நட்புகள்

karuna

‘யாரும் திரும்பவில்லை’

அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா

அன்புள்ள ஜெ

இப்போதுதான் இந்த இடுகையை முகநூலில் பார்த்தேன். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் நான் உங்கள் மீது பெரிய மதிப்பு கொண்டவன் அல்ல. நீங்கள் உங்கள் நண்பர் அலெக்ஸ் மீது கொண்டிருக்கும் நட்பு, அவருடைய இறப்புக்குப்பின்னும் தொடரும் உதவிகளைப்பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவர்தான் இந்த இணைப்பை அளித்தார். அரசியல்ரீதியான கருத்துமாறுபாடுகளால் நாம் மனிதர்களைப் பார்ப்பதில்லையோ என்று முதல்முறையாகத் தோன்றியது. நன்றி

செல்வ.முருகேசன்

karuna2

கருணாகரன் Karunakaran Sivarasa அவர்களின் குறிப்பு 23 ஜனவரி, 2015 ·

*

இருபது ஆண்டுகளுக்கு மேலான நட்பாக இருந்தாலும் 10.01.2015இல்தான் ஜெயமோகனும் நானும் நேரில் சந்தித்தோம்.

1990 களின் முன்பகுதியில் எங்கள் இரண்டாவது மகனுடைய சத்திர சிகிச்சையின்போது நாங்கள் சிரமப்பட்டுக்கொண்டிருந்தோம். அப்பொழுது நாம் கேட்காமலே எம்முடைய நிலைமையை அறிந்து, ஒரு தொகுதி பணத்தை அனுப்பி உதவினார். அந்தப் பணத்தை அப்பொழுது நேரடியாக அனுப்பக் கூடிய சாத்தியங்களோ வசதிகளோ இருக்கவில்லை. சாதாரண கடிதங்களைப் பெறுவதே கடினமாக இருந்த நாட்கள் அவை. அதைவிட இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் பணத்தை அனுப்பக் கூடிய நடைமுறைகள் மிகக் கடினமானவை. அதிலும் வன்னிக்கு அனுப்புவதைப் பற்றி சிந்திக்கவே முடியாது. இப்படியெல்லாம் இருந்தும் எங்களுக்குப் பணம் வந்தது. உதவும் அவருடைய மனமும் நோக்கமுமே அதற்கான வழிகளைத் திறந்து விட்டது. திலீப்குமாரிடம் கொடுத்து, புபாலசிங்கம் புத்தகசாலை சிறிதரசிங்கிற்கூடாக அந்தப் பணம் எங்களிடம் வந்து சேர்ந்தது. இடையில் ஏழு கைகள் மாறியிருந்தன. இப்படி நெருக்கடிநிலையை உணர்ந்து உதவும் – ஆறுதலாக இருக்கும் அவருடைய பண்பை வேறு நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

யுத்தம் முடிந்த பிறகு நாங்கள் அகதி முகாமில் இருந்தோம். எங்களுடைய நிலைமையைப் பற்றி அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜெயமோகன் எங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்திருககிறார். அப்படி விசாரித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் யுத்தத்தில் தப்பி, அகதி முகாமில் இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எப்படியோ என்னுடைய தொடர்பெண்ணைக் கண்டு பிடித்து தொடர்பு கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பின்னர் அவர் சொன்னது – “காலம் எல்லாவற்றையும் மாற்றியமைத்து விடும். இன்னொரு ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வேறு இடத்தில் வேறு மாதிரியான ஒரு வாழ்க்கையில் – வேறு மாதிரியான ஒரு சூழலில் இருப்பீர்கள். இன்றைய துயரங்களை எப்படி நீங்கள் கடந்து வந்தீர்கள் என்று உங்களுக்கே வியப்பாக இருக்கும்….ஆகவே நிதானமாகவும் அமைதியாகவும் இருங்கள்….“ என்று.

அவர் சொன்னதைப்போல எல்லாம் அப்படியே நடந்து கொண்டிருக்கின்றன.

கைகளைப்பற்றிய அந்தக் கணத்தில் ஜெயமோகன் சொன்னார், நாங்கள் இன்னும் முன்னாடியே – எங்களுடைய இளமைக்காலத்தில் சந்தித்திருக்கலாம் என….

ஆமாம். காலம் எல்லாவற்றையும் குலைத்துத்தான் விட்டது.

