கௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக!” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான்.
விந்தியமலைச்சரிவின் துந்துபக் குலத்து விரஜஸ் தன் மைந்தர்கள் சாலி, உபசாலி, பத்மசாலி ஆகியோருடன் லட்சுமணனை எதிர்கொண்டான். அவர்களை லட்சுமணன் தடுக்க அவனுக்கு வலப்பக்கமாக வந்த விதர்ப்பநிலத்தின் தண்டகத் தொல்குடியின் அரசர் கௌணபர் தன் மைந்தர்களான சரணனும் மானசனும் கோடிசனும் துணைவர அவனை பக்கவாட்டில் தாக்கினார். அவர்களை துருமசேனனும் இளையோர் சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோரும் எதிர்த்தனர். அந்த இடைவெளியில் அலம்புஷன் தன் சிறிய அரக்கர் படையுடன் பாண்டவர்களை கோடரியால் என வெட்டிப்பிளந்து உள்ளே சென்றான்.
லட்சுமணன் இடியோசைபோல் எழுந்த முரசுகளின் முழக்கத்தை கேட்டான். போர்க்களத்தில் அப்புதிய ஒலி அனைவரையும் திகைத்து திரும்பிப்பார்க்கச் செய்தது. எதிரே வந்துகொண்டிருந்த பாண்டவர்களின் தேர்கள் மீதாக கரிய பேருருவர்கள் விண்ணிலிருந்து தொங்கும் விழியறியா சரடில் தொங்கி பறந்து அணுகுபவர்கள்போல் பாய்ந்து வந்தனர். ஒரு தேர் முகடிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவுகையில் அவர்கள் மடிந்து உடலோடு ஒட்டிய தவளைக்கால்களும் நண்டுக்கொடுக்குபோல் இருபுறமும் விரிந்த பெருங்கைகளும் கொண்டு தெரிந்தனர். “மாபெரும் வௌவால்கள்போல!” என்று துருமசேனன் கூவினான். “கடோத்கஜர்!” என கௌரவப் படை கூச்சலிட்டது.
இடக்கையிலிருந்த இரும்புக்கொக்கி கொண்ட கயிற்றால் வீசி அறைந்து பற்றிய தேர்முகடை அவ்விசையாலேயே உந்தி மீண்டும் எழுந்தனர் இடும்பர். வலக்கையில் இரும்புக்கல்லாலான கதாயுதம் வானிலிருந்து பாறை விழுவதுபோல தேர்களையும் யானை முதுகுகளையும் புரவித்தலைகளையும் அறைந்து உடைத்தது. தேருடன் அவர்கள் அறைந்து உடைக்க தம்மை காக்கும் வழியேதுமின்றி சிம்புகள் நடுவே சிதைந்து அமைந்தனர் வில்வீரர். வாயால்தான் அம்முழவொலியை அவர்கள் எழுப்புகிறார்கள் என்று தெரிந்தது. அது அவர்களுக்கே உரிய ஒரு தனி மொழியாக ஒருவரோடொருவரென அவர்களை கோத்தது.
“சிலந்திகள்!” “வெறிகொண்ட வல்லூறுகள்!” என கௌரவப் படை கூச்சலிட்டது. கொக்கியால் பற்றப்பட்ட தேர்கள் எரிநோக்கி சருகுகள் என அவர்களை அணுகி உடைந்து தெறித்தன. அவர்களின் கதைகள் சுழன்றெழுந்தபோது குருதிச்சரடு வானில் வளைந்து பறந்தமைந்தது. அந்த வெறி கௌரவப் படைகளை அச்சுறுத்த தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி தயங்கின. அத்தயக்கமே அவர்களை எக்காவலுமில்லாமல் அவர்கள் முன் கொண்டு நிறுத்தியது. உடைந்து தெறிக்கும் தேர்களும் புரவியின் தலைகளும் குருதிக் குமிழிகளென சிதைந்து பறந்த தலைகளுமென அவர்கள் வந்த வழியின் தடம் நதிவற்றிய பரப்பென செஞ்சேற்றில் சருகுகளும் தடிகளும் படிந்து விழிக்கு புலப்பட்டது.
