ஈர்ப்பு இரு எதிர்வினைகள்

sures

ஈர்ப்பு

ஈர்ப்பு- கடிதங்கள்

பசித்த மானுடத்தின் ஈர்ப்பு-கடிதம்

அன்பு ஜெயமோகன்,

சுரேஷ் பிரதீப் அவர்களின் ஒரு கதையைக் கூட நான் படித்ததில்லை. ஈர்ப்புதான் முதல் கதை. துவங்கியதுமே என்னைச் சிதறடித்த கதை. மிக மிக நுணுக்கமான கதை. கதை குறித்து உங்களுக்கு உடனே எழுத வேண்டும் என நினைத்தேன்; காலந்தாழ்ந்து விட்டது. அதற்குள் ஈர்ப்பு கடிதங்களும் வெளியாகி விட்டன. அக்கடிதங்களைப் படிக்கையில் எனக்கு அபத்தமாகப் பட்டது. ஒரு சிறுகதையைக் கட்டுரையைப் போல அணுகியிருந்த கடிதாளர்களை நான் கோபிக்கப்போவதில்லை. என்றாலும், அவர்களின் ’அறச்சீற்றம்’ எனக்கு ’அடிப்படைவாதிகளை’ நினைவூட்டியது.

தட்டையான சிந்தனைகளில் அழுந்திப்போயிருக்கும் சமூகப்பரப்பில் ஒரு அசல் படைப்பை முன்வைப்பது என்பதுதான் எவ்வளவு சிக்கலானது? சுரேஷ் பிரதீப் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறார். அவரை மனமுவந்து வாழ்த்துகிறேன். ஈர்ப்பு கதை எவ்விதத்திலும் பாதிப்பை உண்டாக்கிவிடப் போவதில்லை என்று ஒரு கடிதாளர் எழுதுகிறார். படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்தேன். உண்மையின் அவர் படைப்பு என்பதைத் தட்டையாக புரிந்து வைத்திருக்கிறாரோ என்று தோன்றியது. ஈர்ப்பு கதையே அல்ல எனச் சொல்லவும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அதைச் சொல்லும் முறைகள் இவையல்ல என்பதைக் கடிதாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சுரேஷ் பிரதீப் மிகத்தெளிவாகவே தன் கதையைத் துவக்கி இருக்கிறார். ”எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது” எனும் கதையின் முதல்வரி மிக முக்கியமானது. ”ஒரு மெல்லிய சுய ஏமாற்றுடன் நிகழ்வுகளை(நினைவுகளை) மகிழ்ச்சிகரமானவையாக அல்லது துன்பம் தந்தவையாக கற்பனை செய்து கொள்கிறோம்!” எனும் வாக்கியத்தில் மெல்லிய சுய ஏமாற்று எனும் பதம் மிக முக்கியமானது. கடிதாளர்களிடம் நான் அதையே கவனித்தேன்.

தன்னுடைய நினைவுகளைக் கற்பனைகளாக்கிக் கொண்டு அல்லாடும் மனிதர்களைக் கவனிக்கும் ஒரு தனிமனிதன் தன் அனுபவங்களை அப்பட்டமாகப்(எவ்வித ஒளிவுமறைவுமின்றி) பகிர்ந்து கொண்டு செல்வதுதான் கதையின் தடம். அனுபவப்பகிர்வாளனின் அனுபவங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி கதாசிரியன் எங்கும் வற்புறுத்தவில்லை. கூடவே, அவனின் அனுபவங்களை மதிப்பீடுகளாக்கவும் அவர் உத்தேசிக்கவில்லை. முதலில் ஒரு வாசகன் இதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். “நான் ஏன் பெண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை என்ற ஆற்றாமையால் நான் இவ்வாறெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா? உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் புலம்பக்கூடிய அளவுக்கு நான் தெளிவடைந்து இருக்கிறேன்”, “அந்த வெறுப்பினை அனுபவிக்காதவர்கள் நான் இப்போது சொல்வதுடன் தங்களை இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது. உங்கள் அனுபவத்தளத்துக்குள் வந்திருக்க வாய்ப்பில்லாத ஒன்றை வார்த்தைகளாக மாற்ற முனைகிறேன்”, ”ஆனால் நான் கேட்பதில் இருக்கும் நியாயம் மட்டும் உங்களுக்கு விளங்காது”,” இதை உங்களால் எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை” போன்ற வாக்கியங்களில் இருக்கும் உண்மையை நெருங்க கதைசொல்லியின் அனுபவங்களை முன்முடிவுகள் இன்றிக் கவனிப்பது மிக அவசியம்.

