‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23

bowலட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி வந்தார். அவருக்குப் பின்னால் அவன் பார்த்தது அவரது நிழலைத்தான். ஆனால் பார்த்தது அவருடைய நிழல் அல்ல என்று நினைவு வீறிட்டது. அது வண்ணமும் வடிவும் கொண்டிருந்தது என்று அது மீளமீள வலியுறுத்தியது. என்ன நிகழ்ந்தது என்று அவனுள் எழுந்த உளக்கூர் துழாவியது. அவையனத்துக்கும் அப்பால் உடல் சிலிர்ப்பு கொண்டு பின் அடங்கி வியர்வை பூத்து குளிர்ந்தது. மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டான்.

குனிந்து தன் காலின் இரும்புக்குறடின் தோற்சரடை இன்னொரு முறை இறுக்கிவிட்டு தலைதூக்கி பார்த்தான். உடல் அதிர உள்ளம் படபடக்கத் தொடங்கிய பின்னரே முதலில் பார்த்ததையே மீண்டும் கண்டதை உணர்ந்தான். பீஷ்மருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய ஓர் உடல் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நால்வர். அவன் விழியிமைத்த பின்னரும் அக்காட்சி மறையவில்லை. எட்டு கைகளுடன் ஒருவர் என அது மேலும் தெளிந்தது. இரும்புக் கவசங்கள் அணிந்த பேருடலர். பீஷ்மரிடம் பேசிக்கொண்டு இணையாக, சற்று பின்னால் அவர் வந்துகொண்டிருந்தார்.

உள்ளம் அச்சத்தால் துடித்தபோது, அச்சத்தாலேயே விழி மேலும் கூர்கொள்ள அவன் பீஷ்மரைத் தொடர்ந்து வருபவரை நிலைவிழியால் நோக்கினான். அவர் ஏன் விஸ்வசேனர் என்று தோன்றினார் என்று புரிந்தது. அவர் பீஷ்மரின் அதே வடிவிலிருந்தார். விஸ்வசேனரை எப்போது நோக்கினாலும் பீஷ்மரோ என உள்ளம் திடுக்கிட்டு பின்னர் மெல்ல அமைவது அவன் வழக்கம். பலமுறை பீஷ்மர் என எண்ணி அவன் வணங்கியதும் உண்டு. இயல்பாக பீஷ்மரைப்போல வாழ்த்திவிட்டு கடந்துசெல்வது அவர் வழக்கம். தான் பீஷ்மரல்ல என்றுகூட அவர் அறிந்திருப்பதில்லை. பீஷ்மரிடம் சொல்லாடுவதுபோல, அவர்மேல் எரிச்சல் கொண்டவர்போல, அவருக்கு ஆணையிடுபவர்போல இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்.

லட்சுமணன் திரும்பி தன் அருகே நின்ற இளையோனாகிய துருமசேனனை பார்த்தான். அவன் விழிகள் இயல்பாக இருப்பதைப் பார்த்து “இளையோனே, பிதாமகர் எவரிடம் பேசிக்கொண்டு வருகிறார்?” என்றான். “அது நெடுநாள் வழக்கம்தான் மூத்தவரே, அவர் தனக்குத்தானே சொல்லாடுவார். அரிதாக தன்னிடமே சினம்கொண்டு பற்களைக் கடித்து கைகளை முறுக்கி உறுமுவதும் உண்டு” என்றான். “அவருக்குப் பின்னால் எவரோ வருவதுபோல் எனக்கு தோன்றுகிறது” என்றான் லட்சுமணன். “அவர் நிழலல்லவா அது, மூத்தவரே” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் லட்சுமணன் பெருமூச்சுடன் தன் தேரிலேறிக்கொண்டான்.

பீஷ்மர் அவருடைய தேர் நோக்கி சென்றார். தேரோட்டுவதற்காக அவருடைய மாணவன் உக்ரசிம்மன் கையில் சவுக்கும் மறுகையில் தலைக்கவசமுமாக நின்றிருந்தான். அவன் சற்று இளமையான பீஷ்மரைப் போலிருப்பதாக லட்சுமணன் எண்ணினான். அவர்கள் அனைவரிலும் அவர் எப்படி அவ்வாறு பதிகிறார்? ஏனென்றால் அவர் மிகையாக வெளிப்படுவதில்லை. ஓரிரு சொற்களும் முகக்குறிகளும் கையசைவுகளும்தான் அவர் மொழி. அதை அறிய உளமும் விழியும் கூர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவன் தன்னருகே வந்து கடந்துசென்ற பீஷ்மரை நோக்கி தலைவணங்கினான்.