அவர்களில் எவர் கடோத்கஜன் என்று உய்த்துணரக் கூடவில்லை. அனைவரும் ஒன்றுபோலிருந்தனர். பின்னர் அவன் கடோத்கஜனை அடையாளம் கண்டான். அவனுடைய வாயிலிருந்து எழும் ஒலியே பிறரை ஆள்கிறதென்று அப்போது உணர்ந்தான். அவன் கையிலிருந்த கதாயுதம் மலையில் வெட்டி வெப்பத்தில் அறைந்துருட்டி எடுக்கப்பட்ட இரும்புக்கல்லால் ஆனது. பிறர் அதை அசைக்கவும் இயலாத எடை கொண்டது. இடக்கையில் நீண்ட சங்கிலியால் தொடுக்கப்பட்ட கொக்கி இருந்தது. சினம் கொண்ட நாகமென காற்றில் எழுந்து வளைந்து பறந்து அக்கொக்கி தேர்களின் குவடுகளிலும் தூண்களிலும் கவ்விக்கொண்டது.
பெருந்தோளால் தேர்களை சுண்டி இழுத்து அருகணையச்செய்து அவ்விசையாலேயே தானும் தேரை நோக்கி தாவி எழுந்து வலக்கையிலிருந்த கதாயுதத்தால் ஓங்கி அறைந்து தேருடன் வில்லவனையும் சிதறடித்துவிட்டு அவனுக்கு என்ன ஆயிற்று என்று அரைக்கணமும் திரும்பி நோக்காமல் மறுதிசை நோக்கி பாய்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைப்போன்றே இருந்தனர். வெறும் கொலைவிலங்குகள். அல்லது மண் வெடித்துத் திறந்த வழியினூடாக பெருகி எழுந்து வந்த அதலத்து தெய்வங்கள்.
அவர்கள் களத்தில் போரிடும் முறை கௌரவ வீரர்கள் தேர்ந்து பயின்றதற்கு முற்றிலும் வேறாக இருந்தது. விண்ணிலிருந்து என வரும் அத்தாக்குதலை எதிர்கொள்ள அவர்களால் இயலவில்லை. அம்புகள் அவர்களை நோக்கி சென்றபோதுகூட பெரும்பாலும் இடைக்குக் கீழே தொடைக்கவசங்களில் பட்டு தெறித்தன. நிலத்தூன்றிய வில்லை தலைக்குமேல் தூக்கி குறிபார்க்க இளைய கௌரவர்களால் இயலவில்லை. அவர்கள் அம்புகள் விசையுடன் நெடுந்தொலைவுக்கு செல்வதற்காக தேர்த்தட்டில் ஊன்றி தலைக்குமேல் நிற்கும் பெரிய நிலைவிற்களுடன் வந்திருந்தனர். ஒற்றைக்கையால் அவற்றை தலைக்குமேல் தூக்கியபோது நிலை பிறழ அம்புகள் இலக்கு தவறின.
லட்சுமணன் தன் வில்லை தாழ்த்தி நீளம்புகளை குறிபார்த்து இடும்பர்களை நோக்கி எய்தான். பேருருவன் ஒருவனின் நெஞ்சக்கவசத்தை பிளந்து அடுத்த அம்பை அவ்விடைவெளியில் செலுத்துவதற்குள் வில் இருமுறை துடித்து அவன் கையிலிருந்து நழுவியது. அடுத்த அம்பை அவன் எடுத்தபோது உடைந்த கவசத்துடன் அவ்விடும்பன் அவன் தேருக்கு முன்னால் வந்திருந்தான். அவன் கதை சங்கிலி குலுங்கும் ஓசையுடன் மேலெழுவதை விழியாலோ செவியாலோ அன்றி வேறேதோ புலனால் லட்சுமணன் உணர்ந்தான். மறுகணம் அவன் தாவி அப்பால் வந்துகொண்டிருந்த யானை ஒன்றின் விலாவில் சுற்றப்பட்டிருந்த கயிற்றில் படுத்து தொங்கி விலகிக்கொள்ள அவன் இருந்த தேர் அறைபட்டு நூறாயிரம் சிம்புகளாக மாறி தெறித்தது.
லட்சுமணன் “தேர்! தேர் அளியுங்கள் எனக்கு!” என்று கூவுவதற்குள் அவ்விடும்பன் அவனுக்கு முன்னால் வந்த பிறிதொரு தேர்மேல் கால் ஊன்றி மேலெழுந்து அவன் தொங்கிக்கொண்டிருந்த யானையின்மேல் கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். அலறியபடி உள்ளுடல் உடைய அது பக்கவாட்டில் சரிந்தது. அதனுடன் தானும் விழுந்த லட்சுமணன் அடுத்த கதாயுதம் தன்னை அறைவதற்குள் நகர்ந்து இரண்டாவது அறையில் சிதைந்து துதிக்கை குழாய் வழியினூடாக குருதி பீறிட செவியில் குருதிக்கொப்புளங்கள் வெடிக்க கால்கள் விலுக்கிட்டு துடித்துக்கொண்டிருந்த யானைமேல் கால் வைத்ததும் அவன் முன் வந்து நின்றான் இடும்பன்.
