்களுக்கு சிலருடன் தொடர்ச்சியாக உச்சகட்ட உறவிலிருப்பவர்கள். சிலருக்கு வீட்டில் நிலையான கணவனும் இருப்பார்கள். அதன்மூலம் தங்கள் பொருளியல் சிக்கல்களை தீர்த்துக் கொள்பவர்கள்.
அவ்வுறவுக்குப் பின் பொருட்கள் மீதான அவன் பார்வையே மாறி விடுகிறது. தங்களை அழகாக காட்டிகொள்வது முதல் அதற்காக அவர்கள் உபயோகிக்கும் ஆபரணங்கள், உடைகள், காலணிகளென அனைத்திற்கு பின்னும் ஈராஸின்(Eros) விருப்பம் இருப்பதாக நினைக்கிறான். மேரியின் வாழ்க்கைக்கு கட்டுபடியாகதவர்கள் சிறிய அளவும் இதன் மூலம் தங்களை திருப்திப் படுத்திக்கொள்கிறார்கள் என எண்ணி புன்னகைக்கிறான். எதை சிலகாலம் முன்பு பொருள்மைய்ய நோக்கு என நினைத்து அவர்களை வெறுத்தானோ இப்போது அதன் பின்னிருக்கும் மனித வேட்கையை அதன் சமரசத்தை எண்ணி புன்னகைக்கிறான். இந்த மாற்றம் மேரியின் உறவால் அவன் கிடைக்கப்பெற்றது.
மற்றொருவன் பாப்லோ. ஹெர்மோனியும் ஹாரியும் வழக்கமாக செல்லும் விடுதியில் ஸாக்ஸோபோன் வாசிப்பவன். அவனிடம் ஹெர்மோனி கொள்ளும் ஈர்ப்பு அவனை மெல்லிதாக சீண்டுகிறது. அவள் அவனை காதலிக்கூடுமோ என்பதாலல்ல அது. எதோவகையில் அவன் தன்னைவிட மேலானவன் எனத் தோன்றுவதால். அவனுடைய சிரிப்பும் மனிதர்களுடன் அவன் பழகுவதிலுள்ள எடையின்மைத் தன்மையும் அவனை சுற்றி ஒரு ஒளிவட்டமாக இருப்பதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் மேடையில் இசைக்கும் போது முழுப் பற்றுடன் தன்னை முழுமையாக அதில் கரைத்துக் கொண்டு அந்த கொண்டாட்ட மனநிலைக்கு தன்னை முழுதளிக்கிறான். ஜாஸ் பற்றிய பேச்சு வரும் போது அதை மட்டம் தட்டும் விதமாக ஹாரி தன்னுடைய கூர்மையான விமர்சனத்தைக் கூறி அதைபற்றிய அவனுடைய எதிர்வினைக்காக் காத்திருக்கிறான். பாப்லோவோ அதை இயல்பான ஒரு பார்வையால் கடந்துவிட்டு மற்ற விஷயங்களை பேசுகிறான். வேறொரு தருணத்தில் அவர்களிருவரும் தனியாக இருக்கும் போது அப்பேச்சு வரவே ஹாரி மேற்கு செவ்வியல் இசையை ஒப்பிட்டு ஜாஸின் உள்ளீடற்ற தன்மையை விமர்சனம் செய்கிறான். அது வெறும் கேளிக்கை மற்றும் தற்காலிகமானது என்கிறான்.
அதற்கு பாப்லோ காலம் கடந்து நிற்கும் தன்மையை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடலாம். அந்தத் தருணத்தில் தன்னால் முழுமையாக ‘செய்ய’ முடிவதில் அந்த கொன்டாட்டத்தின் முழுமைக்கு தன்னால் பங்காற்ற முடிவதிலேயே தான் நிறைவுறுவதாக கூறுகிறான். தன் இசையை தர்ப்படுத்துவது தன் வேலையல்ல தான் ஒரு இசைகலைஞன் மட்டுமே இசைப்பது மட்டுமே தன் வேலை என்கிறான்.
