‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14

bowகாவலரண் வாழ்க்கையில் ஓரிரு நாட்களிலேயே அசங்கனுக்குள் விசைகொண்டு ஊசலாடிய எண்ணம் இரு சொற்களென சுருங்கியது. ஒருமுனையில் சௌம்யை இருந்தாள். மறுமுனையில் அவன் எண்ணிய கணமே அஞ்சி பின்னடையும் அச்சொல் இருந்தது. முதலில் அச்சொல் கூரிய அம்பெனப் பாய்வதாக இருந்தது. பின்னர் அதை அவன் முற்றிலும் தவிர்த்தான். அதன் பின் அச்சொல் நோக்கி செல்லும் அனைத்தையும் தவிர்த்தான். ஆனால் அவனுள் இருந்து எழுந்து அனைத்துமாகிச் சூழ்ந்திருந்தது அச்சொல். பல்லாயிரம் படைக்கலங்களின் கூரொளியாக. உலோக ஒலியாக. ஆணைகளாக. முரசொலியும் கொம்போசையுமாக. இரவில் கோடிகோடி விழிகளாக நடுங்கி விண்ணைப் பார்க்கும் இருண்ட வெளியாக.

அதை அஞ்சி அவன் அவளை நோக்கி வந்தான். அவளை வகைவகையாக புனைந்துகொண்டான். அவளுடன் ரிஷபவனத்தின் சோலைகளிலும் நீரோடைகளிலும் களித்தான். மலைச்சரிவுகளில் அவளுடன் விரைந்திறங்கி கூச்சலிட்டான். இளந்தென்றல் மேவும் கொடிமண்டபங்களில் தழுவியபடி அமர்ந்திருந்தான். அந்த இனிமை சலித்தபோது மெல்லிய துயர்களை உருவாக்கிக்கொண்டான். அவள் அவனை கன்றோட்டும் குலத்தான் என பழித்தாள். சினந்து அவளை ஐவரை மணக்கும் குலம் என்று வசைபாடினான். ஊடி அரண்மனையின் பிறிதொரு அறையில் இருந்தான். அவள் வந்து அவனை தழுவிக்கொண்டாள். கண்ணீருடன் அவர்கள் கூடினர். இனிமையை மிகையாக்க மேலும் மேலும் துயர் தேவையாகியது. அவளிடம் விடைபெற்று களம்சென்றான். வழிதவறி பல்லாண்டு கடந்து மீண்டான். நோயுற்று நைந்து உடல்தேறினான். காதலில் முதலில் கண்டடையும் தருணத்தின் இனிமை பிறிதெதிலும் இல்லை என்று அறிந்தான். எனவே மீண்டும் மீண்டும் சூழல்களை மாற்றி, காலங்களை மாற்றி அவளை கண்டடைந்துகொண்டே இருந்தான்.

ஆனால் தனிமையில் நாட்கள் நீண்டு நீண்டு அகன்றன. ஒருநாளில் பலநூறு வாழ்க்கைகள். பிறந்திறந்து முதிர்ந்து உருமாறினான். அவளும் அவனுள் மாறிக்கொண்டிருந்தாள். அவன் எதிலிருந்து தப்பி அவளிடம் சென்றுகொண்டிருந்தானோ அதுவே அவளென்று ஆவதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அவள் அதுவே என்றானாள். ஒரு வட்டம் முழுமையடைந்து இரண்டுமுனைகளும் இணைந்தன. அவன் உள்ளத்தை குளிர்ந்துறையச் செய்யும் நோக்குடன் அவள் அவன் முன் நின்றாள். விண்மீன் விரிந்த கரிய வான் என.

படைநகர்வு முழுவதும் சௌம்யை அவனுடன்தான் இருந்தாள். ஒவ்வொரு அந்தியிலும் மிக இயல்பாக சாத்யகியின் அணுக்கனாகிய நேமிதரன் வந்து அவனை அழைத்துச்சென்றான். ஒவ்வொரு முறையும் படைநகர்வு குறித்த எதையேனும் ஒன்றை பேசியபடி மேலும் அதை உசாவும் பொருட்டென அவனை அழைத்துச்சென்று படைப்பிரிவுக்குப் பின்னால் தனியாக வந்துகொண்டிருந்த ஏவலர்களின் பகுதிக்கு கொண்டுசென்றான். அங்கே யானைத்தோல் கூடாரத்திற்குள் அவள் அவனுக்காக காத்திருந்தாள். நாள் செல்லச் செல்ல காமம் தொடங்கியது முதல் இருந்த இருநிலையை அவன் இழந்தான். அதில் முற்றாக தன்னைக் களைந்து உடலென்றாகி திளைத்தான்.