லட்சுமணன் மேலும் மேலுமென பின்னகர்ந்தபடி அவனை எதிர்கொள்வதெப்படி என்று எண்ணினான். அடுத்த அறையை தாவி தவிர்த்து அங்கு நின்றுகொண்டிருந்த வில்லவன் ஒருவனின் தேரிலேறிக்கொண்டான். அவனிடம் “பின் செல்க! பிறிதொரு தேர் கண்டடைக!” என்று கூவியபடி அவன் வில்லை வாங்கிக்கொண்டான். இடும்பன் கொக்கியை அவன் தேர் நோக்கி வீச ஒற்றை அம்பால் அக்கொக்கியின் கண்ணியை உடைத்தான். அடுத்த அம்பு இடும்பனின் கால்மேல் பட்டது. எண்ணி அனுப்பியதல்ல அது. ஆனால் உள்ளுறையும் உயிர்விசை அதை கண்டுகொண்டிருந்தது. காலில் பட்ட அம்புடன் அலறியபடி இடும்பன் நிலத்தில் விழுந்தான். அவன் மறுமுறை எழும்போது பேருடலின் எடை தாங்காத கால் பிறழ லட்சுமணனின் அம்பு அவன் நெஞ்சக்கவசம் அகன்ற இடத்தில் ஆழத் தைத்தது. அவன் மல்லாந்து விழுந்தபோது முழு விசையுடன் அடுத்த அம்பை செலுத்தி அவன் நெஞ்சை பிளந்தான்.
தேரை திருப்பியபடி லட்சுமணன் உரக்க கூவினான். “அவர்களின் கால்களை மட்டும் நோக்குக! கால்களுக்கென மட்டும் அம்பு விடுக!” அவன் கூச்சலை சொல்நோக்கிகள் விழிகூர்ந்து அறிந்து முழவொலியாக்க “கால்களை நோக்குக! கால்களை நோக்குக!” என்று முரசுகள் விம்மின. இடும்பர்கள் பேரொலி எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர். தேரை மேலும் மேலும் பின்னுக்கு விலக்கியபடி லட்சுமணன் அவர்களின் கால்களை நோக்கி அம்புகளை செலுத்தினான்.
ஆனால் விரைவிலேயே இடும்பர்கள் அதை உணர்ந்துகொண்டனர். நிலத்துக்கு வராமல் தேர்முகடுகள் மீதும் யானைகள் மீதும் மட்டுமென தாவி போரிட்டனர். வானில் எழுகையில் அவர்கள் தலைக்குமேல் சென்றுவிட்டிருந்ததனால் அம்புகள் சென்றடையவில்லை. லட்சுமணன் இயல்பாக நிலத்தில் கால் மடித்தமர்ந்து அம்பொன்றை செலுத்த இடும்பன் ஒருவன் அலறியபடி அவன் தேர்மேலேயே விழுந்தான். தேர்க்குதிரைகள் கால் விலக்கி கனைத்தபடி சிதற அவன் தேர்நிலையழிந்தது. லட்சுமணன் ஒருக்களித்து படுத்தபடி வில்லை இழுத்து அம்பை அவன் கால் நடுவே மீண்டும் செலுத்தினான். இடும்பன் பேரம்பு தன் உடலில் தைக்க இரு கைகளையும் நிலத்தில் அறைந்தபடி எழுந்து நிலைகொள்ள முடியாது இருபுறமும் அசைந்து விழுந்தபோது அவன் தலையை துண்டித்தது அடுத்த அம்பு.
“படுத்துக்கொள்ளுங்கள்! தேரில் படுத்தபடி அம்பெய்யுங்கள்!” என அவன் கூவினான். “தேரில் படுத்துக்கொள்ளுங்கள்!” “படுத்துக்கொள்ளுங்கள்!” என்று முழவுகள் ஒலித்தன. கௌரவப் படையினர் அதற்குள் பல துகள்களாக சிதறியவர்கள்போல அகன்றுவிட்டிருந்தனர். இளைய கௌரவர்களின் தேர்கள் மட்டும் இடும்பர்களை சூழ்ந்துகொண்டிருந்தன. லட்சுமணன் அம்புகளைச் செலுத்தி அவர்களை தடுத்து விசையிழக்கச் செய்தபடி களத்தில் நின்று “சூழ்ந்து கொள்க! இடைவெளி விடாதீர்கள்! இடைவெளி விடாதீர்கள்!” என்று கூவினான். ஆனால் கௌரவப் படையினர் மீதூறும் அச்சத்தால் நெடுந்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டிருந்தனர். “அணுகுக! அணுகுக!” அவர்களுக்குப் பின்னால் சகுனியின் ஆணை முழவொலியாக எழுந்துகொண்டே இருந்தது.