எந்த ஒரு கறாரான கொள்கை பக்கமும் நிற்காமல் மனிதர்களை மட்டுமே தன் முன் காண்பவன் அவன். எந்த கொள்கையும் அதற்குப் பிறகே. ஒரு நாள் அவசரத் தேவையாக ஹாரியிடம் பணம் கேட்கிறான் அதற்கு பதிலாக மேரியுடனான அன்றைய இரவை அவனுக்குத் தருவதாக பாப்லோ கூறுகிறான். உடனே ஹாரிக்குள் இருக்கும் கொள்கைத் திலகம் ‘காசுக்காக பெண்களை சிறுமை செய்யும் உன்னை போல் என்னையும் நினைக்கிறாயா?’ என சீறுகிறது. பாப்லோ எல்லாவற்றையும் ஏன் இப்படி கொள்கைக் கண் வழியே பார்க்கிறாய் எனக் கூறி அவசரமாக அப்பணத்தை எடுத்துக் கொண்டு உடல்நிலை சரியில்லாதை தன் நண்பனை பார்க்கப் போகிறான். அங்கு அவனுக்கு தேவையான உணவுகளும், மருந்தும் வாங்கி கொடுத்து அவன் இருப்பிடத்தையும் சுத்தப்படுத்தி வைக்கிறான்.
பாப்லோ எந்த கொள்கை சட்டகத்திற்குள்ளும் தன்னை நிறுத்திக் கொள்ளாதவன். போதை மருந்து பயன்படுத்துகிறான். இருபால் உறவு கொள்கிறான். தன் உள்ளுணர்வின் வழியே பெருகும் அனைத்தையும் தடையின்றி செய்கிறான். தன் வாழ்க்கையை முழுவதுமாக மனிதர்களை நோக்கி திறந்து வைத்திருப்பவன்.
ஓரிடத்தில் ஹெர்மோனி பாப்லோவிடம் கேட்கிறான். ஏன் ஹாரியை பார்த்து ஒதுங்கி கொள்கிறாய் என. அதற்கு பாப்லோ ‘அவன் முதல்முறை பார்த்த போதே அதை உணர்ந்துவிட்டேன். அவன் கண்களில் சிரிப்பே இல்லை. அப்படி இருப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆகவே தன்னை சீண்டும் எந்த கேள்விக்கும் எதிர்வினை ஆற்றவில்லை’ என்கிறான்.
நாவலின் இறுதிப் பகுதி பெரும் நடன அரங்கில்(Ball Room) நடக்கிறது. பல நூறு மக்கள் கலந்து கொள்ளும் அரங்கு அது. ஹாரி தன்னுடைய இயல்பான வெறுமையுணர்ச்சியால் அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேயிருந்துவிட்டு இறுதியாக தாமதாமக நுழைகிறான். அங்கு முழு வீச்சில் நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அனைத்து அறைகளிலும் ஹெர்மோனியைத் தேடி சலித்து தனியாக அமர்ந்து வைன் அருந்துகிறான். அந்த மொத்த கொண்டாட்ட வெளியே அவனுக்கு கசப்பைத் தருகிறது. ஹெர்மோனி என்னும் ஒற்றை நபரால் தான் அந்த மொத்த உலகமும் அவனுக்கு பொருள் பட்டது. இப்போது அவளில்லாமல் அவனால் அமர்ந்திருக்க முடியாமல் கிளம்ப முடிவெடுத்து தன் கோட் வைப்பறைக்கு முன்னால்வருகையில் சட்டென ஒருவன் ஒரு சீட்டைக் கொடுத்துவிட்டு மறைகிறான். நாவலில் முதற்பகுதியில் வந்த அதேமாதிரியான ஒரு வாசகம் ‘Magic theatre- For Mad people only. opens at 4 am. Hermonie is in Hell’ என.
