மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்

Man shredding

அரசியல்சரிநிலைகள்

அன்புள்ள ஜெ

இந்தியாவின் மிகச்சிறந்த ஆய்வுநிறுவனங்களில் ஒன்றில் விஞ்ஞானியாக இருக்கும் எனது நண்பர் இந்த பதிவை எனக்கு அனுப்பிவைத்தார் .ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலையில் கணித பேராசிரியராக இருக்கும் டெட் ஹில் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுகிறார் .அறிவுஜீவிகளும் சரி ,அடிமுட்டாள்களும் சரி ஆண்களிடையே அதிகமாக இருக்கிறார்கள் .ஆனால் பெண்களிடையே அதிகம் இல்லை .பேராசிரியர் இவ்வாறு கூறுகிறார்

//Darwin had also raised the question of why males in many species might have evolved to be more variable than females, and when I learned that the answer to his question remained elusive, I set out to look for a scientific explanation. My aim was not to prove or disprove that the hypothesis applies to human intelligence or to any other specific traits or species, but simply to discover a logical reason that could help explain how gender differences in variability might naturally arise in the same species

இந்த வகையில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி ஆய்வு இதழ் ஒன்றிற்கு அனுப்புகிறார் .அந்த இதழின் ஆசிரியர்களுக்கும் reviewerகளுக்கும் இக்கட்டுரை மீது புகார் ஏதும் இல்லை .சில மாற்றங்களுடன் வெளியிட தயாராக இருக்கிறார்கள் .ஆனால் இக்கட்டுரை பெண்களுக்கு எதிரானது ,அவர்களுடைய வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் எழுதப்பட்டது என்னும் புகார்கள் ,கருத்துக்கள் வரத்தொடங்குகின்றன .டெட் ஹில்லும் அவருடன் அக்கட்டுரையை எழுதியவர்களும் நேரடியாக சென்று தங்கள் ஆய்வு குறித்து விளக்குகின்றனர் .ஆனால் பயன் ஏதும் இல்லை .ஆய்விதழின் தலைமை ஆசிரியர் கையை விரித்துவிடுகிறார் .எனவே வேறொரு ஆய்விதழின் இணைய பிரதியில் இக்கட்டுரை வெளியாகிறது .அரசியல் சரி கும்பல் அவர்களது கைவரிசையை காட்டுகிறார்கள் .ஆய்விற்கு நிதியளித்த நிறுவனம் தங்கள் நிதியுதவியை குறித்து கட்டுரையில் எழுதியிருக்கும் வரிகளை நீக்க சொல்கின்றனர் .பிற்போக்குதனமான ,போலி ஆய்வு அது என்று அந்த அரசு நிறுவனம் நம்பவிக்கப்பட்டிருந்தது .

பேராசிரியருக்கு அடுத்த அதிர்ச்சி வருகிறது .இணைய பதிப்பில் இருந்த அவரது கட்டுரை அப்படியே மாயமாகி விடுகிறது .எந்த விளக்கமும் இல்லை .இதனை குறித்து அவர் எழுதியது தான் நான் மேல்குறிப்பிட்ட பதிவு.:

https://quillette.com/2018/09/07/academic-activists-send-a-published-paper-down-the-memory-hole/

என் நண்பருக்கு எதிர்காலத்தில் அப்ரிய சாத்தியங்களை விஞ்ஞான ஆய்வுகள் வழியாக சொல்லவே முடியாதோ என்ற பயம் வந்துவிட்டது .இது ஒருவகையான தீவிரவாதம் தான் .அரசியல் சரிகளின் பெயரில் நடக்கும் வன்முறை .இக்கட்டுரையை வாசித்ததும் எனக்கு உங்கள் நினைவு தான் வந்தது .விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதனை அமுக்க எத்தனை முயற்சிகள் நடந்திருக்கும் .பின் தொடரும் நிழலின் குரலை தமிழ் இலக்கிய உலகம் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் ?சமீபத்தில் நீங்கள் சமகால பெண்படைப்பாளிகள் குறித்து எழுதியதற்கு வந்த எதிர்ப்பும் இதுபோன்றது தானே ? இந்த அராஜகத்தை யாரும் கண்டிக்கப்போவதில்லை .ஆனால் யார் என்ன நினைத்தாலும் ,யார் என்ன செய்தாலும் உண்மை வெளிவந்தே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது

நன்றி
அனீஷ் க்ருஷ்ணன்

அன்புள்ள அனீஷ்

எனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஏனென்றால் நிரூபணவாத அறிவியல் கறாரானது, அதன் கருத்தியல் [ideology] உள்ளடக்கம் என்பது முற்கோள் [hypothesis ] உருவாக்கக் காலகட்டத்தில்மட்டும்தான் என்றுதான் நான் நினைத்தேன். அல்லது அப்படி நம்ப விரும்புகிறேன். பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் அறிவியல் என்பதே கருத்தியலின் நடைமுறைவாத மறுவடிவம்தான் என வாதிட்ட காலகட்டத்தில் கூட இந்நம்பிக்கையை உள்ளூரப் பேணிக்கொண்டிருந்தேன்.

விலங்கியலாளரான ஜேன் குடால் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சிம்பன்ஸிக்களை அவன் அவள் என்று குறிப்பிட்டதற்கு அவருடைய ஆய்வுலகம் அளித்த எதிர்ப்பைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தபோதுதான் மதம் சார்ந்த கருத்துநிலைகள் எப்படியெல்லாம் அறிவியலின் கருதுகோள் உருவாக்கத்தில் ஆழமான பங்களிப்பைச் செலுத்துகின்றன என்று கண்டேன்.

சமீபத்தில் கூட ஓர் இந்திய விலங்கியலாளர் விலங்குகளுக்கு சிந்தனை , தன்னுணர்வு ஏதும் இருக்கமுடியாது என்று வாதிட்டிருந்தார். அதற்கு அவர் எந்த நடைமுறைச் சான்றையும் நாடவில்லை, அப்படி நம்புகிறார் அவ்வளவுதான். விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்ற அவருடைய மதநம்பிக்கையே அவருடைய அறிவியல்நம்பிக்கையாக உருமாறியிருக்கிறது என்று தெரிந்தது.

முற்கோள் உருவாக்கத்தில் தன்னிச்சையாக ஊடுருவும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் ஆழ்படிமங்களும் புரிந்துகொள்ளத் தக்கவை. ஆனால் இதேபோல அறிவியலாய்வுகளிலேயே அரசியல்சரிகள் ஊடுருவி முடிவெடுக்கும் ஆற்றல் பெறுவது ஒருவகையான அறிவுத்தளத் தற்கொலை .

இன்று மேலைநாட்டு அறிவியலாய்வு என்பதே வணிகநிறுவனங்களின் கொடையால் நிகழவேண்டியதாக ஆகியிருக்கிறது. அவ்வணிக நிறுவனங்களில் பெரும்பாலானவை போர்த்தளவாடம், மருந்து ஆகியவற்றை உற்பத்தி செய்பவை. அறிதலின்பொருட்டான ஆய்வு உலக அரங்கில் இல்லாமலாகிவிட்டது என்கிறார்கள் அறிவியல்துறையில் உயராய்வு செய்யும் நண்பர்கள். வணிக வாய்ப்புகளைத் தேடி நிகழும் ஆய்வுகளின் திசை சமகாலத்தால் வரையறைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே தன்னிச்சையான கட்டற்ற ஞானத்தேடலால் திறக்கும் பல வாசல்கள் தட்டப்படவே வாய்ப்பில்லாமலாகிறது. அரசியல்சரிகளும் அதில் அழுத்தமளிக்க ஆரம்பிப்பது நோயின்மேல் நோய்.