லட்சுமணன் அருகே கணுமூங்கிலில் எழுந்தமைந்த தொழும்பன் நோக்கிக்கூற அப்பால் வலப்பக்கம் பீமனும் துச்சாதனனும் வெறிகொண்ட போரில் ஈடுபட்டிருப்பதை அறிந்தான். நெடுந்தொலைவில் சாத்யகியும் சுருதகீர்த்தியும் இணைந்து துரியோதனனை செறுத்துவிட்டிருந்தனர். இடும்பர்கள் கணந்தோறும் பெருகுபவர்கள் போலிருந்தனர். தன்னால் அவர்களை முழுமையாக எதிர்கொள்ள இயலாது என்று அவனுக்கு புலப்பட்டது. கதாயுதத்தால் மட்டுமே எதிர்கொள்ளத்தக்க தோள்வலர்கள் அவர்கள். அவர்களை எதிர்கொள்ளும் விசை பால்ஹிகரிடமும் துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் மட்டுமே உண்டு. “படை உதவி! படை உதவி வருக!” என்று லட்சுமணன் கூவினான். “இதோ வந்துகொண்டிருக்கிறது… செறுத்து நிற்கவும்” என்று சகுனியின் அறைகூவல் எழுந்தது.
லட்சுமணன் தன்னைச் சுற்றி கௌரவ மைந்தர்களின் தேர்கள் உடைந்து தெறிப்பதை உணர்ந்தான். இடும்பன் ஒருவனை நீள்வேல் கொண்டு குத்தி அவ்விசையாலேயே தேரிலிருந்து எழுந்து அதில் தொங்கிச் சுழன்று இறங்கி அவ்வேலை உருவ முயன்றபோது எதிரே முழக்கமிடும் கரிய முகில்போல் கடோத்கஜனை கண்டான். வேலை விட்டுவிட்டு தன் தேரை நோக்கி ஓடினான். கடோத்கஜன் அவனுக்கெதிர் வந்த இரண்டு வில்தேர்களை அறைந்து நொறுக்கிவிட்டு லட்சுமணனை நோக்கி வந்தான். லட்சுமணன் பாய்ந்து இளையவன் படவாஸகனின் தேரிலேறிக்கொள்ள அத்தேரை அறைந்து உடைத்த கடோத்கஜன் பெருங்கூச்சலிட்டான்.
கதை சுழன்று மேலெழும் விம்மலோசையிலேயே தேரிலிருந்து தாவும் உணர்வை அடைந்துவிட்டிருந்த லட்சுமணன் அவ்வறையிலிருந்து தப்பினான். ஆனால் படவாஸகனின் கொழுங்குருதி அவன் மேல் வெஞ்சேறென தெறித்தது. மேலும் மேலுமென இடும்பர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே வந்த இடும்பன் ஒருவனை இளையோனாகிய கூர்மன் தன் அம்பால் அறைந்தான். அவ்வம்பை கவசத்திலிருந்து பிடித்து அப்பால் இட்டபின் ஓங்கி அவனை அறைந்து கொன்றான் இடும்பன். அப்போர் வெறும் படுகொலையாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
சல்யரின் மைந்தர்கள் இருபுறமும் தேரில் வந்து சூழ்ந்தனர். “எங்களை அரசர் இங்கு வரச்சொன்னார். இடும்பர்களை தடுத்து நிறுத்தச்சொன்னார்” என்று கூவினான் ருக்மாங்கதன். “வில் ஒழியும் மட்டும் போர் புரிவோம், இளவரசே” என்றான் ருக்மரதன். “அதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள்.” அவர்கள் இருவரும் தேரில் முட்டு மடக்கி படுத்தபடி இடும்பர்களின் கால்களை நோக்கி அம்பெய்தனர். இரு இடும்பர்கள் அலறியபடி நிலம்சரிய லட்சுமணன் அவர்களை அம்பெய்து கொன்றான். தேரின்மேல் தாவி வந்திறங்கிய கடோத்கஜன் ஒரே சுழற்றலில் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் கொன்றான். ருக்மரதனின் தலை உடலில் இருந்து பறந்து நிலத்தில் எடையுடன் விழுந்தது. அதிலிருந்து உயிருள்ள சிப்பிகள்போல விழிகள் வெளியே தெறித்து குருதிக்குழாய்ச் சரடில் தொங்கின.