*

செல்வம் அருளானந்தம்
செல்வம் அருளானந்தம்

அன்புள்ள செல்வ முருகேசன்,

தொண்ணூறுகளில் கருணாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவர். அவர்களின் கலாச்சார இதழான ‘வெளிச்சம்’ மாத இதழின் ஆசிரியர். நான் மாத்தையாவின் படுகொலையுடன் புலிகளைப் பற்றிய என் எண்ணங்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தேன். ராஜீவ் கொலையுடன் முற்றாகவே விலகிவிட்டேன். கருணாகரன் அவர்களுடன் நட்பு அதன்பின்னரே உருவானது. அது எப்போதுமே முழுமையான அரசியல்முரண்பாடுகளால் ஆனதாகவே இருந்தது. அன்று அவருக்கு இருந்தது அரசியல்நம்பிக்கை அல்ல ,மாற்றுஎண்ணமே இல்லாத விசுவாசம். ஆயினும் எங்கள் நட்பு ஆழமானதாகவே தொடர்ந்தது. வெவ்வேறு ஊர்களிலிருந்து எங்கெல்லாமோ சென்று ஏதேதோ வடிவங்களில் அவருடைய கடிதங்கள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அவருக்கு என்னுடைய நூல் ஒன்றை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். [உள்ளுணர்வின் தடத்தில் -கவிதை பற்றிய கட்டுரைகள்] அதில் எங்கள் நட்பு பிசிராந்தையார் – கோப்பெருஞ்சோழன் நட்பு போன்றது என்று சொல்லியிருப்பேன்.

இன்று அவரைப்பற்றி எண்ணும்போது ஏற்படும் வருத்தம், இந்த அரசியல் அலைக்கழிப்புகள் இல்லாமலிருந்திருந்தால் ஈழம் உருவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவர் திகழ்ந்திருப்பார் என்பதே. அவருடைய கவிதைகள் உண்மையான உணர்வுகளும் தீவிரமும் கொண்டவை. ஆனால் ஒருவர் ஆவேசத்துடன் நம்பிக்கையுடன் படைப்பில் ஈடுபடும் அகவையில் ஏதேதோ நம்பிக்கைகள். கொந்தளிப்புகள் அவரைக் கொண்டுசென்றன. இன்றும்கூட தன் உள்ளத்தை ஒருங்கிணைத்துக்கொண்டால் அவரால் ஒருசில நல்ல ஆக்கங்களை எழுத முடியும். ஈழத்தின் இன்றிருக்கும் கசப்புகளும் பாவனைகளும் நிறைந்த அரசியல் சூழலில் இருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும்

சென்னையில் பூமணிக்குப் பாராட்டு விழாவின்பொருட்டு தங்கியிருந்தபோது அவர் வந்தார். முதல்சந்திப்பு அது. ஆனால் நெடுங்காலமாகச் சந்தித்ததுபோலத்தான் இருந்தது. என் மனைவியையும் மகனையும் அவர் இன்னமும் பார்க்கவில்லை.அவர் குடும்பத்தை நானும் பார்க்கவில்லை. இலங்கைசென்று அவர்களைப் பார்க்கவேண்டும். ஏதோ ஒருவகையில் கனடாவின் செல்வம் அருளானந்தமும் கருணாகரனும் என் உள்ளத்திற்குள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். செல்வம் தன் மனைவியுடன் சமீபத்தில் நாகர்கோயில் வந்து தங்கியிருந்தார். கருணாகரன் மனைவியுடன் வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

பழைய நட்புகள் வயதாகும்தோறும் ஒரு துயரத்தையும் சேர்த்துக்கொள்கின்றன. நினைவுகளின் துயர். ஆகவேதான் இன்னும்கொஞ்சம் வயதானவர்கள் முழுமையாகவே நினைவுகளை வெட்டிவிட்டுவிட்டு அந்நட்புகளை அன்றாடமாக மாற்றி வைத்துக்கொள்கிறார்கள். என் அப்பா, சுந்தர ராமசாமி போன்றவர்கள் நெடுநாள் நட்புகளைப் பேணியவர்கள். அவர்களின் வழி அது.

ஜெ

சூழ இருத்தல்  

விலகிச்செல்பவர்கள்…

கனடா ,அமெரிக்கா, ஐம்பதுநாட்கள்

முந்தைய கட்டுரைகாந்தியைப் பற்றி ஒரு நாவல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7