தரிசனங்களின் தலைவாயிலே இலக்கியம்

அன்பு ஜெயமோகன்,

தல்ஸ்தோய் விழாவில் நீங்கள் பேசியதைக் காணொலியாய்க் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்ருதி வலைக்காட்சி கபிலனுக்குக் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். நன்றி, கபிலன்.

தல்ஸ்தோய் குறித்த உங்கள் கருத்துக்களில் ’நேர்மையான இலக்கிய வாசிப்பின்’ அக்கறையே மிகுந்திருந்தது. சமீபமாய், படைப்புகளைக் காட்டிலும் வாசிப்பைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது அவசியமானதாகவும் படுகிறது. படைப்பாளனுக்கும், வாசகனுக்குமான உறவைப் படைப்பே நிறுவுகிறது என்றே துவக்கத்தில் கருதி இருந்தேன். வாசிப்புதான் படைப்பையே வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதைப் பிற்பாடுதான் தெரிந்து கொண்டேன். வாசிப்பை விரித்துக் கொள்ளும் வாசகனிடமே படைப்பின் பெறுமதி இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்ட கணத்தில் வாசகன் பிறக்கிறான்.

நம் வாழ்வியலை அல்லது வாழ்ந்த காலகட்டத்தை ஒட்டி இலக்கியத்தை வகைப்படுத்தி இருக்கின்றனர். அவையே நமக்கு இலக்கியங்களாகவும் அறிமுகமாகி இருக்கின்றன. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என இலக்கிய வகைமைகளைத் தெரிந்து வைத்திருந்தாலே ஒருவன் இலக்கிய வாசகன் எனும் தகுதியைப் பெற்றுவிடுகிறான்(கலிகாலக் கொடுமை!). தமிழ்ச்சமூகச் சூழல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்படித்தான் இருப்பதாக நான் அனுமானிக்கிறேன். மற்றொரு கூத்து என்னவென்றால், இலக்கியங்கள் இளங்கலை அல்லது முதுகலை தமிழ் படிப்பவர்களுக்கானது; மற்றவர்களுக்கானது அன்று. இப்படியான தோற்றத்தைத் தமிழ்க்கல்விச்சூழலில் இன்னும் சில நூறாண்டுகளுக்கு நாம் காண்போம் என உத்தேசிக்கிறேன்(அதற்குப் பிறகும் தொடரலாம்). சமீபமாய், முகநூல் மற்றும் வலைப்பக்கங்களில் வருகிற இலக்கியக் கட்டுரைகளைப் படிக்கும்போது என் தீர்மானம் இன்னும் வலுப்படுகிறது.

இலக்கியத்தின் பா வடிவங்களையும், உள்ளடக்கத்தையும் ஒட்டி வகைமைகளை உருவாக்கி இருக்கின்றனர். சங்க இலக்கியம் என்பது சங்ககால வாழ்க்கையைச் சொல்கிறது என்பதாகவும், நீதி இலக்கியம் என்பது அறக்கருத்துக்களைப் போதிப்பதற்கானதாகவும், பக்தி இலக்கியம் கடவுளை வழிபடுவோருக்கே உரியதென்றும், நவீன இலக்கியம் வாழ்க்கையை வெறுத்தோருக்கு ஆனதென்றும் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவகையில், இலக்கியம் என்பது எவ்வகைமையில் சொல்லப்பட்டிருந்தாலும், அதன் உயிராக இருப்பது அதற்குள்ளிருக்கும் வாழ்வின் தரிசனமே.

ஒரு படைப்பின் சொல்வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; அர்த்தவடிவம் மிக முக்கியமானது. தன் அர்த்தவடிவில் குறிப்பிட்ட வாழ்வியல் தரிசனத்தை ஒரு வாசகனுக்கு நினைவூட்டும் படைப்பு இலக்கியமாகிறது; இல்லாவிடில், அது ஒரு கருத்தாக்கமாக மட்டுமே தேங்கி நிற்கிறது. அக்ககருத்தாக்கமும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தாக்கு பிடிக்கும். இலக்கியங்களோ காலந்தாண்டிய பெறுமதிகள் கொண்டவை. வானின் மேகங்கள் கருத்தாக்கங்கள் என்றால், அதன் நட்சத்திரங்களே இலக்கியங்கள்.