அதுவரை எண்ணிய அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது மெய்க்காமம். அது உடலே என்றுணர்ந்து, ஆம் உடலே என ஏற்று, ஆம் உடலன்றி வேறேது என தெளிந்து அகம் அமைந்த பின்னர் உடலிலிருந்து மேலும் வளர்த்து உள்ள விளையாட்டாக மாற்றிக்கொள்ள இயன்றது. சிறுபூசல்கள், ஊடல்கள், உளமுருகும் அணுக்கம் என ஒவ்வொரு நாளும் ஒரு நாடகவெளி விரிந்தது. ஒவ்வொரு அந்தியும் ஒரு தனி வாழ்வின் கீற்றெனத் தெரிந்தது. அவனை முற்றாக இழுத்து பதினாறு கைகளால் அணைத்து தன்னுள் வைத்திருக்க அவளால் இயன்றது. அவன் சலிக்கையில் விழைவை கொட்ட, விழைவு கொள்கையில் ஊடி மேலும் எழுப்ப, தனித்திருக்கையில் அறியாது உடனிருக்க, தனித்திருக்க விரும்புகையில் இயல்பாக அகல, எப்போதும் தனது ஒரு பகுதியென அவனை உணரவைக்க, அவனில் ஒரு பகுதி தானென்று காட்டி அவ்வுண்மையை மறைக்க அவள் திறன் கொண்டிருந்தாள்.

ஆனால் இருவருக்குள்ளும் நஞ்சுத்துளி என இருவரும் ஆழத்தில் உணர்ந்த ஒன்று இருந்தது. இனிப்பை சுவைகொண்டதாக்கும் துளிக் கசப்புபோல. அவர்களின் கூடல்களை அது விசைமிக்கதாக்கியது. ஒழிந்த பொழுதுகளில் மாற்று எண்ணமே இல்லாதவர்களாக ஆக்கியது. இன்னும் இன்னும் என செல்லும் நாள்நோக்கி ஓர் அகம் தவிக்க, இதோ இதோ என ஒவ்வொருநாளையும் நூறுமடங்கு நீட்டி விரித்துக்கொண்டது பிறிதொரு அகம். அவன் விழிகளில் அப்பித்து இருந்தது. ஆகவே அவன் இளையோர் எவரும் அவனை முகம்நோக்கி பேசவில்லை. சினி மட்டும் “மூத்தவரே, நீங்கள் தானாகவே புன்னகை செய்கிறீர்கள்” என்றான். உத்ஃபுதன் அவன் தலையை தட்டினான். “தலையை தட்டுகிறார், மூத்தவரே!” என்றான் சினி.

குருக்ஷேத்ரத்தை அணுகிய அன்றிரவு என்றும் போலன்றி சௌம்யை சோர்ந்தும் தனித்தும் இருந்தாள். அந்நாளின் பொருளை அவன் உணர்ந்திருக்கவில்லை. படை குருக்ஷேத்ரத்தில் அமைந்தது முதல் ஒவ்வொருகணமும் அவன் கற்றுக்கொண்டிருந்தான். பொறுப்பேற்கையிலேயே கல்வி நிகழ்கிறது என்பதை உணரத் தொடங்கியிருந்தான். ஆவலுடன் அருகணைந்து அவளருகே அமர்ந்து அன்று தான் செய்த பணிகளைப்பற்றி உளஎழுச்சியுடன் பேசத்தொடங்கினான். அடுமனை கணக்குகளனைத்தையும் ஒழுங்குபடுத்தி திருஷ்டத்யும்னனுக்கு அளித்திருந்தான். அப்படைகளின் அடுமனைத் தேவை அவனை எண்ணிவியக்கச் செய்தது. எவரிடம் அதை சொன்னாலும் அவர்களும் வியந்து விழிநிலைப்பார்களென்று அறிந்திருந்தான்.

