காடும் யானையும்

kaadu

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெகு நாட்களாக தமிழில் எழுத முயன்று, இன்று எழுத துவங்கி விட்டேன். முதலில் தமிழில் விஷ்ணுபுரம் பற்றிதான் எழுதலாம் என்று நினைத்து கொண்டேன், ஆனால் அதற்கு மொழி கைகூடவில்லை.

காடு ஒரு மாதம் முன்பு வாசித்தேன். கதை களம் நன்கு பழக்கப்பட்டது. சிறு வயதில் சேர்வலாறு அணைப் பகுதியில் வசித்து இருக்கிறேன். அவ்வட்டார பேச்சு வழக்கும் காடு நாவலில் வருவது போலவே. அங்கும் மிளா அதிகம் உண்டு.

நாவலின் கரு ஒரு பதின்ம இளைஞனுக்கு காடு அளிக்கும் தரிசனங்கள் மற்றும் மாற்றங்கள். அத்துடன் காட்டின் “வளர்ச்சி மாற்றம்”. குறிஞ்சி திணை என்பதால் காதல்\காமமும் நிறையவே.

கிரி அடையும் உன்மத்த காதல் நிலை பொதுவாக எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. விஷ்ணு புரத்தில் திருவடிக்கும் இதே மாதிரி அனுபவம். மனதை தொலைப்பதற்கு முன்பு வழியையும் தொலைக்கிறார்கள். இது ஏதேனும் படிமமா என்று தெரியவில்லை. இதை பற்றி சிந்தித்ததும் உங்கள் “கடைசி முகம்” கதை நினைவில் வந்தது. இது நாள் வரை “கடைசியில் தெரியும் முகம் ” என்று நினைத்து இருந்தேன். இப்போது புரிந்தது “கடைசி வரை நிற்கும் முகம்” என்று.

தேவாங்கை புலி அடித்து போவதும் மறு வாசிப்பில் தான் புரிந்தது. நாவலின் ஆதியில் கிரியின் மாமா தொடர்பு கொண்டதும் ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தையிடம். அவரின் முடிவும் அது போன்ற இன்னொரு பெண்ணால். Poetic justice..

அன்புடன்,
மீனாட்சி

***

அன்புள்ள ஜெ

காடு நாவலை இன்றுதான் வாசித்தேன். நெடுநாட்களாகவே கையில் இருந்தது. புரட்டிப்பார்ப்பேன். கண்ணில்படும் வரிகள் வட்டார வழக்கில் இருக்கும். அப்படியே விட்டுவிடுவேன். இன்றைக்குத்தான் சரி என முதல் வரியை வாசித்தேன். மிளா வந்து தன் முத்திரையைப் பதித்துப்போகும் இடம். அந்த கவித்துவம் புன்னகையை வரவழைத்தது. ஒரே மூச்சில் படித்துவிட்டு இதை எழுதுகிறேன்

காடு ஓர் அசாதாரணமான நாவல். அதன் கிளாஸிக் ரெபெரென்ஸுகள் முக்கியமானவை. அவற்றை நான் இனிமேல்தான் தேடி வாசிக்கவேண்டும். எனக்கு முக்கியமானவையாகப் பட்டவை அதிலுள்ள குணச்சித்திரங்கள். ரெசாலம், குரிசு, குட்டப்பன் எல்லாருமே கேரிக்கேச்சர் தன்மைகொண்டவர்களாகவும் அதேசமயம் அழகான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். அந்த கதையோட்டம் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நிறைந்தது அல்ல. ஆனால் நிகழ்ச்சிகளை விட அவற்றின் கவித்துவமான அர்த்தம் முக்கியமானதாக இருந்தது. முழுக்கமுழுக்க கவிதையாலான ஒரு நாவல் என்று தோன்றியது

ராஜேஷ்

https://youtu.be/PaJDvIGGleU

***

அன்புள்ள ஜெ

காடு நாவலில் கீறக்காதன் பெருவெள்ளம் வரும் ஆற்றுக்குக் குறுக்காக மாட்டிக்கொண்டு அலறிக்கொண்டே இருக்கும். அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது கேரளத்தில் வெள்ளத்தின்போது நிகழ்ந்ததே, கவனித்தீர்களா? அந்த யானைக்காக டாமை மூடி நீரை குறைய வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள்

அருண்

முந்தைய கட்டுரைநம்பிக்கை -கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – 3