ஷ்யாம்- கடிதம்

shyam-composer

 

அன்புள்ள ஜெ

 

ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.

 

பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்காது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் தவிர வேறு இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவே மாட்டார்கள். அதன்பின் கொஞ்சகாலம் இளையராஜா மட்டும்தான். பல இசையமைப்பாளர்கள் இங்கே வந்து கவனிக்கப்படாமல் சோர்ந்து சென்றிருக்கிறார்கள்.

 

ஒரே இசையமைப்பாளரின் ஒரு சிலபாடல்களை மட்டுமே கேட்பார்கள். அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். வேறு எதையும் செவிகொடுக்கவே மாட்டார்கள். வேறு பாட்டுகளில் கொஞ்சம்கூட ஆர்வமிருக்காது. இந்த மனநிலை உண்மையில் இசை சம்பந்தமானது இல்லை. இவர்கள் பாட்டே கேட்பதில்லை. வெறும் நஸ்டால்ஜியாவைத்தான் இசை என நினைத்துக்கொள்கிறார்கள்.

 

நல்ல படம் அமைந்து அது வெற்றியும் பெற்றால்தான் இசையமைப்பாளர்களுக்கு வாழ்க்கை. படம் ஓடாவிட்டால் நல்ல பாட்டும்கூட குப்பைக்குள் போய்விடும். சொல்லப்போனால் இன்றைக்கு இணையம் வந்ததனால் தான் இந்தப்பாட்டு உயிருடன் இருக்கிறது. அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது இந்தப்பாட்டை சிலசமயம் விரும்பி ஒலிபரப்புவார். மிக முக்கியமான பாட்டு இது.

 

ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.

 

சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.

 

மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.

 

ஷியாமை பற்றி ஒரு பேச்சைத் தொடங்கிவைத்தமைக்கு நன்றி.

 

சுந்தர்ராஜ்

 

காத்திரிப்பூ….எஸ்.ஜானகியின் குரல் அப்ப்டியே வயலின் ஓசையாக ஆகும் பாடல்

 

 

 

ஷ்யாம் பேட்டி

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22
அடுத்த கட்டுரைஓநாயின் தனிமை