பெண்களைக் கொச்சைப்படுத்துவது போன்ற தோற்றம் இயல்பாகவே இக்கதையில் இருக்கிறது. அதனாலேயே, இக்கதையை கதை அல்ல என்று வாதிட வருகிறார்கள் என நான் நினைக்கிறேன். இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சுரேஷ் பிரதீப் பிரச்சார எழுத்தாளர் அல்ல. மேலும், அவர் கதையில் தென்படுவதும் பிரச்சார தொனியன்று. ஆண், பெண், காமம், வாழ்வு போன்ற சொற்களைக் குறித்த அவரின் அனுபவங்களை அல்லது அவர் செவிமடுத்த அனுபவங்களைப் புனைவு கலந்து சிறுகதையாக்கி இருக்கிறார். அவ்வகையில் அவரை நாம் முதலில் வரவேற்க வேண்டும். பிறகே, விமர்சிக்க வேண்டும்.

பெண்கள் என்றாலே தொடைகளும், முலைகளும்தானா எனப் பொங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது; பொங்கலாம். ஆனால், அப்படியான கோணமே படைப்பில் வந்துவிடக்கூடாது எனும் புனிதத்தன்மையை எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக் கொள்வது?

அனுபவப்பகிர்வாளன் குறிப்பிட்டு வரும் அனுபவங்களைச் சமீப காலத்தில் சிலருடைய வாழ்வில் நான் நேரடியாகக் கண்டவன். நாம் முன்வைக்கும் கன்னிமை, பெண்மை, தாய்மை போன்றவற்றில் பெண்களுக்கான ’சமூக அடையாளம்’ இருக்கிறதே தவிர அவர்களின் ‘சுய அடையாளம்’ துளியும் இல்லை. ஒரு நல்ல படைப்பு என்பது எவ்விதப் புனிதத்தரிசனத்தையோ அல்லது அறக்கோட்பாடுகளையோ வகுத்தளிப்பதாக இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. அடையாளங்களுக்குள் மறைந்திருக்கும் நம் தனித்தனி சுயங்களைப் பகிரங்கப்படுத்துவதும் நல்ல படைப்பே. அப்படியான படைப்புகளே, நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கும் சித்திரங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தும். ஆட்படுத்தா விட்டாலும், கொஞ்சம் நம்மை யோசிக்கச் செய்தால் கூட போதுமானது.

ஒரு ஆணின் பார்வையில் இன்றளவும் பெண் உடலாக மட்டுமே பார்க்கப்படுகிறாள் எனும் கருத்தை ஏற்கப் பொதுவெளியில் தயக்கம் காட்டவே செய்வோம். இங்குதான் கொஞ்சம் மேலதிகமாக யோசிக்க வேண்டும். சமூகத்தின் பார்வையில் உடல் என்பது காமத்துக்கானது. அது ஆணின் உடலாக இருக்கலாம் அல்லது பெண்ணின் உடலாக இருக்கலாம். வாளிப்பான ஆணின் உடலுக்கும், வாளிப்பான பெண்ணின் உடலுக்கும் கிராக்கி அதிகம். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் நாவலில் கணேசனின் வாளிப்பான ஆண் உடல் குறியீடாக உரு கொண்டிருக்கும். ஈர்ப்பு கதையில் வாளிப்பான பெண் உடல் குறியீடாகத் துலக்கம் பெற்றிருக்கிறது.

