தல்ஸ்தோய், அறம், கலை

tolstoy1

தல்ஸ்தோய் உரை

அறம் விக்கி

அன்புள்ள ஜெ,

நலமா? தல்ஸ்தாய் பற்றிய தங்கள் உரையை கேட்டேன். புனைவெழுத்தாளர்/அறச்சிந்தனையாளர் என்று தல்ஸ்தாயின் இரு அம்சங்களையும் தெளிவாக வகுத்துக் கூறியிருந்தீர்கள். புனைவெழுத்தாளராக தன்முனைப்பு கொண்ட நவீன எழுத்தாளரைப்போலவும் அறச்சிந்தனையாளராக புனித அகஸ்தின் காலகட்டத்தவரைப்போலவும் தால்ஸ்தாய் இருந்தார் என்ற கருத்து மேலும் சிந்திக்க வைத்தது. ஆம், தால்ஸ்தாயின் பெருந்தந்தைத்தனம் என்று நமக்கு வந்ததெல்லாம் ஒரு புனிதரின் மரபை அவர் அகம் தாங்கி வந்தமைந்ததால் தானோ என்று தோன்ற வைத்தது. இந்த இரு கூறுகளையும் ஒட்டி சில எண்ணங்களும் கேள்விகளும் எழுதியிருக்கிறேன்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு தால்ஸ்தாய் அறிமுகம் ஆகியது அவர் பின்வாழ்க்கையில் எழுதிய எளிய கதைகள் மூலம் தான். மொழியா அதன் பின்னால் இருந்த புனைவெழுத்தாளரின் நம்பிக்கையா என்று தெரியவில்லை, ஆனால் சிறுவயதில் வாசித்தபோது அந்தக்கதைகளில் கண்ட அன்பின் வடிவமான கடவுள் என்ற உருவகம் என்னில் பெரிய பாதிப்பை செலுத்தியதாக உணர்ந்தேன். கடவுள் என ஒன்று இருக்கவே முடியாது, அடியாழமற்ற பாழ்கிணறு தான் வாழ்வு என்று தீவிரமாக நிலைப்பாட்டில் இருந்த நாட்களிலும் மறுமுனையில் சமனுக்கு இழுத்தது தால்ஸ்தாயின் மானுட அன்பின் ரூபம் கொண்ட இறைவடிவம். அதை ஒரு ‘பதிலாக’வே கண்டேன். ஒரு மெய்மையாக.

ஆனால் அவருடைய பெரிய நாவல்களை வாசிக்கும் போது மீண்டும் முதலிலிருந்து கேள்விகளின் திரிகளை பிடித்துக்கொண்டு, ஆசிரியரின் ஆய்வுகளை மறுபரிசோதனை செய்தபடி, எங்கே செல்கிறார் என்று நடந்து ‘கண்டடையும்’ பயணங்கள் சுத்தமான வேறொரு அறிதல்முறையாக இருந்தது. உதாரணம், அன்னா கரீனினாவில் லெனினுக்கு நாவலின் இறுதியில் புயல் முடிந்து ஒரு பேரனுபவம் ஏற்படும். எல்லாமே தெளிவடைந்துவிட்டதாக ஒரு மிதப்பில் இருப்பான். கிறிஸ்துவை, மதத்தை ஏற்றுக்கொள்வான். ஆனால் உடனே அவனுடைய இயல்பான சிடுசிடுப்பு, கோபம் என்று சிறுமைகள் தலைதூக்கும். அப்போது அவனுக்குத் தோன்றும், வாழ்க்கை என்பது இதுதான். இந்த தடுமாற்றங்கள் வழியாகவே அறத்தின் பாதையை பற்றிக்கொண்டு மனிதன் நடக்கவேண்டும் என்று. இங்கு தாத்தா போதனை செய்யவில்லை, சொல்லக்கூடவில்லை, காட்டிவிட்டுச் செல்கிறார். இது பதில் அல்ல. முடிவு அல்ல. ஒரு அனுபவம், ஒரு அவதானிப்பு. இதை ஆம், என்று நாம் உணரும் போது நீங்கள் சொன்னது போல இது நமக்காக நாம் வகுத்துக்கொள்ளும் இன்னொரு வகையான உண்மை.

