1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

nara

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்..

1980 களின் இறுதியில், இந்தியாவில் அந்நியச் செலாவணிச் சிக்கல்கள் துவங்கியிருந்தன.1989-90 ஆம் ஆண்டுகளில் நிலவிய அரசியல் குழப்பங்களும், 1990 ஆம் ஆண்டு நடந்த குவைத் போரும், 1991 ஆம் ஆண்டுத் தேர்தலில் நிகழ்ந்த ராஜீவ் காந்தியின் கொலையும், அந்தச் சிக்கலை மேலும் பெரிதாக்கின. 1991 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக, ஆனால் பெரும்பான்மையில்லாத கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக, நரசிம்ம ராவ் பதவியேற்றார். அந்நியச் செலாவணிச் சிக்கலைத் தீர்க்க, ஒரு பொருளாதார அறிஞரே சரியானவர் எனத் தீர்மானித்து, மன்மோகன் சிங்கை, நிதியமைச்சராக்கினார். இருவரும், இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை, சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியதாக மாற்றியமைத்தார்கள். அந்நியச் செலாவணிச் சிக்கல் விலகி, மீண்டும் இந்தியா, வேக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. இந்தியாவின் இன்றைய வேக வளர்ச்சிக்குக் காரணம், 1991 ல் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தாம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால், பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காட்டும் சித்திரம் வேறு. இந்தியா, 1980 ஆண்டே பொருளாதார வேகப்பாய்ச்சலை நிகழ்த்தத் துவங்கி விட்டது என்பதுதான் அது. பல்வேறு பொருளாதார அறிஞர்கள் இதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் அர்விந்த் சுப்ரமணியனும் டேனி ரொட்ரிக்கும்.

அவர்கள், உலக நிதிக் குழுமத்துக்காக எழுதிய, “From “Hindu Growth” to Productivity Surge: The Mystery of the Indian Growth Transition” என்னும் கட்டுரையில், 1950 லிருந்து, 1979 வரை, சராசரியாக 3.7% இருந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 80 களின் துவக்கத்தில் 6% க்கும் அதிகமாக மாறி, 2004 வரை நீடித்தது என்னும் கருது கோளை முன்வைக்கிறார்கள்.

இந்த வேக வளர்ச்சிக்குக் காரணங்களாக அவர்கள் சொல்வது:

  1. 1980 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த இந்திரா காந்தி, தனியார் துறையைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொண்டு, அவர்களை ஆதரிக்க முன்வந்தார். ராஜீவ் காந்தி, அதை மேலும் முன்னெடுத்தார்
  2. தனியார் உற்பத்தித் துறையின் மீதான கடும் கட்டுப்பாடுகள் – கொள்திறன் கட்டுப்பாடு, கடுமையான இறக்குமதி விதிகள் போன்றவை தளர்த்தப்பட்டன.
  3. வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் புதுத் தொழில்கள் துவங்கப்பட்டன (மாருதி சுஸூகி, சுஸூகி-டி.வி.எஸ், ஹீரோ-ஹோண்டா, கவாஸகி-பஜாஜ் போன்றவை).
  4. தனியார் நிறுவன வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன

இவைனைத்துமே, தனியார் துறையை ஊக்குவிக்க, அவற்றின் செயல்திறனும், முதலீடும் அதிகரித்து, பொருளாதாரம் சட்டென வேகமாக வளரத்துவங்கியது என்பது அவர்கள் அவதானிப்பு. 1980களில் துவங்கிய இந்தக் கொள்கை மாற்றம், உள்நாட்டு தனியார் தொழில்துறைக்கான ஆதரவு, அதாவது pro-business என்கிறார்கள். 1991 க்குப் பின்னர், நரசிம்ம ராவ் /மன்மோகன் சிங் நிகழ்த்திய பொருளாதாரச் சீர்திருத்தங்களை, Pro-market என வரையறுக்கிறார்கள்.

இந்த அவதானிப்பை மேலும் நுணுக்கி, ஆராயும், சேத்தன் கடே, ஸ்டீஃபன் ரைட், டாட்டியானா ஃபிக் என்னும் பொருளாதார அறிஞர்கள், பொருளாதார வளர்ச்சியை, துறை வாரியாகப் பிரித்து, எந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு துறையும், திரும்பா உயர்வளர்ச்சி நிலையை (irreversible high growth) எட்டியது எனச் சொல்கிறார்கள்.