சங்க இலக்கியத்தின் புறநானூற்றில் ஒரு பாடல். ”நாடா கொன்றோ; காடா கொன்றோ / அவலா கொன்றோ; மிசையா கொன்றோ / எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நலனே”(புறம் 187) – இது ஒளவையார் பாடியது. இதன் பொருள் :”நிலமே! நீ நாடே ஆகுக அல்லது காடே ஆகுக. பள்ளமே ஆகுக அல்லது மேடே ஆகுக. நீ எப்படி இருப்பினும் உன்னிடத்தில் வசிக்கும் மக்களின் குணநலன்களையே நீ பிரதிபலிக்கிறாய். அவர்கள் நல்லவர்கள் என்றால் உனக்கு நல்ல பெயர்; இல்லையெனில் கெட்ட பெயர். உனக்கென்று தனியான குணநலன்கள் இல்லை”. கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் இப்பாடலைப் பாடி பதிவேற்றி இருந்தார். அதைக்கேட்ட நாளில், இப்பாடலை அடைந்தேன். மிகச்சுருக்கமான வரிகளில் நான் அதுகாறும் கண்டிராத வாழ்வின் தரிசனம் ஒன்றை இப்பாடல் எனக்களித்தது. நவீன கால மனதின் இடுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சிய இப்பாடல் போன்று சங்க இலக்கியத்தில் இன்னும் பல பாடல்கள் உள்ளன. நமக்குத்தான் வாசிக்க வாய்ப்பதில்லை. நிலத்தின் குணம் என்பது அந்நில மக்களின் குணம். நிலத்தை இலக்கியமாகவும், வாசகனை மக்களாகவும் யோசிக்கும் ஒருவனுக்கு தரிசனம் என்பதன் சூட்சுமம் பிடிபட்டே தீரும்.

நீதி இலக்கியமான நாலடியாரில் ஒரு பாடல். ”உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் / கல்ஊற்று உழியும் ஆறே போல்..”(நாலடியார் 185) என்று துவங்கும் பாடல். ஒரு நதியைக் குறியீடாகக் கொண்ட இப்பாடல் என்முன் வைத்த இருகாட்சிகள் : கரைபுரண்டோடும் ஆற்றில் நீரருந்தும் மக்கள், நீரற்ற காலத்தில் ஊற்று தோண்டும் மக்கள். ஆறாகவும், ஊற்றாகவும் நதியின் இரு பரிமாணங்கள். இரண்டிலும் அது மகிழ்வோடு நீரை உவந்தளிக்கிறது. கொடுக்கும் நீரின் அளவில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், கொடுப்பதில் அது குறைபட்டுக்கொளவதில்லை. என் வாழ்வின் சம்பவங்களை நதிகளாக உருமாற்றிய இப்பாடலின் தரிசனம் இன்றளவும் நான் கொண்டாடுவது.

பக்தி இலக்கியமான கந்தரலங்காரத்தில் ஒரு பாடல். ”வெயிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல் / கையில் பொருளும் உதவாதுங் காணும் கடைவழிக்கே” (பாடல் எண் 18)எனும் அருணகிரிநாதரின் விளிப்பு என்னை உலுக்கி எடுத்து விட்டது. வாழ்வை வெயிலாகவும், உடம்பை நானாகவும் உருவகித்துக் கொண்டு என் சிந்தனை விரியத்துவங்கியது. வெயிலின் வாட்டத்திற்காக நிழல் தேடினேன்; எங்கும் இல்லை. என் நிழலிலேயே நிற்க முனைந்தேன். இயலவில்லை. என் அகங்காரம் புரிபட்டது. அக்கணம் வாழ்வு வெயிலாகவும், பணம் உடம்பாகவும் உருக்கொண்டது. அததரிசனத்தின் வழி பணத்தின் அகங்காரமும் விளங்கியது. அருணகிரிநாதருக்கே தெரியாமல் இருவரிகளுக்குள் அமர்ந்திருந்த தரிசனங்கள் அவை என்பது என் கருத்து; உங்களுக்கு மேலும் சில தரிசனங்கள் கிட்டக் கூடும். தன்னைத் திறந்து வைத்து வாசகனையும் திறக்க முயல்வதே இலக்கியம்.

சிற்றிலக்கியத்தின் வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் சிறப்பானது. ”தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பாட” எனும் செங்கீரைப்பருவத்தின் துவக்க வரி இன்றளவும் என் வியப்புக்குரியது. கொங்கைகள் இரண்டு அல என குமரகுருபரர் சொல்கிறார். அதாவது, அம்மைக்கு மூன்று கொங்கைகள் என்பதாக உரை இருக்கிறது. மூன்று கொங்கைகளைக் கொண்டிருக்கும் விசித்த்ர அம்மையை ஆணவமுள்ள மனிதனாக உருவகித்துக் கொள்ளலாம்; ஆணவத்தைப் புரிந்து கொள்கிற மனிதன் இரு கொங்கைகள் கொண்ட சாதாரண அம்மையாகிறான். இங்கு ஆணவத்தைப் புரிந்து கொள்ள சிவன் எனும் குறியீடு உதவுவதாகச் சொல்லப்படுகிறது. சிவனையே நான் வாசிப்பின் திறப்பான தரிசனமாகச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு கொங்கைகள் என்பது உடலுக்கானது; மூன்றாவது கொங்கையே உயிர். கண்ணுக்குத் தெரிகிற உடலில் இருந்து, கண்ணுக்குப் புலப்படாத உயிரை யோசிக்கத் தூண்டும் பாடலாகவும் இது எனக்கு இருக்கிறது. உங்களின் வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உங்களுக்கான தரிசனங்களையும் இப்பாடலின் உருவகம் கொண்டிருக்கும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்; அளவுகடந்த நிதானத்தோடான கவனிப்பு அவசியம்.

