கர்நாடக மாநிலத்திலுள்ள சாம்ராஜ்நகர், மைசூர் மாண்டியா பகுதிகளை அருவிப்பிரதேசம் என சுற்றுலாத்துறை வகுத்துள்ளது. இங்குள்ள அருவிகளைப் பார்ப்பதற்காக மட்டுமே ஒரு பயணம் வகுத்தால் என்ன என்று கிருஷ்ணன் சொன்னார். ஒரு பேச்சுக்கு சிலரிடம் சொன்னபோது வருகிறேன் என அடம்பிடித்தவர்களின் எண்ணிக்கை கண்டபடி பெருகி பதினைந்துபேராக மாறியது. மொத்தம் மூன்றுகார்கள்.
18 ஆம் தேதி கிளம்பி நான் சென்னையிலிருந்து நேராக ஈரோடு வந்தேன்.சென்னையிலிருந்து என்னுடன் சென்னை செந்தில் [வழக்கறிஞர்] வந்திருந்தார். ரயில் நிலையத்துக்கு அந்தியூர் மணியும் சிவகுருநாதனும் வந்திருந்தனர். விடுதியில் சற்று ஓய்வெடுத்துவிட்டு கைநெசவு செய்யும் காந்தியவாதியான இளைஞர் சிவகுருநாதனின் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவருடைய நண்பரும் புகைப்பட நிபுணருமான வெற்றி வந்திருந்தார். சிவகுருநாதனின் தம்பிதான் துகள் என்னும் கைநெசவு அமைப்பை நடத்துகிறார்
அவருடைய சூழலும் அவர் செய்யும் பணிகளும் நிறைவை ஊட்டின. கைநெசவு என்பது மோட்டாவான ஒன்றாக ஒருகாலத்தில் கருதப்பட்டது. ஆனால் இயந்திரத்தின் துல்லியம் பெரும்போக்காகி, விழிக்குப் பழகியபோது மோட்டாவாக இருப்பதன் அழகியல் உலகமெங்கும் முதன்மை பெற்றது. அதை உருவாக்கியவர்கள் நவீன ஓவியர்கள். சொல்லப்போனால் நவீன ஓவியத்தின் அழகியலே கைநெசவுத்துணிகளை ரசிப்பதற்கான விழிகளை இன்று அளிக்கிறது
மண்நிறம், மங்கலான வெண்மை, சாம்பல் நிறம் என இத்துணிகளின் வண்ணங்களே ஒருவகையான கம்பீரத்தை உணர்த்துகின்றன. கையால் உருவாக்கப்பட்ட அச்சு சித்திரங்கள். இயற்கை வண்ணங்கள். இவை ஒருவரை மையத்திலிருந்து விலகியவராக, தனித்த ஆளுமை கொண்டவராகக் காட்டுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நடுவே ஒரு நவீனக் கலைப்பொருள் தனித்துத் தெரிவதைப்போல.
அருமையான கைத்தறிச் சுடிதார் துணிகளைப்பார்த்தேன். அருண்மொழிக்கு வாங்கிக்கொண்டு சென்றிருக்கலாம், அவளுக்கு ஓர் அறிவுஜீவிக்களை வந்திருக்கும். ஆனால் பெட்டியில் இடமில்லை. நான் 14 ஆம் தேதியே ஊரிலிருந்து கிளம்பிவிட்டிருந்தேன். சென்ற ஐரோப்பியப்பயணத்தின்போது அருண்மொழி கே..பி.வினோத் வீட்டில் விட்டுச்சென்ற துணிகளை அவர் தந்திருந்தார்.