ஆனால் அவள் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. அவள் உளவிலக்கம் அவனை வந்தடைந்தபோது அகஎழுச்சி ஓய்ந்து “என்ன?” என்றான். “ஒன்றுமில்லை” என்று அவள் விழியொளிரா புன்னகையுடன் சொன்னாள். “என்ன உணர்கிறாய்?” என்றான். “ஒன்றுமில்லை” என்று சொல்லி அவன் கையை தொட்டாள். “இல்லை, நீ வழக்கம் போலில்லை” என்றான். “ஒவ்வொரு நாளும் வழக்கம் போலத்தான் இருக்கிறேனா?” என்று அவள் கேட்டாள். “இல்லை, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பெண்ணாக இங்கு வருகிறாய். ஆனால் இன்றுவரை நான் பார்த்த பெண்கள் அனைவரிலும் இருந்த உவகை உன்னிடம் இன்று இல்லை” என்றான். அவள் விழிகளை நோக்கி “உயிர்விசை குறைந்தவள் போலிருக்கிறாய்” என்றான்.

அவள் அவனை நோக்கியபோது விழிகள் மேலும் வெளுத்து ஒளி இழந்திருப்பதை கண்டான். ஏனென்றறியாது உளம் நடுக்கு கொண்டது. அருகே நின்று பிறிதொரு உளம் திகைத்தது. அவள் “குருக்ஷேத்ரத்தை அடைந்துவிட்டோம்” என்றாள். அவன் “ஆம்” என்றான். “இனி நாம் சந்திக்க இயலாது. அங்கே பெண்களுக்கு ஒப்புதலில்லை.” அவன் அப்போதுதான் முழுதுணர்ந்து தோள் தளர்ந்தான். அவள் அவன் கையை பற்றி “வெற்றிவீரராக நீங்கள் திரும்பி வரும்போது சந்திக்கிறேன்” என்றாள். அவன் அச்சொற்களை வெறுத்தான். பொருளிலாச் சொற்கள் உள்ளே வாழும் தெய்வமொன்றை சீற்றம்கொள்ளச் செய்கின்றன. “ஆம், மீண்டு வருவேன். மீண்டு வந்தாகவேண்டும்” என்று சொல்லி புன்னகைத்தான். வெறும் தசைவிரிவாக எஞ்சியது அப்புன்னகை.

அவள் அவன் கையை இறுகப்பற்றி “குருக்ஷேத்ரத்திற்குள் படை நுழைவதற்குள் திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்று எனக்கு ஆணை. தேர்கள் ஒருங்கிவிட்டன” என்றாள். “பாஞ்சாலத்தரசியும் யாதவப்பேரரசியும் வந்து அருகே மிருண்மயம் எனும் சிற்றூரில் தங்குவதாக சொன்னார்களே?” என்றான். “ஆம். ஆனால் என்னிடம் திரும்ப காம்பில்யத்திற்கே செல்லும்படி தந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றாள் சௌம்யை. “காம்பில்யத்திற்கா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “ஏன்?” என்றான் அவன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “என் நாள் தவறியிருக்கிறது” என்றாள்.

அவனுக்கு அது புரியவில்லை. “அதனால் என்ன?” என்றான். அவள் புன்னகைத்தபோது அதில் அன்னையருக்குரிய கனிவிருந்தது. அவன் தலைமயிரை கைகளால் வருடி செவியோரம் ஒதுக்கி “அதன் பொருள் நம் குழவி ஒன்று இப்புவிக்கு வர விரும்புகிறது என்பது” என்றாள். “நம் குழவியா?” என்றபின் அவன் திடுக்கிட்டவன்போல் மஞ்சத்திலிருந்து எழுந்து நின்றான். அவள் அவனை நோக்கி சிரித்து “ஆம், அதற்கென்ன?” என்றாள். “நம் குழவியா?” என்றான். “ஆம்” என்றாள். “எப்போது அது வெளியே வரும்?” என்றான். “இன்னும் ஒன்பது மாதங்களுக்குப் பின்” என்றாள் சௌம்யை.

