ஈர்ப்பு- விவாதம்

sures

ஈர்ப்பு

ஈர்ப்பு இரு எதிர்வினைகள்

ஈர்ப்பு- கடிதங்கள்

ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்

அன்புள்ள ஆசிரியருக்கு –

 

உங்கள் தளம் மூலம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் ஈர்ப்பு சிறுகதையை வாசித்தேன்.

 

மாறிவரும் சமூக மதிப்பீடுகளின் காரணமாக, சமூகத்தில் ஆண், பெண் இருவரின் மரபார்ந்த வரையறுக்கப்பட்ட நிலைகளும் உறவுகள் சார்ந்த ஒழுக்கங்களும் மாறிவரும்போது இவ்வகை கேள்விகள் எழுவது இயல்பானது. படைப்பின்பால் இவற்றை எதிர்கொள்ளத்தான் செய்யும் எந்த ஒரு சமூகமும். இந்தக் கதையின் உள்ளடக்கமும் சரி, மேலும் அதில் கதைசொல்லியின் வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் சரி, இந்த சமூகத்தில் யாரோ எங்கேயோ நினைத்து வாழ்வது தான். இல்லையேல் படைப்பாளி பிரக்ஞைக்குள் அது வந்திருக்காது. அந்த வகையில் இந்த கதை எழுப்பும் கேள்வி, இதன் மூலம் அளிக்கும் அவதானிப்புகள் முக்கியமானது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் இந்தக்கதை, இந்த வடிவில், என்னை கவரவில்லை.

 

முதலில் இதன் சொல்முறையை சிலாகிப்பவர்களுக்கு. இதன் சொல்முறை புதிய ஒன்று என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. நபகாவ் உள்ளிட்ட படைப்பாளிகள் இம்மாதிரி ‘நேர்மையில்லாத கதைசொல்லி’யின் அகப்பதிவுகளை சொல்லிக்கொண்டே போகும் கதைகளை நாவல்களை முன்பே எழுதியிருக்கிறார்கள். இதே போன்ற பாலியல், ஒழுக்க மதிப்பீடுகள் சார்ந்த கதைகளை. இதை விடக் கூர்மையாக. ஆகவே இதை ஒரு நவீன கூறுமுறை என்றால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இந்தக்கதையின் பலவீனம் இதன் சொல்முறை தான். கதையாக சொல்லும் போது அது மனதில் நிற்கிறது. இந்த கதையின் கருத்துக்களை ‘யார்’ சொல்கிறார் என்ற திட்டவட்டமான உருவகம் இல்லாததால் அந்தரத்தில் தொங்குகின்றன. மனதில் ஒட்டவில்லை. அப்புறம் இவன் நேர்மையற்ற கதைசொல்லி என்பதற்கு பிரதிக்குள் ஆதாரம் இருக்கவேண்டும். பொதுவாக கதைப்போக்கில் அவன் சொல்வதற்கும் நிகழ்வதற்குமான முரண்பாடுகள் வழியாக அது நிறுவப்படும். அது நிகழாமலே போகிறது.

 