ஆக இரண்டு வகையான உண்மைகள். ஒன்று புனைவெழுத்தாளனின் கவித்துவமான, உள்ளுணர்வு சார்ந்த உண்மை. புனைவெழுத்தாளன் (தால்ஸ்தாயைப்போன்றவர்) ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு பதிலை கண்டடையத்தான்  புனைவின் உடைகளுக்குள் சென்று நடித்துப்பார்க்கிறார். என்ன நிகழ்கிறதோ அதுவே உண்மை என்பது போல. அல்லது ஒரு கவித்துவமான தருணத்தில் வண்ணாத்தியென விரல் மேல் உண்மை வந்து அமர்ந்து சிறகு விரிப்பதைப்போல.

இன்னொன்று சமரசங்கள் இல்லாத, மாற்றுப்பார்வைகள் இல்லாத ஆன்மீக உண்மை. அனுபவம் மூலம் ‘இதுதான்’ என்று கொண்டு வந்து சேர்ந்த ஒன்று. அதற்கு மேல் உண்மையில் புனைவு தேவையில்லை. ஏனென்றால் கண்டடைய ஏதும் இல்லை. ஆன்மீகக்கண்டடைதலுக்கு உண்மை என்பது ஒரு தத்துவார்த்தமான ஆழம். கலை எல்லாமே அவரவர் ஆசைக்கேற்ப அதற்கு மேலே கட்டிக்கொள்வது தான். அந்த உண்மையை விளக்கவோ, அதில் திளைக்கவோ, அதை விரித்துரைக்கவோ, எளிமைப்படுத்தவோ, பிரச்சாரம் பண்ணவோ அதை ஒட்டி கலை உருவாக்கப்படுகிறது.

ஆக வாழ்வின் கேள்விகளிலிருந்து, அல்லது வாழ்வனுபவங்களிலிருந்து கேள்விகளுடன் எழும் கலை என்றும், முன்னரே உணரப்பெற்ற ஆழமான உண்மைகளை விரித்தெடுக்கும் கேள்விகளற்ற கலை என்றும் கலையை இரண்டாக பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. (இரண்டாவதை கலை என்று கூட சொல்லலாமா என்று தெரியவில்லை – அதன் கலம் முன்பே  நிறைந்திருக்கிறது என்பதால்கண்டடைய ஏதும் இல்லை, அப்படியென்றால் அது கலை ஆகுமா?) வாக்னரின் ஓபெராவோ அன்னா கரெனீனாவோ முதல் வகைக்கான உதாரணம் என்றால் சௌந்தர்யலகரியோ பெரியபுராணமோ இரண்டாம் விதக்கலைக்கான உதாரணம் என்று கொள்ளலாம். மதம் சார்ந்த கலைகள் எல்லாவற்றையும் இரண்டாம் வகையில் சேர்க்கவேண்டுமா என்று இயல்பாக அடுத்த கேள்வி வருகிறது. முதல் வகைக்கலை இரண்டாம் வகைக்கலையை விட மேலானதா என்ற கேள்வியும்.

காந்தி பெரும்பாலும் புனைவெழுத்து வாசித்தவர் அல்ல என்று முன்பு ஒருமுறை பேசும்போது சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் காந்திக்கு வாழ்வு சார்ந்த தேடல்கள், கேள்விகள், அலைக்கழிப்புகள் இல்லை என்று இல்லையே. பின் ஏன் அவர் புனைவு வாசிக்கவில்லை? அதே நேரத்தில் “அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்” போன்ற தால்ஸ்தாயின் கதைகளை – இரண்டாம்வகை கலையை – வாசிக்கையில் அவர் கண்ணீர் மல்கியிருப்பார் என்று தான் தோன்றுகிறது. தான் முன்பே உணர்ந்த, உள்ளுணர்வால் தொட்ட உண்மையை வாசிக்கும் போது மட்டுமே அந்த வாசிப்பு காந்தி போன்றவர்களின் உள்ளத்தை தொடுகிறது என்று நினைக்கிறேன். (அது கதை என்று இருக்கவேண்டியதில்லை, ஒருவருடைய நேர் அனுபவமாகக் கூட இருக்கலாம்). அப்படியென்றால் அவருக்கு தான் உணர்ந்த உண்மையை திரும்ப சொல்லும், வலியுறுத்திச் சொல்லும் படைப்புகளே போதும் என்று தோன்றியதா? எது உண்மை, ஒரு வேளை இது உண்மையாக இல்லாமலிருந்தால், வேறு உண்மைகள் உண்டா என்பது போன்ற புனைவு வாசிப்பாளரின் அலைக்கழிப்புகள் அவருக்கு இருந்திருக்காதா? தால்ஸ்தாயும் கடைசி காலத்தில் இந்த சர்வநிச்சயத்துக்கு வந்து சேர்ந்தாரா?
AVT_Sofia-Tolstoi_8381