அவன் “ஒன்பது மாதங்கள்! நான்கு பருவங்கள் கடந்திருக்கும். நெடுங்காலம்” என்றான். “ஆம், ஆகவே நான் காம்பில்யத்தில் சேடியரும் மருத்துவச்சிகளும் உடனிருக்க தங்க வேண்டுமென்று தந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். அவன் விரைவுடன் “செல்க! இங்கு போர் நிகழ்கிறது. இது கடுமையான சூழல். நம் குழவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது” என்று சொன்னான். “அது ஆற்றலுடையது. ஆற்றலுடன் மண்ணுக்கு வரும்” என்றாள் சௌம்யை. “நம் குழவி, அல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம்” என்றாள். “என் குழவி, அல்லவா?” என்றான். “ஆம்” என்றாள் அவள். அவள் முகம் சிரிப்பில் மலர்ந்தது.

“குழவி” என்று அவன் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். பின்னர் அவளருகே அமர்ந்து “நம் குழவி என்றால் அது ஆணா பெண்ணா?” என்றான். “ஆண்” என்றாள். அவன் புருவம் சுளித்து “எப்படி தெரியும்?” என்றான். “எப்படியோ தெரிகிறது” என்றாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “அனைவரும் விரும்புவது ஆணே” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஆணிலிருந்து குலம் பெருக வேண்டுமல்லவா?” என்றாள் சௌம்யை. அவன் “எங்கள் குலம் பெண்களினூடாக பெருகுவது” என்றான். “பெருக விழையும் குலம் ஷத்ரியருக்குரியது அல்லவா?” என்றாள் சௌம்யை. “ஆம்” என்று அவன் சொன்னான்.

அந்தச் சிற்றுரையாடல் வழியாக உணர்வெழுச்சிகள் அணைந்து மீண்டு “இதன் பொருட்டுத்தானா?” என்று அவன் தனக்கென்று சொல்லிக்கொண்டான். “ஏன், இதன் பொருட்டென்றால் அது பிழையா?” என்றாள். “இல்லை. இது ஒரு பெருவேள்விபோல. சொல்லப்போனால் மானுடர் புவியில் பிறப்பதின் முதன்மைப் பொருளும் கடமையும் இதுதான். சற்று முன்னர் வரை அதை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். இப்போது அதுவன்றி பிறிதெல்லாம் பொய்யென்று தோன்றுகிறது” என்று அவன் சொன்னான். “நம் குழவி என்று நீ சொன்னபோது என் உளம் நடுங்கியது. என் அகம் அதை ஏற்றுக்கொள்வதற்குள்ளாகவே உடல் அதை ஏற்றுக்கொள்வதுபோல் தோன்றுகிறது. இன்னும் பருத்துளி ஆகாத குழவி. வெறும் எண்ணமென்றே இப்போது இருப்பது. ஆனால் எத்தனை அணுக்கமாக அது தோன்றுகிறது! இப்புவியில் எனக்கு பிற எவருமே அணுக்கமானவரல்ல. எந்தையோ, உடன்பிறந்தோரோ, அன்னையோ, நீயோ கூட. அது நானே.” “ஆம், அவ்வாறு ஒரு உபநிஷத் வரி உண்டு” என்றாள் சௌம்யை. “மகனெனும் நீ நானேதான்.” அவன் மெய்ப்புகொண்டு “ஆம், நானேதான்” என்றான். “ஆம் ஆம்” என்று சொல்லிச் சொல்லி அவன் அமைதியடைந்தான். கைகளை மார்பில் கட்டியபடி தலைகுனிந்து விழிதிறந்து அமர்ந்திருந்தான். அவன் தோளைப்பற்றி மெல்ல அசைத்து “என்ன எண்ணம்?” என்று கேட்டாள். “நானே” என்றான். அவள் புன்னகைத்தாள். “நானே, அல்லவா?” என்றான். “ஆம், நீங்களே” என்றாள். “ஆம், நானே” என்று அவன் சொல்லிக்கொண்டான்.

