‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12

3. நிலைத்தோன்

bowபாண்டவப் படைகளின் பின்புறம் மேற்கு எல்லையில் அசங்கன் தன் இளையோரான சாந்தனும் உத்ஃபுதனும் துணைக்க படைக்காவல் பணியில் இருந்தான். முதல் நாள் படைகள் குருக்ஷேத்ரத்திற்குள் நுழைந்தபோதே திருஷ்டத்யும்னன் அவனை அழைத்து எல்லைக்காவல் பணியில் அமர்த்தினான். மூச்சுவிடும் பசுவின் அடிவயிறென அலையடித்துக்கொண்டிருந்த கூடாரத்திற்குள் வெங்காற்று நிறைந்திருந்தது. திருஷ்டத்யும்னனின் ஆணைக்காக நான்கு தூதர் காத்திருந்தனர். அவன் தலைவணங்கிய அசங்கனை நிமிர்ந்து நோக்கி “மேற்கு எல்லைக்காவலுக்கு முதிர்ந்த காவலர்தலைவர் சுவீரர் முன்னரே பொறுப்பிலிருந்தார். நான் ஓலை தருகிறேன். சுவீரரின் கீழ் பணியில் இணைந்துகொள்க!” என்றான்.

படைப்பணியை எதிர்பார்த்து வந்திருந்த அசங்கன் ஏமாற்றத்துடன் “ஆனால்… எனக்கு படைக்காவல் பயிற்சி…” என்று தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆம், படைக்காவலில் நீயாக எதையும் செய்யவேண்டியதில்லை. சுவீரர் படைக்காவலில் இருபது ஆண்டு பட்டறிவு கொண்டவர். அவர் ஆணையை ஏற்று நீ உன் கடமையை செய்யலாம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அசங்கனின் விழி சற்றே மாறுபட்டதைக் கண்டு “ஆனால் நீ அரசகுடியினன் என்பதனால் ஆணைகளை வேண்டுகோளாக முன்வைக்கவும், முறைமைகளை ஒன்று தவறாமல் இயற்றவும் சுவீரர் உளம் கொள்வார். பட்டறிவு இங்கே ஒருவருக்கு முதன்மையாக கற்பிப்பது அதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன்.

தன் அகத்தை அவன் அறிந்துகொண்டதனால் அசங்கன் சீற்றமடைந்து “அப்படியென்றால் நான் ஏன் அங்கிருக்கவேண்டும்?” என்று கேட்டான். “எல்லைக்காவல் நிகழ்வுகளைக் குறித்து முறைமையான ஓலைகளனைத்தும் நான் அவரிடமிருந்தே பெறுவேன். அதற்கு மேல் என்னுடைய தனிவிழி ஒன்றும் அங்கிருக்கவேண்டும். முன்முடிவுகளில்லாத, தன்முனைப்பற்ற விழி. அத்துடன் நெடுங்காலப் பட்டறிவினால் பணியில் சலிப்புற்றுப் போகாத ஒரு விழி. அதற்காகவே உன்னை அனுப்புகிறேன். உன்னுடைய தனிமொழியும் அரசகுடியினர் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு நாளும் மூன்று ஓலைகள் எனக்கு உன்னிடமிருந்து வரவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

தனக்கு தனிப்பணி உள்ளது என்றதை அறிந்து ஆறுதல்கொண்டு அசங்கன் தலையசைத்தான். திருஷ்டத்யும்னன் எழுந்து வந்து அவன் தோளில் தட்டி “காவல் பணி என்பது ஒருகணமும் ஆர்வமிழக்காமல் இருப்பது. ஆகவே இளையோர் காவற்பணிக்கு உகந்தவர்கள். அவர்களால் எந்தச் சிறுநிகழ்வையும் கண்டறிந்துவிட முடியும். ஆனால் நெடுங்காலக் காவல்பணி அறிதல்கொண்டவர்களால் மட்டுமே அந்நிகழ்வை புரிந்துகொள்ள இயலும். ஆகவே எப்போதும் இளையோரும் முதியோரும் கலந்தே காவலுக்கு அனுப்பப்படவேண்டும்” என்றான்.

அசங்கன் தலையசைத்து “இச்சொற்களுக்கு அப்பாலுள்ளதென்ன என்று நான் அறிவேன். காவல் பணி என்றால் என்னை போர்முகப்பிலிருந்து விலக்குகிறீர்கள். அரசகுடியினனாகிய நான் இங்கு வந்தது படைமுகம் நின்று பொருதி புகழ் கொள்ளவே. அன்றி புறஎல்லையில் காவல் நின்றிருப்பதற்காக அல்ல” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “உன் துடிப்பு புரிகிறது. உனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருப்பதும் போர்க்கலையில் ஒன்றுதான். தேர் செய்யும் தச்சன் உகந்த கருவியை தொட்டெடுப்பது போலத்தான் படைத்தலைவன் வீரர்களின் தனித்திறனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பார்கள். சிறுகருவியாக இருந்தாலும் அது மட்டுமே ஆற்றக்கூடிய பணி உண்டு. உனது தருணம் வரும்” என்றான்.