அடுத்து இதன் கலை ஒருமை பற்றி. நவீன உலகத்தின் மதிப்பீடுகள் சரிந்து விழுவதைக் காணும் போது வெறுமை நிறைந்த சுய-அந்நியமாக்கல் (self-alienation) உருவாவதை கதைசொல்லியின் அகநகர்வுகளில் காண்கிறேன், அது அந்த கதாபாத்திரத்தில் எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த ‘எதிர்மறை’ எப்படி உருவாகிறது என்ற சமூகக்கேள்வியை கேட்கும், அதற்கு பதிலை சொல்லும் படைப்பு முதன்மையான கலைப்படைப்பாக எனக்குத் தோன்றவில்லை. மனித அகத்தில் மாறும் மதிப்பீடுகள் உண்டாக்கும் வெறுமையையும் பாழையும் வாசகருக்கு உணர்த்தவே படைப்பாளி தேவையாகிறான். உதாரணத்துக்கு எலியட்டின் பாழ்நிலம் கவிதையில் நவீன உலகின் பிரதினிதிகளான ஒரு தட்டச்சுக்காரியும் எழுத்தரும் உணர்ச்சியற்ற உறவில் ஈடுபடும் சித்திரம் வரும். இது வெறும் நிகழ்வாக வராமல், ஆணுமாகவும் பெண்ணுமாகவும் மாறி மாறி வாழ விதிக்கப்பட்ட டிசேரியஸ் என்ற குறிசொல்லி இதை ஊமையாக பார்க்கும் வடிவில் இந்த இடம் அமைந்திருக்கும். கிரேக்க தொன்மத்தில் டிஸேரியஸ் பார்வையிழந்தவன்; குறிசொல்லும் ஆற்றலை வரமாக பெற்றிருப்பான், ஆனால் எந்த எதிர்கால நிகழ்வையுமே வகுத்துரைத்து முழுமையாகக் கூற முடியாமல் திணறுபவன். “கேடு வருகிறது, கேடு வருகிறது” என்ற ரீதியில் மட்டுமே அவன் ஆற்றலற்றவனாக அலறி எச்சரிக்கக்கூடியவன். இப்படியொரு குறிசொல்லி நவீன வாழ்க்கையின் உறவுச்சரிவை ஊமையாக கண்டுசெல்லும் சித்திரம் நம்மில் உருவாகும் பேரச்சம் கலைரீதியான வெற்றி.  இப்படி ஒரு அதிர்ச்சியோ, ஒரு துணுக்குறலோ இந்தக்கதையில்  இல்லை. ஆக கதையின் கலைக்குறைப்பாட்டைப்பற்றியது தான் என் முதல் விமர்சனம்.

 

அடுத்து கதையின் தரிசனம். கிட்டத்தட்ட இருத்தலியல் வகையறா வெறுமைக்குள் செல்லத்தக்க வடிவம் கொண்ட கதை இது, ஆனால் அங்கு செல்லவில்லை. இருத்தலியலில் கைப்பிழியும் இயலாமை, பின்பு இதுதான், இப்படித்தான், வாழ்வு இந்த அடியற்ற ஆழ்கிணறுதான் என்கின்ற ஏற்பு இருக்கும். அந்த பாழை ஏற்றுக்கொள்வதில் கூட ஒரு வித வீரம் உண்டு. நவீனத்துவ நாவல்களின் கதாபாத்திரங்களை, நாயகர்களை எண்ணிக்கோள்கிறேன். பெரும்பாழான இருத்தலுக்கு முன்னால் சிறிய மனிதர்கள். ஈசல்கள். அந்தப்பாழைக்கண்டு அவர்கள் ஒன்று சரி, ஒப்பிக்கொள்கிறேன், ஆனால் என் வாழ்வின் இறுதி வரை நான் சிறகுகள் கொண்ட உயிர் என்று சொல்லி ஒரே அர்த்தமற்ற சுற்று தான் என்றாலும் பறக்கத்தொடங்குவார்கள். அல்லது வாழ்க்கைக்கு பொருள் இல்லை, இங்கு   படுகுழியும் பாழும் தான் என்று ஒப்புக்கொண்டு சிறகுகளை வெட்டிக்கொண்டு பாழிலே விழுந்து தற்கொலை செய்துகொள்வார்கள். அதுவும் ஒரு வகையான வீரம் என்று அவர்கள் கொள்வார்கள். “எனக்கு இது ஒரு பொருட்டல்ல” என்று சொல்வது போல. இது நவீந்த்துவத்தின் வழி. மாறாக இன்று இளைஞர்கள் இன்றய நிகர்வாழ்வின் வெறுமையை எழுதும் போது அதில் எந்த விதமான அறைகூவலுமே இல்லை. சமூகத்தை, இயற்கையை, ஆதிக்கங்களை, எதையுமே நேர்நிலையுடன் எதிர்த்து நின்று சொல்வதற்கு இவர்களுக்கு எதுவுமே இல்லை. இவர்களின் வெறுமை காழ்ப்பும் சீழும் சுயஇறக்கமுமாகவே வெளிப்படுகிறது.

