அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்

azaki

சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி

அன்புள்ள ஜெமோ

அழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன? குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். இந்த இரண்டு பிரச்சினைகளாலும்தான் இங்கே தலித் இலக்கியமே சூம்பிநின்றுவிட்டிருக்கிறது என்பது என் கருத்து. உங்கள் எதிர்வினை என்ன என அறியவிரும்புகிறேன்

சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்,

அழகியபெரியவன் நெடுங்காலமாகவே எனக்கு தனிப்பட்ட முறையிலும் அறிமுகமான படைப்பாளி. ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு முதன்மையான எழுத்தாளராக எழுந்து வருவார் என நம்பி எழுதியிருக்கிறேன். தலித்துக்களின் நிலவுடைமை பற்றியும், அது ஒரு நாவலுக்கான கருவாக ஆகமுடியும் என்பதைப்பற்றியும் அவரிடம் பேசிய நினைவு வருகிறது. தமிழினி பதிப்பகத்துக்கு அவருடைய தொடக்க நூலை வெளியிடும்பொருட்டு பரிந்துரைசெய்துமிருக்கிறேன்.

பின்னாளில் பொருட்படுத்தும்படியான ஓர் இலக்கியவாதியாக அவரால் ஆகமுடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் அவருடைய இந்தப்பேட்டியில் உள்ளன. இந்தப்பேட்டி ஓர் அரசியல்வாதியின் பேட்டி, எழுத்தாளனின் பேட்டி அல்ல. எழுத்தாளனை அடையாளம் காட்டும் ஒரு வரியைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. அரசியல்வாதி பொதுவாக அனைவரும் பார்க்கும் பார்வையையே தானும் கொண்டுள்ளான், அந்த அனைவருக்குமான குரலாக பேசிப்பேசி தன்னை ஆக்கிக்கொள்கிறான். எழுத்தாளன் என்பவன் அனைவரும் காணாமல்கடந்துபோகும் ஆழங்களை நோக்கிச் செல்பவன். ஆகவே பொதுவான பார்வையுடன் முரண்படுபவன், பொதுவான ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிப்பவன்.

பேச்சாளராகவும் அரசியல்செயல்பாட்டளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட அழகியபெரியவன் தன்னை அறியாமலேயே இலக்கியத்துக்கான உளச்சூழலில் இருந்து அகன்றார். அகத்தாலும் அரசியல்வாதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இலக்கியம் அவரிடமிருந்து முற்றாக நழுவியது. இந்தப்பேட்டி முழுக்க எல்லா தலித் அரசியல்வாதிகளும் சொல்லும் தேய்வழக்கான வாதங்கள் மட்டுமே உள்ளன. அந்தரங்க அனுபவத்திலிருந்து எழும் ஒர் அவதானிப்புகூட இல்லை.

இந்தப்பேட்டியின் தலைப்பில் இருந்தே ஆரம்பிக்கிறது அந்த அரசியல்வாதித்தனம். ’சாதியம் மேலும் கூர்மையடைந்துள்ளது’இது எவ்வகையிலேனும் உண்மையா? உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா? இல்லை என எவரும் அறிவார். இருந்தும் இக்கூற்று எப்படி வருகிறது?

அரசியல்வாதிகள் இதைச் சொல்வார்கள். எப்போதுமே பிரச்சினையை நிகழ்காலத்தில் மட்டும்  வைத்துப்பார்த்து, செயற்கையாக ஒருமுனைப்படுத்தி, உச்சகட்டவிசையுடன் முன்வைப்பது அவர்களின் வழிமுறை. எழுத்தாளனுக்குத் தேவை இரண்டு அளவுகோல்கள். ஒன்று வரலாற்றுநோக்கு. இன்னொன்று தன் சொந்தவாழ்க்கையைக் கொண்டு ஆராய்ந்து நோக்கும் அகவய நோக்கு. இதில் ஏதாவது மேலேசொன்ன கூற்றில் உள்ளதா? அரசியல்மேடையில் அடைந்த வரியை, அது ஒருவகையான உடனடி எதிர்வினையை பெற்றுத்தரும் என கற்றுக்கொண்டு, சொல்வதுமட்டும்தான் இது.

உண்மைதான், சாதியம் இன்றும் உள்ளது. ஆனால் இன்று ஒவ்வொரு தருணத்திலும் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக எழுந்துவரும் முதற்குரல் தலித் அல்லாத, முற்போக்கு எண்ணம்கொண்டவர்களுடையதுதான். தலித்துக்கள் இன்று அனைத்து நிலைகளிலும் உரிமைகளை, அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். சாதியநோக்கு சென்ற தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறையில் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என எவருக்கும் தெரியும்.

