நம்பிக்கை -கடிதங்கள் 3

சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்
சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்

நம்பிக்கையின் ஒளி

 

அன்புள்ள ஜெ

நம்பிக்கையின் ஒளி என்னும் கட்டுரை மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது. நீங்கள் சமூக வலைத்தளங்களை படிப்பதில்லை. ஆகவே அங்கே இருக்கும் அவநம்பிக்கையையும் கசப்பையும் பார்த்திருக்க மாட்டீர்கள். உள்ளே போனால் மனச்சோர்வு கசப்பு. உலகமே நம்மை ஏமாற்றுகிறது என்ற எண்ணம். எல்லாருமே அயோக்கியர்கள் என்ற சோர்வு. அங்கே சென்று பார்க்காமலும் இருக்கமுடியவில்லை. மாறிமாறி மட்டம்தட்டிக்கொள்வது வசைபாடிக்கொள்வது. வசைபாடும் திறன் இருப்பவர்கள்தான் பெரிய ஆட்களாக அங்கே தெரியவருகிறார்கள்

ஆகவேதான் உங்கள் இணையத்தளத்தை வாசிக்கிறேன். புதிதாகத் தெரிந்துகொள்வதற்கும் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் எப்போதுமே எதாவது அதில் இருக்கும். ஆனால் அவ்வப்போது சர்ச்சைகள் வரும்போது மட்டும் பெரிய மனச்சோர்வு. ஏனென்றால் சர்ச்சைகளில் உங்கள் கருத்துக்களைத் தெளிவாகவே சொல்லியிருப்பீர்கள். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுபவர்கள் அவரவர் சாதி மத கட்சி அடையாளத்தைக்கொண்டு திட்டித்தள்ளியிருப்பார்கள். கண்டபடி வியாக்கியானம் எழுதி வசைபாடுவார்கள்.

அப்படி ஒரு மனசோர்விலிருந்தபோதுதான் நீங்கள் நம்பிக்கையின் ஒளி கட்டுரையையும் நம்பிக்கைமனிதர்களையும் அறிமுகம் செய்தீர்கள். மிகப்பெரிய ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது. இன்றைக்கு வெறுமே சத்தம்போடுபவர்கள்தான் மிகுதி. மிக நெகெட்டிவான ஆட்கள். அவர்களுக்கும் நம்பிக்கை இல்லை பிறர் நம்பிக்கையையும் அழிப்பார்கள். எந்தவகையிலும் ஐடியலான எதையுமே அறிந்துகொள்ளாதவர்கள். எந்தவிதமான சப்ளைம் உணர்ச்சிகளும் இல்லாதவர்கள். அத்தகைய மனிதர்கள் நடுவே இன்னொருவகையான வாழ்க்கை வாழ்பவர்களைப்பற்றி அறிந்துகொள்வது உன்னதமானது. நாம் எதாவது செய்கிறோமோ இல்லையோ ஒரு கனவையாவது வைத்துக்கொள்ளலாம்

நன்றிகளுடன்

துளசிதாஸ்

22365498_1895912567102239_2058619604179210172_n
சிவகுருநாதன்

 

அன்புள்ள ஜெயமோகன்

நம்பிக்கையின் ஒளி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நம்பிக்கை கொடுத்த கட்டுரை. வாழ்க்கையின் அர்த்தம் புரியவருவதுபோலத் தெரிந்தது. நானெல்லாம் ஒரு வகையில் முன்னுதாரணமான ஆளுமைகளே இல்லாத தலைமுறை. படிப்பு வேலை சம்பாத்தியம் என்றுதான் குடும்பத்தினர் என்னையெல்லாம் வளர்த்தார்கள். அவர்கள் சுட்டிக்காட்டியவர்கள் எல்லாமே வேலை சம்பாத்தியம் என ‘வெற்றிபெற்ற’ மனிதர்களைத்தான்.

அதன்பிறகு கொஞ்சம் வேரூன்றியபின் வேறு ஏதாவது தேவை என்று தேடினால் கிடைப்பது அரசியல்வாதிகள். ஊழல் செய்து குடும்பச்சொத்தைப் பெருக்கியதைத்தவிர எதையுமே செய்யாதவர்கள். ஆனால் அவர்களை எல்லாம் புத்தர் காந்தி ஏசு கணக்காக ஊடகங்கள் புகழ்ந்துகொண்டிருக்கின்றன. கட்சிக்காரர்களின் கண்மூடித்தனமான வழிபாடுவேறு. என்னைப்போன்ற இளைஞர்கள் பலர் அதில் விழுந்துவிடுகிறார்கள். கோடிக்கணக்கான செலவில் செய்யும் பிரச்சாரம் அது

இன்னொரு சிறுபான்மையினர் கொஞ்சம் வாசிக்கக்கூடியவர்கள் அப்படியே போராளி மோடுக்குச் சென்றுவிடுகிறார்கள். எதையாவது எதிர்த்துப்போராடிக்கொண்டே இருப்பதுதான் அறிவின் அடையாளம் என்ற நினைப்பு. போராட்டத்தைப்பற்றி தொண்டைதெறிக்கப்பேசுவது. ஆனால் நடைமுறையில் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் வாழ்க்கையும் வாழ்வது. நானெல்லாம் அதை ‘பீரும்புரட்சியும்’ என்று சொல்வதுண்டு. சனிக்கிழமை பீரைக்கூட விடமுடியாதவர்களின் புரட்சி அது. அதற்கேற்ற புரட்சிநாயகர்கள் கிடைக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் நரம்பு புடைக்க எதையாவது எதிர்ப்பவர்கள்

இவர்களை நான் தொடர்ச்சியாகக் கவனித்து வருகிறேன். இவர்கள் ஒருவகையான மனச்சோர்வு நோயாளிகள் மட்டும்தான். அதற்கு ஏதாவது ஒரு கொள்கையை இலட்சியத்தைச் சொல்லிக்கொள்கிறார்கள். மனச்சோர்வையும் கசப்பையும் வெளிப்படுத்த அது ஒரு mode மட்டும்தான். சொல்லும் எதிலும் மெய்யான நம்பிக்கை இருப்பதில்லை. அதற்காக ஒரு துரும்பும் இழக்க மாட்டார்கள். ஒரு சின்ன செயல்கூடச் செய்யமாட்டார்கள்

ஆனால் ஆக்கபூர்வமாகச் செயல்படும் ஒரு சின்ன வட்டம் எப்போதும் இருக்கும். நம்பிக்கையும் விரிந்த மனமும் மனிதர்கள் மேல் அன்பும் கொண்டவர்கள். சொல்வதைவிடச் செய்பவர்கள். அவர்களை தொடர்ந்து அடையாளப்படுத்துகிறீர்கள். அவர்கள் எங்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறார்கள்.

நன்றி

எம்.நாகராஜ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14
அடுத்த கட்டுரைகாடும் யானையும்