அன்றிரவு அவர்கள் உடல் தழுவியபடி, சொல்லின்றி ஒருவரை ஒருவர் நோக்கி, படுத்திருந்தனர். அவள் விழிகளை சந்தித்தபோது புன்னகைத்து “என்ன?” என்றாள். “ஏன்?” என்றான். அவள் “இன்று கைகள் ஓய்ந்திருக்கின்றன” என்றாள். “ஏன்?” என்றான். “இன்று வேண்டாமா?” என்றாள். அவன் அவள் சிரிப்பால் தானும் சிரித்து “வேண்டாம்” என்றான். அவள் “இன்றிரவு தாண்டினால் போர் முடிந்த பின்னரே வாய்ப்பு” என்றாள். அவன் “வேண்டாம், நம் மைந்தன்…” என்றான். “மைந்தன் இப்போது வெறும் எண்ணம் மட்டும்தான்” என்றாள் சௌம்யை. “எண்ணமாக இருந்தாலும் உடனிருக்கிறான்” என்றான். அவள் சிரித்தபோது முகமும் விழிகளும் ஒளிகொண்டிருந்தன.

“உன்னை இனி நீ மட்டுமே என என்னால் பார்க்க இயலாது” என்று அசங்கன் சொன்னான். “அஞ்சவேண்டியதில்லை. இப்போது அதற்கு தடையேதுமில்லை என்று மருத்துவச்சி சொன்னாள்” என்றாள் சௌம்யை. “மருத்துவத்தால் அல்ல, என் உள்ளத்தால்” என்றான் அசங்கன். அவள் “நன்று” என்று சொல்லி அவன் குழலை தன் விரலால் வருடினாள். அவன் அவளருகே கருக்குழவிபோல் உடல் சுருட்டி படுத்துக்கொண்டான். அவன் குழலை கைகளால் சுருட்டி கசக்கி நீவி, காதுமடல்களை வருடி, கழுத்தையும் தோளையும் கையோட்டியபடி அவள் அருகே படுத்திருந்தாள். கன்றை நக்கும் பசு போலிருந்தாள்.

அவன் அன்றிரவு முழுக்க துயிலாது அருகே படுத்திருக்க வேண்டும், இமைக்காது அவளை நோக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவன் விழிகள் துயிலில் சரியத் தொடங்கின. தன் மூச்சொலியை தானே கேட்டு அவன் கையூன்றி எழுந்தமர்ந்தான். “என்ன?” என்று அவள் கேட்டாள். “துயில் வருகிறது” என்றான். “துயிலுங்கள்” என்றாள். “இல்லை, நான் துயில விரும்பவில்லை. இவ்விரவை இழக்கமாட்டேன்” என்றான். “துயில்வதனால் இழப்பதாக யார் சொன்னது? படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். அவன் தயங்க அவன் கையைப்பற்றி அருகணைத்து தாழ்ந்த குரலில் “படுத்துக்கொளுங்கள்” என்றாள்.

அவன் முகத்தை இழுத்து தன் முலைகளுக்கு நடுவே வைத்து அணைத்துக்கொண்டாள். “துயில்க!” என்று அவள் அவன் காதில் சொன்னாள். “உம்” என்று அவன் சொன்னான். “துயில்க! துயில்க!” என்று மேலும் மெதுவாக சொன்னாள். அவன் உடலுக்குள்ளிருந்து அவள் அச்சொற்களை உரைத்ததுபோல் உணர்ந்தான். அவன் உடற்தசைகள் ஒவ்வொன்றும் மெல்ல தளர்ந்தன. “நம் மைந்தன்” என்றான். “அவனுக்கென்ன?” என்றாள். “அவன் முகம் என் முகம் போலிருக்குமா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “ஆம், நானேதான்” என்று அவன் சொன்னான். புன்னகைத்தபடி மேலும் தன் முகத்தை அவள் மென்முலைகளுக்கு நடுவே புதைத்துக்கொண்டான். அவள் அவன் தலையையும் தோளையும் மெல்ல தட்டிக்கொண்டிருந்தாள்.