  1. 65க்குப் பின், வேளாண்மை,
  2. 75க்குப் பின், சேவைத் துறை
  3. 83க்குப் பின் தொழில் துறை,

(நிதி, போக்குவரத்து, செய்தி ஒளிபரப்புத்துறை, கல்வி, சுகாதாரம், வணிகம், தொலைத் தொடர்பு, மென்பொருள் போன்றவை சேவைத் துறையில் அடங்கும்)

என ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு காலகட்டத்தில், வேக வளர்ச்சியைத் துவங்கின. இவை மூன்றும் இணைந்து, இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சி, 1980 ஆம் ஆண்டு முதல்வேகமாக வளரத் துவங்கி, அடுத்த 25 ஆண்டுகள் வரை, 6% சீரான வளர்ச்சியை அடைந்தது என்கிறார்கள்.

1980 களில் இந்திரா காந்தியும், அதன் பின்னர் 1984 லில் இருந்து ராஜீவ் காந்தியும், தனியார் துறையை முன்னெடுத்த நிர்வாகச் செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமென்றாலும், அவை மட்டுமே காரணம் எனச் சொல்வது சரியாகாது என்கிறார் முன்னாள் நிதித் துறைச் செயலரும், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான, எஸ்.வெங்கிடாராமன். இரும்பு, சிமெண்ட், மின்சாரம், நிதி வசதிகள் போன்ற கட்டமைப்புகள் முன்னரே ஏற்படுத்தப் பட்டிருந்தமையால், தொழில்துறைக்குச் சாதகமான விதிகள் வந்த போது, தொழில்துறை வேகமாக வளரத்துவங்கியது என்பது அவர் வாதம்.

அடிப்படைக் கட்டமைப்பு இல்லாமல், பொருளாதார வளர்ச்சி என்பது தேவையான ஊட்டச்சத்து உணவும், பயிற்சியும் இல்லாத விளையாட்டு வீரனுக்கு, விமான டிக்கட்டும், விடுதியும் ஏற்பாடு செய்து, ஒலிம்பிக் பந்தயத்துக்கு அனுப்புவது போலாகும். சுதந்திரம் பெற்ற காலத்தில், 0.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு,  வளர்வதற்கான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், வறுமையான நாடாக இருந்தது இந்தியா. பெரும் தொழிற்கட்டமைப்பை உருவாக்க, தனியார் துறையிடமும் முதலீடு இல்லை, எனவே, அவர்கள் ஒரு பொருளாதார வரைவை உருவாக்கி, அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்களில், அரசே முதலீடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். அந்தக் கொள்கையை அரசும் ஏற்றுக் கொண்டது.

பிரதமர் நேரு காலத்தில், இரும்பு, கனரகத் தொழில்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என உழவுக்கும், தொழிலுக்கும் தேவையான கட்டமைப்பு 50 களில் துவக்கப்பட்டது.. இந்தக் கட்டமைப்பின் பலன்கள் பொது வெளியில் பெரிதும் பேசப்பட்டுவிட்டன. ஆனால், அதன் பின் ஏற்படுத்தப் பட்ட கட்டமைப்பு வசதிகளில், வேளாண்மைக்கான நவீனத் தொழில்நுட்பக் கட்டமைப்பு, மக்களுக்கான நிதித் துறை கட்டமைப்பு, தொழில்துறைக்கான மின் உற்பத்திக் கட்டமைப்பு போன்றவை அதிகம் பேசப்படவில்லை. இந்தக் கட்டுரை, அவற்றின் மீது கொஞ்சம் அதிக வெளிச்சம் காட்டும் நோக்கிலும் எழுதப்படுகிறது.