அரசியல்சரிகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. ஏனென்றால் அவை மிகப்பரவலான சமூக ஏற்பு கொண்டவை. வணிகம் நுகர்வோரின் உணர்ச்சிகளை கருத்தில்கொண்டாகவேண்டும். நுகர்வோர் வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆகவே அவர்கள் மொத்த ஆய்வையே கட்டுப்படுத்த முடியும். அதுதான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு சமூகச் சூழலில் அரசியல் சரிகள் மிக முக்கியமானவை என்றே நினைக்கிறேன். அவை மானுட நிகர்க்கொள்கை, குடியாட்சிக்கொள்கை, தனிமனித உரிமை போன்ற இந்நூற்றாண்டின் உயர்விழுமியங்களில் இருந்து உருவானவை. இவ்விழுமியங்களை முந்நூறாண்டுகளாக மானுடகுலம் அறிஞர்களினூடாகப் பேசிப்பேசி உருவாக்கி நிலைநாட்டியிருக்கிறது. அவ்விழுமியங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்போதுதான் அவை அரசியல்சரிகள் ஆகின்றன. அரசியல் சரிகளால் விலக்கப்பட்டவை தவறுகளாக கருதப்படுகின்றன. மேலும் சில விழுமியங்கள் ஆழமாக வலுப்பெற்று அரசின் சட்டங்களாக ஆகின்றன அவற்றை மீறுவது குற்றம்.

பெண்களை, சிறுபான்மையினரை சிறுமைசெய்வது அரசியல்சரியால் விலக்கப்பட்ட பிழை.தீண்டாமையைக் கடைப்பிடிப்பதோ, இனவெறியை வெளிப்படுத்துவதோ அரசால் தடுக்கப்பட்ட குற்றம். அரசியல்சரிகளினூடாகவே சமூகம் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் பண்பட்டதாக ஆகிறது. அரசியல்சரி [political correctness] என்னும் சொல்லாட்சி புதியதாக இருக்கலாம். எல்லா சமூகங்களும் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை ஒறுத்தும்தான் தங்கள் பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்துகின்றன

ஆனால் அரசியல்சரி மெய்த்தேடலில் ஓர் நிபந்தனையாக,அளவீடாக, தடையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அரசியல்சரி என்பது நேற்றிலிருந்து இன்றுவரை வந்து நிலைகொள்வது. மெய்த்தேடல் நாளை நோக்கியது. அரசியல்சரி அறிந்தவற்றிலிருந்து உருவாவது. மெய்த்தேடல் அறியாதவற்றை ஆராய்வது. தெரிந்தவற்றைக்கொண்டு உறுதியான நிலைபாடு எடுப்பதைப்போல தேடலுக்குத் தடையான ஏதுமில்லை.

அரசியல்சரிகள் என்பவை ஒருவகை நவீன ஒழுக்கவியல் எனலாம். ஒழுக்கநெறிகள் ஒரு சமூகம் உருவாகி நிலைநிற்க இன்றியமையாதவை. ஆனால் மெய்த்தேடலுக்கு ஒழுக்கநெறி ஒரு தளையாக அமையவியலாது என்று நேற்று நம் மரபு சொன்னது. இன்று அதை அரசியல்சரிகளுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டியிருக்கிறது.

அரசியல்சரிகள் சென்றகால தத்துவ – அறவியல் விவாதங்கள் வழியாக உருவாகித் திரண்டு வந்த விழுமியங்கள் மேலும் எளிமையாக்கப்பட்டு சரிதவறுகளாக வகுக்கப்பட்டுவிட்டவை. ஆகவே அவை சராசரிகளிடம் சென்றுசேர்கின்றன. அரசியல்சரி எப்போதுமே சராசரியின் ஆயுதம். மெய்த்தேடலை சராசரியினர் கட்டுப்படுத்துவார்கள் என்றால் அங்கே அறியாமை குடியேறத் தொடங்கிவிட்டது என்றே பொருள்.