பீஷ்மர் அவனைப் பார்த்து மெல்ல தலையை அசைத்தபின் தேர் அருகே போடப்பட்டிருந்த சிறுமரக்கூடைமேல் சென்று அமர்ந்தார். காத்து நின்றிருந்த ஏவலர்கள் அவருடைய பேழையிலிருந்து கவசங்களை எடுத்து அணிவிக்கத் தொடங்கினார்கள். அதன் ஆணிகளை திருகி, தோல்பட்டைகளை முறுக்கினர். அவர் இரு கைகளையும் முட்டில் ஊன்றி சற்றே தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர் உடல் அசைந்தது. இறந்த எருதின் உடலை காக்கைகள் கொத்துவதுபோல. அவர் இறந்து உடல்மட்டும் அங்கிருப்பதுபோல ஒருகணம் தோன்ற அவன் அவ்வெண்ணங்களுக்காக உளம்கூசி, விழிதிருப்பிக்கொண்டான்.

துருமசேனன் “ஒவ்வொருநாளும் என நாமறியாத எவரோ ஆக மாறிவருகிறார் பிதாமகர்” என்றான். லட்சுமணனால் திரும்பி அவரை நோக்காமலிருக்க இயலவில்லை. அங்கிருந்த அனைவரும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் கண்டான். புரவிகளும் தலைதிருப்பி அவரை நோக்கிக்கொண்டிருந்தன. இறுதியாக நின்ற புரவி நாக்கை நீட்டி தலையை குலைத்தது. அவர் கைகளை நீட்டியிருக்க ஏவலர் கைக்கவசத்தை பொருத்தினர். தோளிலைகளை இறுக்கியபின் அவர்கள் மெல்ல அவரை அழைக்க இருமுறை சொல்லெழுந்தபின் முனகியபடி அவர் எழுந்து நின்றார். இடைக்கச்சையையும் தொடைக்கவசங்களையும் ஏவலர் அணிவித்தனர்.

அவருடைய நரைத்த நீண்ட குழல் தோல்சரடால் கட்டுண்டு தோளில் சரிந்திருந்தது. முதியவர்களுக்குரிய வகையில் உதடுகளை மடித்து கவ்வியிருந்தமையால் முகம் மேலும் அழுந்தி தாடி முன் நீட்டி இருந்தது. மூக்கு தளர்ந்து வளைந்து மீசைமேல் படிந்ததுபோல் தெரிந்தது. அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. லட்சுமணன் அவருடன் அந்த உருவம் தெரிகிறதா என்று பார்த்தான். அந்த தேவன் யார்? அவர் எட்டு வசுக்களால் பேணப்படுபவர் என்கிறார்கள். அவன் துருமசேனனிடம் “இளையோனே, எட்டு வசுக்களில் எண்கையர் யார்?” என்றான். “மூத்தவரே, இரண்டாமவரான துருவர்” என்றான்.

லட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் தன் தேரை அடைந்து ஏறி அமர்ந்தான். அவனுடைய தேரோட்டி அவன் கால்வைத்து ஏறிய மரப்பீடத்தை அகற்றிய பின் கையூன்றித் தாவி அமரபீடத்தில் அமர்ந்து தன் தலைக்கவசத்தை அணிந்து அதன் தோல்பட்டைகளை இறுக்கிக்கொண்டான். ஆவக்காவலன் தேருக்குப் பின்பக்கம் ஏறிக்கொண்டு தன்னைச் சுற்றி அம்புக்கூடைகளை பொருத்தி தோல்நாடாக்களால் கட்டினான். அம்புகள் தங்களுக்குள் மென்குரலில் பேசிக்கொள்பவைபோல ஓசையிட்டன. துருமசேனன் தன் தேரிலேறிக்கொண்டான். அனைவரும் வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள். படைக்கலங்களில் சுடர் ஏறிவிட்டிருந்தது. துதிக்கவசங்கள் அணிந்த யானைகளின் காதுகள் காட்டுச்சேம்பின் இலைகளென திரும்பின. அவற்றின் உடல்கள் ஊசலாட மணியோசைகள் எழுந்தன. சகடங்கள் அசைவதும், படைக்கலங்கள் முட்டிக்கொள்வதும், மெல்லிய பேச்சொலிகளும், புரவிகளின் சினைப்போசைகளும் கலந்து சூழ்ந்திருந்தன.