“அதை எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி அசங்கன் தலைவணங்கினான். “செல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். அசங்கன் விழிவிலக்கிக்கொண்டு “உங்கள் மகளை எண்ணி இம்முடிவு எடுக்கப்படவில்லை என எண்ணுகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னனின் விழிகளில் சினம் வந்து உடனே நகைப்பாக மாறியது. “நான் என் மைந்தரையும் எண்ணியதில்லை” என்றான். அசங்கன் தலைவணங்கினான். “செல்க, அனைத்து திறன்களும் அமையட்டும்!” என்றான் திருஷ்டத்யும்னன். அசங்கன் நடந்தபோது மெல்ல தொண்டையை கனைத்து “ஆனால் அதன்பொருள் என் மகளை நீ கருத்தில்கொள்ளவேண்டியதில்லை என்றல்ல” என்றான். ஒருமுறை நோக்கிவிட்டு அசங்கன் வெளியே சென்றான்.

காவல்பணிக்கு சுவீரரிடம் அவன் சென்று சேர்ந்தபோது முதலில் எழுந்த சலிப்பும் ஏமாற்றமும் விலகிவிட்டிருந்தன. அவன் எண்ணியதற்கு நேர்மாறாக இருந்தது படைகளின் பின்புலம். செயலும் அசைவும் படைகளின் முன்புறத்தில் மட்டுமே இருக்குமென்றும் பின்புறம் ஓய்ந்து கிடக்குமென்றும் அவன் எண்ணியிருந்தான். அவ்வெண்ணெம் ஏன் வந்தது என்பதை பின்னர் பலமுறை எண்ணி வியந்தும் கொண்டான். அவன் நாட்டில் அரண்மனையிலும் கல்விநிலையிலும் அரசகுடியைச் சேர்ந்த ஆண்கள் மாளிகைகளின் பின்புறங்களுக்குச் செல்வது உகந்ததாக கருதப்படவில்லை. அவன் வாழ்ந்த அரண்மனையின் பின்புறத்திற்கு விழிதெளியா இளமைக்குப் பின்னர் அவன் சென்றதே இல்லை. அறிந்ததும் கற்பனையில் விரித்ததும் எப்போதும் மாளிகை முற்றங்களும் கூடங்களும் இடைநாழிகளுமாகவே இருந்தன. அவ்வண்ணமே படைகளைப்பற்றி எண்ணும்போதும் படைமுகப்பைக் குறித்த உள ஓவியமே விரிந்தது.

படைமுகப்பில் பிறர் அனைவரும் நோக்க ஒளிரும் தேரில் நாண்முழங்கும் வில்லுடன் செல்லும் அவனையே அவன் கற்பனை செய்துகொண்டிருந்தான். பிறர் மெய்ப்புகொள்ளும் பெருவீரச் செயல்களை புரிந்தான். பாண்டவ அரசர்களாலும் திருஷ்டத்யும்னனாலும் தந்தையாலும் தோள்தழுவி பாராட்டப்பட்டான். முடிசூடி அமர்ந்து பாஞ்சாலத்தை ஆண்டான். படைகொண்டு சென்று பரிவேள்வி புரிந்தான். அத்திசை சலிக்கையில் எண்ணம் புரள நிகர்ப்போரில் ஒருகணமும் சளைக்காது பகல் முழுக்க எதிர்த்து நின்று பீஷ்மரின் கையால் உயிர்துறந்தான். அவன் பொருட்டு பாண்டவப் படையினர் அனைவரும் வாள் தாழ்த்தி புகழ் மொழி கூறினர். அவனுடைய பெருவீரத்தை வியந்து கௌரவப் படைகளிலிருந்தும் வாழ்த்தொலி எழுந்தது.

வெற்றியைவிட தித்தித்தது அவ்வீழ்ச்சி. அவனை செம்பட்டில் மூடி சிதையேற்ற கொண்டுசென்றனர். துயரில் இறுகிய முகத்துடன் தந்தை அவனை சிதையேற்றினார். விழிநீர் வழிய உடன்பிறந்தோர் சூழ நின்றனர். அவன் விண்ணேற்று நிகழ்வுக்கு யுதிஷ்டிரரும் இளையோரும் வந்திருந்தனர். அவன் உடல்மேல் எரி எழுந்தபோது பல்லாயிரம் குரல்களாகத் திரண்டு பாண்டவப் படை “யாதவ இளையோன் வாழ்க! அசங்கன் வாழ்க! விண் நிறைக மாவீரன்! மூதாதையென அமைக! வெல்க சத்யகரின் பெருங்குடி!” என்று வாழ்த்தொலி எழுப்பியது.