ஒரு வாரம் முன்பு வஞ்சகர் உலகம் எனும் படம் பார்த்தேன். மிகச் சிறப்பான படமாக எனக்குப் பட்டது. திரை உருவாக்கத்தில் இருந்த குறைகளை அப்படத்தின் நுண்தன்மை மறக்கடித்து விட்டது. குரு சோமசுந்தரக் கதாபாத்திர வார்ப்பில் அதிர்ந்து போனேன். சுயத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக குருசோமசுந்தரம் எடுக்கும் முயற்சிகளைக் கண்டு பதறினேன். என்றாலும், என் வாழ்வின் பல தருணங்களில் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை அசைபோட்டுப் பார்க்க அப்படம் தூண்டியது. அப்படம் பார்த்த இரண்டு நாட்களில் ஈர்ப்பு கதையைக் கடலூர் சீனு பகிர்ந்திருந்தார்.

சுரேஷ் பிரதீப்பிடம் பேச வேண்டும் போல் இருந்தது. கடலூர் சீனுவிடம் எண் பெற்று அவரை அழைத்தேன். அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு முடியும் நேரத்தில் “கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்டேன். “இப்போதுதான் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. இனிதான் எனக்கு பெண்பார்க்கும் படலம் துவங்கும்!” என்றார். “வாழ்த்துக்கள்” எனச் சொல்லிவிட்டு “உங்களுக்கு வயது என்ன?” என்று கேட்டேன். “26” என்றார். ஈர்ப்பின் கதையைப் படித்த போது சிதறடிக்கப்பட்டதை விட அப்போதுதான் அதிகம் சிதறடிகப்பட்டேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

ஈர்ப்பு -கடிதம்

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு ,

தளத்தில் இட முடிந்த மூன்று கடிதத்துடன் நிறுத்திக்கொண்டு என்னை காப்பாற்றியமைக்கு நன்றி : )

கடலூர் சீனுவும் அதிகப்பிரசங்கத் தனமும் .

கொஞ்சம் அதிகப் பிரசங்கி வாசகனாகவே இருந்து விட்டு போகிறேனே .என்ன கொஞ்சம் அடிகளும் ,கொட்டுகளும் வந்து விழும் அவ்வளவு தானே . வாசகர் வாசிப்பை முன் தீர்மானம் போல சொன்ன காரணம் ,இக் கதை மேல் விவாதம் நிகழ்ந்தால் அது இங்கே துவங்கி இங்கே முடியும் ஒன்றாக ஆரம்பத்திலேயே இருந்து விட வேண்டாமே என்பதன் பொருட்டு ஒரு சீண்டல் துவக்கம்தான் . மற்றபடி தமிழின் சிறந்த வாசக மனங்களை இங்குதான் பார்க்கிறேன் என பல எழுத்தாளர்கள் சொல்லியதை நான் எப்படி மறுப்பேன் ? ஏ வி மணிகண்டன் , ஜா ஜா இவர்கள் எல்லாம் இந்த தளத்தின் வாசகர்கள் தானே ? தனிப்பட்ட முறையில் எனது நண்பர்களும் கூட . விவாதம் எதுவும் நிகழாத நிலையில் ,எனது அந்த வரி , இந்த தளத்தின் வாசகர் மீது ஒரு விமர்சனமாக நிற்ப்பதால் அதற்கென

மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன் .

ஜெயமோகன் பரிந்துரைக்காதவையும் தளத்தின் மாண்பும் .

நீங்கள் பரிந்துரைக்காத கதைகள் வழியே தளத்தின் மாண்பு குறைவதாக ஒரு குற்றச்சாட்டு .நீங்கள் பரிந்துரைக்காத கதை வழியே நிகழ்ந்த முரண் இயக்கம் வழியேதானே ‘ஒரு கோப்பை காபி ” எனும் கதை கிடைத்தது? நீங்கள் பரிந்துரைக்காத கதைகள் ,உங்கள் கருத்துக்கள் மதிப்பு வாய்ந்தவை போன்ற வாக்கியங்கள் வழியே , உங்களை சரிக்கும் சதியாளன் நான் என அறிகிறேன் . ஆகவே இந்த தளத்தின் மாண்பு குறைக்கும் செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் என இதன் பெயரால் உறுதி கூறுகிறேன் .