ஐரோப்பா பயணம் முடிந்து வந்த சில நாட்களில் தால்ஸ்தாயை பற்றின ‘The Last Station’ என்ற திரைப்படம் காண வாய்த்தது. தால்ஸ்தாய் என்ற புனைவெழுத்தாளருக்கும் அறச்சிந்தனையாளருக்குமான தொடர்பை, ஆழ்ந்த வேறுபாடுகளை, இந்தத் திரைப்படத்தை கண்ட அனுபவத்தின் பின்னணியில் வைத்து சிந்தித்துப்பார்த்தேன்.

இந்தப்படம் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணம், பாவம் இவர் எவ்வளவு துன்பப்படுகிறார் என்று தான். வீடு, மனைவி, காமம், குழந்தைகள், மாணவர்கள், இலட்சியங்கள் என்று இவருக்கு எல்லாமே இறுதிக்கட்டத்தில் வலைகளாகத்தான் இருந்தது. கடைசி வரை ஒரு பிரபுவாக சொகுசுகளுடன் வீட்டுக்குள்ளையே வாழ்ந்ததாகத்தான் சித்திரம் வருகிறது. அவர் தன்னை உண்மையிலேயே விடுவித்துக்கொண்டது போல எனக்குத்தோன்றவில்லை. கடைசிவரை கட்டுண்டே இருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோதும் வெறுப்பில் மனைவியை விட்டு விலகிய கணவராகவே தெரிந்தாரொழிய வாழ்ந்து நிறைவடைந்து பற்றறுத்து வீட்டைத்துறந்த மனிதராக அல்ல.

அந்த படத்தில் ஒரு வசனம். தல்ஸதாயும் புதிதாக வந்திறங்கிய இளம் காரியதரிசி புல்ககோவும் காட்டுக்குள் நடை சென்றிருப்பார்கள். திரும்பும்போது அந்தி சாய்ந்திருக்கும். காட்டுக்குள் லைலக் பூ மணம் எழும். “அந்திவேளையில் தான் இந்த பூவின் வாசம் அதிகமும் கமழும்” என்று தால்ஸ்தாய் சொல்கிறார். கடைசிவரைக்கும் அந்த மணங்களின் புகைச்சுருள் கொடிகளாக அவர் கால்களில் படர்ந்து பற்றி இழுத்தது, அவரால் விலகமுடியவில்லை. அவர் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது இதையே நான் உணர்வது. அவரை ஒரு புனைவெழுத்தாளராக கலைஞராக மட்டும் பார்த்தால் இதை புரிந்துகொள்ளமுடிகிறது. இதை நேர்மையாக புனைவாக்கியிருந்தார் என்றால் வேறு திறப்புகள் வந்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. திட்டவட்டமான ஆன்மீகம் சார்ந்த தரிசனத்தை தன் பதிலாக முன்வைத்தார். அதன் படி வாழ முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. துன்பத்தில் தான் இறந்தார். அப்படியென்றால் அவர் அடைந்த தரிசனத்திற்கும், சொல்லிக்கொண்டிருந்த சித்தாந்தங்களுக்கும் என்னதான் பொருள்?

நமக்கு ஆழ்ந்த பொருள் தரக்கூடிய கலைகளை படைக்கும் படைப்பாளிகள் பலரும் தனிவாழ்வில் மிகமோசமான மனிதர்களாக வாழ்ந்திருப்பதை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். கலையில் எந்தளவுக்கு உன்னதம் உள்ளதோ நேர்வாழ்வில் அந்தளவுக்கு வீழ்ச்சியடைந்த கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பிக்காஸோ போல. கலையை உளவாங்குபவரோ வாசகரோ செய்வது சற்று குரூரமானது தான். சுயநலம் வாய்ந்தது தான். அவர்கள் கலைஞனின் தனிவாழ்வை, அந்த மனிதனின் வலிகளை, கீழ்மைகளை, சரிவுகளை உண்மையில் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு கலை தரும் உன்னதமும் அங்கிருந்து அவர்கள் சென்று சேரும் இலக்கும் தான் முக்கியம். கலைஞன் இழந்தவற்றை உண்மையில் எந்த ரசிகனும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அவனுடைய கீழ்மைகளுக்கு இவன் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அதில் விளைந்த கனியை மீள மீள சுவைத்தாலும். கனி மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்கிறான்.

