குளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள் (ஏ வி மணிகண்டன்)
அன்புநிறை ஜெ,
வணக்கம், தங்களின் குளிர்ப் பொழிவுகள் கட்டுரை படித்தவுடன் முதலில் இன்பதிர்ச்சியும், பிறகு ஆதங்கமும் தான் ஏற்பட்டது. ஏனென்றால், நான் ஈரோடு வெண்முரசு சந்திப்பில் கலந்துக்கொள்ள வரும்பொழுது தங்களை அழைத்துவந்த காரிலேயே தான் நானும் இடையில் வந்து தங்களுடன் கலந்து ஒன்றாக வந்தோம். அப்பொழுது தங்கள், நண்பர் கிருஷ்ணனிடம், தங்களுடைய தளத்தில் வெளிவந்த சிற்பங்களுக்காக ஒரு பயணம் கட்டுரையைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினீர்கள், அவரும் மிக்க ஆர்வமாக என் பயண விபரங்களை கேட்டுவிட்டு, வெளியே வேடிக்கைப் பார்த்து வந்தவர், திடீரென்று தங்கள் பக்கம் திரும்பி, ஒரு நாள் இந்தியாவின் முக்கிய அருவிகளை நாம் காண பயண திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அதற்கு தாங்களும், ஆ செய்யலாம், நன்றாகத் தான் இருக்கும் என்று ஒரு வரியில் முடித்துவிட்டீர்கள் (அப்பொழுது தங்கள் மனம் ஈரோட்டின் திடீர் பரிணாம வளர்ச்சியின் அதிர்ச்சியில் லியித்திருந்தது. அதன் வியப்பை அனுபவித்து அதுபற்றி பேசிவந்தீர்கள்).
நான் கூட அப்பொழுது இந்த அருவி பயணத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறார் போல என்று என் உள்ளத்தை அமைதிபடுத்திய அடுத்த நொடி யாருக்குத் தெரியும் இவர்கள் ஒருவேளை இப்படித்தான் அனைத்து பயணத்திட்டத்தையும் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கிறார்கள் போலும் என்று சமாதானமும் செய்துக்கொண்டேன். அப்பொழுது நானும் தங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசித்திர கற்பனையும் செய்துக்கொண்டேன். பிறகு அப்படியே அந்த பேச்சு விட்டு ஈரோடு பாலம் கட்டுமானம், அரசியல் என பொது பேச்சுகள் வழி சென்றது.
ஆனால் இன்று தங்கள் கட்டுரை கண்டபின் நிஜமாகவே மிக அதிர்ச்சிதான் அடைந்தேன். மற்ற எவரையும் விட இதில் நான் தான் அதிக அதிர்ச்சியடைந்திருப்பேன் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் முன்னால் ஒரு நிமிடம் கூட நீடிக்காத அந்த பேச்சு இப்பொழுது தாங்கள் நண்பர்களுடன் நடைமுறைப்படுத்தியே விட்டீர்கள். அப்படியென்றால் தாங்கள் மேற்கொண்ட அனைத்து முக்கிய பயணங்களும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன். நான் அத்தகைய குளிர்ப் பொழிவுகளில் இல்லாததை நினைத்து வருந்துகிறேன். ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் எழுத்துக்கள் மூலம் நிவர்த்தி செய்துக்கொள்கிறன். தங்கள் பயணம் மிக்க திருப்திகரமாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள ஜெ
குளிர்ப்பொழிவுகள் அருமையான தலைப்பு. அருவிகள் வழியாக அந்தப்பயணம் மிகச்சிறப்பான காலநிலையில் அமைந்திருந்தது. அருவிகள் எனக்கு எப்போதுமே பிடிக்கும். நான் அடிக்கடி இவற்றில் சில அருவிகளுக்குச் செல்வதுண்டு. ஜோக் அருவியில் பலசமயம் நீர் இருக்காது. சிவசமுத்திரம் ஏமாற்றாது
குளிக்காத அருவியைப்பற்றி சொல்லியிருப்பது அழகாக இருந்தது. அது நாம் அறியாத மொழியில் பேசும் ஒருவரை பார்த்துக்கொண்டிருப்பதுபோலத்தான். அழகான குறிப்புகள்.
மனோகர்
குளிர்ப் பொழிவுகள் -1
குளிர்ப்பொழிவுகள் – 2
குளிர்ப்பொழிவுகள் – 3
குளிர்ப்பொழிவுகள்- 4