ஒரே கரு, இரு ஆசிரியர்கள்

suve

அன்புள்ள ஜெ

இந்தக்கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். சு.வேணுகோபாலின் கதை கி.ராஜநாராயணனின் பேதை கதையை தழுவி எழுதப்பட்டது என்கிறார். இதைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ராஜேஷ்

தழுவவலா பாதிப்பா? உமையாழ்

kiraa

அன்புள்ள ராஜேஷ்

அந்த கட்டுரை ஒர் இலக்கிய விவாதத்தின் தொடக்கம் என்னும் வகையில் நல்லதுதான். ஆனால் அதன் ஒரு வரி கொஞ்சம் பிழையானது. இப்படி ஒரு கதையில் முந்தைய கதையின் சாயல் இருப்பதைக் கண்டதுமே சு.வேணுகோபால் மீதான மதிப்பு இல்லாமல் போயிற்று என எழுதியிருக்கிறார். இது இளம்வாசகர்களின் உளநிலை. இப்படி உலக இலக்கியத்தில் உள்ளதா, மதிப்புக்குரிய எழுத்தாளர்களிடம் இதைக் காணக்கிடைக்குமா, இவ்வாறு அமைவதற்கான காரணம் என்ன என்றுதான் நல்ல வாசகன் யோசிக்கவேண்டும். இலக்கியவாதி மேல் மதிப்பு உருவாவதும் சரி விலகுவதும் சரி இத்தனை எளிதாக அமையக்கூடாது.

நான் 2 /9 /10 அன்று மதுரை ஃபாத்திமா கல்லூரியில் ஓர் உரை ஆற்றினேன். அரங்கிலிருந்த மாணவிகள் எவரும் வாசிப்புப் புலமோ ஆர்வமோ கொண்டவர்கள் அல்ல. ஆகவே சில கதைகள் வழியாக உரையை நிகழ்த்தினேன். அதாவது ஒரே கதைக்கருவை வெவ்வேறு எழுத்தாளர்கள் எப்படி சில மாறுதல்களுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள், அதனூடாக வெளிப்படும் சமூகச்சூழல் மாற்றம் என்ன, உளவியல் மாற்றம் என்ன என்பதுதான் கரு. பொதுவான கதைக்கரு கொண்ட ஆறு வெவ்வேறு கதைகளை எடுத்துச் சொன்னேன். அதில் கி.ராஜநாராயணனின் பேதை, சு.வேணுகோபாலின் தொப்புள்கொடி ஆகிய இரு கதைகளும் உண்டு.

பின்னர் அக்கதைகளை நான் கல்லூரியில் சொன்னதை ஒட்டி அங்கே பணியாற்றிய அனுராதா என்னும் பேராசிரியை எழுதிய கடிதமும் அதையொட்டிய ஓர் உரையாடலும் இந்தத் தளத்தில் நிகழ்ந்தது. பேராசிரியை இருகதைகளும் ஆபாசமானவை, மாணவிகளின் ஒழுக்கத்தைக் குலைப்பவை என்றும் தாங்கள் மாணவிகளை கற்போடு காப்பதே தலையாய கடன் என கல்விநிலையம் நடத்துவதாகவும் எழுதியிருந்தார்

பேதை கதையும் சு.வேணுகோபாலின் கதையும் ஒரே கரு கொண்டவை. உளநிலைப் பிறழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை. பிச்சியாக மாறி ஊரில் அலைகிறார்கள். கருவுறுகிறார்கள். ஆனால் இக்கருவை இருவருமே வெவ்வேறு கோணத்தில் அணுகுகிறார்கள். கி.ராஜநாராயணனின் கதை மேலும் கவித்துவமானது. அவளை பேய்ச்சியாக, ஒருவகை அமானுடத்தன்மை கொண்ட தெய்வமாக அது பார்க்கிறது சுடுகாட்டில் எரியும் பிணத்தைப் பிய்த்துத் தின்பவள் அவள்.