அறிவியல், தத்துவம் ஆகிய இரு துறைகளுமே சமகாலத்தால் கட்டுப்படுத்தப்படாதவையாக, அறிதலின் வேட்கையால் மட்டுமே முன்னகர்பவையாக இருக்கவேண்டும். ஆகவே அரசியல்சரிகளுக்கு அவை முற்றிலும் அப்பாற்பட்டவையாக இருக்கவேண்டும். அங்கே பொதுமக்களுக்கு குரல் இல்லை. சராசரிகளுக்கு இடமில்லை.

இலக்கியம் ஒருபகுதி மெய்த்தேடல், இன்னொரு பகுதி சமூகத்துடனான உரையாடல். இவ்விரண்டாம்பகுதியில் அது அரசியல்சரிகளைக் கருத்தில்கொள்ளவேண்டும். அதன் சாராம்சமான மெய்த்தேடலில் அது சமரசமற்றதாக, சமகாலத்தை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாததாகவே இருந்தாகவேண்டும்.

ஆனால் இலக்கியம் மக்களிடம் பேசவும் முயல்வது என்பதனால் அதன் அரசியல்சரிகளை மீறிய தீவிரம் எப்போதுமே சமூகத்துடன் மோதலை உருவாக்குகிறது. எல்லா முக்கியமான எழுத்துக்களும் சமகாலத்தில் கொந்தளிப்பை, எதிர்ப்பை, கசப்பை உருவாக்கியிருக்கின்றன. எழுத்தாளனுக்கு அந்தச் சுதந்திரம் உண்டு, அதை அவன் தானாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், அது மறுக்கப்பட்டால் தன் வாழ்க்கையை விலையாகக் கொடுத்து அதை அடையத்தான் வேண்டும்.

இக்காரணத்தால்தான் மெய்த்தேடலை மையமாகக் கொண்ட தீவிரஇலக்கியம் ‘வெகுஜன’ங்களுக்கு சென்று சேரக்கூடாது என நினைக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்து, அதற்காக தயாரித்துக்கொண்டு, அதை நோக்கி வருபவர்களே அதன் வாசகர்களாக இருக்கவேண்டும். இன்றைய சூழலில் இணையம்போன்ற ஊடகங்கள் வழியாக இலக்கியத்தின் துண்டுகள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாத வாசகர்களைச் சென்றடைவதனால்தான் அரசியல்சரிகள் சீண்டப்பட்டு பிரச்சினைகள் உருவாகின்றன. உள்நோக்கத்துடன் அரசியல்வாதிகள் இலக்கியப்பிரதிகளை அவ்வாறு தயாரிப்பில்லாத மக்கள் முன் கொண்டுசென்று வைத்துவிடுவதுமுண்டு

என்னுடைய எழுத்துசார்ந்து இதுவரை உருவான எல்லா சர்ச்சைகளும் அரசியல்சரிகள் சீண்டப்பட்டதனால் உருவானவையே. நான் என் சிறுவட்டத்திற்குள் எழுதியவை பல காரணங்களால் வெகுஜனங்களுக்குச் சென்றுசேர்ந்தமையால் நிகழ்ந்தவை அவை.

இன்றைய சூழலில் மரபார்ந்த ஒழுக்கம் மரபுவாதிகளின் ஆயுதம். முற்போக்காளர்களுக்கு அரசியல்சரியே ஆயுதம். சிந்தனைமேல் அவர்களின் வன்முறையாக அது செயல்படுகிறது. உலகமெங்குமே முதிராஇடதுசாரிகளே அரசியல்சரிகளை கையிலேந்தி நிற்கிறார்கள். அவர்களுக்கு புரியாத அனைத்தையுமே எதிர்க்கிறார்கள். புதியன எதுவும் அவர்கள் முன் வந்து நின்று அவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டுமென நினைக்கிறார்கள். சமூகத்தின் முன்னகர்வின் ஒருபகுதியாக இயல்பாக நிகழவேண்டிய அரசியல்சரி என்னும் உளநிலை இன்று ஒரு கெடுபிடியாக மாறிவிட்டிருக்கிறது.