இந்தக் கதையும் இந்தத் தளமும் .

இந்தக் கதை இந்த தளத்தின் வாசகர்கள் கொண்டு விவாதிக்கப்பட வேண்டும் என நான் விரும்பிய காரணம் …

ஒரு கலை சூழலில் ஒரு புதிய சாதனை ஒன்று உருவாகி வரும் போது, அதை அடி ஒற்றி ,அல்லது நகல் செய்து அந்த சாதனையின் சுவடுகள் தொடரும் .உதாரணம் ஓவியர் சண்முகவேல் அவர்களின் ஓவியங்கள் நிகழ்த்திய பாதிப்பை குறிப்பிடலாம் .

அது போலவேதான் வெண் முரசு எனும் நாவலும் .அதன் தருணங்களை தனக்கான படைப்புத் திறனுக்கு ஸ்பார்க் ஆக கொண்டுஇளம் எழுத்தாளர்களால் பல கதைகள் எழதப் படலாம் . அப்படி வெண் முரசை தனக்காக கொண்டவர் சுரேஷ் பிரதீப் .அதன் தருணங்களின் ஒன்றின் சவாலை, புதிய வடிவ முறை வழியே தனது கதையில் எய்த முயன்றிருக்கிறார் சுரேஷ் பிரதீப்.

எனது தரப்பு .

பொதுவாக எழுத்தாளர் அகத்தில் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கும் ஒன்று ,கதை எழுதி முடித்த பின் அந்த கதைக்குள் சப் டெக்ஸ்ட் ஆக இலங்கும் . அந்த சப் டெக்ஸ்ட் வாசிப்பு இன்பமாக வாசகனுக்குள் நிகழவே .வடிவ உத்திகள் கையாளப் படுகிறது . கதையை விட்டு கதையை வெளியேற்றிய கதைகள் ,அ நேர்க்கோட்டு கதைகள், மினிமலிச சித்தரிப்பு கதைகள் என பல வடிவங்கள் வந்து சென்று விட்டன ,இனி புதிதாக ஒரு வடிவம் எனும் போது, இவற்றை கலைத்து அடுக்கி ,மெல்லிய வேறுபாடு கொண்டு சில வடிவங்களை உருவாக்கலாம் .

இந்தக்கதை அக வயமான துண்டு துண்டான தன்னுரை வழியே நகர்ந்து ,புறவயமான சித்தரிப்பு ஒன்றில் நிறைவதை தனது வடிவமாக கொண்டிருக்கிறது .இந்த வடிவத்துக்குள் கதை சொல்லி என்னவாக இருக்கிறான் ? தனித்த தன்னிலை என ஒன்றில்லை . பிறருக்கு நாம் காட்டும் பாவனைகள் வழியே ,அந்த பாவனைகளை நம்பும் நிலையையே நாம் நமது ஆளுமை என சொல்கிறோம் . இதுவே கதை சொல்லின் நிலைப்பாடு .ஆகவே கதை இந்த பாவனையை எடுத்துக் கொள்கிறது .

ஆண் பெண் இடையே நிகழும் பாவனை எல்லாம் , பாவனை முகமூடி அணிந்தது தன்னை வெளிக்காட்டும் காமமே என்பது கதை சொல்லியின் தன்னுரை வழியே துலங்குகிறது . இப்படிப்பட்டவன் ஈர்க்கப்படுகிறான் . யாரால் எந்த பாவனையும் அற்ற சிந்துவால் . ஆடை புனைவதும் ,அதை களைவதும் கூட காமத்தின் முன் விளையாட்டுக்கள் என நோக்கும் அவன் முன் நேரடியாக நின்று நேரடியாக அழைக்கிறாள் . அவன் எதிர்பார்க்கும் பாவனைகளால் மறைக்கப்படாத தூய காமம் மட்டுமே கொண்டு நிற்கும் பெண் .

சிந்து ஏன் அவனால் ஈர்க்கப்படுகிறாள் . காரணம் அவளும் அவன் சிந்தித்து கடந்து வந்து பாவனை அற்ற காமத்தை தேடி நிற்ப்பவன் போல ,இவளும் அதே பாதை வழியே அப்படி வந்து நிர்ப்பவள் . என் சிந்து என அவன் மனத்துக்குள் சொல்லும் போதே விழத்துவங்கி விடுகிறான் . இவ்வளவுதான் அவன் என்பதை அவனால் ஜீரணிக்க இயலவில்லை . அவளது தொடையில் முத்தமிடுவதன் வழியே இவ்வளவுதான் நீ என அவளுக்கு அறிவித்து அவளை கீழிறக்குகிரான் .அங்கே நிகழ்கிறது அவனது முழு தோல்வி .

இந்த சப் டெக்ஸ்ட் கான குறிப்பால் உணர்த்தும் அத்தனை தன்னுரைகளும் சித்தரிப்புகளும் அக் கதையில் உள்ளது . கதையீன் பலவீனமான அம்சம் .அதன் முதிர்ச்சியற்ற மொழியும் ,கூறு முறையும் . கதை சொல்லியின் நோக்கு பெண்ணை வெறுத்து ஒதுக்கும் சித்தனின் நோக்கு அல்ல , கிட்ட தட்ட காமத்தை தனது புருஷார்த்தங்களில் ஒன்றாக கருதும் சார்வாகனின் நோக்கு .

அந்த நோக்குக்கான பலம் மொழியில் ,கூறு முறையில் நிகழவில்லை . இரண்டாவதாக எந்தக் கதையும் வாசகரை தன்னுள் இழுக்கும் கூறுகளை தனது உடலாக கொண்டிருக்கும் . மாறாக ஈர்ப்பு எனும் மையத்தை நோக்கி நகரும் இந்த கதை ,அதன் உடலின் அனைத்து பகுதிகளிலும் விலக்கி வைக்கும் ஒவ்வாமையை தனது உணர்வு நிலையாக கொண்டிருக்கிறது . முற்றிலும் நெகட்டிவ் அப்ரோச் . இதன் காரணமாக இக் கதையின் குறிப்பால் உணர்த்தும் கூறுகள் யாவும் வாசகனுக்கு கம்யூனிக்கேட் ஆவதில் பின்தங்குகிறது .

இந்த கதையை முதன் முதலாக நண்பர்கள் வசம் சுட்டி காட்டியதில் இருந்து ,மேற்கண்ட கடிதங்கள் வரை இக் கதையை முற்றிலும் நிராகரிப்பதாகவே இருக்கிறது . அவை சுட்டிக்காட்டிய எதிர்மறை அம்சங்களுடன் , அப்படியே முடிந்து போக வேண்டிய கதை அல்ல அது என தீவிரமாக உணர்ந்த காரணம் கொண்டே ஒரு விவாத முகமாக இதை பரிந்துரைத்தேனே அன்றி . தேர்ந்த வாசகர்களை மோசடி செய்யும் எண்ணத்தில் அல்ல .

உங்கள் தளத்தின் மாண்பை குலைக்கும் எண்ணம் ஏதும் எனக்கில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொண்டு . நிகழாத விவாதத்தை இங்கே இத்துடன் இதை இறுதிப் பதிவாக்கி நிறைவு செய்கிறேன் .

மற்றபடி எப்போதும் என்னை பொறுத்துக்கொள்ளும் ஆசிரியருக்கும் ,சகித்துக்கொள்ளும் நண்பர்களுக்கும் என் நன்றியும் , அன்பும் : )

கடலூர் சீனு .

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6
அடுத்த கட்டுரைகாந்தியைப் பற்றி ஒரு நாவல்