இன்று இரண்டு அருவிகள். முதலில் ஜோக் அருவி. அதைப்பற்றி நான் அறிந்தது ஒரு நகைச்சுவைத்துணுக்கு வழியாக. நான் என் பள்ளிநாளில் வாசித்த நூல் காகா காலேல்கரின் ஜீவன்லீலா. காகா காலேல்கர் பிறப்பால் மராட்டியர். காந்தியால் ஊக்கம் பெற்று காந்தியளவுக்கே மாறிய மாமனிதர்களில் ஒருவர். காந்தி அவரிடம் குஜராத்தி கற்று அந்த மொழியில் இலக்கியம் படைக்கும்படி ஆயிட்டார். காகா காலேல்கர் குஜராத்தி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார். காந்தியப்பணிகள் பலவற்றில் முன்னோடி முயற்சிகள் செய்தவர்.
அவருடைய பித்து தண்ணீரில். ஆறுகள், அருவிகளாகத் தேடித்தேடிச் சென்று பார்ப்பதும் நீராடுவதும் வாழ்நாள் முழுக்க அவருடைய தவமாக இருந்தது. ஜீவன் லீலா [உயிரின் ஆடல்] அவருடைய நீர்த்தரிசனங்களின் கதை. நான் தொடர்ந்து அந்நூல் பற்றி எழுதிவந்திருக்கிறேன். இப்போது மறுபதிப்பாகக் கிடைக்கிறது காகா காலேல்கர் – தமிழ் விக்கிப்பீடியா
காகா காலேல்கர் ஷிமோகாவுக்கு வந்த காந்தியிடம் “இதுவரை வந்துவிட்டீர்கள், அப்படியே ஜோக் அருவி வரை சென்றுவரலாமே” என்கிறார். ”அங்கே என்ன விசேஷம்?” என்கிறார் காந்தி. மிக உயரமான இடத்தில் இருந்து நீர் விழுகிறது . ஏறத்தாழ தொள்ளாயிரம் அடி உயரமான மலையில் இருந்து “”என்கிறார் காகா. “நான் அதைவிட உயரமான வானிலிருந்து நீர் விழுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று காந்தி சிரித்தார்
ஜோக் அருவி காவிரியின் துணையாறான ஷாராவதி ஆற்றின் செங்குத்துவடிவம். ஷிமோகா மாவட்டத்தில் சாகர் வட்டத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த அருவிக்கு கெர்ஸோப்பா என்று பெயர். ஜோகடா குண்டி என்றும் அழைப்பதுண்டு. மருவி ஜோக் நீர்வீழ்ச்சி என்றானது. ஜோக் என்றால் நீர் என்றும் வீழ்ச்சி என்றும் பொருள். இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான அருவி இது. மேகலாயாவிலுள்ள நோஹாலிகாய் அருவியே முதன்மையானது. சென்ற ஜூலையில்தான் மேகாலயா சென்று நீர்பெருகும் நோஹாலிகாய் அருவித்தொகையைப் பார்த்துவந்தேன்.
இப்பகுதியிலுள்ள அருவிகள் நேரடியாக மலையுச்சியில் இருந்து மலைநடுப்பள்ளத்தாக்கு நோக்கி செங்குத்தாக விழுகின்றன. இது தக்காணப்பீடபூமியின் தென்விளிம்பு. அருவிகள் பாறைகள் வழியாக வழிவதில்லை. நீராலான தூண் போல, வெள்ளிவிழுதுகள்போல காற்றிலாடியபடி தொங்கிக்கிடக்கின்றன.
ஜோக் அருவிக்குச் செல்லும் வழியில் கொஞ்சம் வழிசுற்றிவிட்டோம். அருகிருக்கும் அணை ஒன்றுக்குச் சென்று அதன் கரைவழியாகச் சுற்றித்தான் ஜோக் அருவிக்கே வந்தோம். வழிதவறினாலும் அப்பயணம் சுவாரசியமாக இருந்தது. இந்நிலப்பகுதியின் பசுமை திகைப்படையச் செய்வது. பெரும்பாலான நிலங்களில் கமுகுகள் செறிந்திருந்தன. கமுகுமரங்களை மிக நெருக்கமாக நடமுடியும். ஆகவே அவை தூண் தூணாகச் செறிந்து விந்தையான ஒரு காட்சியனுபவத்தை அளிப்பவை.
வாழை, தென்னை, ரப்பர் போன்றவை நீர் நிறைந்த நிலங்களில் வளர்பவை. கமுகுக்கு மேலும் நீர் தேவை. ஆகவே இந்தியாவில் அரிதாகச் சில இடங்களிலேயே கமுகு வளரும். குமரிமாவட்டத்தில் வளரும், இப்போது பயிரிடுவதில்லை. இன்று இந்தியாவே பாக்கை மென்று துப்புவதனால் கமுகுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதிலுள்ள கடுஞ்சுவை காரணமாக பூச்சித்தொல்லை இல்லை. ஆகவே நல்ல லாபம் வருகிறது
கால்கிலோமீட்டர் அகலமுள்ள மாபெரும் பாறைவெளியினூடாக சிதறிப்பரந்து ஓசையிட்டு வரும் ஜோக் அருவி இங்கே தொள்ளாயிரம் அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுகிறது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 960 அடி. 290 மீட்டர். கால்கிலோமீட்டருக்கும் மேல் ஆழம். இவற்றில் ராஜா என அழைக்கப்படும் மைய அருவி எங்கும் தொடாமல் நேராக எண்ணூறு அடி ஆழத்துக்கு விழுகிறது. மொத்தம் நான்கு அருவிகளாகக் கொட்டுகிறது ஜோக். அதில் ஒன்று ராணி என அழைக்கப்படுகிறது.
மலைப்பள்ளத்துக்கு இப்பால் உள்ள உச்சியில் காட்சிமாடங்கள் உள்ளன. அங்கிருந்து அருவிகளை பலகோணங்களில் பார்க்கலாம். 1400 படிகள் வழியாக இறங்கிச்சென்று அடியிலிருந்தும் பார்க்காமுடியும். அருகே சென்று குளிக்க முடியாது. நீர் விழும் கயத்தில் நீராடுவதுண்டு. நான் 1985ல் இங்கே வந்திருக்கிறேன். மீண்டும் இப்போதுதான் வருகிறேன். இடமே அடையாளம் தெரியவில்லை. நீண்ட இடைவேளைக்குப்பின்னர்தான் அருவியை பழைய முகத்துடன் நினைவிலிருந்து மீட்டு எடுத்தேன்
மீண்டும் மீண்டும் நீரின் லீலை. அனைத்து வன்மைகளையும் நெகிழ்ந்து தழுவும் குழைவு. அனைத்து இடைவெளிகளையும் நிறைக்கும் பெருக்கு. பெருக்கென்றிருக்கையிலும் துளியென்றும் காட்டும் அழகு. இருண்டபாறைகள் நடுவே வெண்மையின் ஒளிர்வு. நீரை நோக்கி நோக்கிச் சலிப்பதே இல்லை
அருவிப்பெருக்கு ஓர் வடிவின்மை. அதில் வடிவம்தேடி துழாவுகிறது மானுட உள்ளம். அதற்கு நாம் இடும் அனைத்துப்பெயர்களும் அவ்வாறே. எங்களூரின் உலக்கையருவி, காவேரியின் புகையும் கல்லை நினைத்துக்கொண்டேன். அமைதியான கொலைகாரியாகிய கொல்லியையும். ஆனால் வடிவின்மையே நீர் எனப்புரிகையில் உள்ளம் சொல்லடங்கி அமைதிகொள்கிறது. அருவியை நோக்கி அமர்ந்திருப்பது ஒரு பெரிய தியானம்.ய
ஜோக் அருவியை கீழே சென்று பார்க்கவேண்டும் என்று வினோத் ஆசைப்பட்டார். ஆனால் எங்கள் குழுவில் சிலர் பலமுறை வந்து பார்த்தவர்கள். திட்டத்தில் வேறு அருவிகள் இருந்தன. ஆகவே ஒருமணிநேரம் அங்கே நின்று பார்த்துவிட்டு கிளம்பிவிட்டோம். வினோத் புலம்பிக்கொண்டே வந்தார்