என் கல்லூரிக்காலம் முதல் இன்றுவரை பார்க்காஇயில் இப்படி ஒரு மாற்றம் இத்தனை விரைவில் நிகழுமென எண்ணியதே இல்லை. சாதியப் பழமைவாதிகளின் தரப்பிலிருந்து எழும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இத்தனைவிரைவாகச் சாதியக்கட்டமைப்பு சரிவதைக் கண்டு எழுவதுதான். இன்னும் செல்லவேண்டிய தொலைவு உள்ளது. ஆனால் வந்தடைந்த தொலைவு மிகமிக அதிகம். இலக்கியவாதி அல்ல இலக்கியவாசகனே உணரக்கூடிய ஒன்றுதான் இது. இலக்கியவாதி இத்தகைய யதார்த்தத்திலிருந்து மேலும் நுட்பமான அடித்தளங்களை நோக்கிச் செல்பவனே ஒழிய பொத்தாம்பொதுவாக அரசியல்கூச்சல்களை எழுப்புபவன் அல்ல.

அழகியபெரியவன் இலக்கியத்திலும் கையாளும்  வழிமுறையை அரசியல்வாதிகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். முதலில் எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு பேசத் தொடங்குவது. இந்தப் பேட்டியை வைத்தே இதைப்பார்ப்போம். அழகியபெரியவனின் எழுத்தின் அழகியல் குறைபாடுகளைப்பற்றி, வெளிப்பாட்டுப்போதாமைகளைப்பற்றி, முழுமைநோக்கின்மையைப்பற்றி எவரேனும் ஏதேனும் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? அவர் சாதியமேட்டிமை நோக்கில் பேசுகிறார் என்பார். ‘யோக்கியதை பல்லிளிக்கிறது’ வகையான சொற்றொடர்கள் வரும். அந்நிலையில் இலக்கியவாசகர் எவரேனும் எதிர்வினையாற்றுவார்களா?

ஒரே ஒருவகை எதிர்வினைதான் எழுந்துவரும். பொதுவெளியில் பொய்யான புரட்சிகரத்தை நடிக்கும் சிலர், தலித்துக்களுக்காக நெக்குருகி கண்ணீர்மல்கும் பாவனை கொண்டவர்கள், ’ஆகா ஓகோ அய்யய்யோ’ என்பார்கள். அதுவும் மேடையில் மட்டும். அந்த பொய்யர்களின் உரைகளுக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. இதுதான் அழகியபெரியவன் இன்று சென்று நின்றிருக்கும் இடம்.

எழுதவரும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக ஆகவேண்டிய விஷயம் இது. நீங்கள் எவராகவும் இருங்கள், இங்கே வாசகன் என்று வந்து நிற்பவனின் அறிவையும் மனசாட்சியையும் நோக்கிப் பேசவே வந்துள்ளீர்கள். இலக்கியம் என்பது ஆழமான, அந்தரங்கமான ஓர் உரையாடல். படைப்புக்கு முன்னதாகவே ”அடேய் தலித் விரோதிகளா’ என்ற ‘போஸ்’ எடுத்துவிட்டால் அவமதிக்கப்படுபவன் வாசகனே. அவன் அப்படைப்பாளியை அணுகமாட்டான். ஊடகங்களில் ஒரு புரட்சியாளப்பிம்பத்தைப் போலியாகக் கட்டமைக்கலாம், வாசகனின் ஆழத்துடன் பேசும் எழுத்தாளனின் பிம்பம் அல்ல அது.

வாசகன் ஒரு தனிமனிதனாக சாதிக்குள் மதத்துக்குள் அன்றாடச்சிறுமைகளுக்குள் இருப்பவனாக இருக்கலாம். ஆனால் வாசிக்கையில் அவன் திறந்து வைக்கப்பட்ட ஆழ்மனம். அதனுடன் நீங்கள் பேசுகிறீர்கள். அவனுடைய அறவுணர்ச்சியுடன் நுண்ணுணர்வுடன் கைகோர்க்கிறீர்கள். உங்கள் எழுத்தை ஏற்று உங்களாக மாறி உடன்வருவது அதுதான்.

இதை ஒரு லட்சியக்கருத்து என்று சொல்லலாம். ஆனால் இதை நம்பித்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவேதான் தலித் இலக்கியம் உயர்சாதியினனுக்குள்ளும் ஊடுருவுகிறது. அதை அவமதித்து முத்திரைகுத்தும் அரசியல்வாதி இலக்கியவாதி அல்ல. அந்த ஆழ்மனத்தை, மனசாட்சியை நம்பி அதனுடன் உரையாடியமையால்தான் பூமணியும் இமையமும் சோ.தருமனும் இலக்கியவாதிகள்.

