சென்னை தல்ஸ்தோய் விழா

russ1

தல்ஸ்யோயின் 190 ஆவது பிறந்த நாளை ஒட்டி விஷ்ணுபுரம் அமைப்புடன் இணைந்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய விரும்புவதாக ருஷ்யக் கலாச்சார மையத்தில் இருந்து விருப்பம் தெரிவித்தனர். நான் மலேசியா நவின் எழுதிய நூல்களின் வெளியீட்டுவிழா 16 -9-2018 அன்று நிகழவிருந்தது. ஆகவே 15 ஆம் தேதி இவ்விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று ராஜகோபாலன் சொன்னார்

சென்னைக்கு 15 ஆம் தேதி காலை வந்தேன். வழக்கமான விடுதியில் அறை. என்னுடன் ஜிஎஸ்வி நவீன் என்னும் இளம் நண்பரும் வந்திருந்தார். மதுரையிலிருந்து நாகர்கோயில் வந்து என்னுடன் அவரும் ரயிலில் வந்தார் ரயில் நிலையத்துக்கு ராகவ் வந்திருந்தார். கே.பி. வினோதின் காரில் விடுதி. சென்னைக்கு வந்திறங்கி நண்பர்களைச் சந்திக்கும்போதே ஒரு மகிழ்ச்சி ஆரம்பித்துவிடுகிறது

russ7

அறைக்கு நண்பர்கள் வந்தபடியே இருந்தார்கள். தங்கபாண்டியன், மாரிராஜ், ராகவ், சௌந்தர், காளிப்பிரசாத், அருணாச்சலம் மகாராஜன். உரையாடிக்கொண்டு சந்தடியின் நடுவே உரைக்கான குறிப்பையும் எழுதினேன். உரை தல்ஸ்தோயின் ஒழுக்கம்- அறவியல் ஆகியவை அவருடைய கலையை எப்படி வடிவமைத்தன என்பதைப்பற்றி என முடிவுசெய்திருந்தேன். குறிப்புகள் வழியாகத்தான் அந்த உரையின் கட்டமைப்பு உருவானது

russ4

ருஷ்யக் கலாச்சார மையத்தில் சிற்ற்றையில் விழா. தெரிந்த முகங்கள் நிறைய இருந்தன. அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதி. 80 பேர். மேலும் பத்துபேரை நெருக்கி அமர்த்த வேண்டியிருந்த்து.

நண்பர் ஜெயக்குமார் விஷ்ணுபுரம் அமைப்பு குறித்தும் என்னைப்பற்றியும் ருஷ்யக் கலாச்சார மைய இயக்குநர் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார். ருஷ்யக்கலாச்சார மைய இயக்குநர் கென்னெடி ரெகெலெவ் [Mr.Kennedy  Rogalev] ஒரு சிற்றுரை ஆற்றினார். அதன் பின் ருஷ்யக் கலாச்சார மையத்தில் பணியாற்றிய ஆல்பர்ட்கெபரோஃப் [Mr. Albert Gafarof ]  ஒரு சிற்றுரை ஆற்றி தல்ஸ்தோய் பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டார்

ruus2
ஆல்பர்ட்

நான் ஒரு மணிநேரம் பேசினேன். பெரும்பாலும் என்னுடைய வரைவுப்படியே வளர்ந்துசென்ற உரை. உரையில் அவ்வப்போது உருவாகும் மேலதிகத் திறப்புகளும் மீறல்களும் இருந்தன என்றாலும் என் கருத்தை , அல்லது வினாவை ஓரளவு தெளிவாகவே முன்வைத்தேன் என நினைக்கிறேன்

பொதுவாக இவ்வகையான உரைகளில்  நான் தரவுகள், கதைகள் சொல்வதை தவிர்ப்பேன். அவை வாசகர்களுக்கு முன்னரே தெரிந்திருக்கும் என்றே எடுத்துக்கொள்வேன். என் உரை தல்ஸ்தோய் கதைகளை முன்னரே வாசித்தவர்களுக்காக ஆற்றப்பட்டது. அவர்கள் அறிந்த சந்தர்ப்பங்களை மட்டுமே குறிப்பிட்டேன். அவற்றினூடாக அவர்கள் அவருடைய படைப்புக்களைப் பற்றிய் மேலதிகமான சில வினாக்களை எழுப்பிக்கொள்ள வைப்பது மட்டுமே என் இலக்காக இருந்தது.
russ6

விழாவுக்குப்பின் பாண்டியன் ஓட்டல் சென்று கும்பலாக அமர்ந்து சாப்பிட்டோம். பின்னர் மீண்டும் விடுதியறை. இரவு 12 மணி வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு நண்பர்கள் கிளம்பிச் சென்றார்கள். இன்னும் ஒரு நினைவுக்குரிய நாள். சென்னை இத்தகைய சிறந்த நாட்களால்தான் இனியதாகிறது.

ruus8

தல்ஸ்தோய் என் பதினெட்டாவது வயதில் எனக்கு அறிமுகமானவர். அப்படிப்பார்த்தால் நாற்பதாண்டுகளாக என்னுடன் இருந்துகொண்டிருப்பவர். இவ்வுரை தல்ஸ்தோய் என்னும் குருவை கடந்து தல்ஸ்தோய் என்னும் படைப்பாளியை நானே கண்டுகொள்வதாக அமைந்தது என நினைக்கிறேன். இரவில் துயில்கையில் எண்ணிப்பார்த்தபோது அந்நிறைவு இருந்தது.

russ3

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8
அடுத்த கட்டுரைதல்ஸ்தோய் உரை