2013ல் ஜோதி ராஜ் என்னும் கர்நாடகத்து மலையேற்ற நிபுணர் ஜோக் அருவியின் பாறைகளில் தொற்றி மெலேறியிருக்கிறார். ஏற்கனவே சித்ரதுர்க்கா கோட்டை மேலும் எந்தப்பற்றுகோடும் இல்லாமல் ஏறியிருக்கிறார். முன்னரே இவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். கற்பனைசெய்யவே நெஞ்சு சுளுக்கும் சாதனை. ஜோக் அருவியில் ஏறுகையில் அவர் காணாமலானார். பின்னர் 14 மணிநெர முயற்சிக்குப்பின் ஏறி மேலே சென்றடைந்தார். அது ஒரு பெரிய பரபரப்பாக பேசப்பட்டது
பன்னிரண்டு மணிக்கு ஜோக் அருவியிலிருந்து கிளம்பி ஐந்தரை மணிக்கு மகோட் அருவியைச் சென்றடைந்தோம். கர்நாடகத்தின் பேரருவிகளில் ஒன்று இது. யெல்லாபூர் அருகே உள்ள இந்த அருவி 200 அடி உயரமானது. இரு தட்டுகளாக கீழே பொழிகிறது. மலைக்குமேலே நின்று நோக்குமாடங்கள் வழியாக பார்க்கமுடியும். கீழே செல்ல பாதைகளேதுமில்லை. நீர் பெருகிக்கொட்டும் ஓசை மேலே வந்துகொண்டே இருக்கும். மேற்கு கனரா பகுதியின் நீர் நிறைந்த ஆறுகளில் ஒன்றான கங்கவள்ளி ஆற்றின் பெருக்கு இது
https://youtu.be/YEGmFtx0S7Q
செல்லும்வழி அடர்ந்த காட்டினூடாக அமைந்திருந்தது. இருபக்கமும் பசுமரச்செறிவு. ஆனால் சாலை பரவாயில்லை என்று தோன்றியது. பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்கள். ஆனால் குடிசைகள் அனேகமாக இல்லை. பேருந்து ஒன்றிலிருந்து கல்லூரி மாணவிகள் இறங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
மகோட் அருவி மிகக்கீழே வேறொரு உலகில் என நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த மாபெரும் மலைப்பள்ளம் நூறடி அருகே நெருங்கும்வரைக்கும்கூடக் கண்ணுக்குப் படாததே என் மனத்தை ஆச்சரியத்திலாழ்த்திக்கொண்டிருந்தது. அப்பகுதி முழுக்க மலைச்சிகரங்கள். அனைத்து மலைமுடிகளும் உச்சிப்புள்ளி வரை பசுங்காடுகள் செறிந்தவை. வெயில் அவற்றின்மேல் பரவியிருக்கையில் கண்களை நிறைக்கும் பச்சைநிற ஒளி. மரகதம் என காட்டைச் சொல்வது ஒரு தொல் உவமை. ஆனால் அதைவிட மிகச்சிறந்த சொல்லாட்சி கிடையாது. மரகதம் பசுங்கருமை. ஒளிபடப்பட வெளிர்பசுமையாகும். நீலமோ என விழிமயக்கும் அளிக்கும்.
சாகர் மாவட்டம் அருவிகளின் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. ஒருமாதம் தங்கி நாள்தோறும் சென்று பார்க்கத்தக்க அளவுக்கு இங்கே அருவிகள் உள்ளன. நாங்கள் அரசர்களையும் அரசியரையும் மட்டும் சந்தித்து மீளமுடியும், அவ்வளவுதான் நாள்.