தால்ஸ்தாயின் தனிவாழ்வின் கீழ்மைகளையும் கண்டடைதல்களையும் விட அவர் புனைவே எனக்கு முக்கியமாக்கப்படுகிறது. அவர் புனைவில் வருவதையெல்லாம் என் வாழ்க்கையில் போட்டுப்பார்க்கிறேன், ஆம் இது உண்மை, இதுவும் உண்மை என்று கண்டடைகிறேன். அந்த தால்ஸ்தாயை வழிபடுகிறேன். அவருடைய ஆன்மீக தரிசனத்தையும் அப்படி வாழ்க்கை பரப்பில் போட்டுப்பார்க்கிறேன். உண்மை என்று தான் படுகிறது. ஆனால் தால்ஸ்தாயின் தனி வாழ்விலேயே அது செல்லுபடியாகவில்லையே? அன்பே கிறிஸ்து என்ற அதிரும் முடிவை அவர் உள்ளார்ந்து அடைந்திருந்தாரென்றால் அவரை சுற்றியிருப்பவர்கள் மீது, முக்கியமாக தன் மீது, அந்த கனிவு இளமழையென்று பொழிந்திருக்கவேண்டும் அல்லவா? தன்னுடைய கீழ்மைகளை தானே மனித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்த அமுதம் அல்லவா அவர் கண்டடைந்த அன்பு? புத்துயிர்த்து தளிரென எழுந்திருக்கவேண்டும் அல்லவா? இருந்தாலும் துன்பத்தில் இறந்தாரே? அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன? அவர் கண்டடைந்த தரிசனம் ஒரு சுய ஏமாற்று தானா? அதை ‘வாழ’ அவருக்குத் தெரியவில்லையா?
tolstoy

சோபியாவும் அதிகம் துன்பப்படுகிறாள். தன்னுடைய எதிர்பார்ப்புகள், முன்முடிவுகள், ஆசைகள், கோபதாபங்கள் என்று அவளுக்கு ஒரு வலை. கிராயட்சர் சொனாடா படிக்கும் போது ஒன்று புரிந்தது. தால்ஸ்தாய் இசையை நிராகரிப்பது தன்னுடைய சுயத்தின் நிராகரிப்பாக சோபியா எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அடியாழத்தில் புண்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பற்ற தன்மைக்கான ஒரு விதையாக அது இருந்திருக்கலாம். சோபியாவின் டைரிக்குறிப்புகள் டாரிஸ் லெஸ்ஸிங்கின் முன்னுரையுடன் புத்தகமாக வெளிவந்துள்ளது. வாசித்துப்பார்த்தேன். மனம் உடைந்தபோது மட்டுமே டைரி எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். என்னால் அதிகம் படிக்கமுடியவில்லை. அவ்வளவு வலி, அவ்வளவு துன்பம், நிறைய குமுறல். நமக்கு வரலாற்றின் தொலைநோக்கு உள்ளது. அதன்வழியே மனிதர்களையும் தருணங்களையும் மதிப்பிடுகிறோம். தால்ஸ்தாய் தன் நூல்களை நாட்டுடமை ஆக்க நினைத்தது சரியா, சோபியா அவருக்கு அளித்த மனஉளைச்சல் நியாயமா என்ற கேள்விகள் வழியாக ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆனால் வாழ்க்கையை பற்றி இவ்வளவு சிந்தித்து இவ்வளவு ஆய்வுசெய்த தால்ஸ்தாயும் போரும் அமைதியும் நாவலை ஆறு முறை கைப்பிரதி எடுத்த சோபியாவும் இப்படியொரு துன்பவலைக்குள் சுழன்று சுழன்று வாழ்ந்தவர்கள் தானா என்ற துக்கத்தை மீளமுடியவில்லை.

-எஸ்

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

==============================================================

தல்ஸ்தோயின் மனைவி

கனவுபூமியும் கால்தளையும்

சோபியாவின் தரப்பு

முந்தைய கட்டுரைதரிசனங்களின் தலைவாயிலே இலக்கியம்
அடுத்த கட்டுரைபாலுணர்வை அறிதலும் எழுதுதலும்