*

நூறுநாற்காலிகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாருங்கள். முதலில் நூறுநாற்காலிகள் தன்னை தலித் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அது ஆசிரியனின் உள்ளம் ஈடுபட்ட ஒரு வாழ்க்கைமுடிச்சு. அவன் தன் கற்பனையால் அதை அறிய முயல்கிறான். இன்னொரு எழுத்தாளன் என்றால் அதை வேறுவகையில் எழுதியிருப்பான். அந்த எழுத்தாளனே இன்னொரு முறை இன்னொரு கோணத்தில் எழுதக்கூடும்

எல்லா நல்ல கதைகளும் இப்படித்தான் எழுதப்படுகின்றன. தலித் பிரச்சினையை பேசுவதற்காக, தலித் பிரச்சினையின் அனைத்துதளங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்து  அதை நிறுவுவதற்காக ,ஓர் அரசியல்பிரகடனமாக எழுதப்பட்ட  ‘உதாரணகதை’ அல்ல நூறுநாற்காலிகள். அப்படி எழுதப்பட்டால் அதற்கு இலக்கிய மதிப்பு ஏதுமில்லை.

இதேபோல இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என பலருடைய வாழ்க்கையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு வாழ்க்கையை இன்னொருவர் எழுதமுடியாது என இலக்கியம் அறிந்த எவரும் சொல்லமாட்டார்கள். இன்னொருவரின் வாழ்க்கையை ஒருவர் எழுத முடியும் என்ற அடிப்படைமீதுதான் இலக்கியம் என்னும் அறிவியக்கமே எழுப்பப்பட்டுள்ளது.. இன்னொருவரின் வாழ்க்கையை எழுதமுடியாது என்றால் எழுதப்பட்ட இன்னொருவரின் வாழ்க்கையை வாசிக்கவும் உணரவும் மட்டும் முடியுமா என்ன? அழகியபெரியவன் தலித்துகளுக்காக மட்டுமா எழுதுகிறார்?

அழகியபெரியவனுக்கு இதைப்புரியவைக்கவே முடியாது. ஆனால் இதை வாசிக்கும் நல்ல வாசகன் அந்தரங்கமாக நான் சொல்வதை உணர்வான் ’பிறிதின்நோய் தன்னோய் போல் தோன்றும்’ ஓர் இலட்சியநிலை உள்ளது. அனைத்து நல்ல படைப்புகளும் அந்நிலையின் ஏதேனும் ஒரு படியில்தான் உள்ளன. அழகியபெரியவைன் அந்த வரியை ஒருமுறையேனும் இலக்கிய அனுபவத்தை அடையாதவர்கள்தான் சொல்வார்கள். உளம்வரண்ட எளிய அரசியல்வாதிகள் அவர்கள்.

நூறுநாற்காலிகள் ஒரு வாழ்க்கை முடிச்சின் பல கோணங்களை திறக்கும் கதை. அக்கதையில் சாதியச் சமூக அமைப்பின் ஒடுக்குமுறை பேசப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் உக்கிரமான சித்திரங்கள் வழியாக. ஆனால் இவர்கள் எழுதும் மேடைப்பிரச்சாரக் கதைகளிலுள்ளதுபோல உரத்த கூச்சலாக அல்ல. உதாரணமாக, ஒருபக்கம் குரூரமான ஒடுக்குமுறையும் மறுபக்கம் குறியீட்டு ரீதியான வணக்கமுமாக இச்சமூகம் கொள்ளும் பாவனை அதில் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்..

வாசித்த எவருக்கும் தெரியும், கல்விநிலையம் முதல் அரசுநிர்வாகம் வரை ஒவ்வொரு படியிலும் காப்பன் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு மாறுவேடங்கள்தான் கதையே. அதில் சுட்டப்பட்டிருப்பவர்களே அதை உருவாக்கி அதன்மேல் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மீதான எதிர்ப்பே காப்பன் கோரும் நூறுநாற்காலிகள். அவர்களிடமுள்ள பசப்பல்கள், பாவனைகள் கதை முழுக்க பல்வேறு கோணங்களில் வெளிவருகின்றன . அழகியபெரியவன் எழுதுவதுபோல வெற்றுக்கூச்சல்களால் ஆனது அல்ல நூற்நாற்காலிகள். ஆகவேதான் அவரைப்போன்றவர்கள் எழுதும் எந்தக்கதையையும் விட பற்பலமடங்கு தீவிரப் பாதிப்பை அது உருவாக்குகிறது. எழுதப்பட்டபின் எட்டாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது. அதுதான் கலையின் ஆற்றல்.

காப்பனுக்கும் அவன் அன்னைக்குமான உறவு, காப்பனுக்கும் அவன் ஆசிரியனுக்குமான உறவு , காப்பனுக்கும் அவன் மனைவிக்குமான உறவு என பல தளங்களாக பரவும் கதை அது. ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டி இதுதான் தீர்வு என்று அறைகூவுவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. அழகியபெரியவனின் உள்ளத்தில் இருப்பது கட்சியரசியலின் துண்டுப்பிரசுரத்தை கதையாக மாற்றும் ஒர் அணுகுமுறை. நூறுநாற்காலிகள் போன்ற பலமுகம் கொண்ட , ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் கதையை அவரால் வாசித்தறியக்கக்கூட முடியவில்லை. .

இந்த நிலையில் இருந்துதான் இப்பேட்டியின் மனநிலை உருவாகிறது.அழகியபெரியவன் தலித், ஆனால் அவரால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதமுடியவில்லை. ஆகவே நாங்கள்தான் எழுதுவோம், எங்களால்தான் எழுதமுடியும் என்ற கூச்சல் எழுகிறது. ஒருவகையான ஆதங்கம் மட்டும்தான் இது.

முன்பு இதைப்பற்றி ஓர் அறை உரையாடலில் அலெக்ஸ் சொன்னார். “தலித்துகள் மட்டும் அல்ல, மொத்த தமிழகமே தலித்துக்களின் மீதான ஒடுக்குமுறை பற்றி தங்கள் நோக்கில் பேசவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன். இந்தச் சாதியச் சூழலில் இருந்து எழுந்து வரும் எந்தக்குரலும் எங்களுக்கு ஏற்புடையதே. நாங்கள்தான் எழுதுவோம், மற்றவர்கள் எழுதினால் அது இரட்டைவேடம் என்றெல்லாம் பேசுபவர்கள் தலித் இயக்கம் மீதோ தலித்துக்கள் மீதோ கரிசனை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி கோரிப்பெற முயலும் எளிய எழுத்தாளர்கள் மட்டும்தான்” இதுதான் உண்மையான தலித் களப்பணியாளனின் குரல்.

வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு குரல்களாகவே இலக்கியம் செயல்படும். இலக்கியம் என்பதே அதன்பொருட்டுத்தான். தான் கொண்டுள்ள ஒற்றைநோக்கு தவிர அனைத்துமே தவறு, சூழ்ச்சி என்றெல்லாம் பேசுவது களப்பணியாளனின் குரல் அல்ல, மேடைவீராப்பு காட்டும் அரசியல்வாதியின் குரல்

*

நான் எழுதியது தலித் இலக்கியம் அல்ல. நான் எழுதியது என்னைத்தான். காப்பனாக மாறி நான் தேடிச்செல்லும் ஓர் அறக்கேள்வி. நான்தான் ஏசுவைத்தேடி சமேரியாவுக்குச் சென்றவன்[வெறும்முள்] மகாபாரதச் சூழலில் அறத்தடுமாற்றத்துடன் சார்வாகனைச் சந்தித்தவன் [திசைகளின் நடுவே] இதை உணர இலக்கியவாதியின் உள்ளம் தேவை

நூறுநாற்காலிகளை வாசிக்கும் அத்தனைபேரும், அந்தணர் முதல் அயல்நாட்டவர் வரை அவ்வாறு காப்பனாக மாறி அதை வாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு காப்பனின் பிரச்சினை அல்ல, அவர்களின் பிரச்சினை, மானுடப்பிரச்சினை.எல்லா நல்லஎழுத்தும் அப்படித்தான். அழகியபெரியவனால் அதைப்புரிந்துகொள்ள இன்றைய உளநிலையில் இயலாது. எழுத்தாளனின் வீழ்ச்சி என்பது இதுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் கவனமாக இருக்கவேண்டியது தன்னையறியாமலேயே இவ்வீழ்ச்சி, இந்த உருமாற்றம் நிகழும் தருணத்தைத்தான்.

ஜெ

சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி முழுமையாக
நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1
நூறுநாற்காலிகள் [சிறுகதை] -2
நூறுநாற்காலிகள் [சிறுகதை] 3
நூறுநாற்காலிகள் [சிறுகதை] 4
முந்தைய கட்டுரைஉணர்ச்சியும் அறிவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18