லட்சுமணன் நிலைகொள்ளாமையுடன் தலைக்கவசத்தின்மேல் விரல்களால் தாளமிட்டான். முந்தையநாள் இரவில் அவன் கண்ட கனவில் பீமனால் தலையுடைந்து இறந்த இளையோர் அனைவருமே தங்கள் தலைகளை அதேபோல கைகளில் ஏந்தியபடி ஓசையின்றி அவனை நோக்கி வந்தனர். குளிர்ந்த நீரோடும் அறியா ஆறொன்றின் கரை. ஆற்றுநீர் அத்தனை கருமையாக இருந்து அவன் பார்த்ததே இல்லை. இருள் அலை ஒன்று சுழித்தோடுவதுபோல. அதன் இரு கரைகளிலுமிருந்த மரங்கள் கொத்துக் கொத்தென தழைத்து எடைகொண்ட இலைகளைத் தாழ்த்தி நீரை வருடிக்கொண்டிருந்தன.

அங்கே அவன் எதற்காக வந்தான் என தெரியவில்லை. நதிநீரை குனிந்து தொட்டு அது பனியின் குளுமை கொண்டிருப்பதை உணர்ந்தபோதுதான் முதல் இளையோனை பார்த்தான். தலையற்றிருந்த அவனுடல் விதிர்ப்பை உருவாக்க குனிந்து கையிலிருந்த முகத்தை பார்த்தான். ‘மூத்தவரே’ என்று ஒலியிலாது உதடுகள் உச்சரித்தன. ‘இளையோனே’ என்று அவன் அழைத்த குரல் அச்செவியைச் சென்று எட்டவில்லை. ‘மூத்தவரே! மூத்தவரே! மூத்தவரே!’ என்று அவன் அழைத்துக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய நிழலில் இருந்து எழுந்தவன்போல் இன்னொரு இளையவன் தோன்றினான். ஒவ்வொருவராக அவர்கள் ஓருடலிலிருந்து மீள மீள முளைத்தெழுபவர்கள்போல வந்துகொண்டிருந்தனர். லட்சுமணன் அவர்களில் ஒருவனை தொடுவதற்காக கைநீட்டினான். நிழலுரு என நெளிந்து அவன் விலக ‘இளையோனே!’ என்றபடி விழித்துக்கொண்டான்.

தாளவியலா உடற்களைப்பால் படுத்த சில நொடிகளிலேயே அவன் துயில்கொண்டிருந்தான். விழித்தபோது அரை நாழிகைப்பொழுது ஆகியிருக்குமென்று தோன்றியது. உடல் சற்று ஓய்வு கொண்டுவிட்டிருந்தமையால் உள்ளம் முற்றிலும் விழித்துக்கொண்டு நின்றது. அவனுக்கு மிக அருகிலென அவன் இறந்தவர்கள் அமர்ந்திருப்பதை கண்டான். குளிர்ந்த இரவுக்குள் அவர்கள் மேலும் செறிந்த குளிரென தோன்றினர். நீர்த்துளிகள்போல் கரவொளி கொண்ட விழிகளும் சருகசைவதுபோல எழுந்த மென்குரலும் கொண்டிருந்தார்கள்.

முழு இரவும் அவன் தன் இறந்த இளையோருடன் இருந்தான். அவர்களுக்குமேல் மூடா விழிகளென விண்மீன்கள் செறிந்த கருவெளி வளைந்திருந்தது. எங்கோ பெரும்போர் நடந்துகொண்டிருக்கும் ஓசையை அவன் கேட்டான். “என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்கிறது அங்கே?” என்று அவன் கேட்டான். இறந்த இளையோனாகிய கீர்த்திசிம்மன் “அங்கே போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான். “போரா? இவ்விரவிலா?” என்றான் லட்சுமணன். “ஆம், இப்போது போரிடுபவர்கள் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள். இருளும் ஒளியுமான பேருருக்கள்” என்றான் அவன்.