இன்று வெளிவரும் இலக்கியவிமர்சனங்களை எடுத்துப்பாருங்கள். தொண்ணூறு விழுக்காடு விமர்சனங்கள் இலக்கிய ஆக்கங்களை எடுத்துக்கொண்டு அவற்றிலுள்ள ‘மையக்கருத்து’ அரசியல்சரியாக இருக்கிறதா என்று மதிப்பிடுவதாகவே இருக்கும். இந்த ஆசிரியர் முற்போக்கானவரா, பெண்ணுரிமையை ஏற்பவரா, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கிறாரா என்பது போன்ற கேள்விகள். அதனடிப்படையில் படைப்பை பகுப்பாய்வு செய்வது. தடையங்களின் அடிப்படையில் கையும்களவுமாகப் பிடித்து குற்றம்சாட்டுவது. அல்லது சான்றிதழ் அளித்துப் பாராட்டுவது.படைப்பின் கவித்துவம், தரிசனம் நுண்ணிய உணர்வுவெளிப்பாடு, அழகியல்கட்டமைப்பு எதுவுமே இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல

இது இலக்கியவிமர்சனம் அல்ல. இது பொதுச்சமூகத்தின் பொதுவான தளம் இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு வழிமுறை. அந்த எல்லைக்குள் அது நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. படைப்பாளியை ஆதிக்கம் செய்யும் கெடுபிடிக்குரல் அதற்கு வந்தால் அது உடைக்கப்பட்டாகவேண்டும். உடைப்பவனே இலக்கியவாதி.

நான் எழுதவந்தபோது இந்துமெய்யியல் சார்ந்த ஒரு வரிகூட ஓர் இலக்கிய உரையாடலில் குறிப்பிடப்படக்கூடாது என்னும் கெடுபிடி இருந்தது. அன்றைய இலக்கியக் கருத்தியல்கள் இரண்டு. ஒன்று மார்க்ஸியம். இன்னொன்று நவீனத்துவம். இரண்டுக்குமே இந்தியமரபின்மீதான நிலைபாடு ஒன்றே. நான் பகவத்கீதையின் ஒர் உவமையை 1988 ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு மீறலாக, பிற்போக்காக பார்க்கப்பட்டது. இலக்கியத்தில் அன்றிருந்த அரசியல் சரி அது. இந்து தெய்வங்களைப்பற்றி, மதநம்பிக்கைபற்றி, மெய்யியல் பற்றி பேசவேகூடாது. அவையெல்லாம் பழங்குப்பை, பேசுபவன் பழைமைவாதி என்ற நிலை

ஆகவெ நான் அதையே பேசினேன். விஷ்ணுபுரம் வழியாக அந்த அரசியல்சரிகளை உடைத்தேன். என்னை இருபதாண்டுக்காலம் நவீனத்துவத்திற்கு எதிரான பழைமைவாதி என்று தூற்றியிருக்கிறார்கள். ஒரு மார்க்ஸியர் என் நூல்களை கையாலும் தொடமாட்டேன், தொட்டால் கையை கழுவுவேன் என்று மேடையில் அக்காலத்தில் சொன்னார்.

முற்போக்காளர்கள் அறம்சார்ந்த அரசியல்சரிகளை இன்னும்கொஞ்சம் வளர்த்து தங்கள் சொந்தக் கருத்தியல் சார்ந்த ஏற்பு மறுப்புகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் சமூகத்தை, வரலாற்றை ஆராய்ந்து உருவாக்கி வைத்திருக்கும் கருத்துநிலைகளை ஏற்காதவர்கள் அனைவருமே பிற்போக்கு என வசைபாடுகிறார்கள். இந்த அதிகாரம் சென்றகாலம் வரை தமிழ்ச்சூழலில் மையமாக இருந்தது. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் அதில் பெரிய உடைப்பு. ஆனால் இன்றும் அது ஒரு பெரிய கெடுபிடியே.