இடும்பர்கள் வெறியுடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டனர். போர் மேலும் விசை கொண்டது. “அரசர் முன்னேறுக! இளையோரை துணை செய்க!” என்று சகுனியின் முழவொலி எழுந்துகொண்டிருந்தது. எவராலும் எதிர்க்கப்படாமல் இடும்பர்கள் மேலும் மேலுமென படைக்குள் புகுந்தனர். விந்தையான அவர்களின் குரல் அனைத்து செவிகளையும் மலைக்க வைத்தது. தோன்றும் இடத்திலிருந்து அக்கணமே எழுந்து மறையும் அவர்களின் விசை விழிகளை குழப்பியது. அவர்களை நோக்கி செலுத்தப்பட்ட அம்புகள் அனைத்தும் வீணாயின.
பீஷ்மர் தொலைவில் அவர்களை கண்டார். “செல்க! அவனை நோக்கி செல்க!” என்று அவர் தேரோட்டியிடம் தன் கைகளைக் காட்டுவதை காண முடிந்தது. ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த திருஷ்டத்யும்னனும் நகுலனும் சகதேவனும் சலிக்கா தொடர் அம்புகளால் அவரை சூழ்ந்து வேலியிட்டனர். மறுபக்கம் ஜயத்ரதன் சினந்து கடோத்கஜனை நோக்கி வர அர்ஜுனன் அவனை தடுத்து நிறுத்தினான். பூரிசிரவஸ் மிக அப்பால் துருபதனை எதிர்கொண்டான்.
உடைந்து புரண்டு மலையிறங்கி வரும் பாறைத்திரள்போல கடோத்கஜனின் படை கௌரவப் படையினரை சிதறடிப்பதை லட்சுமணன் கண்டான். “விரைக! விரைக! அவனை சூழ்ந்துகொள்க!” என்று தன் தம்பியருக்கு ஆணையிட்டு அவர்கள் அரைவட்டமென தன்னை சூழ்ந்து வர நாண் முழக்கியபடி கடோத்கஜனை நோக்கி சென்றான். அவன் முதலில் விட்ட அனைத்து அம்புகளும் வீணாயின. அம்பு தொடுக்கும் விரைவைவிட அவர்கள் எழுந்து தாவிச்செல்லும் விரைவு மிகுதியென அவன் அறிந்தான். அம்புகள் அவர்களை கரும்புகையை என கடந்துசெல்வதுபோல தோன்றியது. மானுடப் படைக்கலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள் என்று நெஞ்சு மலைத்தது.
கடோத்கஜன் லட்சுமணனை நோக்கி வரும் வழியிலேயே துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோரை தலையுடைத்துக் கொன்றான். ஒரு கணம் விழிமுனையால் தன் உடன்பிறந்தோர் சிதைந்து தேரின் உடைசல்களுக்கு நடுவே கிடப்பதைக் கண்டதும் லட்சுமணனின் தொடை துடிக்கத் தொடங்கியது. சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் வீழ்ந்தனர். ஹிரண்யபாகு, கக்ஷகன், பிரகாலனன், சுரபன், பங்கன், சலகரன், மூகன், முத்கரன், சுரோமன், மஹாஹனு, உச்சிகன், பிச்சாண்டகன், மண்டலகன் என கௌரவ மைந்தர் அறைபட்டு விழுந்தபடியே இருந்தனர். “நூறுக்குமேல் தம்பியர் கொல்லப்பட்டுவிட்டனர், மூத்தவரே” என கண்ணீருடன் துருமசேனன் கூவினான். லட்சுமணன் தன் நெஞ்சு ஒரு பெரும்பாறை என எடைகொண்டிருப்பதை உணர்ந்தான். “உளம் சலிக்கலாகாது. என் கை தளரலாகாது…” என அவனே தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். “தெய்வங்களே! மூதாதையரே! உடனிருங்கள்… தெய்வங்களே!”