படைநகர்வின் தருணங்களில் தனிமையில் மல்லாந்து படுத்து இருண்ட வானின் விண்மீன்களை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் அவ்வெண்ணங்களால் உள நெகிழ்வடைந்து விழிநீர் உகுத்தான். மூக்கு உறிஞ்சும் ஒலியை இளையோர் கேட்டுவிடலாகாது என்பதற்காக ஓசையின்றி மேலாடையால் துடைத்துக்கொண்டான். விண்ணிலிருக்கும் அத்தனை விண்மீன்களும் மண்ணிலிருந்து புகழுடன் எழுந்த மாவீரரும் சான்றோரும் என்பார்கள். பல்லாயிரவரில் ஒருவருக்கே விண்மீனென ஒளிகொண்டு மண்ணை நோக்கி முடிவின்மையில் நிலைக்கும் பெருவாய்ப்பு அமைகிறது. விண்மீன்கள் நோக்க நோக்க பெருகிவந்தன. பல்லாயிரம் பல்லாயிரம் கோடி. அவற்றின் ஆயிரம் மடங்கு வீரர்கள் இம்மண்ணில் விழுந்திருக்கிறார்கள்!

அவர்களை எவ்வகையில் நினைவுகொள்ள இயலும்? பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றை செய்வதைப்போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா? ஆனால் மண்ணில்தான் காலம் அலையடிக்கிறது. ஒன்றுமேல் ஒன்றென நாள்களை அடுக்கி சென்றவற்றை இன்மையென ஆக்குகிறது. விண்ணில் நாளென எழுவதே இல்லை. அங்குளது பிளவுறாக் காலம். ஆகவே மறதி அங்கில்லை. முடிவிலா விண்மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் இருந்துகொண்டுமிருக்கின்றன. அங்கே ஒவ்வொரு விண்மீனும் பிற அனைத்தையும் அறியும்.

அவன் காவல்பணிக்குக் கிளம்பியபோது இளையோர் அனைவரும் உடன் கிளம்பினார்கள். சினி “நானும் வருவேன்! நானும் வருவேன்!” என்று அவன் கையை பிடித்தபடி துள்ளினான். “காவல்பணி கடுமையானது, இளையோனே. இங்கு இருப்பதைப்போல் மும்மடங்கு பணி அங்குண்டு. உன்னால் இயலாது” என்று அசங்கன் அவன் தலையை தட்டினான். “இங்கே என்னை படைக்கலங்களை கணக்கெழுதும் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நான் வாளுடன் களத்திற்கு வந்தவன். ஓலையையும் எழுத்தாணியையும் அளித்து என்னை சூதர்களுடன் செல்லச் சொல்கிறார்கள். என்றேனும் ஒரு நாள் இவர்கள் அனைவரையும் எழுத்தாணியால் குத்திவிட்டுச் சென்று படையில் நிற்பேன்” என்றான் சினி. “இன்னும் சில நாட்கள் மட்டும்தான். போர் தொடங்கிவிடும். அதுவரை மட்டுமே படைக்கலங்கள் கணக்கிலெடுக்கப்படும். பொறு” என்று அசங்கன் சொன்னான்.

சினி “அதுவரை நானும் காவல்பணிக்கு வருகிறேனே” என்றான். “ஆணையிட்டதை செய்யவேண்டுமென்பது படைக்கலம் ஏந்தியவனுக்கு தெரிந்திருக்கவேண்டும்” என்று அசங்கன் சொன்னான். சினி தலைதாழ்த்தி நிற்க அவன் தோளில் தட்டி புன்னகைத்துவிட்டு அசங்கன் கிளம்பினான். உடன்பிறந்தார் கூடி அவனை வழியனுப்பி வைத்தனர். அந்நிகழ்வு ஒரு செருமுனைக்குச் செல்லும் தன்மை கொண்டிருந்ததனால் அவன் உளநிறைவடைந்தான். அங்கே படைகளின் பின்புலத்துப் போர் நிகழக்கூடும். பின்னிருந்து தாக்க துரியோதனன் கரவுப்படைகளை காட்டுக்குள் நிறுத்தி வைத்திருக்கிறார். போர் தொடங்குகையில் அவர்கள் திரண்டு வந்து எதிர்பாராது தாக்க முகப்பைவிட பெரும்போர் பின்புலத்தில் நிகழக்கூடும். அவனைப்போன்ற போர்க்குடியினன் ஒருவனை அங்கு திருஷ்டத்யும்னன் அனுப்புகிறார் என்றால் அதுதான் பொருள்.

மெய்யாகவே அங்கு ஒரு பின் போரை அவர் எதிர்பார்க்கிறார். அதற்கு எதிரான செறுப்பை அவன் நிகழ்த்தவேண்டுமென்று மறைமுகமாக ஆணையிடுகிறார். முகப்பில் போர்களுக்கு நெறிகளுண்டு பின்புலப் போர் தன்னளவிலேயே நெறியற்றது. எனவே அங்கு நிகழவிருப்பது இரக்கமற்ற கொலையாட்டம். வாளை உருவி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவியபடி அவன் எதிர்கொள்ளவிருப்பது கொன்றாலன்றி வெல்ல முடியாத எதிரிகளை. குருதியாடி புறமுதுகுகண்டு வாள் தூக்கி காற்றிலசைத்து “வெற்றி! வெற்றி! என் குடிக்கு வெற்றி! யாதவகுலத்துக்கு வெற்றி!” என்று அவன் போர்க்குரல் எழுப்புகையில் திருஷ்டத்யும்னனும் தந்தையும் தங்கள் காவல்படைகளுடன் இருபுறத்திலிருந்தும் திரண்ட படையுடன் வருகிறார்கள்.