 

நீங்கள் குறிப்பிட்டிருந்த அக்கினிப்பிரவேசம், சாபவிமோசனம் கதைகள் போன்றதொரு கதை அல்ல இது. அந்தக்கதைகள் பெயர்சொல்லிநிற்பதற்கு காரணம் அவை பாலியல் நடைமுறைகளை கேள்விகேட்டன அல்லது சமூக ஒழுங்குகளை சீண்டிப்பார்த்தன என்பதனால் அல்ல. அந்தக் கதைகளில் இருக்கும் அறச்சீற்றம். இந்த கதையில் அந்த அம்சம் சுத்தமாக இல்லை.

 

இந்தக்கதையை எடுத்துக்கொண்டால், மாறிவரும் உலகில் ஆண்பெண் உறவுச்சிக்கல் முடிவற்ற ஒரு ஆட்டமாக, ஒருவர் இன்னொருவருக்கு விரித்து விரித்துக்கட்டும் வலைகளின் பின்னல்களாக சித்தரிக்கப்படுகிறது. இந்த உலகத்தில் ஒரு அன்னியனைப்போல சமூகத்தில் ஊடுறுவும் கதைசொல்லிப்பொன்ற ஒருவனுக்கு (கிராமத்தான், நண்பர்களற்றவன், நாற்பது வயது வரை மணமாகாதவன், பெண்களுக்குப் பிடிக்காத ‘பொசுங்கை’, ‘வெளியேயிருப்பவன’ என்பதினாலேயே ஆண்பெண்வலைபின்னல்களை கண்டுகொண்டவன்) இரண்டே முடிவுகள் சாத்தியம் என்று கதை சொல்கிறது. அவன் யாரையாவது வன்புணருவான் அல்லது கொல்வான். அல்லது யாரையாவது வன்புணர்ந்ததாக பொய் புகாரின் பெயரில் சிறையில் உழலுவான், சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுவான்.

 

ஒருவேளை இந்த நம்பிக்கை இன்றைய தமிழ்ச்சமூகத்தின் மைய உணர்ச்சிப்போக்காக இருக்கலாம். கற்றது தமிழ் முதலிய திறைப்படங்களின் மைய உணர்ச்சியும் இந்த அவநம்பிக்கை தான். ராம்குமார்-சுவாதி வழக்கு முதலிய அவல நிகழ்வுகளை காணும் போதும் இந்த நிராசை நிலை உள்ளத்தை நிறைக்காமல் இல்லை.

 

ஆனால் அடிப்படையில் தனிப்பட்டமுறையில் என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நம் தலைமுறை பஞ்சமும் பசியும் பிணியும் போரும் அற்ற வாழ்வை வாழ்கிறோம். முன்பெப்போதையும் விட கல்வி நம் கைக்கருகிலேயே இருக்கிறது. பொங்க பொங்க நுகர்ந்து வாழ்கிறோம். ஆனால் தனிமனிதர்களாக மிகவும் பாதுகாப்பின்மையுடன் இருக்கிறோம்.

 

எனக்கெப்படியோ வேதாளம் நம் கழுத்தில் தான் தொங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இன்று சமூகத்தில் எனக்குத்தெரிவது தரநிலைகள், மதிப்பீடுகள் சார்ந்த வறுமை. தன்னைத்தானே கண்ணாடியில் தெளிவாக பார்த்துக்கொள்ள பயப்படும் ஒரு அப்பாவி நிலை. பெண்ணியவாதிகளின் பேச்சுக்களின் தென்படும் வெறுப்பும் இந்த பாதுகாப்பற்ற உணர்வைத்தான் குறிக்கிறது. வெறுமையும் வெறுப்பையும் பாதுகாப்பு கவசங்களாக வெகுநாட்கள் போர்த்திக்கொண்டு வாழமுடியாது. இன்றைய இளைஞனைப்பார்க்கும் போது, ஏன் இந்த க்ளைப்யம் அர்ஜுனா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

 

அன்புடன்,

பாலகுமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13
அடுத்த கட்டுரைபுராணமயமாதல்