குரியனும் சில எண்ணங்களும்

குரியன்
குரியன்

போற்றப்படாத இதிகாசம் -பாலா

திரு ஜெயமோகன்,

இன்றுதான் நான் உங்கள் தளத்தில் குரியன் அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். தமிழில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நல்ல டிரிப்யூட்களில் ஒன்று அது. மிகச்சிறப்பாக உள்ளுணர்ந்து எழுதியிருக்கிறார் போற்றப்படாத இதிகாசம் -பாலா

இந்தியச்சூழல்களில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது மிகமிகக் கஷ்டம்.ஏனென்றால் இங்கே உள்ள பிரச்சினைகள் மிகச்சிக்கலானவை. என் சொந்த அனுபவத்தில் சிலவற்றைச் சொல்கிறேன். மக்கள் அறிவுஜீவிகளையோ மேலிருந்து வருபவர்களையோ நம்ப மாட்டார்கள். ஏனென்றால் இங்கே வெள்ளைக்காரன் ஆட்சிக்காலம் முதலே மக்களுக்கும் படித்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இடைவெளி காணப்படுகிறது. அதோடு மக்கள் தங்கள் வாழ்க்கையை எந்தவகையிலும் மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மிகமிகக்கேவலமான வாழ்க்கைச்சூழலில் இருந்தால்கூட மாற்றத்தை பயப்படுவார்கள்

அதோடு கிராமத்திலுள்ள சாதிமுறை. எல்லாச் சாதிகளுக்கும் பொதுவான அமைப்புக்களை உருவாக்க அதுதான் மிகப்பெரிய தடை. இன்றைக்குக் கிராமங்களில் அரசியலும் ஒருவகைச் சாதி. இரண்டு தடைகளும் ஒவ்வொருநாளும் வம்புவழக்குகளாக வந்தபடியே இருக்கும். என்ன செய்தாலும் கெட்டபெயர் கிடைக்கும். இவர்களுடன் இணைந்திருப்பது கிராமங்களில் உள்ள சுயநலமிகளும் எத்தர்களும். இவர்கள் இந்தியக்கிராமங்களில் மிக அதிகம். நாமெல்லாம் நினைப்பதை விட அதிகம். இவர்கள் தலைமுறைகளாகவே இந்த வாழ்க்கை வாழ்பவர்கள். ஆகவே எந்த மாரல் வேல்யூவும் இல்லாதவர்கள். எந்த விஷயம் வந்தாலும் அதை அடித்துக்கொன்று திங்க விரும்புவார்கள். ஆகவே கோள்மூட்டுவது, கிளப்பிவிடுவது, பிரச்சினைகளை உருவாக்குவது எல்லாவற்றையும் செய்வார்கள்.

இதைத்தவிர அதிகாரத்திலுள்ள ஆட்சி வர்க்கத்தின் சுரண்டல். அவர்களுக்கு எல்லாவற்றிலுமே ஊழல் செய்யவேண்டும். அதைமீறி ஏதாவது நல்லது நடந்தால் அதன் நல்லபேரையும் அவர்களே வாங்கிக்கொள்ளவேண்டும். அதிகாரிகள் எந்த விஷயத்துக்கும் உதவமாட்டார்கள். எதையும் ஒத்திப்போடவேண்டும். அதற்கான ரூல்களைக் கண்டுபிடிப்பார்கள்.

இவ்வளவையும் மீறி அமுல் போன்ற ஒரு பொது நிறுவனத்தை குரியன் உருவாக்கி நிலைநிறுத்தினார் என்றால் அது ஓர் இமாலயச் சாதனை. தனியார் நிறுவனம் உருவாக்குவதே கஷ்டம். அரசு நிறுவனம் உருவாக்குவது அதைவிடக் கஷ்டம். மக்களைச் சேர்த்து கூட்டுநிறுவனம் உருவாக்குவது நினைத்தே பார்க்கமுடியாது. அமுல் போன்ற வேறு எந்த அமைப்பும் அதன்பிறகு இன்றுவரை உருவாகி வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பது வரலாறு

பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் ஒளி கொடுத்தவர் குரியன். எட்டு மாவட்டங்களை வாழவைத்தவர். அதைவிட முக்கியமாக ஒரு வெற்றிகரமான இண்டியன் மாடல் ஒன்றை உருவாக்கியவர். ஆனால் அவருக்கு நாம் செய்தது என்ன? அவர் பெயர் எவருக்குத்தெரியும் இங்கே? மலையாளியானாலும் அவர் முழுக்கமுழுக்கத் தமிழ்நாட்டுக்காரர். கோபிசெட்டிப்பாளையத்தில் அவருடைய அப்பா டாக்டராக இருந்தார். இங்கே லயோலா காலேஜிலும் கிண்டி எஞ்சினியரிங் காலேஜிலும்தான் படித்தார். நமக்கு அவரைப்போன்றவர்கள் ஏன் முன்னுதாரணமாக ஆகவில்லை? ஈவிரக்கமில்லாமல் ஊழல்செய்து அந்த ஊழல்பணத்தைக்கொண்டு மீடியாக்களை உருவாக்கி அதன்வழியாக பிரச்சாரம் செய்துகொள்ளும் அரசியல்வாதிகள்தான் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