முன்புலரியின் இருளுக்குள் உள்ளுணர்ந்து அவன் எழுந்தபோது அவள் தன் ஆடைகளை அணிந்துகொண்டிருந்தாள். “ஏன்?” என்றான். “புலரி அணுகுகிறது” என்றாள். “இல்லையே, ஒலி மாறுபாடுகள் தெரியவில்லை” என்றான். “கரிச்சான் ஒலியெழுப்பிவிட்டது” என்றாள் அவள். அவன் விழிகளைத் தவிர்த்து “விடைகொடுங்கள், மீண்டும் காண்போம்” என்றாள். அவன் எழுந்து அவளை அணுகி இடைவளைத்துப் பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவள் உதடுகளை அழுந்த முத்தமிட்டான். அவை மெல்லிய துடிப்பும் வெம்மையும் கொண்டிருந்தன. கன்னங்களில், கழுத்தில் முத்தமிட்டு இரு கைகளையும் சேர்த்துபற்றி தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டான். அவள் கண்களில் மெல்லிய ஈரப்படலம் இருந்தது. உதடுகள் புன்னகைத்தன.

“போர் எனில் அஞ்சலாகாதென்று சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். ஆனால் எப்போதுமே என்னுள் அச்சம் இருந்து கொண்டிருந்தது” என்றான். “அஞ்சாதவர் எவருமில்லை” என்று அவள் சொன்னாள். “அப்படித்தான் நானும் எண்ணுகிறேன். உன்னை அடைந்தபோது அவ்வச்சம் மிகுந்தது. களம்படுவதைப்பற்றி எண்ணும்போதே என் அகம் நடுங்கத்தொடங்கும். ஆகவே அவ்வெண்ணத்தையே முற்றிலும் ஒதுக்கினேன். இன்று களம்படுவது ஒன்றும் பெரிதல்ல என்று தோன்றுகிறது.” அவள் “நாம் ஏன் அதை பேசவேண்டும்?” என்றாள். “இல்லை, களம்படினும் நான் இருப்பேன். மீள மீள நிகழ்வேன். அதை சொல்லவந்தேன். அவன் நானேதான்” என்றான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முகம் அவனால் புரிந்துகொள்ள முடியாத ஓர் உணர்வை காட்டியது. சலிப்போ இகழ்ச்சியோ ஒரு நிழலாட்டமென வந்து சென்றதா என ஐயுற்றான். மேலாடையை எடுத்துச் சுழற்றி இடையில் செருகியபடி “விடைகொள்கிறேன்” என்றாள். “சென்று வருக!” என்று அவன் சொன்னான். அவள் சற்று விலகி பின் திரும்பி அவனை பார்த்ததும் மெல்லிய விம்மலோசையுடன் பாய்ந்து அவன் கழுத்தைச்சுற்றி கைகளை வளைத்து தலைமுடியைப் பற்றி இழுத்து குனித்து வெறிகொண்டு அவனை முத்தமிடலானாள். அவன் முகத்திலும் கழுத்திலும் தோள்களிலும் பனித்துளிகள் உதிர்வதுபோல் அவள் முத்தங்கள் விழுந்தன.

பின்னர் நீண்ட விசும்பலோசையுடன் ஓய்ந்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அவள் விழிநீர்த்துளிகளை அவன் தன் மார்பில் வெம்மையாக, பின் குளிர்ந்துவழிவதாக உணர்ந்தான். அவள் அவனை சற்று உந்தியதுபோல் விலக்கி விரைந்த காலடிகளுடன் கூடாரத்தைவிட்டு வெளியே சென்றாள். அங்கு நின்றிருந்த சேடியிடம் கையால் தொடரும்படி காட்டிவிட்டு இருளில் நடக்க சேடி அவனை திரும்பிப்பார்க்காமல் உடன் நடந்தாள். அவன் அவள் சென்று இருளில் மறைவதை பார்க்க விரும்பாமல் குடிலை நோக்கி திரும்பிக்கொண்டான். பின்னர் நீண்ட பெருமூச்சுடன் தன் உடலை தளர்த்திக்கொண்டான். அவள் கண்ணீர் அவன் கன்னங்களிலும் மார்பிலும் மெல்லிய பசைபோல உலர்ந்து ஒட்டியது.

முந்தைய கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – 2
அடுத்த கட்டுரைநம்பிக்கை -கடிதங்கள் 3