ஈரோடு டாக்டர் ஜீவா அவர்களை அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். டாக்டரைச் சந்தித்து நெடுநாட்களாகின்றன. உற்சாகமாக இருக்கிறார். தமிழகச் சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடி – இன்று அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக சூழியலைக் கையிலெடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் கேளாச்செவிகொண்ட தமிழ்ச்சமூகத்திடம் இருபத்தைந்தாண்டுகள் போராடியவர். நான் என் இன்றைய காந்தி நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்
மாலையில் கிளம்பி இரவு ஈரட்டியில் எங்கள் தங்கும்விடுதிக்கு வந்தோம். நான் உட்பட சில நண்பர்களின் பொதுமுதலீட்டில் உருவான விடுதி. ஈரட்டிமலையுச்சியில் இருக்கிறது. அங்கே நண்பர்கள் வந்துசேர்ந்தனர். கோவையிலிருந்து நரேனும், தாமரைக்கண்ணனும் வந்திருந்தனர். ஈரோட்டிலிருந்து அந்தியூர் மணியும் [மணிபாரதி] ஈஸ்வர மூர்த்தியும் வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் திரும்பிச்செல்வதாகத் திட்டம். பயணத்தில் நான், கிருஷ்ணன், செந்தில்[வழக்கறிஞர்,] சக்தி கிருஷ்ணன் [வழக்கறிஞர்] ,ஈரோடு சிவா, கே.பி.வினோத், அனந்தமுருகன், ஜானகிராமன், பாரி, மணவாளன், ராஜமாணிக்கம், திருப்பூர் அழகுவேல்,பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், விஷால்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்
இரவு சிரிப்பும் கொண்டாட்டமும் கொஞ்சம் இலக்கியமுமாகச் சென்றது. காலை ஆறுமணிக்கு எழுந்து அந்தியூர் வழியாக சாம்ராஜ்நகர் வந்து சிவசமுத்திரம் அருவியைப்பார்த்தோம். இது வரைப் பார்த்த அருவிகளிலேயே விந்தையானது இது. காவேரி வரும் வழியில் மிகப்பெரிய மலைப்பாறை ஒன்றால் இரண்டாகப் பகுக்கப்படுகிறது. பாராசுக்கி , கங்கனசுக்கி என. கங்கன சுக்கி அருவி மேலும் இரு பிரிவுகளாக ஒரு பாறையால் பிரிக்கப்பட்டு இரு திசைகளிலாகக் கொட்டுகிறது. இந்த இரு பிரிவுகளிலும் பல அருவிகள் உள்ளன. பாராசுக்கி கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் அப்பால் மூன்று பெரிய பிரிவுகளாக விழுகிறது.
கங்கனசுக்கி அருவியை சிவனசமுத்ரா காட்டில் அமைக்கப்பட்டுள்ள பார்வைமேடையிலிருந்து பார்க்கலாம். அருகே ஹஸ்ரத் மர்தான் கைப் என்னும் சூபியின் தர்கா உள்ளது. அங்கிருந்தும் பார்க்கலாம். ஆனால் கம்பிகட்டி பார்ப்பதற்கான இடத்தை வேலியிட்டிருக்கிறார்கள். இப்பால் நின்று எட்டிப்பார்க்கவேண்டும். புகழ்மிகக் தர்கா என்று தோன்றியது. நாங்கள் செல்லும்போதும் சிலர் பிரியாணிநேர்ச்சைக்காக மாமிசம் கழுவிக்கொண்டிருந்தார்கள். காரில் சென்றிறங்கி தொலைவில் தொங்கி ஆடிக்கொண்டிருந்த பாராசுக்கி அருவியைப்பார்த்தோம். அங்கே செல்ல பன்னிரண்டு கிலோமீட்டர் சுற்றிச்செல்லவேண்டும்
கங்கனசுக்கி வலப்பக்கம் பாறைகள் பெருகிச்சரிந்திறங்கிய நிலப்பரப்பில் இருபதுக்கும் மேற்பட்ட அருவிகளாகப் பரந்து இறங்குகிறது. மறுபக்கம் செங்குத்தான பாறைவிளிம்பிலிருந்து மூன்று அருவிகளாக விழுங்கிறது. நடுவே மலையிறக்கத்தில் வெண்ணுரை பெருக கொப்பளிக்கிறது. அருவிகளாலான வெண்காடு.
ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் அகலத்துக்கு அருவிகள் விழுகின்றன.சராசரியாக 320 அடி உயரமானது இவ்வருவித்தொகை. ஆனால் குற்றாலம் அருவி போல அருகே சென்று பார்க்க முடியாது. அருவி விழும் மலைப்பள்ளத்துக்கு மறுபக்கமிருக்கும் மலைமேல் நின்றுதான் அருவியை பார்க்கமுடியும். இரண்டு பக்க அருவிகளையும் இரு வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நின்று பார்க்கவேண்டும். அருகே செல்ல முயன்று மக்கள் இறப்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதனால் பெரும்பாலான வழிகளை வேலியிட்டும் முள்வெட்டியும் அடைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை வழிவும் பெருக்கும் பொழிவும் ஒழுக்கும் கொண்டது என்பதுதான் விந்தை. ஒன்று நூற்றுக்கணக்கான சிறு அருவிகள் இணைந்த பேரருவியாகத் தெரிந்தது. பல்லாயிரம் சிவலிங்கங்களை நீராட்டியது ஓர் அருவி. நாலைந்து அருவிகள் விழவே இல்லை. சரிந்து அமைந்த கற்பாறைகள் வழியாக சிதறி வெள்ளிப்பெருக்காக இறங்கி வந்தன. வெண்சடைகள் போல விழுந்து காற்றில் ஆடின சில அருவிகள். தரைப்பரப்பிலிருந்தே விசையுடன் குளிர்நுரை பெருக்கி கொந்தளித்துச் சென்றது ஒன்று. வெண்நாரைச் சிறகுகள் போல. முகில்சிதறல்கள் போல.
நோக்கநோக்க அருவிகள் பெருகுவது இன்னொரு விந்தை. கையளவு நீர் விழும் அருவிக்குஞ்சுகளைக்கூடப் பார்க்கமுடிந்தது. அவற்றையும் கருத்தில்கொண்டால் ஆயிரம் அருவிகளாவது அங்கிருக்கக்கூடும். வெயில் இருந்தது. அருவிகளை நோக்கிக்கொண்டு ஆங்காங்கே நின்றிருந்தோம். தொடமுடியாத அருவி, விழிகளால் நோக்கி எண்ணிக் கணக்கிட்டுவிடமுடியாத அருவி!
சிவசமுத்திரம் நீர் மின்சாரத் திட்டம் 1884ல் மைசூர் திவான் கே.சேஷாத்ரி அய்யரால் தொடங்கப்பட்டது. கோலாருக்கு மின்சாரம் இங்கிருந்து சென்றிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது நீர்மின்சாரத்திட்டம் இது
மாலைவரை கார்ப்பயணம். செல்லும் வழியில் மழைமூட்டமும் நடுவே கோடைமழைபோல பெரும்பொழிவும். அந்தியில் சிக்மகளூர் வந்தடைந்தோம். நான் கல்லூரியில் படிக்கையில் இவ்வூரின்பெயரை கேள்விப்பட்டேன். நெருக்கடிநிலை முடிந்ததும் நடந்த தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி 1978l ரேபரேலியை கைவிட்டு சிக்மகளூரில் போட்டியிட்டார். எதிர்த்து நின்ற வீரேந்திரப்பட்டேலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிக்மகளூர் [சின்னமகளூர்] கர்நாடகத்தின் உயரமான மலைமுடியான முல்லயனகிரியின் அடிவாரத்திலுள்ளது. இன்னும் நவீனமயமாகாத ஊர். இப்போதுதான் சற்று சுற்றுலா தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் காப்பி முதன்முதலாகப் பயிரிடப்பட்டது இங்குதான் என்று சொல்லப்படுகிறது. பச்சைப்பசிய மலைமுடிகள் சூழ்ந்த குளிர்ந்த ஊர். மலைகள் முழுக்க காப்பித்தோட்டங்கள்தான்.
சிக்மகளூரில் ஹிரகொலே [Hirekolale] ஏரியை அடைந்தோம். அப்பகுதியில் பலர் ஸ்வெட்டர் போட்டிருந்தார்கள். அது சற்றுநேரத்திலேயே தெரியவந்தது. நல்ல குளிர். இருண்டு கொண்டிருந்த ஏரியை நோக்கியபடி நின்றோம். இருண்டு விழி அணைந்தபின் திரும்பினோம். அருகிலேயே ஒரு சுற்றுலாவிடுதியில் தங்கினோம்