ஈர்ப்பு- விவாதம்

suresh

 

ஈர்ப்பு

ஈர்ப்பு இரு எதிர்வினைகள்

ஈர்ப்பு- கடிதங்கள்

ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்

அன்புள்ள ஜெ

ஈர்ப்பு கதை எனக்கு அ.முத்துலிங்கத்தின் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ கதையை நினைவுபடுத்தியது. அதிலும் கதைசொல்லி பாலியல் குற்றம் செய்துவிட்டு சிறையில் இருக்கிறான், நடந்தவற்றை தனக்கும் மற்றவர்களுக்கும் மாற்றிச் சொல்லிக்கொள்கிறான்.

அக்கதையில் இறுதி வரிகளில்தான் அந்த மாற்றிச்சொல்லுதல் புலனாகிறது. கதைசொல்லி தந்திரமானவனா இல்லை பரிதாபத்துக்குரிய கேலிச்சித்திரமா என்ற கேள்வி மறுவாசிப்பிலும் தொக்கி நிற்கிறது. அந்த ‘எடைபோடமுடியாமை’ தான் பிரதான அம்சம், அப்போது வாசகன் தன் மனச்சாய்வுகள் என்ன என்று திரும்பிப்பார்த்துக் கொள்கிறான்.

‘ஈர்ப்பு’ கதைசொல்லி முதலிலேயே தான் சொல்வது எதுவும் நம்பத்தகுந்ததல்ல என்று சொல்லிவிடுகிறான். அதன்பின் வரும் விரிவான எண்ணப்போக்குகள் எல்லாவற்றையுமே அந்தக் கண்ணாடி கொண்டே பார்க்கச்சொல்கிறான். இறுதிநிகழ்வும் அவன் சொல்வதுபடியே நிகழ்ந்ததா என்று கேட்டுக்கொண்டே வாசிக்கச் செய்கிறான்.

Suspension of Disbelief என்பதை செய்யவேண்டாம் என்று முதலிலேயே சொல்லிவிட்டபின், கதைசொல்லி பற்றிய ஒற்றைப்படையான சித்திரமே மிஞ்சுகிறது. அவன் சொல்லும் தகவல்கள் மட்டுமல்ல, அவனது விசாரங்கள் எல்லாமே கூட சிறையில் உட்கார்ந்து வலிந்து உருவாக்கப்பட்டவை என்ற எண்ணம் வருகிறது. கதையாசிரியர் வலிந்து கேமராவை திருப்புகிறாரா என்று தோன்றச்செய்கிறது.

சுரேஷ் பிரதீப்பீன் வேறு சில கதைகளிலும் இதே உணர்வு எனக்கு வந்திருக்கிறது.

கடலூர் சீனு இதன் மொழிநடை தனக்கு உவக்கவில்லை என்று எழுதியிருந்தார். எனக்கு என்னமோ இதன் மொழியே பிடித்திருந்தது, ஒவ்வொரு வரியும் பத்தியும் செதுக்கி செய்யப்பட்டவை போல இருந்தது. சுரேஷ் மாதிரி ஒரு இண்டலெக்சுவலை சிறையில் வைத்து எழுத அவகாசம் குடுத்தால் இப்படித்தான் எழுதுவார்கள் போல !

அன்புடன்
மதுசூதனன் சம்பத்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். வினோதம் என்னவென்றால் உங்கள் படைப்புகள் எத்தனையோ இருந்தும், அதை பற்றி பேசாமல், தளத்தில் பகிறப்பட்ட கதைக்காக எழுதுகிறேன்.
ஈர்ப்பு கதை பற்றி வந்த முதல் இரண்டு கடிதங்களுக்கு எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும் என எழுதுகிறேன்.

நார் நாராய் கிழித்தல்

மனித உணர்வுகளை பிணைக்கும் கயிற்றில் உள்ள ஒவ்வொரு நாரையும் தனியாக எடுத்து வெளியே போட்டு இருக்கிறார் கதை சொல்லி.

