அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்ற தருணத்தில் அவரது தாயாரின் மனநிலையை ப்ரதிபலிக்கும் காணொளியின் சுட்டியை இணைத்துள்ளேன். ஒரு அன்னையின் தியாகங்களை, சரணாகதியின் மகத்துவத்தை, பராசக்தியின் விளையாட்டை, பக்திமார்க்கம் என்பதை ஒரே நிமிடத்தில் இந்த காணொளி விளக்குகிறதோ என தோன்றுகிறது.
நான் என்னை ஞானமார்க்கம் என்றே நினைக்கின்றேன் . ஆனால் சில திரைப்பட காட்சிகளில், இது போன்ற காணொளிகளில் என்னையும் மீறி ஏதோ ஒன்று பொங்கி , தொண்டையை அடைத்து , கண்கள் கலங்கி விடுகிறேன். ஞானமார்க்கத்தில் இருப்பவர்கள் கலங்குவார்களா? ஞான மன நிலையில் தொடர்ச்சியாக இருப்பது சாத்தியமா? அல்லது எனக்கு பக்திமார்க்கம்தான் சரியான வழியா? ”பாசமலர் பாத்து அழாதவன்லாம் மனுசனாலே? ” – என்ற பாபநாசம் வசனம் வேறு நினைவுக்கு வருகிறது.
நேரமும் மனமும் அனுமதித்தால் ஒரு வழி சொல்லுங்கள்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஒருவர் தான் எவ்வகைப்பட்டவர் என அந்தரங்கமாகத் தானே அறிவார். அதை பாவனைகள் தன்நடிப்புகள் இல்லாமல் உணர்ந்துகொண்டால் போதும்
பொதுவாக, உணர்ச்சிகளில்லாத எவரும் இல்லை. அவை நம் குழந்தைப்பருவத்திலேயே நம்முள் கடந்துவிட்டவை. நம்மை வாழ்நாளெல்லாம் நடத்துபவை. முற்றிலும் உணர்ச்சிகள் இல்லாத எவருமில்லை. ஆகவே அறிவின்வழி என்பது உணர்வெழுச்சிகள் இல்லாதவருக்கு மட்டுமே உரியது என்று பொருள் இல்லை
சிலரால் உணர்ச்சிகளை ஐயமே இன்றி, முழுமையாக ஈடுபட்டு, பின்தொடர முடியும். அவர்களுக்குரியது பக்தி. அவ்வுணர்ச்சிகளை அடைந்த உடனேயே அதை பகுப்பாய்வும் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் அறிவுத்தளம் மேலோங்கியிருக்கிறது என்று பொருள். தூய பாவபக்தி உங்களுக்கு உரியது அல்ல
ஒருவரின் இயல்பில் ஓங்கியிருப்பது உணர்ச்சியா அறிவாண்மையா என நோக்கி அதைக்கொண்டு அவருடைய வழியில் ஓங்கியிருப்பது பக்தியா அறிவுநிலையா என முடிவுசெய்யலாம். முற்றான அறிவுநிலை என்பது அழகியலை அழிக்கும். அழகியலும் ஓர் அறிவுவழி என்பதனால் முற்றாகவே உணர்வுநிலைகள் இல்லாதவர்களுக்கு அவர்கள்நாடும் அறிவின் வழியே குறைபட்டதாக இருக்கும்.
அறிவுநிலை என்பது உணர்வுநிலைகளையும் உள்ளடக்கியதே. அவ்வுணர்ச்சிகளையுமே கூர்ந்தறிய முயல்வதுதான் அவர்களை வெறும் உணர்வுநிலையாளர்களிலிருந்து வேறுபடுத்துகிறது
ஜெ