அவள் கருவுறும்போது உணர்வது மேலும் நுட்பமானது. அவள் மல்லாந்து படுத்துத் துயில்கிறாள். அவள்மேல் தென்னை ஓலையின் நிழல் ஆட நிலா ஒளிந்து ஒளிந்து தெரிகிறது. அவள் கனவில் ஒரு குழந்தை திரைவிலக்கி எட்டி எட்டிப் பார்க்கிறது. கிராவின் கதை அந்தப்பிச்சிக்குள் செயல்படும் பெண்மையின் அடிப்படை விசையை, அவள் ஆங்காரத்தை வெளிப்படுத்துவது. அவள் குழந்தை இறக்கிறது. இறப்பை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைச் சடலத்துடன் அது அழுகும்வரை அலைகிறாள். அதை அவளிடமிருந்து பிடுங்கி புதைக்கிறார்கள். மீண்டும் கருவுற்று வயிற்றைத்தூக்கிக்கொண்டு திமிராக ஊர்நடுவே நடக்கிறாள்.

சு.வேணுகோபாலின் கதை முழுமையாக யதார்த்தத் தளத்தில் நிற்கிறது. அது அந்தப்பெண்ணின் கதை அல்ல, அவள் உள்ளத்துக்குள் அவர் செல்வதே இல்லை. அது அவள் தாய்தந்தையரின் கதை. அவர்களுக்கு அவள் பெருந்துயர். அவளை எண்ணி எண்ணித் துயருறுகிறார்கள். ஆனால் அவள் கருவுற்றதுமே எதிரியாகிவிடுகிறாள். அவளை நஞ்சிட்டுக் கொன்றுவிடுகிறார்கள். பொதுவான கரு என்பதற்கு அப்பால் இது பேசுவது முற்றிலும் வேறொன்றை. பிச்சி வாழ்வது வேறு ஓர் உலகில். ஆனால் அவள் அச்சமூகத்தின் பார்வையில் அக்குடும்பத்துப் பெண். தெருவில் அலைபவளாக இருந்தாலும் அவள் கருவுற்றால் அக்குடும்பத்துக்கு அது அவமானம். எந்த அடையாளமும் இல்லாமல் தெருவில் வாழும் பிச்சியைக் கௌரவக்கொலை செய்கிறார்கள் என்பதுதான் இக்கதையின் மையம்.

கி.ராவின் கதையில் அடிப்படையான உயிராற்றலின் வல்லமை வெளிப்படுகிறது. சு.வேணுகோபால் நம்மால் அறியமுடியாதவற்றுக்கெல்லாம்கூட நாமே அளிக்கும் அர்த்தங்களை, அதனூடாக நாம் செய்யும் வன்முறையைச் சுட்டிக்காட்டுகிறார். அதோடு இன்னொன்றையும் காணலாம். கிரா சொல்லும் பழைமையான கிராமத்தில் அந்தப் பிச்சியை ஊர் ஒரு தொன்ம அடையாளம் அளித்து அஞ்சவும் பேணவும் செய்கிறது. அந்த ஊருக்கு கருவுறுதலின் அர்த்தம் வேறு. சுவேணுகோபாலின் நவீன வேளாண் கிராமத்தில் அவள் ஒரு வெறும் தொல்லைதான். ஆகவே ஒழித்துக்கட்டப்படவேண்டியவள். இங்கே கரு என்பது வேறொன்று.

இருகதைகளையும் கூர்ந்து படியுங்கள். ஒப்பீட்டு வாசிப்பில் இருகதைகளுமே மேலும் கூர்மை கொள்வதைக் காண்பீர்கள். தமிழிலக்கியத்திலும் உலக இலக்கியப்பரப்பிலும் இதேபோல ஒரே கதைக்கருவை எடுத்துக்கொண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பல உதாரணங்கள் உண்டு.

