ஈர்ப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
சுரேஷ் ப்ரதீப்பின் ஈர்ப்பு சிறுகதை படித்தேன். என்ன சொல்வது… என் வாசிப்புத்தான் சரியில்லையா என்று சந்தேகம் வர நண்பர் ஒருவரை படிக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் என் கருத்தையே சொன்னார்.
வண்ணக் காகிதங்களால் காலி டப்பாவை அலங்கரித்து பரிசு கொடுப்பதுபோல் சீனு அவர்கள் இக்கதையைப் பற்றி அறிமுகம் கொடுத்து விவாதத்தை எழுப்பச் சொல்லிவிட்டார். எனக்கு இது கதையா கட்டுரையா அல்லது வேறு ஏதேனும் வகை வடிவத்தில் எழுதப்பட்ட கதையா என ஒன்றும் புரியவில்லை.
கதையைப் பற்றி என் கருத்து – அசட்டுத்தனமான வரிகளால், பத்திகளால் ஆன ஒன்று.
இக்கதை ஏன் உங்கள் தளத்தில் வர வேண்டிய அளவு முக்கியமான கதை என்று சொல்வீர்களானால் நன்றாக இருக்கும் (அப்படி விளக்கம் கொடுக்க அவசியமில்லைதான்) விவாதத்தைத் துவக்கிப்பாருங்கள் என்று சீனு அவர்கள் சொல்லியிருப்பதால் கேட்க்கிறேன்.
நன்றி,
சங்கரநாராயணன்
அன்புள்ள ஜெ
ஈர்ப்பு சிறுகதை வாசித்தேன். அதைப்பற்றிய கடலூர் சீனுவின் குறிப்பு ஓர் அதிகப்பிரசங்கித்தனம். ஒருகதையை முன்வைக்கும்போது ‘இப்பபாருங்க எப்டிப் படிக்கப்போறாங்கன்னு’ என்றெல்லாம் பாவலாவுடன் எழுதுவது மிகமிக மோசமான உத்தி. அவர் சீரியஸாக இது நல்ல கதை என்று நினைத்தாரென்றால் முதலில் செய்யவேண்டியது அது ஏன் நல்ல கதை என்று அவர் சொல்லுவதுதான். இப்படியெல்லாம் வாசிப்பாங்க அதெல்லாம் மொக்கை என்று அவரே சொல்வது ஆசிரியரையும் கதையையும் இக்கட்டில் நிறுத்துகிறது
நான் முக்கியமாகச் சொல்லவருவது ஒன்றுதான். தயவுசெய்து பிறர் பரிந்துரை செய்யும் கதைகளை நீங்கள் வெளியிடவேண்டாம். நீங்கள் சொல்லும் கருத்துக்கு ஒரு மதிப்பு உண்டு. இப்படி பிறர் பரிந்துரை செய்பவை அவ்வாறு இல்லை. அது எங்களுக்குச் சங்கடம் உருவாக்குகிறது. உங்கள் சிபாரிசு இல்லாமலேயே இக்கதையும் இதற்கு முன்னர் இன்னொரு கதையும் வெளியானது. இதை தவிர்க்கவேண்டுமென கோருகிறேன்
இந்தக்கதையைப் பற்றியா? இது கதையல்ல. வெறும் ஃபேஸ்புக் மெய்ஞானத்தை வெட்டி ஒட்டி கதைபோல ஆக்கியிருக்கிறார். கடைசியில் ஒரு சின்ன டிவிஸ்ட். அந்தக்கதையைக்கொண்டு அந்த டிவிஸ்டை எந்தவகையிலும் விளக்க முடியாது. அதுவேறு ஆக கிடக்கிறது. கதையை ஆர்கானிக் யூனிட்டியுடன் எழுதுவதுதான் கலை. அதைத்தான் சிம்மெட்ரி என்கிறார்கள். அதுவே இல்லை. படர்ந்து பரவி அர்த்தமில்லாத வடிவத்துடன் உள்ளது இந்தக்கதை
எஸ். ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
ஈர்ப்பு கதையைப்பற்றி பெரிய விவாதம் ஏதும் வரவில்லை. ஆகவேதான் இதை எழுதுகிறேன். இது எந்த விவாதத்தையும் உண்மையாக உருவாக்காது. உண்மையிலேயே விவாதத்தை உருவாக்கும் கதை வாசகனில் முதலில் ஆழமான பாதிப்பை உருவாக்கியிருக்கும். அந்தப்பாதிப்பிலிருந்தே அவன் விவாதிக்க ஆரம்பிக்கிறான். அப்படி ஒரு பாதிப்பையே இக்கதை உருவாக்காது. ஏனென்றால் இதில் தொடர்ச்சியாக ஒருவரின் பெண்களைப்பற்றிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களுக்கு என்ன மதிப்பு? அந்தக்கதாபாத்திரம் நம் மனதில் துலங்கும்படிச் சொல்லப்பட்டிருந்தாலாவது ஒரு ஈர்ப்பு வந்திருக்கும். இப்போது வெறும் admonitions ஆகவே அந்தக்கருத்துக்கள் உள்ளன. வாசித்துச்செல்கையில் சலிப்பே உருவாகிறது
அத்தக்கருத்துக்கள் எவையும் ஆழமான சலனத்தை உருவாக்கவுமில்லை. அவை ஒற்றைக்கோணத்திலான observations மட்டும்தான். அந்தக்கருத்துக்களை சொல்லிச் சொல்லி ஒரு சின்ன சம்பவத்தில் கதை முடிகிறது. அந்தப்பெண் இவனிடம் என்ன எதிர்பார்த்தாள், ஏன் ஏமாற்றமடைந்து காட்டிக்கொடுத்தாள்? அதற்கு மையக்கதையிலுள்ள வரிகளில் எதையாவது எடுத்துக்கொண்டு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கலாம். அது கதையனுபவமே அல்ல. ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டு விவாதிப்பது கதை ஆகாது. அனுபவத்தை முதலில் சொல்லாமல் கடைசியில் சொல்லியிருந்தாலும் அது கதை அல்ல
இந்தக்கதையில் பொதுவாகச் சொல்லப்பட்டுள்ள பெண்களைப்பற்றிய கருத்துக்களை எடுத்து வைத்துக்கொண்டு பெண்கள் உண்மையில் அப்படியா என்றெல்லாம் விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அவை ஆசிரியர் சொல்வது அல்ல. அவற்றைச் சொல்பவனின் ஆளுமை கதையில் இல்லை. ஆகவே வெறும் மிதக்கும்வரிகள்தான் அவை
சுரேஷ் பிரதீப் இந்தமாதிரியான மேலோட்டமான சீண்டல்களில் ஈடுபடாமல் உண்மையான கதைகளை எழுதவேண்டும். கதை என்பது வாழ்க்கையின் ஒரு துண்டாக இருக்கவேண்டும். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்குவதெல்லாம் வாசகனின் வேலை
எஸ்.சம்பத்குமார்