கயிறு பிணைந்து இருக்கும் போது எதுவும் முழுதாக தெரியாது.

இவ்வளவு தூரம் பெண்களின் நிராகரிப்பை அப்பட்டமாக பேசும், நான் படிக்கும் முதல் கதை.
எல்லாம் சரியான கணிப்புகள் அல்ல என சொல்கிற கதை சொல்லி, அனைத்திலும் பாதி உண்மையை வைத்திருப்பதால், அது நம்பத்தகுந்ததாக இருக்கிறது.

கதை சொல்லி பேசுவது ஒரு தனிக்கோணம்.இதை பாலியல் கதை என்று சொல்லியிருந்தால் கூட அது நல்ல விமர்சனமாக இருந்திருக்கும்.

ஒரே கோணம் மட்டுமே சொல்லப்படுகிறது.

ஆனால் எவ்வளவு ஆழ்ந்து சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இது கவனிக்க வேண்டிய படைப்பு என்பது என் எண்ணம்.

முற்றிலும் நிராகரிப்பது ஏற்றுகொள்ளமுடியவில்லை.
நான் கடிதம்,விமர்சனங்கள் எழுதுபவன் கிடையாது. அதனால் சுறுக்கமாக முயற்சித்து எழுதியிருக்கிரேன்.
கல்கி, சாண்டில்யன் கதைகளில் லயித்து கிடந்தவன். அரங்கசாமி உங்கள் பக்கம் திருப்பிவிட்டார்.அதன்பின் இடைவிடாது உங்கள் படைப்புகளை வாசிக்கிறேன்.மற்றவர்களையும் வாசிக்கிறேன்.

எனக்கு நாஞ்சில் நாடன் அவர்களின் மாமிச படைப்பு ஒர் திறப்பு. நாவல் நாம் விரும்பும்படி இருக்க வேண்டியதில்லை என.
அதன்பின் தங்களின் வெற்றி சிறுகதை.அதை படித்தபோது எதையும் என்னால் உணரமுடியவில்லை.பின் வந்த விமர்சனங்கள் மட்டுமே முதன்முதலில் எனக்கு ஒரு படைப்பை எப்படியெல்லாம் அணுகவேண்டும்,என கற்றுக் கொடுத்தது.

வாசிப்பில் எனது அடுத்த படி அது.
இலக்கியம் என்பதை தங்கள் வார்த்தைகளின் வழியே புரிந்து கொண்டு இருக்கிறேன்.
“நமக்கு நன்கு தெரிந்த விசயங்களை, முற்றிலும் வேறான சரியான கோணத்தில் சொல்லி, நம் பின் மண்டையில் தட்டி, அட ஆமாம்பா என உணரவைப்பது.”
நன்றி
பிரகாஷ்.

அன்புள்ள ஜெ

ஈர்ப்பு கதை பற்றிய விவாதத்தை வாசித்தேன். இரண்டு வகையிலே சீண்டும் கதை. ஒன்று பெண், காமம் பற்றி எல்லாம் ஆணித்தரமான கருத்துக்களைச் சொல்கிறது. அவை எல்லாமே எதிர்மறையான கருத்துக்கள். பெண்ணியவாதிகளுக்கு பெண்ணைப்போற்றுபவர்களுக்குப் பிடிக்காத கருத்துக்கள்

இன்னொன்று வடிவமில்லாத வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. அது வாசிப்புக்கு எரிச்சலை ஊட்டுகிறது. கதை என நாம் நினைக்கும் எதுவும் இல்லை

ஆனால் இத்தகைய சீண்டலுக்கு இலக்கியத்திலே இடம் உண்டு என்று கொண்டால் இந்த கதைக்கு ஓர் இடம் உண்டு என்றுதான் நினைக்கிறேன்

கருணாகரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9
அடுத்த கட்டுரைதல்ஸ்தோய் உரை- கடிதங்கள்