ஹாரி விரைந்த் ஹெல் என்ற அந்த நடன அரங்கிற்கு செல்கிறான். எங்கு தேடியும் அவளை கண்டடைய முடியவில்லை. ஒரு நபர் வெகுநேரமாக தன்னையே நோக்குவதை அறிந்து அதனருகில் செல்கிறான். நெருங்க நெருங்க உருவம் தெளிந்து வருகிறது. மிண்ணும் கண்களும் கேளிப்புன்னகையில் சுழித்த உதடுமாக காட்சியளிக்க குதூகலத்துடன் அவன் செல்ல அங்கு ஒரு ஆண் வேடமணிந்து ஹெர்மோனி நிற்கிறாள். முழுக்க பெண்களுடன் நடனமாட அவ்வாறு வந்திருக்கிறாள். இருன்டு கிடந்த அவ்வெளி மீண்டு அவனுக்கு பிராகசிக்க இருவரும் தனித்தனியாக சென்று பல மணிநேரம் ஆடித்திளைக்கிறார்கள். அவனுடைய விடுதலையைக் கண்டு மேடையில் இசைத்துக் கொண்டிருக்கும் பாப்லோ ஹாரியை உரக்க அழைத்து வணக்கம் சொல்கிறான். முழுவதுமாக தன்னை கரைத்துக் கொண்டு திளைத்த ஹாரி கடைசியாக தன் அசல்தோற்றத்தில் பெண்ணாக வரும் ஹெர்மோனியுடன் இறுதி நடனம் ஒன்று ஆடுகிறான்.
அதைத் தொடர்ந்து நாவலில் வரும் காட்சிகள் முழுக்க சர்ரிலியசியத் தன்மை கொண்டது. அதுவரை வந்த சம்பவங்களிலிருந்து இன்னொரு பெரும் தாவலை நிகழ்த்துகிறது. முழுக்க முழுக்க அருவமான வெளியில் நாவல் தன் பயணத்தை முன்னெடுக்கிறது. பாப்லோ பக்கத்திற்கு ஒருவராக ஹாரியையும் ஹெர்மோனியையும் கூட்டிக் கொண்டு மாயாஜாலத் தியேட்டருக்குள் புகுகிறான். அங்கு அவர்கள் ஒருவிதமான திரவத்தை அருந்திவிட்டு பாப்லோ கொடுக்கும் சிகெரெட்டை புகைக்கிறார்கள். ஹாரி தன் யதார்த்த போதம் அழிய ஒரு அசரீரியின் அழைப்பால் செலுத்தப்பட்டு தியேட்டரின் முகப்பிற்கு செல்கிறான். அங்கு எண்ணற்ற அறைகள் முன்னால் பலகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
அங்கு நிகழும் அனைத்து சம்பவங்களும் ஒரு கவிதைக்குரிய குறியீட்டுத்தன்மையுடனும் படிமத்தன்மையுடனும் விவரிக்கப்படுபவை. அனைத்தும் மிக அந்தரங்கமாக பொருள்படுபவை. மொத்தம் ஐந்து அறைகளுக்குள் சென்று மீள்கிறான். ஒவ்வொன்றிற்கு செல்லும் முன்னும் கண்ணாடியில் தன்னைப் பார்க்கிறான். சில சமயம் முழு மனிதனாகத் தெரிகிறான். ஒரு சமயமோ முற்றிலும் ஓநாயாக. ஒரு சமயம் இரண்டும் உருகி கலந்த வடிவற்ற கலங்கலாக. இவை அனைத்திற்கும் அனைவரும் பொதுவான கறாரான அர்த்தம் அதன் மேல் படியமுடியாதபடி நிகழ்வுகள் அடுத்தடுத்து தாவுகின்றன. முற்றிலும் ஒரு கனவு வெளியில் அந்தந்த பொருள்கள், நிகழ்வுகள் நம்முள் எழுப்பும் உணர்வுகளுடன் மட்டும் பயணிக்குமாறு அக்காட்சிகள் நகர்கின்றன.
ஒரு அறையில் வருங்காலத்தில் நடைபெறுவதாக ஒரு வெளி அவன் முன் விரிகிறது. இயந்திரங்களுக்கெதிரான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்த சூழலும் போரும் அதன் பட்டவர்த்தனமான வன்முறையும் அதில் எப்போதும் பலியாகும் அப்பாவிகளைக் குறித்தும் அச்சூழல் காட்சிப்படுத்துகிறது. அழிவிற்கு நேரெதிரான ஆக்கத்தின் ஒரு தருணத்தில் அங்கிருந்து வெளியேறுகிறான்.
மற்றொரு அறை நம் ஆளுமையை தருணத்திற்கேற்றபடி கலைத்து அடுக்கும் ஒரு சூதாட்டக்காரனை சந்திக்கிறான். அவன் காட்டும் கண்ணாடியில் பார்க்கும் அவன் பலநூற்றுக்கணக்கான தன் உருவங்களின் மொத்த வடிவமாக அவன் தெரிகிறான். சில உருவங்கள் தவழுகின்றன. தன்னுடைய பிம்பங்கள் அனைத்தயும் ஒரு சிறிய விளையாட்டுப் பொருளாக்கி சதுரங்கப் பலகையில் வைத்து விளையாடுகிறான். வாழ்க்கை என்னும் பிரவாகம் அந்த பொருட்கள் கொள்ளும் உறவால் பெருகி நுறைக்கிறது. இந்தப் பொருட்களை எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி அதன் உறவுகளின் பல்வேறு சாத்தியங்களால் உன் ஆளுமையை வடிவமைத்துக் கொள்ளலாம் என்கிறான். அந்த பொருட்களை தன் பையில் போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.
இன்னொரு அறையின் முகப்பில் ‘காதலுக்காக கொலை செய்வதெப்படி’ என எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் பாப்லோவும் ஹெர்மோனியும் நிர்வாணமாக படுத்திருக்கிறார்கள். ஆதாம் கடித்த ஆப்பிளின் தடயமென அவளுடைய முலையில் பற்தடம் பதிந்திருக்கிறது. தன் பையை தொட்டு பார்க்கையில் சூதாடியின் பொருட்கள் இருந்த இடத்தில் ஒரு கத்தி இருக்கிறது. முன்பு ஹெர்மோனி தன்னை கொல்லும்படி சொன்னது நினைவுக்கு வர அந்த பற்தடத்தில் தன் கத்தியை ஆழ இறக்குகிறான். உள்ளிருந்து அமுதவூற்றென ரத்தம் வெளிவர அவர் உடல் வெளிரி உதட்டில் மட்டும் செம்மை எஞ்சுகிறது. பாப்லோ விழித்துக் கொண்டு அவளை ஒரு போர்வையில் சுருட்டி வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது மோஸார்டின் ‘Don Giovanni’ என்ற பாடல் ஒலிக்கிறது. மோஸார்ட்டின் மகத்தான கலைசிருஷ்டியை எண்ணி அதிலாழ்ந்திருக்கும் போது அங்கு அவர் அவனைக் கடந்து சென்று இன்னொரு அறைக்குள் நுழைகிறார்.
முன்னால் செல்லும் அவரைத் தொடர்கிறான். அங்கு அவர் ஒரு வயர்லெஸ் ரேடியோவின் பாகங்களை பொருத்திக் கொண்டிருப்பதை பார்கிறான். அதை முழுவதுமாக ஒருங்கு படுத்தியவுடன் அதிலிருந்து சன்னமாக கீறிச்சிட்ட ஒலியுடன் மோஸார்ட்டின் சங்கீதம் வருகிறது. அதைக் கண்டு ஹாரி முகம் சுளித்து அதை நிறுத்தச் சொல்லும் அதே வேளையில் அதனுடைய சங்கீததின் உள்ளிருக்கும் மகத்துவமும் அவனை வந்தடைகிறது. அவர் அவனிடம் அந்த சங்கீதம் அத்தனை அழுக்கும் சேற்றுக்கும் மத்தியிலும் அதன் உன்னதத்தை உன்னால் உணர முடிகிறது. நம் வாழ்விலும் அன்றாடம் என்னும் கறைக்குப் பின்னால் பேரழகு மிக்க உன்னதம் தன்னில் எதையும் ஒட்ட விடாமல் அதிதூய்மையாக மின்னிக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் பின்னாலுள்ள அந்த ஒன்றை காணும் கண் பெற்றால் நீ விடுதலையடைவாய் என்கிறார்.
ஹெர்மோனியை ஏன் கொன்றாய் என வினவுகிறார். அதற்கு அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனக் கூறும் போதே அதிலுள்ள அபத்தம் அவனை அறைகிறது. அவள் முதன்முதலாக அதை சொல்லும் முன்னரே அவன் அதை அறிந்துகொண்டதை அப்போது அவன் உணர்கிறான். அழிவில் தான் கொண்டிருக்கும் விருப்பத்தையும் தன் கீழ்மையையும் எண்ணி கண்ணீர் வடிக்கிறான். தன் தண்டனைக்குரியவனாக வேண்டும் எனக் கூறுகிறான்.
அதை இந்த தியேட்டரின் நீதிபதியே தண்டனை வழங்க வேண்டும் என்கிறார். அவன் அந்த நீதிபதிக்கு முன்னால் பல்வேறு மக்கள் சூழ நிற்கிறான். மொத்த சூழலும் குழந்தைக்குரிய எளிய கள்ளமின்மையுடன் இருக்க இவன் மட்டும் படு சோகத்தில் கண்ணீர் வடிய நின்றுகொண்டு தனக்கு தண்டனை கொடுங்கள் என இறைஞ்சி மன்றாடுகிறான். நீதிபதி தியேட்டரிலிருக்கும் ஓவியத்தை நிஜமென நம்பி அதை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவன் இந்த தியேட்டரிலேயே இன்னும் சில தினங்கள் கழிக்க வேண்டுமென ஆணையிட்டு மேலுமொரு கடுந்தண்டனையாக அனைவரும் அவனை நோக்கி சிரிக்க சொல்கிறார். மொத்த அரங்கமே அவனை நோக்கி சிரிக்கிறது.
திரும்பவரும் ஹாரியிடம் மோஸார்ட் பல சமயங்களில் ஓவியத்தை நிஜமென நம்பி எதிர்வினையாற்றுகிறாய். இன்னும் கொஞ்சம் நீ சிரிக்கலாம். ஒரு சிரிப்பின் கால அளவே எங்கள் உலகம். எங்களின் உலகம் விளையாட்டுத்தனங்களால் நிரம்பியது என்கிறார். மறுத்தால் என்ன செய்வீர்கள் என வினவிக் கொண்டிருக்கவே மோஸார்ட் உருவழிந்து பாப்லோ அவன் முன் தோன்ற மறுத்தால் வேறொரு சிகெரெட் தருவேன் என்க் கூறி சிரிக்கிறான். அந்த தியேட்டரின் கேளிக்கைக்கான பொருட்களை நிஜமென நம்பி சேதப்படுத்தியத்தற்காக செல்லமாக கடிந்து கொள்கிறான். ஹாரி மெல்ல சூழலைப் புரிந்து கொள்கிறான். தன் சட்டைப்பையைத் தொட்டு சூதாடி கொடுத்த அந்த பொருட்களை எண்ணி அடுத்த முறை தன் விளையாட்டை இன்னும் சிறப்பாக விளையாடுவேன், இன்னும் கொஞம் விளையட்டுத்தனத்துடன், களிப்புடன். அப்போது பாப்லொவின், மோஸார்ட்டின் உலகத்துடன் இணைவேன் என தனுக்குள் கூறிகொள்வதுடன் நாவல் முடிகிறது.
மொத்தமாக தொகுத்துத் பார்க்கையில் இந்நாவல் ஹாரி கொள்ளும் சிக்கலுக்கு சில பாதைகளை முன்வைக்கிறது. முதலாவதகாக சுயமழித்தல் (Dissolution of செல்ஃப்). இங்கு சுயம் என்பது ஆளுமை அல்லது அகங்காரம் என பொருள்படுகிறது. எதை கட்டி எழுப்பி நம்மை நாம் உணர்கிறாமோ அதை உடைக்காமல் அல்லது அழிக்காமல் அடுத்தகட்ட நகர்வு இல்லை. அழித்தல் என்றால் அதன் மேலோங்கியதன்மையை மற்றொன்றால் நிகர் செய்தல். உதாரணத்திற்கு தன்னுடைய நுண்ணுர்வுத் தன்மையால் தான் சராசரிகளிடமிருந்து அறிவுஜீவி அல்லது கலைஞன் வேறுபடுகிறான். அதை தன் ஆளுமையாக உணரும் போதே அதன் எதிர் விளைவாக சராசரிகளின் மீதான ஒவ்வாமையும் இணைந்து உருவாகிவிடுகிறது. இந்த சமமின்மையை உடைத்து முன்னகராமல் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியல்லை என நாவல் சொல்கிறது.
அதற்கான ஒரு வழியாகத் தான் ஹாஸ்யத்தை, விளையாட்டுத்தனத்தை சொல்கிறது. கொண்டாட்டமாக செய்யப்படாதவை அது எவ்வளவு பெரிய மேன்மைக்காக செய்யப்படினும் அதை ஆற்றுபவன் விடுதலை அடைவதில்லை என்கிறது. எவ்வளவு தீவிரத்துடன் செய்யப்படினும் வாழ்க்கை ஒரு விளையாட்டு தான். அந்த தண்ணுணர்வு தான் அந்த தீவிரத்தை சமப்படுத்தும் தராசின் மறுபக்கமாக இருக்கிறது. தன் செயலின் விளைவை எண்ணி கலங்காமல் செயலை மட்டுமே நிறைவாக எண்ணச் செய்கிறது.
இந்த நிறைவுக்கான இன்னொரு முகமாக அன்றாடங்களுக்கும் சராசரித்தனத்துக்கும் பின்னாலுள்ள நித்தியத்துவத்தை அசாதாரணத்தைக் காணும் கண்ணை உருவாக்குதலைச் சொல்லுகிறது. நாவலில் ஹாரி ஓரிடத்தில் மனிதர்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் பின்னுள்ள ஈராஸ் கடவுளின் கள்ள முகத்தை அதன் துடுக்குச் சிரிப்பை காணும் இடம் இதற்கான உதாரணமாக சொல்லலாம். அந்த பார்வையைப் பெற்றவன் தன் வெறுப்புகளிலிருந்து வெளிவருகிறான். அவனுக்கு அன்றாடம் சலிப்பதில்லை. நித்தியத்தின் மற்றுமொரு முகத்தை பார்க்கும் களிப்பையே அடைவான். அதையே நாவலின் இறுதியில் மோஸார்டின் ரேடியோ நமக்கு காட்டுகிறது. அத்தனை கிறீச்சிடல்களுக்கு மத்தியிலும் நம்மால் அந்த சங்கீததின் உன்னத்தை அறிய முடிந்தால் நமக்கு பாப்லோவின் உலகில் இடமுண்டு.
இந்த நாவலின் முகமாக ஒற்றை வரியை சொல்லவேண்டுமென்றால் இப்படி சொல்வேன். நமக்குளிருக்கும் அந்த தனித்த வெறுமை கொண்ட ஓநாயின் முகத்தில் ஒரு சிறு சிரிப்பை களிப்பை உருவாக்குவதற்கான தேடலை முன்னெடுப்பதே இந்நாவல் என.
பாலாஜி பிருத்விராஜ்
***
விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்
டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்
தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்
***