காற்றில் உதிர்ந்த பல அம்புகளுக்குப் பின் பறக்கும் இடும்பர்களை அம்பால் தாக்கும் பிறிதொரு முறையை லட்சுமணன் கற்றுக்கொண்டான். அவர்கள் தாவி எழுகையில் கால்களால் உந்தப்பட்டு அசையும் தேரின் எதிர்த்திசையில் அவர்களின் நீள் நிழல்களுக்கு மேல் வான்நோக்கி அம்பால் அறைந்தான். நிழல் தலைக்கு மேல் தாவிச்சென்ற அவர்களை அடையாளம் காட்டியது. அவனுடைய அம்புகள் பட்டு முதல் இடும்பன் அலறியபடி தேர் மேல் விழுந்தான். துருமசேனன் “மூத்தவரே, கற்றுக்கொண்டேன்” என்று கூவினான்.
ஆனால் ஆள்நீளப் பேரம்புகூட அவர்களின் உயிர்பறிக்க இயலவில்லை. நெஞ்சில் பாய்ந்து இறங்கிய வேலம்பின் முனையை ஒடித்தெறிந்துவிட்டு பெரும்பற்கள் தெரிய முழவோசை எழுப்பி கைகளால் அருகிருந்த தேர்களையும் புரவிகளையும் அறைந்துடைத்தபடி அவன் அம்பு வந்த திசை நோக்கியே மீண்டும் வந்தான். லட்சுமணன் அவன் கால்களில் அம்பை செலுத்தினான். ஆனால் தோள்களே அவர்களின் கால்களும் என்று தெளிய தோள்கவசத்தையே குறிவைத்து அடித்தான். அது உடைந்து தெறித்த இடைவெளியில் அம்புகளால் அறைந்தபோது விசையிழந்து இடும்பன் நிலையழிந்தான். மீண்டும் மீண்டுமென அம்பு செலுத்தி அவன் இரும்புக்கவசங்களை உடைத்து உயிரை அணைக்க வேண்டியிருந்தது.
எழுவரை வீழ்த்தி முடிப்பதற்குள் அம்பறாத்தூணி ஒன்று முடிந்தது. துருமசேனன் இடும்பர் மூவரை வீழ்த்திவிட்டு “மூத்தவரே, பாறைகள்மேல் அம்பெய்வது போலிருக்கிறது” என்று கூவினான். “பறக்கும் யானைகள்போல் இருக்கிறார்கள்” என்றான் இளையோன் பிரவேபனன். மறுகணமே அவன் தலை கதையால் அறைபட்டு சிதறியது. “மூத்தவரே!” என அலறிய அமாகடன் கொக்கி ஒன்றால் பருந்தின் உகிரால் என கவ்வப்பட்டு வானிலெழுந்து சுழன்று தரைமேல் அறைபட்டான். அவன் தலையை ஒரு கதை அறைந்து சிதறடித்தது.
மழையில் மலை என கடோத்கஜனின் கவசங்களிலிருந்து குருதி வழிந்தது. அவன் கதை மாபெரும் ஊன்துண்டு என சிவந்திருந்தது. அது அதிர்வதுபோல் உளமயக்கு எழுந்தது. அவனை எதிர்கொள்ள முடியாமல் துருமசேனன் பின்னகர்ந்தான். கௌரவ மைந்தர்களான பூர்ணாங்கதன், குடாரமுகன், பூர்ணன், அவ்யகன், கோமலகன், வேகவான், ரக்தாங்கன் ஆகியோர் உடலுடைந்து விழுந்தனர். பைரவன், பிசங்கன், சம்ருத்தன், படாவாசகன், வராகன், தருணகன், துர்ப்பிரபன், துர்க்கிரமன் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஒருவனை ஒருகணத்திற்கு மேல் கடோத்கஜன் நோக்கவில்லை. ஓர் அறைக்குமேல் வீழ்த்தவில்லை. விழிகள் அசையும் விரைவில் கதை பறப்பதை லட்சுமணன் அன்றுதான் கண்டான்.
“மைந்தர் விலகுக… கடோத்கஜனிடமிருந்து மைந்தர் அகல்க… அரசரும் இளையோரும் அவனை சூழ்க!” என்று பின்னால் முரசுகள் ஓசையிட்டன. பாண்டவப் படையால் சூழப்பட்டிருந்த அலம்புஷனும் அவன் துணைவரும் அந்த வளையத்தை உடைத்துக்கொண்டு பேரோசையுடன் கடோத்கஜனை நோக்கி வந்தனர். இடும்பர்களும் ஊஷரர்களும் கதைமுட்டிக்கொண்டனர். கொக்கிக்கயிறுகளை வீசி ஒருவரை ஒருவர் இழுத்து கதையால் அறைந்தனர். ஏழு இடும்பர்களைக் கொன்று யானையொன்றின் மேல் கால்வைத்து ஏறிய அலம்புஷன் சகுண்டனுடன் கோத்துக்கொண்டான். உறுமியபடியும் கூச்சலிட்டபடியும் இருவரும் கொக்கியாலும் கதையாலும் போரிட்டனர்.
லட்சுமணன் இரண்டு இடும்பர்களை வீழ்த்தியபின் கடோத்கஜனை அணுகினான். அம்பைச் செலுத்தி அவன் கவசத்தை உடைத்தபோதுதான் அது கடோத்கஜனின் துணைவனாகிய உத்துங்கன் என்று தெரிந்தது. அவன் வீசிய கொக்கிக்கயிறு லட்சுமணனின் தேர்த்தூணில் பற்றிக்கொள்ள இழுவிசையால் தேர் சரிந்து முன்னால் சென்றது. கதை வருவதற்குள் லட்சுமணன் பாய்ந்து அப்பால் குதித்தான். தன் கதையுடன் பாய்ந்து யானையொன்றின் மேலேறி நின்றபடி மேலேழுந்த உத்துங்கனின் விலாவை அறைந்தான். உடைந்த கவசத்துடன் கீழே விழுந்த உத்துங்கன்மேல் பாய்ந்து அவன் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான்.
இடும்பன் ஒருவனை கொன்றபின் துருமசேனன் “மூத்தவரே, நோக்குக!” என்று கூவினான். கடோத்கஜன் அவன் இளையோர் துர்த்தகன், ராதன், கிருசன், விகங்கன், ஹரிணன், பாராவதன், பாண்டகன் ஆகியோரை கொன்றபடியே அவனை நோக்கி வந்தான். லட்சுமணன் திரும்பி ஓடி பிறிதொரு தேரில் ஏறிக்கொள்ள தங்கள் தேர்களுடன் குண்டாசியின் மைந்தர் தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் ஊடே புகுந்தனர். “இவர்கள் இங்கே எப்படி வந்தனர்?” என்று லட்சுமணன் கூச்சலிட்டான். “அவர்களை பின்னகரச் சொல்… பின்னகர்க! பின்னகர்க!”
அவன் தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தபடி முன்னே செல்ல மிக அருகே பெரும்பற்களுடன் அறைகூவல் எழுப்பிய இடும்பன் ஒருவனை நீள் வேலால் ஓங்கி நெஞ்சில் குத்தி அவ்வேல் நுனியில் பற்றி தாவிப் பறந்து பிறிதொரு தேரிலேறிக்கொண்டான். இடும்பன் அந்த வேலுடனே எழுந்து அவன் தேரை அறைந்து உடைத்து தேர்ப்பாகனுடன் அள்ளி அப்பாலிட்டான். நுகத்தில் இருந்து சரிந்த புரவிகளை வெறிகொண்டு கைகளால் அறைந்து உடைத்தான். இன்னொரு வேலால் அவன் கழுத்தை ஓங்கிக் குத்தி சரித்தான் லட்சுமணன். அதற்குள் கடோத்கஜன் தீர்க்கநேத்ரனையும் சுரகுண்டலனையும் அணுகினான். அவர்கள் செயலிழந்து வெறித்து நோக்கிநிற்க அரைக்கணமும் விழிநிலைக்காமல் இரண்டு அறைகளால் அவர்களை நசுக்கியபடி அவன் முன்னால் சென்றான்.
சகுண்டனைத் தூக்கி மண்ணில் அறைந்து அவன் தலையை உடைத்தபின் நிமிர்ந்த அலம்புஷனை நோக்கி வந்து கதையால் அவன் தோளை அறைந்தான் கடோத்கஜன். அலம்புஷன் தெறித்து அப்பால் விழுந்து அவ்விசையாலேயே உருண்டு எழுந்து கதையையும் கொக்கிக்கயிற்றையும் எடுத்துக்கொண்டு கடோத்கஜனை முகம்கொண்டான். இருவரும் கதாயுதங்களால் அறைந்தனர். பாய்ந்தெழுந்து வானில் முட்டிக்கொண்டு அப்பால் சென்றிறங்கி அங்கிருந்து கழுகென மீண்டும் காற்றில் எழுந்தனர்.
“இவர்களைத் தடுக்க நம்மால் இயலாது. தந்தையர் வரவேண்டும்” என்றான் லட்சுமணன். “தந்தையர் வரவேண்டும்! தந்தையர் வருக!” என முழவுகள் அவன் ஆணையை ஒலிக்கத் தொடங்கின. அலம்புஷனைத் தூக்கி அறைந்து வெறும் கைகளால் அவன் தலையைப்பற்றி திருப்பி விறகுடையும் ஒலி எழ உடைத்து மும்முறை திருகி பிடுங்கி எடுத்து வலக்கையில் தூக்கி வெறிமுழக்கம் எழுப்பினான் கடோத்கஜன். இடும்பர்கள் நெஞ்சில் அறைந்து முழவுக்குரல் எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர்.
லட்சுமணன் எடுத்த அம்பு காற்றில் திகைத்து நிற்க விழிநிலைத்து நோக்கிக்கொண்டிருந்தான். அக்களத்தில் இருக்கும் எவரையுமே கடோத்கஜன் முன்பு அறிந்திருக்கவில்லை. வஞ்சமோ பகையோ அவனுக்கில்லை. அக்கள வெற்றியால் அவன் அடைவதும் ஒன்றுமில்லை. அதனாலேயே விழைவும் வஞ்சமும் கொண்டவர்களைவிட கொடிய போர்வீரனாக அவன் இருந்தான். அவன் அறியாமல் மேலும் மேலுமென பின்னகர்ந்தான். கடோத்கஜன் கதையையும் கொக்கிக்கயிற்றையும் சுழற்றியபடி அணுகி வந்தான். அலம்புஷர்கள் முழுமையாகவே கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். “வருக! வருக, இளவரசே! இன்று என் கணக்கில் நீங்களும் உண்டு!” என்று கூவியபடி கடோத்கஜன் அவனை நோக்கி வந்தான். “ஆம், இது என் தம்பியருக்காக!” என்று கூவியபடி லட்சுமணன் அவனை நோக்கி கதையுடன் பாய்ந்தான். “வேண்டாம் மூத்தவரே, பின்னகர்க!” என துருமசேனன் அவனுக்குப் பின்னால் கூச்சலிட்டான்.
கடோத்கஜனின் கதையும் அவன் கதையும் முட்டிக்கொண்டன. இரண்டாம் அறையிலேயே அவன் கதை தெறித்தது. கடோத்கஜனின் கதை அறைய அவன் உருண்டு விலகினான். தரையிலிருந்து வெடித்தெழுந்த செம்மண்ணும் கற்களும் அவன்மேல் பெய்தன. கொக்கி அவன் கவசத்தை பற்ற அவன் அதை தலைவழியாக கழற்றிவிட்டு தப்பி தாவி எழுந்து அகன்றான். வாய் முழவென ஒலிக்க பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி கடோத்கஜன் அவனை அணுகினான்.
அப்பால் முரசொலி எழுந்ததும் லட்சுமணன் உடல்தளர்ந்தான். பாண்டவர்களின் சூழ்கையை உடைத்துக்கொண்டு துரியோதனனும் துச்சாதனனும் தேர்களில் அணுகி வந்தனர். துரியோதனன் வந்த விசையிலேயே கடோத்கஜனை கதையால் சந்தித்தான். நான்குமுறை அறை விழுந்ததுமே நிலைதடுமாறி பின்னால் சரிந்த கடோத்கஜன் துரியோதனனின் ஆற்றலை புரிந்துகொண்டு பாய்ந்து தேர்களுக்குமேல் தாவினான். துரியோதனன் யானை ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு கதையால் அவனை அறைந்தான். துச்சாதனன் யானைபோல பிளிறியபடி துரியோதனனை தாக்க எழுந்த இரு இடும்பர்களை கதையால் அறைந்து கொன்றான்.
துரியோதனனின் அறை நெஞ்சுக்கவசத்தை உடைக்க, அடுத்த அறைக்குத் தப்பி எழுந்து பறந்த கடோத்கஜன் துரியோதனன் கையிலிருந்து நீண்ட சங்கிலியில் பறந்து வந்த கதையால் அறைபட்டு பேரோசையுடன் தேர்மகுடம்மேல் விழுந்து மண்ணை அறைந்தான். துச்சாதனன் வெறிக்கூச்சலுடன் அவன் தலையை அறையப்போக அவன் கையை ஊன்றி எழுந்து பின்னால் தாவி இருமுறை துள்ளி பாண்டவப் படைகளுக்குள் புகுந்துகொண்டான். “தொடர்ந்து செல்க… இன்றே அவ்வரக்கமகனை கொல்க!” என்று துரியோதனன் கூவினான். கௌரவப்படை முரசொலியும் கொம்போசையும் சூழ தொடர்ந்துசென்றது.