“அவர்களில் சிலர் மானுடரை ஊர்திகளாக கொண்டிருக்கிறார்கள். சிலர் காற்றை. சிலர் இடிமின்னலை” என்றான் இன்னொரு இளையோனாகிய ரேணுகன். லட்சுமணன் சோர்ந்து “இங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இளையோனே?” என்றான். அவர்களில் இளையவனாகிய உலூகன் “போர்!” என்றான். “புவியில் தெய்வங்கள் போரிடாத ஒருகணமும் இருந்ததில்லை, மூத்தவரே. இது அவர்களின் போருக்கென உருவாக்கப்பட்ட களம்.” லட்சுமணன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “போரினூடாகவே அவை வாழ்கின்றன. போர் அனலுக்கு அவியென அத்தெய்வங்களுக்கு இன்றியமையாதது. இது எரிகுளம்” என்றான் நிமோஷன்.

புலரியில் உலூகன் தன் மடியிலிருந்த தலையை கையிலெடுத்துக்கொண்டு “சென்று வருகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் இவ்வாறு மீண்டும் வரமுடியுமென்பது எனக்கு உளநிறைவளிக்கிறது, இளையோனே” என்றான் லட்சுமணன். “ஆம், ஆனால் நாங்கள் உங்கள் உலகில் இருப்பவர்களை அணுக இயலாது. அங்கிருந்து எங்களை நோக்கி வரத்தொடங்கியவர்களையே நாங்கள் அணுகுகிறோம்” என்றான். “நான் வந்துகொண்டிருக்கிறேனா?” என்று லட்சுமணன் கேட்டான். ஆனால் அவனுள் துயர் இருக்கவில்லை. மெல்லிய ஆவலும் உவகையுமே எழுந்தது. “ஆம், நீங்கள் எங்களை அணுகி வந்துவிட்டீர்கள். இன்னும் சில நாட்கள்தான்.”

“எவ்வளவு நாட்கள்?” என்று லட்சுமணன் கேட்டான். “சில நாட்கள் மட்டுமே. எவ்வளவு நாட்கள் என்பதை தெய்வங்கள் மட்டுமே அறியும், அல்லது அவையும் அறியாது. இப்பெரும் பூசலில் எத்தருணத்தில் எது நிகழுமென்பதை அனைத்துமான பிரம்மமும் அறியாதிருக்கவே வாய்ப்பு” என்றான் புளினன். லட்சுமணன் துயருடன் “காத்திருப்பது சுமையானது” என்றான். அவர்கள் துயரால் வெளிறிய உதடுகளுடன் புன்னகைத்தனர். தலைகளை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கிளம்பி முதலில் சென்றவன் நிழலுக்குள் தாங்களும் சென்று மறைந்தனர். எறும்புநிரை பொந்துக்குள் புகுந்து மறைவதுபோல.

அவன் எழுந்து அந்தச் சிறு வாயிலினூடாக தானும் நுழைந்துவிடவேண்டுமென்று விரும்பினான். விழித்துக்கொண்டபோது புலரியின் குளிர் உடலை மெய்ப்புகொள்ளச் செய்வதை உணர்ந்து நெடுந்தொலைவில் எழுந்த துருவ விண்மீனை பார்த்துக்கொண்டிருந்தான். நோக்க நோக்க விண்மீன்கள் ஒளிகொள்வதன் விந்தை அவனை நிறைத்தது. துருமசேனன் எழுந்து அவன் அருகே வந்து “துயிலவில்லையா, மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் லட்சுமணன். “நானும் துயிலவில்லை. சென்று மறைந்தவர்களை எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்களால் நம்மை விட்டுச்செல்லவே இயலவில்லை” என்றான் துருமசேனன்.

“ஆம்” என்று லட்சுமணன் சொன்னான். துருமசேனன் சற்றே உடைந்த குரலில் “இறந்தவர்கள் ஏன் இத்தனை இரக்கமிலாதிருக்கிறார்கள்!” என்றான். லட்சுமணன் காய்ச்சல் படிந்த கண்களால் நிமிர்ந்து நோக்கி “அவர்களுக்கு வேறு வழியில்லை, இளையோனே” என்றான். அவன் நோக்கிய துருவ விண்மீனை துருமசேனனும் நிமிர்ந்து நோக்கினான். “நிலைக்கோள்!” என்றான். “ஆம், நிலைக்கோள் அடைந்த ஒரே ஒருவன்” என்றான் லட்சுமணன். “மீதி அனைவரும் இங்கே இடம் அறியாது, இருப்பிலாது அலைக்கழிபவர்கள்தானா?” என்றான் துருமசேனன்.

லட்சுமணன் “நாம் இந்த எண்ணங்களை கடப்போம். இவற்றினூடாகச் சென்றால் நாம் வாழும் இவ்வுலகுக்கு எப்பொருளும் இல்லாத பிறிதெங்கோ சென்று சேர்கிறேன். வேண்டாம்” என்றான். “ஆம், இரவில் பலமுறை நான் அவ்வாறே எண்ணினேன். இது தேவையற்ற அல்லல். வான்வெளியில் சிதறுண்டு சித்தம் அழிகிறது” என்றபின் அவன் மேலே நோக்கி “நெடும்பொழுதாக நானும் துருவனையே பார்த்துக்கொண்டிருந்தேன், மூத்தவரே. விழிவிலக்காது துருவனை நோக்கிக்கொண்டிருப்பது ஓர் நிலைப்பேறை அளிக்கிறது. அலைக்கழியும் படகில் செல்கையில் அமரத்தில் சுக்கான் நிலையை மட்டுமே நோக்குக என்று முன்பொருமுறை தந்தை சொன்னார்” என்றான் துருமசேனன்.

லட்சுமணன் “நாளை படைநடத்தவிருப்பவர் பீஷ்மர். நமது தரப்பின் நிலைக்கோள் அவரே” என்றான். துருமசேனன் “ஆம், இம்முறையும் பிறழாது நிலைகொண்டாரெனில் ஒருவேளை நாளையே போர் முடியக்கூடும். எஞ்சியோருடன் நாம் நகர்மீள முடியும்” என்றான். “நம்மில் சிலரேனும் எஞ்சவேண்டும், மூத்தவரே.” லட்சுமணன் “அதில் உனக்கு ஐயமிருக்கிறதா?” என்றான். குரல் தாழ “ஐயமென்றில்லை…” என்றான் துருமசேனன். “சொல்” என்றான் லட்சுமணன். “ஐயமில்லை, மூத்தவரே, நான் மானுடனின் எல்லைகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் துருமசேனன். லட்சுமணன் “என்ன?” என்றான்.

துருமசேனன் “ஒவ்வொரு பொருளும் எடைதாளாது உடையும் ஒரு புள்ளி உண்டு. மானுடர் உடையும் இறுதிப்புள்ளிகள் வெளிப்படுவது இத்தகைய போர்க்களத்திலேயே. இங்கு உடையாது எவரும் எஞ்சப்போவதில்லை” என்றான். “அதுவே எண்ணுதற்கு பொருத்தமாக உள்ளது. ஆயினும் ஒருவரேனும் உடையாது தன் முழுநிலையுடன் எஞ்சவேண்டுமென்று விழையாமலும் இருக்க இயலாது. இல்லை எனில் எதை நம்பி இப்புவியில் வாழ்வோம்? எதன் பொருட்டு உயிர் கொடுப்போம்?” என்று லட்சுமணன் சொன்னான்.

bowமிக அப்பால் இளையோர் ஒவ்வொருவராக தேரிலேறிவிட்டதை லட்சுமணன் பார்த்தான். அவர்கள் உவகையுடன் ஒருவருக்கொருவர் கைகளைக் காட்டி பேசிக்கொண்டார்கள். ஒருவன் கதையைத் தூக்கி இன்னொருவனை அச்சுறுத்துவதுபோல ஆட்டினான். குண்டாசியின் மைந்தர்களான தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் தங்கள் தேர்களில் வெறித்த விழிகளுடன் நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் நிழல்கள் நீண்டு விழுந்திருந்தன. நிழல்களா, இன்னமும் ஒளியே எழவில்லையே? அவன் விழிகளை மூடித்திறந்தான். இந்தக் களத்தில் துயிலின்மையால் அகம் பேதலித்து மெய்மைக்கும் மாயைக்கும் நடுவே ஊசலாடும் உள்ளத்துடன் நின்று எப்போரை எடுக்கவிருக்கிறேன்? நான் கொல்லப்பட்டால் அதை நான் அறியவே சற்று பொழுதாகும்போலும் என்று எண்ணி லட்சுமணன் புன்னகைத்தான்.

புலரிமுரசுகள் முழங்கியதும் லட்சுமணனின் உடல் இயல்பாக போருக்கென எழுந்தது. நாணேற்றி வில்லை நிறுத்தி ஒற்றை அம்பில் கை தொட்டு காத்துநின்றான். திரும்பி பீஷ்மரை பார்த்தான். தேரில் அவருக்குப் பின்புறம் ஆவக்காவலனும் உதவியாளனும் அமர்ந்திருந்தனர். அவருடைய இடப்பக்கம் கைகளைக் கட்டியபடி அவ்வுருவம் நின்றிருந்தது. பீஷ்மர் கையை காற்றில் வீசும் எளிய அசைவால் வில்பூட்டி நாணோசை எழுப்பினார். எதிரில் பாண்டவப் படையிலிருந்து பாஞ்சஜன்யமும் தேவதத்தமும் ஒலித்தன. பீஷ்மர் தன் இடையிலிருந்து சசாங்கம் என்னும் பெருஞ்சங்கத்தை எடுத்து ஊதினார். அந்த ஒலி பாண்டவப் படைகளை அதிர்வென ஊடுருவுவதை காணமுடிந்தது

போர்முரசு முழங்கியபோது அவன் உள்ளம் எழுவதற்குள்ளேயே வில்லையும் அம்பையும் எடுத்து உடல் போரில் இறங்கிவிட்டிருந்தது. மெய்யாகவே அதை தான் அறியாத் தேவர்கள் ஆள்கிறார்களா என்று அவன் உளம் துணுக்குற்றது. இரு படைகளும் கொதித்தெழும் நுரையெனப் பொங்கி எழுந்து ஒன்றோடொன்று அறைந்துகொண்டன. அவனைச் சூழ்ந்து கடலென கொந்தளிக்கத் தொடங்கியது படைச்சூழ்கை. போர் தொடங்கி பலநூறு வீரர்கள் அம்புபட்டு சிதறி விழுந்த பின்னரும்கூட உள்ளம் போர் தொடங்கிவிட்டதென்பதை உணராததுபோல் பேதலித்திருந்தது. அர்ஜுனன் மிக அப்பால் இளம்பிறையின் மையவளைவில் தன் ஒளிரும் தேரில் நின்று போரிடுவதை அவன் கண்டான். பூரிசிரவஸும் சலனும் ஜயத்ரதனும் அவனை எதிர்கொண்டனர். அம்புகள் வானில் உரசிக்கொண்டு அனல்தெறிக்க சிதறின. அவனைச் சூழ்ந்து சென்ற அம்புகளில் சிலவற்றின் ஒளி தேர்த்தூணில் விழுந்துசென்றது. எதிர்சென்று உரசிக்கொள்ளும் அம்புகள் சிட்டுக்குருவிச் சிலம்புவதென ஓசையிட்டன.

பிறைநிலவு வீசப்பட்ட வலைபோல வளைந்து வளைந்து பருந்தின் கழுத்தில் சுற்றிக்கொள்ள முயன்றது. பீஷ்மரின் தேர் சவுக்கு முனையில் சொடுக்கப்பட்டு பறந்து தெறிக்கும் இரும்பு அங்குசம்போல் பாண்டவப் படைகளுக்குள் புகுந்து அந்த வலையை கிழித்தது. கிழிந்த பகுதிகள் கல் விழுந்த நீரென விலகி சுழித்து மீண்டும் குவிந்தன. தொலைவிலிருந்து பார்க்கையிலேயே பருந்தின் தலை சென்று கொத்துமிடம் சிதறி விரியவும் மீண்டும் இணையவும் பிறைசூழ்கையே உகந்தது என காண முடிந்தது. எந்தப் படைக்கும் பின்னால் படையினர் எவரும் முன்னுந்தி வரவில்லை. ஆனால் பிறையை பருந்து இரண்டாகப் பிளந்துவிட்டதென்றால் அச்சூழ்கை முற்றிலும் பொருளிழந்துவிடும்.

பீஷ்மரை சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இருபுறமும் நின்று எதிர்த்தனர். பீஷ்மர் வாயை சுருக்கி, தாடி முன்னால் நீட்டியிருக்க, காற்றிலெனச் சுழலும் நீண்ட கைகளால் அம்புகளை செலுத்தினார். அவர் முன் அம்புபட்டு அலறிச்சரிந்த உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றெனக் குவிய சற்றே சரிந்து அவற்றை தவிர்த்து உருண்டது அவருடைய தேர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தங்கள் முன் உடைந்து சிதறிய தேர்களாலும் சிதறி விழுந்த உடல்களாலும் விரைவழிந்து புதுத்தடம் தேரும்பொருட்டு சற்று பின்னடைய பிறைசூழ்கை சற்று விரிந்தது. அந்த மையத்தில் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் தோன்றினார்கள்.