சாஸ்திரி/ இந்திரா காந்தியின் காலத்தில், உழவுக்கான, தொழில்நுட்பக் கட்டமைப்பான பசுமைப் புரட்சி துவங்கப்பட்டது. விஞ்ஞானிகள் தயங்கிய போதும், அரசு ரிஸ்க் எடுத்து, வீரிய விதைகளை இந்தியாவில் விளைவிக்க முடிவெடுத்தது. நீர்ப்பாசனப் பரப்பும், தொழில்நுட்பமும் இணைந்து, வேளாண்மைத் துறை முதலில், 1965ல், அதிக வளர்ச்சி நிலையை எட்டியது.

1969 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி, வங்கிகள் தேசிய மயமாக்கம் என்னும் நிதிக்கட்டமைப்பு நடவடிக்கையைத் துவக்கினார். அப்போது, இந்தியாவில் 8261 வங்கிக் கிளைகள் இருந்தன. 77% கிளைகள், சிறு/பெரு நகரங்களில் இருந்தன. 70% கடன்கள், 1% கடனாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேளாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் சதவீதம் 2.2%. வங்கிகள் மூழ்கிப் போவது மிகச் சாதாரணமான நிகழ்வாக இருந்தது.

தேசியமயமாக்கலுக்குப் பிறகு, இந்த வங்கிக்கிளைகள், 1987 ல், 53840, 2015 ல் 120000 என உயர்ந்திருக்கின்றன. 34% வங்கிக் கிளைகள் கிராமப்புரங்களிலும், 27% சிறு நகரங்களிலும் இருக்கின்றன. உலகிலேயே மிக அதிக வங்கிக் கிளைகள் அமைந்துள்ள நாடு இந்தியா. சீனாவை விட அதிகம்.

1969 ல், வேளாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் 40 கோடி. இது 2011 ஆம் ஆண்டு 3 லட்சம் கோடி. 1969 ல் சிறு தொழில் கடன் 251 கோடி. 2011 ஆண்டு, 3.69 லட்சம் கோடி.

இந்த அளவு நிதியை, ஒரு ஊரக வேளாண் துறை மற்றும் சிறு தொழில் பொருளாதாரச் செயல்பாடுகளை இயக்க அனுப்பியது, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் நிதிச் சீர்திருத்தம். 2011 ஆம் ஆண்டு, வேளாண்மை மற்றும் சிறு தொழில்களுக்கு, 6.7 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டது எனில், ஒரு கிராமத்துக்கு, 1.34 கோடி நிதி என்னும் அளவுக்கு, வங்கிகளின் நிதி சென்றடைந்திருக்கிறது. அரசு வங்கிகள் என்பதால், மூழ்கி விடும் என்னும் பயமில்லாமல், மக்கள் வங்கிகளில் சேமிக்க முன் வந்தார்கள். 1969 ஆம் ஆண்டு, 4646 கோடியாக இருந்த வங்கிச் சேமிப்பு, 2011 ஆம் ஆண்டு, 57 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இந்த நிதி இல்லாத காலத்தில், ஊரக வேளாண்மையும், தொழில்துறையும், உள்ளூர் உயர் சாதிச் செல்வந்தர்களையும், வட்டிக்கடைக்காரர்களையும்தான் நம்பியிருந்திருக்க வேண்டும். சேமிப்பை, சரியான வட்டி ஈட்டாத வழிகளில், பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்திருக்க வேண்டும். இந்த நிதிக்கட்டமைப்பு, காலகாலமாக இருந்து வந்த உயர்சாதி, நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை பின்னொதுக்கி, ஏழைகளின், சிறு உழவர்களின், தொழில் முனைவோரின் பொருளாதார நலன்களை முன்னெடுத்தது. இதனால் பெரிதும் பயன் பெற்ற சேவைப் பொருளாதாரம், வேக வளர்ச்சிப் பாய்ச்சலை 1975 ஆண்டு நிகழ்த்தியது.

1970 ஆம் ஆண்டு, ஹட்கோ (Housing and Urban Development Corporation) என்னும் அரசு நிறுவனம், இந்தியக் கட்டுமானத் துறைக்கு நிதி உதவி செய்யும் நிறுவனம் உருவாக்கப் பட்டது. இது நகர்ப்புற, ஊரகக் பொதுக் கட்டிடங்கள், கழிவு நீர்க் கால்வாய்கள் உருவாக்கம் போன்றவை அமைக்கப் பட மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் நிதி நிறுவனம். ஆனால், இது, தனி மனிதனின் தேவைக்கான வீடுகளை உருவாக்க உதவவில்லை. அதற்கு உதவ, மத்திய அரசின் ஐசிஐசிஐ நிறுவனம், 1977 ஆம் ஆண்டு, ஹெச்டிஎஃப்சி (Housing Development Finance Corporation) என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இவ்விரண்டு நிறுவனங்களும் இந்தியக் கட்டுமானத் துறை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தன.

70 களின் துவக்கத்தில், மின் பற்றாக்குறை, தொழில் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்தது. அந்நியச் செலாவணிச் சிக்கல்களும், 1971 போரும் சற்று பின்னடவை ஏற்படுத்தினாலும், இதைப் போக்க, அரசு, நாட்டின் நிலையான மின் கட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்த்து. 1975 ஆம் ஆண்டு, தேசிய மின் உற்பத்திக் கழகம் துவங்கப்பட்டது. நாடெங்கிலும் மின்சாரம் கொண்டு செல்ல, தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டன. இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் அதிக செயல்திறன் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், இன்று நாட்டின் 25% மின் உற்பத்தியைப் பூர்த்தி செய்கிறது.

1980 ஆம் ஆண்டு, மீண்டும் பதவிக்கு வந்த இந்திரா காந்தி, தனியார் துறையை நேர்மறையாக அணுகத் துவங்கினார். அர்விந்த் சுப்ரமணியன் /டேனி ரோட்ரிக்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டது போல, தனியார் துறையை ஊக்குவிக்கும் பல நிர்வாக முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டன. தனியார் துறை செயல் திறன் மேம்பட்டது. முதலீடு அதிகரித்தது. 1983 ஆம் ஆண்டு முதல், தொழில்துறை வேக வளர்ச்சியைத் துவங்கியது.

1991ல் அந்நியச் செலாவணிச் சிக்கல் ஏன் வந்தது?

இதற்கு மூன்று முக்கியக் காரணங்களை வெங்கிடராமன் முன்வைக்கிறார்.

  1. கட்டமைப்பு மற்றும் அரசுத் திட்டங்கள், பொதுவாக நீண்டகால நோக்கில் பயன் தரக்கூடியவை. அதற்கான வெளிநாட்டுக் கடன்கள் பொதுவாக நீண்டகாலக் கடனாக வாங்கப் படவேண்டும். ஆனால், 80 களில், வாங்கப் பட்ட கடன்கள் குறுகிய காலத்தில் செலுத்தப்பட வேண்டிய கடன்கள். அவற்றின் வட்டி விகிதமும் அதிகம்.  கட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சிப் பலன்கள் வரும் முன்பே, அதை மீண்டும் செலுத்த வேண்டிய கெடு வந்து விட்டது.
  2. 1990 ஆம் ஆண்டில் துவங்கிய குவைத் போர், கச்சா எண்னெய் விலையை ஏற்றி, அதிக அந்நியச் செலாவணித் தேவையை உருவாக்கியது.
  3. 1989-91 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் நிலவிய நிலையில்லா அரசியல் ஆட்சி அதனால் வந்த குழப்பங்கள்

இவற்றால், இந்தியாவின் உலக நிதிச் சந்தையில், இந்தியாவின் ரேட்டிங் குறைந்துவிட, இந்தியா வெளிநாடுகளில் கடன் வாங்கும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து போனது. இந்தியாவில் இருந்த வங்கி டெபாஸிட்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திரும்பப் பெறத் துவங்கினார்கள். அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை துவங்கியது. அப்போதைய சந்திரசேகர் அரசு, 500 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் அடகு வைத்து, தற்காலிகமாக நிலையைச் சமாளித்தது.

அந்நியச் செலாவணிச் சிக்கல் எப்படித் தீர்க்கப்பட்டது?

1991 ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் அரசு பதவியேற்றதுமே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நிலைமையின் தீவிரம் நிதி அமைச்சகத்தால் அனைவருக்கும் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்நிய நிதி பெற, பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இதற்கான ஒரு திட்ட வரைவு, முந்தய சந்திரசேகர் ஆட்சிக் காலத்திலேயே தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, பல்வேறு அரசியல் தரப்பைச் சார்ந்த நிபுணர்களுக்கும் (உதாரணம் – பாஜபாவின் யஷ்வந்த் சின்ஹா, சந்திரசேகர் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார்) இது தெரியும். அரசியல் ரீதியாக யாரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் தீவிரமாக எதிர்க்கவும் இல்லை. இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது என உலக நிதியமைப்புகளுக்குச் செய்தி அனுப்பப் பட்டது.

செயற்கையாக அரசாங்கத்தால், டாலருக்கு எதிராக, அதிகமாக வைக்கப்பட்டிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இந்திய ஏற்றுமதியைப் பாதித்து வந்தது. 1991 ஆம் ஆண்டு, ஜூன் – 30, ஜூலை 3 ஆகிய இரண்டு தினங்களில், ரூபாயின் மதிப்பு டாலருக்கு 21.14 ரூபாயில் இருந்து, 25.95 ஆகக் குறைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 22.75% குறைப்பு ஆகும். இதனால் உடனடிப் பயன் பெற்ற (1 டாலருக்கு, ரூபாய் 4.81 அதிகம் கிடைத்தது), வெளிநாடு வாழ் இந்தியர்கள், மீண்டும் தங்களது நிதிகளை இந்தியாவுக்கு அனுப்பத் துவங்கினார்கள். ஏற்றுமதி மெல்ல வளரத்துவங்கியது.

1991, ஜூலை 24 ஆம் தேதி, தொழில்துறையைத் தம் வசம் வைத்திருந்த பிரதமர் நரசிம்ம ராவ், புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அன்று மாலையே, மற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை, நிதியமைச்சர் மன்மோகன் சிங் பட்ஜெட்டில் அறிவித்தார். அந்த அரசின் பெரும்பாலான சீர்திருத்தங்கள் அந்த ஒரு நாளில் அறிவிக்கப்பட்டன.

இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்வைத்து, அந்நியச் செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க, 1991 டிசம்பர் மாதம், 500 மில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் 3500 கோடி) உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்டது. இந்தக் கடன் 1993 ஆம் ஆண்டே அடைக்கப்பட்டுவிட்டது. எனவே, இது பெரும் பொருளாதாரப் பிரச்சினை அல்ல. மோசமான நிதி மேலாண்மையினால் உருவானது என்பது தெளிவாகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக்கூறுகள் 1991க்கு முன்பு, வலுவாகவே இருந்தன.

ஒரு பருந்துப் பார்வையில் சொல்ல வேண்டுமெனில், 1965 ல் வேளாண்மை, 1975 ல் சேவைத் துறை, 1983 ல் தொழில்துறை என மூன்றும் வேகமாக வளரத்துவங்கி, 1980 முதல், இந்தியப் பொருளாதாரம், அதற்கு முன்பிருந்த 30 ஆண்டுகால சராசரி வளர்ச்சியான 3.7% ஐ விட்டு, 6+% வளர்ச்சி என்னும் அடுத்தகட்ட நிலையை எட்டியது.

பின்னர் 1991ல் வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள், அந்த வளர்ச்சி வேகத்தை, அடுத்த 15 ஆண்டுகள் வரை தக்க வைக்க உதவின.

Reference:

  1. From “Hindu Growth” to Productivity Surge: The Mystery of the Indian Growth Transition Dani Rodrik and Arvind Subramanian  – IMF working Paper, 2004.
  2. Politics of economic growth in India, 1980-2005, Atul Kohli, Economic and Political weekly,2006
  3. Revisiting the 1980s and the vital Ground work, S.Venkitaraman, The Hindu Business line, 2004
  4. The Pattern and Causes of Economic Growth in India, Kaushik Basu, Cornell University, Annemle Maertens, University of Sussex 2007
  5. India’s Growth Turnaround, Chetan Ghate, Stephen Wright, Tatiana Fic, Indian Statistical Institute, 2009
  6. The Service Sector in India, Arpita Mukherji, Asian Development Bank, 2013
  7. An Analysis of the Impact of Nationalisation on the functioning of the Commercial Banks Dr. Alka Mittal  Faculty, Maharaja Surajmal Institute, Delhi, 2016.
முந்தைய கட்டுரைமதுரையும் கடலும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12