எழுத்தாளரின் பிம்பங்கள்

sura

அன்புள்ள ஜெயமோகன்,
நான் அவனில்லை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் அந்தக்கட்டுரையைப் பற்றி நண்பர்களிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன். பலவகையான கருத்துக்கள் உங்களைப்பற்றி உருவாகி வந்தன அந்தப்பேச்சில். ஆனால் ஓர் இடதுசாரி நண்பர், ஒருவிஷயம் சொன்னார். கொஞ்சம் வயதானவர் அவர். இப்போது இடதுசாரி சார்பு இல்லை. அவர் சொன்னார் இப்போது உங்களைப்பற்றி  இடதுசாரிகளும் உங்கள் எதிரிகளும் சொல்லும் எல்லாவற்றையும் முன்பு சுந்தர ராமசாமியைப்பற்றியும் சொல்லியிருக்கிறார்கள் என்று.

அவர் ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டார். இலங்கையைச் சேர்ந்த டேனியல் ஜீவா என்பவர் எழுதியது என்று சொன்னார். அதில் சுந்தர ராமசாமியை நாகர்கோயிலுக்கு வந்து சந்தித்ததாகவும் சுந்தர ராமசாமி மிகுந்த தன்முனைப்புடன் நடந்துகொண்டதாகவும் எழுதியிருந்தாராம். சுந்தர ராமசாமி ஒரு சுயமோகி என்றும்  சினிமா நட்சத்திரம் போல  தன்னை அலங்கரித்துக்கொண்டு ஒரு மிதப்பிலேயே இருந்தார், அவ்வாறே பேசினார் என்றும் எழுதியிருந்தாராம். சுந்தர ராமசாமிக்குச் சுற்றும் ஒரு நண்பர் குழு இருந்துகொண்டு அவரை வெறுமே ஏற்றிவிடுகிறது என்று எழுதியிருந்தாராம். அத்துடன் சுந்தர ராமசாமி போனபின்னர் அவருடைய கடை ஊழியர் ஒருவர் வந்து சுந்தர ராமசாமி வெளியே காட்டிக்கொள்வதுபோல நட்பானவர் அல்ல, பெரிய காரியவாதி, ஊழியர்களிடம் கணக்குபார்ப்பவர் , கடுமையாக நடப்பவர் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதையும் அவர் எழுதியிருந்தாராம்.

அந்தக்கட்டுரையை அவர் வாசித்ததாகச் சொன்னார். அவர் பொய் சொல்பவர் அல்ல. ஆகவே எனக்கு என்ன தோன்றியது என்றால் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று எவரானாலும் எழுத்தாளர்களைப்பற்றி இப்படி ஒரு சித்திரம்தான் பரவலாக உள்ளது. பாமரர்கள் அவர்களை இப்படியெல்லாம்தான் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் டேனியல் ஜீவா போன்ற எழுத்தாளர்கள் அப்படிச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

எம்.சிவக்குமார்

dominic-jeeva-600

அன்புள்ள சிவக்குமார்,

அந்தக்கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன். எனக்கு அதை சதங்கை ஆசிரியர் வனமாலிகை அளித்தார். அதை எழுதியவர் டேனியல் ஜீவா அல்ல. மல்லிகை இதழின் ஆசிரியரும், இலங்கையின் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான டொமினிக் ஜீவா. மல்லிகை ஜீவா என்றும் அவரை அழைப்பார்கள். அவர் அதை எழுதியது எண்பதுகளின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். மல்லிகை இதழில் வெளிவந்திருக்கலாம்.

ஜீவா நாகர்கோயிலுக்கு வந்து தங்கியிருந்தபோது இங்குள்ள முற்போக்கு எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறார். அவர் சுந்தர ராமசாமியைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு தன் நண்பர்களுடன் சுந்தர ராமசாமி சென்றிருக்கிறார். ஜீவாவின் மனப்பதிவை அவருடைய கோணம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிலுள்ளது ஜீவாவின் பார்வையும் இயல்பும்தானே ஒழிய சுந்தர ராமசாமியின் சித்திரம் அல்ல

சுந்தர ராமசாமியின் ஆளுமையும் படிமமும் தொண்ணூறுகள் வரைக்கும்கூட கறாரான விமர்சகர், பூசலிடுபவர் என்பதுதான். அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது அதைக் கண்டித்து அவர் எழுதிய ‘போலிமுகங்கள்’ என்ற கட்டுரை தமிழ் கருத்துப்பூசல் [polemics] கட்டுரைகளில் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று. பின்னாளில் அந்தச் சுந்தர ராமசாமி ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறார் என்றாலும் வயதானபோது அவருடைய இயல்பில் மாற்றம் ஏற்பட்டது.

எப்போதுமே தான் ஓர் இலக்கியவாதி என்ற நிமிர்வும், தன் இடம் பற்றிய தெளிவால் உருவான தோரணையும் அவரிடமிருந்தது. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருந்தனர். அவர்கள் அவர்மேல் மதிப்பு கொண்டவர்கள். எழுத்தில் மெல்லமெல்ல சுந்தர ராமசாமி மரபு ஒன்று உருவாகி வந்த காலகட்டம் அது. ஆகவே அவரிடம் பெருமிதமான போக்கு இருந்திருக்கலாம். அத்துடன் அவருக்கு அன்று முற்போக்கு எழுத்துக்களில், ஜீவா போன்றவர்களில் பெரிய மதிப்பு ஏதும் இல்லை. அவர் ஒரு மரியாதைக்காகவே சந்திக்க வந்திருக்கிறார்.

ஜீவா போன்றவர்களின் பார்வை வேறு. அவர் அடிப்படையில் ஓர் இடதுசாரிச் செயல்பாட்டாளர்.  அவர்கள் இலக்கியவாதியை ஒருவகை பொதுச்செயல்பாட்டாளனாக மட்டுமே பார்ப்பவர்கள். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்காரரின் இயல்புகளை அவர் எதிர்பார்த்திருக்கலாம். அவருக்கு தன்மேல் மதிப்பில்லை என்பதும் ஜீவாவுக்குத் தோன்றியிருக்கலாம்.

காரியக்காரர் என்றால், நான் அறிந்த சுந்தர ராமசாமி அப்படித்தான். வணிகம் செய்தவர். மனிதர்களை அளவிட்டு வைத்திருந்தவர். தெளிவான திட்டங்களுடன், எண்ணிச் சொல்லெடுத்துப் பழகுபவர். அவர் நாவில் அவர் எண்ணாத எதுவும் வந்துவிடாது – நான் நேர்மாறு. கறாரானவர், பண விஷயங்களிலும் உறவுகளிலும். ஆகவேதான் அவரால் வெற்றிகரமான வணிகராக இருக்கமுடிந்தது

ஆனால் அவரிடம் ஓர் இலட்சியவாதம் இருந்தது. அதுதான் நமக்குத்தேவையான முகம். நாகர்கோயிலில் ஒரு பெரும்புள்ளியான அவர், என்னையோ . யுவன் சந்திரசேகரையோ, மனுஷ்யபுத்திரனையோ, லட்சுமி மணிவண்ணனையோ போன்ற இளைஞர்களுடன் அத்தனை பொழுதைக் கழிக்கவேண்டியதில்லை. அவர்களின் உருவாக்கத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டியதில்லை. தனிவாழ்க்கையிலும் உதவிகள் செய்யவேண்டியதில்லை. தமிழ் அறிவியக்கம், இலக்கியம் சார்ந்து அவர் பெரிய கனவுகள் கொண்டிருந்தார். அதையே தன் வாழ்க்கையின் மையமான செயல்தளமாகக் கொண்டிருந்தார். அதுதான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி

சுயமோகத்தைப் பொறுத்தவரை உச்சகட்ட சுயமோகமே இலக்கிய எழுத்தின் அடிப்படை விசை. பல்லாயிரம் மேதைகள் எழுதியபின்னரும் நானும் எழுதுவேன் என ஒருவன் எண்ணுவதே சுயமோகத்தால்தான். நான், என்குரல், என் உணர்வு என எண்ணாமல் எந்த எழுத்தாளனும் செயல்படமுடியாது. வெற்றுப்பணிவும் ஒடுக்கமும் இலக்கியவாதியின் இயல்புகள் அல்ல. சமூகம் அவற்றை கட்டாயப்படுத்துவதனால் அவன் அதை அடக்கிக்கொண்டு எளிமையை நடிக்கலாம்.

எழுத்தாளனின் சுயமோகம் தன் எழுத்தின்மேல் மட்டுமே இருக்கும், அரிதாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றவர்களுக்கு தன் தன் தோற்றத்தின்மேலும் சற்று இருந்தது. தன் உருவத்தை மிகச்சிறப்பாக மட்டுமே வெளிப்படுத்தவேண்டும் என முயற்சி எடுத்துக்கொள்வார்கள் அவர்கள். சுந்தர ராமசாமியை நான் சிறந்த தோற்றத்திலன்றி பார்த்ததே இல்லை.மற்றபடி தன்னை வியந்து தருக்குவதும் எங்கும் தன்னை துருத்திக்கொள்வதுமல்ல அது. சுந்தர ராமசாமி தன்னைவிட மூத்த அறிஞர்கள்முன் எளிய மாணவனாக நின்றிருப்பதையும் கண்டிருக்கிறேன்

ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த ஆளுமையைப்பற்றி முற்றிலும் மாறுபட்ட பல சித்திரங்கள் பலகோணங்களில் எழும். அவற்றினூடாக ஓடும் பொதுமையே அவர்

ஜெ

முந்தைய கட்டுரைநகல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9