பீஷ்மர் நுண்ணிதின் கூர்ந்து செதுக்கிக்கொண்டிருக்கும் சிற்பியின் முகத்துடன் அம்புகளை தொடுத்தபடி அவர்களை நோக்கி சென்றார். அவருடைய அம்புகளால் சுருதகீர்த்தி திணறி பின்னடைய அபிமன்யூவின்மேல் அம்புகள் முட்புதர்போல மூடிக்கொண்டன. அவனுடைய கைகள் தேன்சிட்டின் சிறகென விழிதொடா விரைவுகொண்டிருந்தன. அவன் அங்கில்லை என்று தோன்றும்படி உடல் எழுந்து திரும்பி அம்புகளை தவிர்த்தது. அவன் தொடைக்கவசம் உடைந்தது. தலையிலணிந்திருந்த செம்பருந்தின் இறகுடன் ஓர் அம்பு அப்பால் சென்றது. சினம்கொண்டு கூச்சலிட்டபடி மேலும் மேலும் முன்னால் வந்தான்.

மேலும் சில கணங்களுக்குள் அவனை பீஷ்மரின் அம்புகள் அறைந்து வீழ்த்தும் என லட்சுமணன் எதிர்பார்த்தான். அவன் கை வில்லுடன் தாழ்ந்தது. அபிமன்யூவின் தலைக்கவசம் சிதறியது. நெஞ்சுக்கவசம் உடைந்ததும் தன் தேரிலிருந்து அவன் தேருக்குப் பாய்ந்த சாத்யகி அதை திருப்பி பிறைக்குள் கொண்டுசென்றான். வெறிகொண்டு தேரின் தூண்களை மாறிமாறி உதைத்து கூச்சலிட்டான். நெஞ்சிலறைந்து அலறினான். தேரிலிருந்து பாய்ந்திறங்க அவன் முயல அவனை இரு ஆவக்காவலரும் சேர்ந்து பற்றிக்கொண்டனர். அவனுக்கு முன்னால் திருஷ்டத்யும்னன் தோன்றி பீஷ்மரை எதிர்கொண்டான்.

தன்முன் தேரில் வந்த சர்வதனை அம்புகளால் அறைந்து நிலைகுலையச் செய்தான் லட்சுமணன். சர்வதனின் உதவிக்கு வந்த காரூஷ நாட்டு இளவரசர்கள் ஹஸ்திபதனையும் சுரவீரனையும் மூஷிகாதனையும் லட்சுமணன் தன் அம்புகளால் வீழ்த்தினான். சர்வதன் அவன் முன் விழுந்த அந்த உடல்களால் விசையழிந்த தருணத்தில் தன் தேரிலிருந்து கதையுடன் பாய்ந்தெழுந்து புரவிகள்மேல் கால்வைத்துத் தாவி கதையால் ஓங்கி அறைந்து சர்வதனின் தேர்ப்பாகனை கொன்றான். சர்வதன் கதையுடன் பாய்ந்திறங்க இருவரும் எண்ணுவதற்குள் கதைபொருதலாயினர். இரும்புருளைகள் அறைபட்டு எழுந்த ஓசை அப்பெருக்கில் மறைய அவற்றின் அதிர்வாலேயே நோக்கினோர் எடையையும் விசையையும் உணர்ந்தனர்.

சர்வதனுக்கு உதவியாக வந்த சுதசோமனை தன் சங்கை ஒலித்துக்கொண்டு பாய்ந்துசென்ற துருமசேனன் எதிர்கொண்டான். அம்புகளால் இருவரும் மாறிமாறி அடித்தனர். இருவருமே அம்புத்திறன் குன்றியவர்கள் என்பதனால் அவர்களின் உள்ளம் மேலும் மேலுமென எழ தேரிலிருந்து பாய்ந்திறங்கி கதைபொருதிக்கொண்டார்கள். உடன்பிறந்தார் கதைகளுடன் வந்து சூழ எதிர்ப்புறமிருந்து அஸ்மாக அரசர் சௌதாசனின் மைந்தர்கள் சம்வர்த்தகனும் பூர்ணபத்திரனும் நாணொலியுடன் வந்து அவர்களை தடுத்தனர். அஸ்மாக அரசரின் இளையோள் மைந்தனாகிய சங்கசிரஸ் கௌரவர்களின் தரப்பிலிருந்தான். அஸ்மாகர்கள் வருவதைக் கண்டு அவன் பின்னிருந்து “விலகுக, இது என் போர்!” என்று கூவியபடி வில்லை ஒலித்துக்கொண்டு ஊடுருவி வந்தான். அவன் அணுகுவதற்குள் சம்வர்த்தகனை நாகதத்தன் கொன்றான். சத்யசந்தனால் பூர்ணபத்திரன் கொல்லப்பட்டான். சங்கசிரஸ் வெறியுடன் கூவிச்சிரித்தபடி வந்து தேரில் தொங்கியபடி சென்று சம்வர்த்தகனின் தலையை ஓங்கி மிதித்துச் சுழன்று மீண்டும் ஏறிக்கொண்டான்.

குனிந்த மன்னர் அமோக்பூதியின் மைந்தர்கள் ஆர்யகனும் ஐராவதனும் துருமசேனனை சூழ்ந்துகொள்வதைக் கண்ட லட்சுமணன் “இளையோனை காக்க! அலம்புஷா, இளையோனை காக்க!” என்று கூவியபடியே சர்வதனின் அறையை தடுத்து தலையை குனிந்து அவன் தோளில் அறைய காற்றில் இலை என திரும்பி அதை சர்வதன் தடுத்தான். அலம்புஷன் தன் பாசத்தின் கொக்கியை வீசி ஆர்யகனின் தேரை இழுத்தான். தேர் தூண்டில் மீன் என எழுந்து அவனை நோக்கி செல்ல அவ்விசையில் அவன் எழுந்து பிறர் தலைக்குமேல் பறந்து வந்து தன் கதையால் ஆர்யகனின் தலையை உடைத்து சிதறடித்தான். திகைத்து வில்லை நழுவவிட்ட ஐராவதன் அக்கணமே சிதைந்தான். அவன் இளையோர் ததிமுகனும் கோடரகனும் அலம்புஷனின் துணைவரால் கொல்லப்பட்டனர்.

கௌண்டிவிசர்களின் ஏழு இளவரசர்களான ஹேமகுகனும், பாஹ்யகர்ணனும், பில்வகனும், பாண்டுரனும், அபராஜிதனும், ஸ்ரீவகனும், சுமுகனும் தேர்களில் வந்து அலம்புஷனை சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்களின் தேர்களை கொக்கிக்கயிற்றால் தொடுத்துக்கொண்டு சிலந்தி என காற்றில் சுழன்றெழுந்தான். அவர்களின் அம்புகள் அனைத்தும் குறி தவறின. ஏழு தேர்களும் அவன் கதையால் அதிலிருந்தவர்களுடன் சேர்த்து உடைத்து எறியப்பட்டன. சிதைந்த உடல்களுக்குள் நெஞ்சுக்குமிழ் கொப்புளம்போல துடித்துப் பதைத்தது. தலைவெண்கூழ் சிதறி தேர்த்தூண்களில் வழிந்தது. அலம்புஷனின் படையின் அரக்கர்கள் அக்குருதியை அள்ளி தங்கள் முகத்திலும் நெஞ்சிலும் பூசிக்கொண்டு வெறிக்கூச்சலிட்டனர்.

சர்வதனின் ஓர் அறை லட்சுமணன்மேல் பட்டது. நிலைதடுமாறி அவன் நிலத்தில் கையூன்றினான். அவன் எழுவதற்குள் கதையை ஓங்கியபடி சர்வதன் பாய்ந்து மேலெழுந்தான். அந்த வெறிமீதூறல் அவன் ஆற்றிய பிழையென்றாக அக்கணமே அவன் விலாவை அறைந்தது லட்சுமணனின் கதை. மூச்சொலியுடன் உடல் மடிந்து நிலத்தில் விழுந்தான் சர்வதன். அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் குருதி குமிழிகளாக கொப்பளித்து மார்பில் வழிந்தது. அவனை அப்பாலிருந்து வந்த கொக்கி ஒன்று கவசத்தில் தொடுத்து இழுத்து அப்பாலெடுத்துக் கொண்டது. கேடயப் படை வந்து அவன் சென்றவழியை மூடி லட்சுமணனை விலக்க மறுபக்கம் துருமசேனனின் முன்னாலிருந்து சுதசோமன் பின்னகர்ந்தான்.

துருமசேனன் தன் சங்கை எடுத்து வெற்றிக்கூவலை எழுப்பினான். கௌரவ மைந்தர்கள் துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோரும் சங்கொலி எழுப்ப கௌரவப் படையின் முரசு வெற்றி வெற்றி வெற்றி என ஓசையிடத் தொடங்கியது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமணவுறவு மீறல் குற்றமா?
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்