ஒரே கரு மூன்று வகையில் ஒரே எழுத்தாளரால் எழுதபட்டிருக்கலாம். முன்னோடி எழுத்தாளர் எழுதிய கருவால் தூண்டுதல் அடைந்து அதை இன்னொரு எழுத்தாளர் திரும்ப எழுதலாம்.. அதற்கும் இலக்கியத்தில் இடமுண்டு. இரு எழுத்தாளர்களுமே வாழ்க்கையிலிருந்து ஒரே நிகழ்வை எடுத்துக்கொண்டிருக்கலாம். அந்நிகழ்வு அச்சமூகத்தின் ஒரு  முதன்மைப் பிரச்சினையாக, பேசுபொருளாக இருக்குமென்றால் அவ்வாறு ஆகும். ஒரு சமூகம் கொண்டுள்ள தொன்மம் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு கோணங்களில் கையாளப்படலாம்.

ஒரே கதைக்கருவை ஏன் வெவ்வேறு எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? ஒரு காலகட்டத்திற்குப் பொதுவாக சில தத்துவ வினாக்கள், சில அறச்சிக்கல்கள் உள்ளன.அவற்றை நோக்கித் திறக்கும் தருணங்களை வாழ்கையிலிருந்து எழுத்தாளர்கள் கண்டடைகிறார்கள். அந்தப் பொதுவான தத்துவ வினாக்களும் அறச்சிக்கல்களும் பொதுவான தருணங்களைக் கண்டடையச் செய்கின்றன. ஆனால் அவ்வெழுத்தாளர்களின் நோக்கு, உணர்வு ஆகியவை மாறுபடுவதனால் அவை வெவ்வேறு கதைகளாக வெளிப்படுகின்றன

இந்தியச் சூழலில் சுதந்திரப்போராட்டம்தான் நவீன இலக்கியத்தின் பிறப்புக்காலகட்டம். மரபான ஆண்பெண் உறவு மாறத்தொடங்கியது. பெண்கள் படித்தனர், பெண்ணுரிமைகள் பேசப்படலாயின. அது ஆழமான ஒழுக்கக் கேள்விகளை மரபான உள்ளத்தினருக்கும் நவீன நோக்கு கொண்டவர்களுக்கும்  உருவாக்கியது. பாலியல் ஒழுக்கநெறி குறித்த கேள்விகள் அன்று மிகுதி. பல கதைக்கருக்களை திரும்பத்திரும்ப பலர் எழுதியிருக்கிறார்கள். உதாரணம் இளம்விதவை, படித்த விபச்சாரி போன்ற கதைகள். அதற்கடுத்த காலகட்டத்தில் குடும்பம் என்னும் அமைப்பு மீதான மறுநோக்கு எழுந்து வந்திருப்பதைக் காணலாம். தனிமனிதனைக் குடும்பம் கைவிடுவது ஒரு பொதுவான கரு.

இப்படி இந்திய இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய பொதுவான அக்கறைகள் என்ன, அவற்றைக்கொண்டு அவர்கள் கண்டடைந்த பொதுவான கதைக்கருக்கள் என்ன, எந்தக் கதைக்கரு அதிகம் பேசப்பட்டது என்று விரிவாகவே ஆராயலாம். அது இலக்கியம் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும்.

ஒரு காலகட்டம் கடந்தால் சில கருக்கள் முழுமையாகவே கைவிடப்படுவதும் உண்டு. அந்தப்பிரச்சினை சமூகத்தில் இருக்கும், ஆனால் அதன்மீதான தத்துவ,அறக் கேள்விகள் பலகோணங்களில் பேசப்பட்டு கடந்துசெல்லப்பட்டிருக்கும். சுந்தர ராமசாமி ஒரு முறை சொன்னார், ‘நிஜவாழ்க்கையில் விதவைமறுமணம் இன்றும் பெரிய பிரச்சினை, இலக்கியத்தில் அது தீர்க்கப்பட்டுவிட்டது’ என்று

ஜெ


சு.வேணுகோபால், ஒரு கடிதம்

இலக்கியத்தின் பயன் சார்ந்து…

பாத்திமா கல்லூரி- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைபுல்வெளிதேச மானுடர்
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை