அது நானில்லை
அன்புள்ள ஜெ
உங்கள் அவன் நானில்லை கட்டுரை சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அது ஓர் உண்மை. எனக்குத்தெரிந்தே ஒருவர் சுந்தர ராமசாமியையும் உங்களையும் பலமுறை நேரில் சந்தித்துத் தாறுமாறாக விளாசியதாக சொல்லிக்கொண்டிருப்பார். அவரிடம் எனக்கு உங்களைத் தனிப்பட்டமுறையில் தெரியும் என்று சொன்னால் திகைத்துப்போய்விடுவார் என்று நினைத்து சொல்லவே இல்லை
ஒருமுறை ஒருவர் மேடையிலேயே அவர் உங்களை அறையவந்ததாகவும் அன்று நண்பர்கள் சிலர் தடுத்ததாகவும் சொன்னார். நான் கேட்டேன், எங்கே நடந்தது அது என்று. அவரால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. சரியாக ஞாபகமில்லை என்றார்
இந்தப் பிரச்சினையை எழுத்தாளர்கள் சமாளிக்கவே முடியாது. ஒரு மூத்த வாசர்கள் சொன்னா ஜெயகாந்தனுக்கு நெருக்கமானவர்கள் என்று நூறுபேராவது தமிழ்நாட்டில் அலைகிறார்கள் அவர்கள் ஜெயகாந்தனைப்பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று சொன்னார்.
ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
அவன் நானில்லை கட்டுரையில் சொன்னதுபோல சும்மா எனக்கு அவரைத்தெரியும், இவரிடம் ஒரு கேள்விகேட்டு மடக்கினேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் நிறைய உண்டு. அதெல்லாம் வெறும் பாவனைகள். அவர்களுடைய தாழ்வுமனப்பான்மையும் அதை ஈகோவாக காட்டிக்கொள்வதுதான் அது
ஆனால் சிலபேர் உண்மையிலேயே சில வார்தைகளை தப்பாக அர்த்தம் செய்துகொண்டு அதையே சொல்லிக்கொண்டிருப்பதுண்டு. அவர்களுக்கு எழுத்தாளர்களைப்பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அதை கலைய அவர்கள் விரும்புவதே இல்லை
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
இந்த முகநூல் காலகட்டத்தில் எவர் வேண்டுமென்றாலும் ஒரு வம்பை எழுதி சுற்றுக்குவிடலாம். அது எங்கேயோ இருந்துகொண்டே இருக்கும். எதிர்காலத்தில் இவற்றைக்கொண்டே எழுத்தாளர்களின் வரலாற்றை எழுதுவதுகூட நடக்கும் என்று தோன்றுகிறது. உங்களைப்பற்றி அப்படி எழுதப்பட்ட பல ‘கதைகள்’ உண்டு. நான் உண்மையைச் சொல்லலாம் என நினைப்பேன். அதெல்லாம் யாருக்கு வேண்டும் என்றும் தோன்றிவிடும்.
ராஜ்