நகல்

vishஅன்புள்ள ஜெ,

“குற்றமும் தண்டனையும்” நாவல் வாசிப்பை ஒட்டி இணையத்தில் தஸ்தாவெய்ஸ்கி பற்றிய கட்டுரைகளை தேடி படித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக இப்பதிவு கண்களில் தட்டுப்பட்டது.

http://praveenbalasubramanian.blogspot.com/2018/04/blog-post.html?m=1

ஆம். “தஸ்தாவெய்ஸ்கியை நிராகரித்தல்” என்கிற தலைப்பில் உங்கள் தளத்தில் வெளியான எனது கடிதமேதான். நபர் யாரென்று தெரியவில்லை. தன்னிலை முன்னிலையை மட்டும் மாற்றி சொந்த கட்டுரைப் போல் பிரசுரித்திருக்கிறார். இதை கண்டதும் உடனடியாக கோபமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை; குழப்பம்கூட இல்லை; முகம் முழுக்க நிறையும் புன்னகையே தோன்றியது.  இப்போதும் அந்த மலர்ச்சி விலகாமல்தான் தட்டச்சு செய்கிறேன். அந்த நேர்மையின்மையில் உள்ள அசட்டு முட்டாளத்தம் உண்மையில் சுவாரஸ்யத்தையே தூண்டுகிறது. அந்த வலைப்பூவில் இப்படி பல கட்டுரைகள் இருக்கின்றன. எதை எதிர்பார்த்து அவர் இதையெல்லாம் செய்துக் கொண்டிருக்கிறார்?

போர்ஹெ தன் முதல் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில்  பின்வருமாறு எழுதுகிறார் :

“இவை (இக்கதைகள்) கூச்ச சுபாவமுள்ள இளைஞன் ஒருவனின் பொறுப்பற்ற விளையாட்டு. அவனுக்கு கதைகள் எழுதும் தைரியமில்லை. எனவே மற்றவர்களுடைய கதைகளில் பொய் கலந்தும் அவற்றின் ஒழுங்கை குலைத்தும் (அழகியல் நியதியோ எதுவுமோ இல்லாமல்)  தன்னை அவன் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டான்”

இன்னொரு விஷயம், அந்த நபருக்கு உங்கள் மேல் பைத்தியக்காரத்தனமான காதல் இருக்கிறது. பிற உடல்களின் மூலமாக  கற்பனையிலேயே உங்களோடு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். எதற்கும், தெருவில் சந்தேகத்துக்கு இடமாக யாரையாவது பார்த்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

அன்புடன்,
விஷால் ராஜா

அன்புள்ள விஷால்

எழுத்தின் வழிகள் சிக்கலானவை. அந்த எழுத்தாளர் இதை ஒருவகையான ரகசியமான பயிற்சியாகச் செய்கிறார் என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அல்லது தன் சிறுசூழலில் எழுத்தாளராக தன்னைக் காட்டிக்கொள்ளச் செய்கிறார் என்றாலும் பெரிய பாதகமில்லை. இத்தகைய பலவகையான பாவனைகளின் வழியாகவே எழுத்தாளன் உருவாகி வருகிறான்

இதிலுள்ள கற்பனையில் ஒரு முதிரா இளைஞனின் திளைப்பு உள்ளது. அது மெய்யாகவே நல்ல விஷயம்தான் என தோன்றுகிறது. நாளை இவர் நன்றாகவே  எழுதக்கூடும்.

ஜெ

குறிப்பு
அவர் யார் என்று தெரியவில்லை. பி.பிரவீன் என்ற பேரில் ஒரே ஒரு மின்னஞ்சல், நான் பத்மஸ்ரீ விருதை மறுத்தபோது வந்திருக்கிறது.

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய் உரை
அடுத்த கட்டுரைஎழுத்தாளரின் பிம்பங்கள்