சித்தர் இலக்கியத்தில் பட்டினத்தாரும், சிவவாக்கியரும், பாம்பாட்டிச் சித்தரும் எனக்கு உவப்பானவர்கள். ”உள்ளங்கையில் கனிபோல் உள்ள பொருளை / உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவை”(பா.சித்தர் 13) எனும் பாடல் வரியில் என்னைத் திகைக்கச் செய்து விட்டார் பாம்பாட்டிச் சித்தர். முதல் வரியைக் காட்டிலும் இரண்டாவது வரியைக் கவனமாக நோக்க வேண்டும். ”உண்மையுடன் காட்டவல்ல” எனும் சொல்லாட்சி முன்வைத்த தரிசனம் மிக எளியது; ஆனால் நுட்பமானது. அதனால்தான் தொடர்ந்து “உண்மைக்குரு” என்றொரு வார்த்தையையும் அடிக்கோடிடுகிறார் அவர். நவீன மனங்களை ஆட்டிப்படைக்கும் பொய்க்குருக்களைக் கண்டு கொள்ள பா.சித்தரின் உண்மைக்குரு எனக்கு உதவுகிறார். இப்போது முதல்வரிக்கு வருவோம். “உள்ளங்கையில் கனி” – அற்புதமான எளிய உருவகம். நாம் தேடும் கனியானது நம் உள்ளங்கையிலேயே இருக்கிறது; அதைச் சுட்டிக் காட்டுபவனே உண்மைக்குரு. நம் வாசிப்பின் தரிசனமானது நம் வாழ்விலேயே இருக்கிறது. அதைத் தூண்ட முனைவதே இலக்கியம். இரண்டு வரிகளில் ஒளிந்திருக்கும் வாழ்வியல் தரிசனங்களை விரிக்கும் வாய்ப்பை சித்தர் பாடல்களும் கொண்டிருக்கின்றன. பொய்க்குருக்களின் கோவணத்தைப் பொச்சுக்குப் போட்டு உட்கார்திருக்கும் வரை, கையிலிருக்கும் கனி நம் கண்களுக்குத் தெரியவே வாய்ப்பில்லை(பொய்க்குருக்களின் கிச்சிடுக்குகளில் மட்டுமே அவை பூத்திருக்கும்).

நவீன இலக்கியத்துக்கு வருகிறேன். நகுலனின் கவிதை ஒன்று. ”நினைவு ஊர்ந்து செல்கிறது / பார்க்க பயமாய் இருக்கிறது / பார்க்காமலும் இருக்க முடியவில்லை” எனும் கவிதையில் நினைவு அழுத்தம் பெற்றிருக்கிறது. நம் அனைவருக்கும் கடந்த காலம்(நினைவு) இருக்கிறது. அதுவே நம் வரலாறாக இருக்கிறது. நிகழ்காலச் சம்பவம் ஒன்று நம் வரலாற்றைத் திடுக்கிடச் செய்யலாம் அல்லது கேள்வி கேட்கலாம். நிகழ்காலம் தொந்தரவு செய்யாதவரை நினைவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், இயல்பில் நினைவைத் தொந்தரவு செய்வதே நிகழ்காலத்தின் பணி. அதனால்தான் அதைப் பார்க்கப் பயப்படுகிறோம். இது பொதுவான கோணம். நினைவை உங்கள் முன்னாள் காதலியாக உருவகித்துக் கொள்ளுங்கள். இப்போது இந்தக்கவிதை இன்னும் தெளிவாகத் துலங்கும்.

குளத்தில் நீந்த விரும்புபவர்களுக்கு இலக்கியம் துடுப்புகளைக் கூட அளிப்பதில்லை; கடலில் நீந்த விழைபவர்களுக்கு அது தனது கரங்களையே வழங்குகிறது. குளங்கள் அடைபட்ட கருத்துக்களையே கொண்டிருக்கும். கடல் மட்டுமே விசாலமான தரிசனங்களைச் சுமந்து நிற்கும். ஒரு நல்ல வாசகன் கடலையே நேர்ந்து கொள்கிறான்.

நல்லது கெட்டதைச் சொல்வதும், அவற்றைக் கொண்டு அவனை நெறிப்படுத்துவதும் அல்ல தரிசனத்தின் பணி. வாழ்வின் விசித்திரங்களால் விதிர்த்துப் போயிருக்கும் ஒரு தனிமனிதனை, அவனில் இருந்து ஆசுவாசப்படுத்த முயல்வதே தரிசனம். அதற்காக அவனுக்குத் துணைசெய்பவையே இலக்கியங்கள்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்.

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20
அடுத்த கட்டுரைதல்ஸ்தோய், அறம், கலை