அதற்குள் அங்கே அவன் போரை முடித்துவிட்டிருந்தான். தந்தை அவனை ஒருகணம் பார்த்துவிட்டு விழி திருப்பி அமைதியாக இருக்க திருஷ்டத்யும்னன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி ஓடிவந்து அள்ளி நெஞ்சோடணைத்து “உன் குலத்தின் நற்பெயரை காத்தாய், இளையோனே. உன் தந்தைக்கு உரிய கைமாறு செய்தாய். உன்னால் பாஞ்சாலமும் பெருமை கொள்க!” என்றான். அவன் தன் தந்தையை பார்த்தான். அவர் ஒரு விழிமின்னலென அவனை பார்த்துவிட்டு வேறெங்கோ திரும்பி “இளையோருக்கு புண்கள் எதுவும் இல்லையல்லவா?” என்றார். “ஆம் தந்தையே, குறிப்பிடும்படியான புண் எதுவும் இல்லை” என்று அவன் சொன்னான். அவர் “நன்று” என்பதுபோல் தலையசைத்தார்.

எண்ணியது போலவே சுவீரர் சலிப்புற்றிருந்தார். “இதற்கு முன் தாங்கள் படைக்காவல் பணியிலிருந்ததுண்டா, இளவரசே?” என்றார். அவர் முறையான வணக்கத்தை கூறவில்லை என்பதை அசங்கன் உளத்தில் குறித்துக்கொண்டு “இல்லை. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகாலம் படைக்கலப் பயிற்சி பெற்றிருக்கிறேன்” என்றான். “படைக்கலப் பயிற்சி என்பது வேறு. காவல்பணி என்பது எதிரிகளின்றி போர்புரிவது. நம்முள்ளே உருவாகும் சலிப்புக்கும் அக்கறையின்மைக்கும் எதிராக ஒவ்வொரு கணமும் நாம் விழிப்புணர்வு கொள்வது. பொறுமையே இங்கு திறன் என்று கருதப்படும்” என்றார் சுவீரர்.

எரிச்சலுடன் “நான் அதையும் பயின்றிருக்கிறேன்” என்றான் அசங்கன். “அது கல்வி. களப்பயிற்சி மட்டுமே போரில் கருத்தில் கொள்ளப்படும். கல்வி என்பது களப்பயிற்சியை அடைவதற்கு உரிய தொடக்கத்தை அளிப்பது மட்டுமே” என்ற சுவீரர் “நன்று, தங்களுக்கான பணிகளை நான் வகுத்தளிக்கிறேன்” என்றார். அசங்கன் “ஆம்” என்றான். “மேற்குக் காவல்மாடங்கள் ஒன்றில் இரவுக்காவலுக்கு அமர்க!” என்றார். “அங்கே இருக்கும் காவல்படைகளுக்கு தலைமையாகவா?” என்றான் அசங்கன். சுவீரர் ஒருகணம் கழித்து “ஆம், அவர்களுக்குத் தலைமையாக. மேடையில் ஒரு தருணத்தில் இருவர் இருப்பார்கள்” என்றார். அவருடைய புன்னகையின் பொருள் புரியாது அவன் தலையசைத்தான்.

அசங்கன் முதல்முறை காவல்பணிக்குச் சென்றபோது படைப்பின்புலத்தில் படைமுகப்பைவிட பேரோசை நிறைந்திருப்பதை கண்டான். பத்துக்கும் மேற்பட்ட கைவழிகளாக காட்டிலிருந்து நிஷாதர்களும் கிராதர்களும் படைகளை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் புல்கட்டுகளையும் தழைச்சுமைகளையும் விறகுக்குவைகளையும் கொண்டுவந்தனர். சிலர் கள் கொப்பரைகளையும் மூங்கிலில் கோக்கப்பட்ட ஊன் விலங்கின் உடல்களையும் சுமந்தனர். அரக்கும் அகிலும் மூங்கில் கூடைகளில் வந்தன. படைக்கு இத்தனை பொருட்கள் தேவையாக இருப்பதை அவன் அதற்கு முன் எண்ணி நோக்கியதே இல்லை. திரும்பி உடன்வந்த காதரரிடம் “இத்தனை அரக்கு எதற்கு?” என்று கேட்டான். காதரர் “புண்படுபவர் உடலில் அரக்கு தோய்த்த மரவுரியை சுற்றிக்கட்டியிருப்பது வழக்கம்” என்றார்.

அவன் உடலில் மெல்லிய விதிர்ப்பு கடந்துசென்றது. போரில் வெற்றியையும் இறப்பையும் மட்டுமே அவன் எண்ணியிருந்தான். புண்பட்டு விழுவதை, திறந்த புண்வாயை குதிரைவால் முடியால் தைப்பதை, சீழ்கொண்டு உடல் மஞ்சளாக, காய்ச்சலில் நினைவழிந்து இறப்புக்கும் வாழ்வுக்கும் நடுவே ஊசலாடியபடி அரைப்பிணம் என கிடப்பதை, தன் உடல் அழுகி மடிவதை தானே பார்த்தபடி நாள்எண்ணிக் காத்திருப்பதை கற்பனை செய்ததில்லை. அக்கணமே அவ்வெண்ணங்களை அழித்தான். “என் தங்குமிடம் எது?” என்றான். “இங்கு கூடாரங்கள் அன்றி தங்குமிடம் எதுவுமில்லை” என்றார் காதரர். அவர் காட்டிய கூடாரம் இடையளவே உயரமிருந்தது. அதற்குள் கையூன்றி தவழ்ந்து செல்லவேண்டும். உள்ளே காவலர் உடலோடு உடல் ஒட்டி துயின்றுகொண்டிருந்தார்கள். “இதற்குள்ளா?” என்றான் உத்ஃபுதன். “இதுவும் பயிற்சிதான்” என்றான் அசங்கன்.

அன்று மாலை அவன் தம்பியருடன் காவல்மாடத்தில் அமர்ந்திருந்தபோது அனைத்துச் சோர்வுகளையும் மீறி உள்ளம் எழுச்சிகொண்டது. பணி என ஒன்றை அவன் செய்துகொண்டிருக்கிறான். அவன் பொறுப்பில் இருக்கிறது ஒரு காவல் மாடம். பிழை நேர்ந்தால் தன் படைக்கே அவன் அழிவை கொண்டுவந்துவிடக்கூடும். பின்னால் விரிந்திருக்கும் அப்பெரும்படை அவன் காவலில் உள்ளது. நெடுந்தொலைவு தாக்கும் வில்லுடன் இரண்டு படைக்காவலர் காவல்மாடத்திலிருந்தனர். மூங்கிலேணியினூடாக அவன் இளையோருடன் ஏறிவந்தபோது அவர்கள் எழுந்து நின்று முறைப்படி தலைவணங்கி வாழ்த்துரை கூறினர். அவன் அமர்ந்ததும் ஒருவன் புன்னகைத்தான். “தங்கள் இளையோர் படைக்கும் புதியவர் போலும்” என்றான். “ஆம்” என்றான் அசங்கன்.

“நான் பாஞ்சாலன். என் பெயர் உதிரன்” என்றான் காவலன். அவனுக்கு தான் பாஞ்சால அரசியின் கணவன் என்பது தெரியுமா என அசங்கன் எண்ணிக்கொண்டான். “இரவுக்காவலென்பது துயிலுடன் போர்புரிவதுதான், இளவரசே” என்றான் உதிரன். காவல்தலைவனாகிய மகரன் “அதில் எப்போதுமே எதிரிதான் வெல்வான்” என்று பெரிய பற்களைக் காட்டி புன்னகைத்தான். அசங்கன் “துயிலலாகாது என்பதை அறிந்த பின்னரே காவலுக்கு வந்துள்ளேன்” என்றான். “நன்று” என்று மகரன் புன்னகைத்தான். உத்ஃபுதன் “படைப்பயணத்தின்போது பெரும்பாலான நாட்களில் இரவில் எங்களுக்கு பணிகள் இருந்தன. துயிலாது பணியெடுப்பது என்பதை நாங்களும் கற்றிருந்தோம்” என்றான். காவலர்தலைவன் வாய்விட்டு நகைத்து “துயிலாது பணியாற்றுவது எளிது. துயிலை மட்டுமே எண்ணியபடி துயிலுக்கு மிக அருகே, துயிலாது இருப்பது மிகக் கடினம்” என்றான்.

ஆனால் காவல்பணி அவன் எண்ணியதுபோல் இருக்கவில்லை. இரவு சற்றே அடர்வுகொள்ளத் தொடங்கியதும் அவனுக்குப் பின்புறம் பாண்டவப் படைகளின் பெரும்பரப்பு முற்றாக அடங்கி இல்லையென்றே ஆனதுபோல் இருட்டுக்குள் மறைந்தது. படைகளுக்குள் குறுக்கும் நெடுக்கும் பரவியிருந்த சாலைகளில் எரிந்த மீன்நெய் இட்ட பீதர் விளக்குகளின் நீண்ட நிரை மட்டுமே அங்கு ஒரு படை இருப்பதற்கான சான்றாக இருந்தது. கொந்தளிக்கும் கடல் உறைந்து கற்பரப்பாக ஆனதுபோல. அங்கிருந்து சங்குக்குள் செவி வைத்து கேட்பதுபோல ஒரு மென்முழக்கம் மட்டுமே எழுந்தது. அதை முழக்கமென்று எண்ணினால் மிகத் தொலைவில் ஒலித்தது. செவிகூர்ந்தால் பேரோசையென்று எழுந்தது. இல்லையென்று எண்ணிக்கொண்டால் வெறும் செவிமயக்கென்றும் தோன்றியது. அவ்வொலி எது என்று அவனால் எத்தனை எண்ணியும் புரிந்துகொள்ள முடியவில்லை. பல்லாயிரம் பேர் மூச்சுவிடுவதன் ஒலியா? அத்தனை விளக்குகள் எரிவதன் ஒலி இணைந்து அம்முழக்கமாகிறதா? அது ஒரு பானைக்குள் காற்று சென்று வருவதன் ஒலி என்று ஒருமுறை தோன்றியது. வெற்றிடத்தின் ஒலி.

பிறிதெப்போதும் தன் எண்ணங்கள் அப்படி பொருளற்று பித்தோ என ஐயுறும்படி ஓடிச் செல்வதை அவன் உணர்ந்ததில்லை. இருளுக்குள் தனித்து அமர்ந்திருப்பதென்பது தன் உள்ளத்துடன் அமர்ந்திருப்பதென்று அவன் அறிந்தான். நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றில் மேலாடை பறப்பதுபோல் உள்ளம் துடித்து விடுபட்டு இருள்வெளியில் மறைய முயன்றது. நம்பிக்கை, ஏமாற்றம், ஏனென்றறியாத கசப்புகள், கிளர்ச்சியூட்டும் காமக்காட்சிகள். விந்தையான மணங்கள் தன் உடலுக்குள் இருந்தே எழுவதுபோல் உணர்ந்தான். நினைவுகள் அத்தனை துல்லியமான காட்சியாக எழுந்ததே இல்லை. அவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் சுருங்கி அணுவென்றாகி மறைய வானமென விளிக்கும் பெருந்தனிமை.

அங்கு ஒரு படை இருக்கிறது. பல்லாயிரம் பேர். இந்தக் கொம்பை எடுத்து ஊதினால் ஒரு கணத்தில் எழுந்து பேரோசையுடன் கொந்தளிக்கத் தொடங்குவார்கள். முரசுகள் ஒலிக்கும். கொம்புகள் ஓலமிடும். யானைகளும் புரவிகளும் எழும். படை பொங்கிப் பெருகி வரும். என் கையில் இருக்கும் இக்கொம்பு. ஆனால் இங்கு முற்றிலும் தனிமையை உணர்கிறேன். அவர்கள் அவன் உள்ளம் சென்று தொடமுடியாத தொலைவிலிருந்தனர். பிறிதெவரோ ஆக மாறிவிட்டிருந்தனர். காவலனுக்கு காவல் காக்கப்படுவதன்மேல் உள்ள அகவிலக்கம் விந்தையானது. அவன் அதை காவல் காக்கிறான் என்பதனாலேயே அதை துய்க்கவோ எவ்வகையிலும் அதனுடன் உறவுகொள்ளவோ இயலாதவனாகிவிடுகிறான். வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்புகூட அவனுக்கு இல்லை. அதற்கு எதிராக வருவனவற்றையே அவன் நோக்கவேண்டும்.

முதல்நாள் சுவீரர் அவனிடம் “காவலன் ஒருபோதும் கற்பனை செய்துகொள்ளக்கூடாது, எதிரிகளை, ஐயங்களை” என்றார். “ஐயமின்றி எவ்வாறு காவல் காக்கமுடியும்?” என்று அவன் கேட்டான். “ஐயமெழும்போது அனைத்தும் ஐயத்துக்குரியதாகி விடுவதை பார்ப்போம். அதன்பிறகு காவலென்பது பெருந்துன்பம். ஐயம்கொள்ளும் எவற்றையும் நம்மால் நோக்கி சரிபார்க்க இயலாது. அவையே முன் எழுந்து தங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று காத்திருக்க வேண்டும். காவல் அமர்ந்திருப்பது வேறு, காத்திருப்பது வேறு. காத்திருப்பவர்களால் நெடும்பொழுது அமர்ந்திருக்க இயலாது. அவர்கள் ஒவ்வொரு கணமும் காலத்தை உணர்ந்துகொண்டிருப்பார்கள். எண்ணிக் கணக்கிட்டு அமர்ந்திருப்பவன் காவலன் அல்ல” என்றார் சுவீரர்.

“பிறகு எப்படி காவல் காப்பது? ஐயங்கொள்ளாது வெறுமனே அமர்ந்திருப்பதா?” என்றான் அசங்கன். “காவலன் எண்ணம்சூழ்பவன் அல்ல. கருத்துக்களில் ஆடுபவனுமல்ல. அவன் தூய வேட்டை விலங்கு. செவிகளையும் விழிகளையும் மூக்கையும் தோலையும் சூழலுக்கு முற்றளித்து தானின்றி அங்கு அமர்ந்துகொள்கிறான். அறியவேண்டிய அனைத்தையும் வெறும் புலன்களே அறியும். புலன்களிலாடும் உள்ளம் அவற்றிலிருந்து முடிவுகளை எடுக்கும். வெறும் புலனென்று அமர்ந்திருப்பதைப்போல் இனியது எதுவுமில்லை என்று கண்டவன் சிறந்த காவலனாகிறான்” என்றார் சுவீரர்.

அனைத்துப் புலன்கள் மீதும் எண்ணங்கள் எடையுடன் மீள மீள விழுந்துகொண்டிருந்தன. எடைதாளாத புலன்கள் அவற்றை உந்தி அப்பால் மீண்டும் நிமிர்ந்து உடல் சிலிர்த்துக்கொண்டன. முதல் நாள் முதல் நாழிகையிலேயே இளையோர் இருவரும் வேல்களை மடியில் வைத்தபடி துயிலத் தொடங்கினர். உத்ஃபுதன் தன் தோள்மேல் சரிந்து விழுந்தபோது அசங்கன் அவனை உலுக்கி எழுப்பி “அப்பால் சென்றமர்க! துயிலவா வந்தாய்?” என்றான். முதலில் உடனிருந்த காவலர் அறியாமல் தாழ்ந்த குரலில் அவர்களை எச்சரித்தான். ஆனால் அக்காவலர் புன்னகைத்தபடி “மெல்ல காவலுக்கு பழகலாம், இளவரசே” என்றனர். “பணியில் துயில்பவர்களல்ல அவர்கள்” என்று அவன் சினத்துடன் மறுமொழி சொன்னான். “ஆம், தெரிகிறது” என்று ஒருவன் சொல்ல பிறிதொருவன் புன்னகைத்தான்.

உத்ஃபுதனின் தோளில் அறைந்து “விழித்தெழு, மூடா! என்ன செய்கிறாய்?” என்றான் அசங்கன். அவன் திடுக்கிட்டு விழித்து “அன்னை!” என்றான். பின்னர் வாயைத் துடைத்தபடி “என்ன சொன்னீர்கள், மூத்தவரே?” என்றான். காவலன் “படுத்து துயிலச்சொல்கிறார். அமர்ந்து துயில்வதனால் துயிலும் நிகழ்வதில்லை காவலும் நிகழ்வதில்லை” என்றான். இன்னொரு காவலன் “படுத்தாலும் காவல்தான் காக்கிறோம்” என்றான். “ஆம், என்னால் அமரமுடியவில்லை” என்றபடி உத்ஃபுதன் உடல்சுருட்டி படுத்துக்கொண்டான். அவன் படுத்ததைப் பார்த்ததும் சாந்தனும் அவனருகே ஒண்டி படுத்து அவன் போர்த்திக்கொண்டிருந்த போர்வையை இழுத்து தானும் போர்த்திக்கொண்டான்.

சலிப்புடன் தலையை அசைத்தபடி அசங்கன் “மிக இளையோர்” என்றான். “ஆம், அரசகுடியினரும் கூட” என்றான் காவலன். பிறிதொருவன் நகைத்தான். அசங்கன் அவர்களை நோக்குவதை தவிர்த்தான். அவன் மீதும் அரக்குபோல துயில் வழிந்து உடல்தசைகளை அசைவிழக்கச் செய்தது. உள்ளம் மயங்கி எண்ணங்கள் வெற்றுச் சொற்களென்றாகி அசையாமல் நின்றன. பின்னிரவு வரை அவன் தன் உள்ளத்துடன் சமரிட்டுக்கொண்டிருந்தான். குளிர் எடை மிகுந்து காதுகளை நடுங்க வைத்து மூச்சுக்குள் புகுந்து உடலை உலுக்கத் தொடங்கியபோது போர்வையால் போர்த்திக்கொண்டு நன்கு ஒடுங்கிக்கொண்டான். அவ்வாறு ஒடுக்கிக்கொள்வதே துயிலுக்கான ஆணை என அகம் புரிந்துகொள்ள எடைமிக்க வழிவு என நாற்புறத்திலிருந்தும் துயில் வந்து அவன் மேல் பதிந்தது.

தேர்ச்சகடங்கள் உளைசேற்றில் சிக்கி செயலிழப்பதுபோல் அவன் எண்ணங்கள் ஆங்காங்கே நின்றன. இடைவரை பதிந்த சேற்றிலென ஒவ்வொரு அடியையும் பிடுங்கிப் பிடுங்கி மீண்டும் புதைத்து வைக்க வேண்டியிருந்தது. நெடுநேரம் ஒற்றைச் சொற்றொடரையே எண்ணிக்கொண்டிருப்பதை அவனே உணர்ந்து திகைத்து எழுந்தமர்ந்து வாயை துடைத்தான். அச்சொற்றொடர் என்ன என்று பார்த்தான். யானையின் காலடி. எதற்காக அச்சொற்றொடரை என் உள்ளம் உணர்ந்தது? யானையின் காலடி! அச்சொற்றொடர் பாறைபோல் அவன் முன் நின்றது. அதை உந்தி விலக்க இயலவில்லை. தலை எதிலோ முட்டிக்கொண்டபோது அவன் விழித்தான்.

நிலத்தில் விழுந்து கிடந்திருந்தான். கையூன்றி எழுந்து அமர்ந்தபோது காவலன் “துயில்க, இளவரசே! இன்னும் இரண்டு நாழிகைதான். இன்னும் சற்றே ஓய்வெடுப்பது நன்றுதான்” என்றான். “இல்லை, நான் துயிலவில்லை” என்றான் அசங்கன். “தாழ்வில்லை. நாங்களும் முதல்நாள் துயின்றவர்களே” என்றான் இன்னொருவன். அவர்களிருவரையும் மாறி மாறி பார்த்தபோது அவர்கள் தன்னை களியாடவில்லை என்று அவன் உணர்ந்தான். பெருமூச்சுடன் படுத்து போர்வையை நன்றாக சுற்றிக்கொண்டான்.

மறுநாள் புலரிக்கு முந்தைய சங்கொலி எழுந்ததும் காவலர் அவன் கால்களைத் தட்டி “எழுக!” என்று உலுக்கினர். அவன் எழுந்தமர்ந்து சில கணங்கள் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் திகைத்தபின் ஒருகணத்தில் தன்நிலை கொண்டான். இளையோரை தட்டி எழுப்பினான். அவர்கள் எழுந்து அமர்ந்து உடலை சொறிந்துகொண்டார்கள். அரண்மனை மஞ்சத்தில் விழித்தமர்ந்தவர்கள்போல வாய் திறந்து, தோள்கள் தொய்ந்து, சரியும் இமைகளுடன் அமர்ந்திருந்தனர். “அறிவிலிகளே! நாம் காவலுக்கு வந்திருக்கிறோம். அரசமாளிகை மஞ்சத்தில் அமர்ந்திருக்கவில்லை” என்று அசங்கன் சொன்னான். “அரசமாளிகையில் அமர்ந்தவர்களை காவலர் என்று சொல்லும் வழக்கமுண்டு, அரசே” என்றான் காவலர்தலைவன். அசங்கன் சினம்கொண்டு “எழுக! எழுக!” என்று அவர்களை உலுக்கினான். “நீர் உள்ளது. முகம் கழுவிக்கொள்ளுங்கள். இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும்” என்றான் காவலன். அசங்கன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டான்.

தொலைவிலிருந்து நூற்றுக்கணக்கான செந்நிற ஓடைகள்போல பந்தங்களும் விளக்கொளிகளும் ஒழுகி படையை நோக்கி வந்துகொண்டிருந்தன. அவன் விந்தையுடன் எழுந்து கூர்ந்து நோக்கினான். பச்சைப்ப்புல்பெருக்கு ஒரு வேலியென, ஆறென நீண்டு வந்தது. நிஷாதரும் கிராதரும் தலைச்சுமையோடு சுமை முட்ட வந்தனர். “இத்தனை புல்லும் தழையும் எதற்கு?” என்றான் அசங்கன். “இங்குள்ள மானுடரைவிட விலங்குகள் மிகுதி. மானுடர் உண்பதைவிட பத்துமடங்கு உணவுண்பவை அவை” என்றான் காவலன். “இந்த நிஷாதரைப்போல உருமாறி எதிரிகள் படைகொணர்ந்து பின்புறம் தாக்கினால் நாம் என்ன செய்வது? இங்கே மிகக் குறைவாகவே காவலர் இருக்கிறோம்” என்றான் அசங்கன். “நாம் சென்று களப்பலியாக வேண்டியதுதான்” என்றான் காவலன்.

அசங்கனின் முகமாறுதலைப் பார்த்து இன்னொருவன் அவன் தோளை அறைந்து “இளவரசே, இவன் களியாடுகிறான். நாம் காவலுக்கு வந்திருக்கிறோம், ஐயங்களை பெருக்கிக் கொள்வதற்கல்ல. பின்புறம் படைகள் தாக்குமென்றால் என்ன செய்வதென்று எண்ணுவது நமது பணி அல்ல. அதை எண்ணிச்சூழவேண்டியவர் படைத்தலைவர்” என்றான். அசங்கன் எரிச்சலுடன் “நீங்கள் எளிய காவலர்கள். நான் அரசகுடியினன். நாளை படைநடத்த வேண்டியவன். நான் எண்ணித்தான் ஆகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் இப்போது காவலை கற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறீர்கள். படைசூழ்கை கற்றுக்கொள்ள திருஷ்டத்யும்னரின் அவையில் அமர்ந்திருக்கையில் அதை எண்ணிச்சூழலாம்” என்றான் காவலன். “பணிகளை கலந்துகொள்வது பிழை என்பதே முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது.” அசங்கன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல எண்ணி பின் தவிர்த்து பெருமூச்சுவிட்டான்.

முந்தைய கட்டுரை1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
அடுத்த கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள்