ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்

sun

ஈர்ப்பு

ஈர்ப்பு- கடிதங்கள்

அன்புடன் ஆசிரியருக்கு

இந்த விவாதத்தை நானும் கவனிக்கிறேன். இக்கதை இரண்டு விதமான எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. சிறந்த வாசகர்கள் என்று நான் எண்ணும் பலர் இக்கதையை அதன் வடிவத்திற்கென்றே புதிய முயற்சி நல்ல கதை என்றெல்லாம் சொல்கின்றனர். இந்த வடிவம் காரணமாகவே இது சிறுகதை போலவே இல்லை. ஏதோ காழ்ப்பு நிறைந்த புலம்பலைத் தொகுத்தது போல உள்ளது என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி விமர்சிக்கிறவர்களிலும் நான் அறிந்த நல்ல வாசகர்கள் உண்டு.எப்படி இருந்தாலும் கதை மீதான விமர்சனங்கள் மகிழ்வளிக்கின்றன.

நேற்றிரவு கடிதங்களைப் படித்தவுடன் உங்களுக்கு எழுத எண்ணினேன். ஆனால் உடனடியாக எதிர்வினை ஆற்றுவது தவறென்று தோன்றியது. உறங்கிய சில நிமிடங்களில் உங்கள் மின்னஞ்சல் வந்திருக்கிறது. விடியலை உற்சாகமானதாக இந்த மடல் உணரச் செய்தது. வெளியானதில் இருந்து தினம் ஏதோவொரு வகையில் இக்கதை பேசப்படுகிறது. கதையால் சீண்டப்பட்டே இந்த எதிர்வினைகள் வருவதாகத் தோன்றுகிறது.

இக்கதையில் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது வாசக இடைவெளியே இல்லை என்று பலர் சொல்லிவிட்டனர்.
இதனைக் கடந்து உண்மையில் கதைசொல்லியின் உணர்வுநிலையை அவன் வார்த்தைகளில் இருந்து ஊகிக்கும் வாசிப்பு வருகிறதாவென பார்க்கலாம். அவனொரு “நேர்மையில்லாத” கதைசொல்லி என்று மட்டும் இப்போது சொல்ல விழைகிறேன்.

நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

aso

 

அன்புள்ள சுரேஷ்

இந்தக்கதையை எழுதியபோதே உங்கள் பணி முடிந்துவிட்டது. இனி அதை எப்படி வாசிக்கிறார்கள் என்பது உங்கள் பணி அல்ல. வாசிக்கிறார்களா என்று கவனியுங்கள், போதும். வாசித்தாலே வெற்றிதான்.

பொதுவாக இத்தகைய கதைகளுக்கு எதிர்வினைகள் உருவாகவேண்டும். எதிர்வினைகள் வழியாக ஒரு புதிய பிரதி திரண்டு உருவாகிறது. அதாவது நீங்கள் எழுதியதும் சூழலால் வாசிக்கப்பட்டதுமான ஒரு பொதுப்பிரதி. அந்த உரையாடல் நிகழ்வது நல்லது

தமிழில் பல கதைகள் அவ்வாறு விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் ஆகியவை உச்ச உதாரணங்கள். சுந்தர ராமசாமியின் பிள்ளைகெடுத்தான் விளை, என்னுடைய வெற்றி போன்றவை சிறுவட்டத்துக்குள் பேசப்பட்டவை

இவ்வாறு விவாதிக்கப்பட்ட படைப்புகள் அனைத்துமே ஏதேனும் வகையில் ஒழுக்கம்சார்ந்த சீண்டலை அளித்தவை என்பதைக் காணலாம். தமிழ்க்கதைவாசகனின் உள்ளார்ந்த பலவீனமான புள்ளி அது. ஆனால் இக்கதைகள் அனைத்துமே அந்த எல்லைக்கும் அப்பால் சிலவற்றைப் பேசியவை

இனி இக்கதைக்கு வருகிறேன். இதன் வடிவம் சார்ந்த ஒரு ஒவ்வாமை பலருக்கு உள்ளது. இது ‘கதை’ ஆக இல்லை. அதாவது ஒன்றுடன் ஒன்று தொட்டுச்செல்லும் நிகழ்வுகள் இல்லை. எண்ணங்களாக உள்ளது.ஆகவே இது கதையா என்னும் கேள்வி எழுகிறது

லக்‌ஷ்மி மணிவண்ணன்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

இலக்கியத்தில் தேவையானது ஒரு முரணியக்கம். அது நிகழ்வாகவும் இருக்கலாம். எண்ணங்களாகவோ சிந்தனைகளாகவோ இருக்கலாம். அத்தகைய பல கதைகள் இருத்தலியல் ஓங்கியிருந்த காலகட்டத்தில் உலக இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளன. தமிழில் சுந்தர ராமசாமியின் முட்டைக்காரி ஓர் உதாரணம். லக்ஷ்மி மணிவண்ணன் இந்தவகையான கதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.உதாரணம், சித்திரகூடம். அசோகமித்திரனின் காந்தி போன்றவையும் சற்றேறக்குறைய இவ்வடிவில் எழுதப்பட்டவை. ஆசிரியரோ என ஐயம்கொள்ளச்செய்யும் கதைசொல்லியின் சிந்தனைகள் மற்றும் அவதானிப்புகள் வழியாகச் செல்லும் கதைகள்.

இத்தகைய கதைகள் ஒருமை, கூர்மை ஆகியவற்றால் தொடர்புறுத்துவதில்லை. இவை சிதறடிக்கவும் வழிதவறச்செய்யவும் விரும்புகின்றன. முரண்பாடுகளையும் சிடுக்குகளையும் சொல்ல நினைக்கின்றன. ஆகவே இவற்றுக்கான இலக்கணம் வேறு

இன்று எழுதும் ஓர் எழுத்தாளர் இவ்வடிவை ஏன் தெரிவுசெய்கிறார், இதை வாசகர்கள் எவ்வகையில் எதிர்கொள்கிறார்கள் என்று அறிய விரும்பினேன். கதை என்னும் வடிவுக்கு அப்பால் செல்ல இன்றைய இலக்கிய எழுத்து விரும்புகிறதா ? கதைக்கு நியதமான வடிவங்களேதுமில்லை. அது உருவாக்கும் விளைவே அது

இக்கதையை  விரிவாக விளக்கவோ விவாதிக்கவோ நான் விரும்பவில்லை.ஏனென்றால் அது அங்கே படைப்பை நிறுத்திவிடும். இதை ஒருவனின் நுட்பமான தன்நடிப்புகள் என நான் வாசித்தேன். அவன் சிறையில் இருக்கிறான். அதற்குக் காரணமான ஒரு நிகழ்வு இறுதியில் சொல்லப்படுகிறது. அதை நியாயப்படுத்திக்கொள்ள, அதிலிருந்து தன்னை விலக்க அவன் கதைக்குள் பேசுகிறான். அப்பேச்சு ஒருபகுதி உண்மையாகவும் மறுபகுதி அவனுடைய பாசாங்காகவும் உள்ளது. அதனூடாக அவன் தன்னை கொஞ்சம் வெளிப்படுத்தி கொஞ்சம் மறைத்துக்கொள்கிறான்.

sures

இக்கதை இந்த நடிப்பைச் சொல்லிவிடுவதனால்தான் குறிப்பிடத்தக்க ஆக்கம். இதன் எதிர்மறை அம்சங்கள் கதைசொல்லியின் சூழலும் பிறவும் முன்னரே வந்து அவன் முகம் தெளிந்திருந்தால் இது வெறும் எண்ணச்சிதறல்களோ, ஆசிரியனே சொல்லும் வெற்றுக்கருத்துக்களோ என்ற ஐயம் வாசகனுக்கு இறுதிநிகழ்வு வரை நீடித்திருக்காது. அந்த எண்ணச்சிதறல்களில் நிகழ்வுகள் இன்னும் கூடுதலாக ஊடாடியிருக்கலாம்

பொதுவாக எனக்கு இவ்வகை கதைகளில் பெரிய ஈடுபாடில்லை. நான் ‘கதைகளை’ எழுதவே விரும்புகிறேன். கதை என்பது வாழ்க்கையின் ஒரு கீற்றாக, மெய்நிகர் அனுபவமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். இத்தகைய கதைகள் வாழும் அனுபவத்தை, கற்பனை விரிவை அளிப்பதில்லை. மூளையால் வாசி என வாசகனுக்கு ஆணையிடுகின்றன.

ஆனால் என் ரசனை இன்னொருவர் எழுத்துக்கான நிபந்தனை ஆக வேண்டியதில்லை என்றும் தோன்றுகிறது. இயல்புவாதக் கதைகளையும் நான் எழுதவிரும்புவதில்லை. ஆனால் அடுத்த தலைமுறையிலிருந்து  வரவிருக்கும் கதைகளில் இத்தகையவை ஓர் இடம் பிடிக்கும் என்றால் அது காலத்தின் திசை. எப்போதும் மறுத்து மறுத்துத்தான் இலக்கியம் முன்னகர்கிறது

அத்துடன், இக்கதையின் தரிசனரீதியான போதாமை ஒன்றுண்டு. எனக்கு அது என்னுடைய அவதானிப்பாகவே உள்ளது. கதைசொல்லி சூழ்ச்சி நிறைந்தவன். ஆகவே மொத்த ஆண்பெண் உறவையும் சூழ்ச்சிகளாக, காய்நகர்த்தல்களாக சித்தரிக்கிறான். ஆகவே கதையே உறவுகள் என்பவை ஒருவகையான சூழ்ச்சிவலைதான் என்ற பார்வையை உருவாக்கி முன்வைக்கிறது

என் அவதானிப்பில் பெரும்பாலும் மானுட உறவுகள் உணர்ச்சிகரமான அசட்டுத்தனத்தாலும், அன்றாடச் சலிப்பிலிருந்து தப்ப விழையும் துடிப்பினாலும்தான் உருவாகின்றன. ஆகவே இக்கதை தன்னளவில் எல்லைக்குட்பட்டது என நினைக்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைகலாமோகனின் நிஷ்டை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8