படைப்பின் மீதான அரசியல்சரியின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவானதே பின்நவீனத்துவம். நவீனத்துவம் ‘உலகளாவிய’ ‘மாறாத’ உண்மைகளை நாடுகிறது. அவை அதிகாரம் மூலம் கட்டமைக்கப்படுபவை என வாதிட்ட பின் நவீனத்துவம் வட்டாரஉண்மை, மாற்று உண்மைகளுக்காகப் பேசியது. அதாவது நரபலி பிழையானது, அது அரசியல்சரி. ஆனால் நரபலியை ஆதரித்து ஓர் ஆப்ரிக்கநாவல் வருமென்றால் அது ஒறுக்கப்படவேண்டியதா? இல்லை, அது நம் அறிதலில் இல்லாத புதிய ஒன்றைத் திறந்து காட்டுமென்றால் அதற்கான உரிமை அதற்கு உண்டு. அது உலகளாவ ஏற்கப்பட்ட உண்மைக்கு மாற்றான வேறொரு உண்மையை முன்வைக்கிறது

ஆனால் இங்கே தமிழகத்தில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. ஏற்கனவே இங்கே முதிராமார்க்ஸியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அதே மூச்சில் அதே வாயில் பின்நவீனத்துவம் பேசலாயினர். புரட்சிக்காரர்களாகவும் பின்நவீனத்துவர்களாகவும் ஒரேசமயம் நடித்தனர். இங்கே பின்நவீனத்துவர்தான் இலக்கியம் மீதான அரசியல்சரிகளின் கெடுபிடிகளை மிக அதிகமாகப்பேசியவர்கள்

மெய்த்தேடலுக்கு தன் உள்ளுணர்வை, கனவை கருவியாக்குபவனே இலக்கியவாதி. கனவு கட்டற்றது. அதற்கு ஒழுக்கமும் அறமும் இல்லை. அது அக்கனவு காண்பவனையே மீறியது. அரசியல்சரிகளை நோக்கி எழுதுபவன் தன் எழுத்தின்மேல் தன் கருத்துநிலையை சுமத்துபவன். தன் சமகாலத்தை எழுத்துக்கு நிபந்தனையாக்குபவன்.கனவுபோல இலக்கியத்தை நிகழவிடுபவனே உண்மையில் எதையேனும் படைக்கிறான்

அரசியல்சரிகளுடன் வரும் விமர்சகனுக்கு இலக்கியத்தில் பெரிய அதிகாரம் உள்ளது. அவன் கட்சி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவன் என்பதனால் ஊடக வல்லமை கொண்டவன். கும்பல்கூட்டும் வசதிகொண்டவன். அத்துடன் நுண்ணுணர்வற்றவன் என்பதனால் சலிக்காமல் பேசிப்பேசி வசைபாடி சூழலை நிறைப்பவன். பெரும்பாலான படைப்பாளிகள் அவனை அஞ்சுகிறார்கள். ’போடா டேய்’ என்று அவனிடம் சொல்ல ஒரு திமிர் வேண்டும்.

ஆனால் அவர்களால் பெரிதாக ஏதும் செய்துவிடமுடியாது. படைப்பு வந்துகொண்டேதான் இருக்கும். உண்மையைநாடி அதை வாசிப்பவர்களும் வருவார்கள். சோவியத் ருஷ்யா போன்ற சர்வாதிகார நாடுகளில் மட்டுமே இவர்களுக்கு படைப்பை ஒடுக்கும் அதிகாரம் அமைந்தது. ஆனால் நீங்கள் சுட்டிய கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் திகிலூட்டுகின்றன. ஏனென்றால் அறிவியலுக்கு நிறுவன உதவி தேவை, சக ஆய்வாளர்களுடானான உறவு தேவை, நிதி தேவை. இவர்கள் ஓர் ஆய்வை இப்படி புதைக்கமுடிந்தால் அது மீண்டுவருவது கடினம்

ஜெ

 

அரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிமர்சனமும் வரலாறும் உரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10