குரியனைப் பற்றிய இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது எனக்கு அக்காலத்தில் இலஸ்டிரேட்டட் வீக்லி வழியாக கிளாட் ஆல்வாரிஸ் என்பவர் தொடர்கட்டுரைகள் எழுதி குரியனை தாக்கியது ஞாபகம் வருகிறது. இந்த கிளாட் ஆல்வாரிஸ் இந்தியாவின் ஆரம்பகால சுற்றுச்சூழல் பேச்சாளர்களில் ஒருவர். பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடையவர். பின்னாளில் மிகப்பெரிய என்.ஜி.ஓ ஒன்றை உருவாக்கி பெரும்பணம் ஈட்டினார். இன்று மிக நிழலான ஆசாமியாகக் கருதப்படுகிறார். ஆனால் அன்று அவர் இடதுசாரிபோல பேசினார். மிகப்பெரிய தார்மீக ஆவேசத்துடன் குரியன் இந்தியாவை அழிக்கும் நாசகாரச் சக்தி என வசைபாடினார். அதை இந்திய ஆங்கில ஊடகங்கள் கொண்டாடின.

குரியன் கர்மயோகி. ஆகவே அந்த குரைப்பைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ஒரு இருபது ஆண்டுகள் இங்குள்ள சுற்றுச்சூழல் இடதுசாரித்தனம் லிபரலிசம் எல்லாவற்றையும் கலந்துகட்டி ஆங்கில இதழ்களில் உளறும் அறிவுஜீவிகள் குரியனைச் சிறுமைப்படுத்தினர். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ஆல்வாரிசை மேற்கோள்காட்டி குரியனை இழிவுபடுத்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வந்துள்ளன. குரியனை வீழ்த்துவதற்காக இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் செய்த சதிதான் குளோட் ஆல்வாரிஸ் என்று பின்னர் பேசிக்கொண்டார்கள். இதுதான் நாம் குரியனுக்கு அளித்த பதில்மரியாதை

குரியன் ஒரு நிர்வாகி. .நோ நான்ஸென்ஸ் மேன். ஆகவே கடுமையானவர். வேலை நடந்தாகவேண்டும்,இல்லாவிட்டால் கொலைகாரர் ஆகிவிடுவார். ஆனால் இந்தியா என்ற இலட்சியம் மீது அர்ப்பணிப்பு கொண்டவர். ஆனால் குளோட் ஆல்வாரிஸ் வெறும் வாயாடி. அந்தந்தக் காலகட்டத்தின் ஃபேஷன் ஐடியாக்களைப் பேசுபவர். அவதூறாளர். ஆனால் நமக்கு குளோட் ஆல்வாரிஸ்தான் புகழ்பெற்றவர். அவரைத்தான் நாம் இலஸ்டிரேட்டட் வீக்லி, தி ஹிந்து எல்லாவற்றிலும் வாசித்துக்கொண்டே இருந்தோம். ஏனென்றால் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்

இதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். செய்துகாட்டுபவர்களுக்கு இங்கே மதிப்பில்லை. பாஸிட்டிவ் எண்ணம் கொண்டவர்களுக்கு மதிப்பில்லை. வசைபாடுபவர்களும் குறைகாண்பவர்களும் எல்லாமே நாசமாப்போச்சு என்று கூச்சலிடுபவர்களும் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள்தான் ஒப்பீனியன் மேக்கர்ஸ். இந்தியாவின் மிகப்பெரிய சீர்கேடே இதுதான். இளைஞர்களுக்கு இந்த சில்லறைக்கும்பல்தான் அதிகமாகத் தெரியவருகிறது. ஏனென்றால் இவர்கள் ஊடகங்களில் கலக்கிக்கொண்டே இருக்கிறார்கள். குரியன் போன்றவர்களை நாம்தான் தேடிப்போய் அறிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்கு நான் எந்தச் சர்ச்சைகளுக்கும் தயாரான மனநிலையிலே இல்லை. உடல்நிலையும் இல்லை. ஆனாலும் எழுதவேண்டுமென்று தோன்றியது

ஆர்

வற்கீஸ் குரியன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7
அடுத்த கட்டுரைகலாமோகனின் நிஷ்டை