அது நானில்லை

DdXRYZ8U8AAavyA

அன்புள்ள ஜெமோ

ஒரு சங்கடமான கேள்வி. ஆனால் நாங்கள் நண்பர்கள் இதை உங்களிடமே கேட்கலாம் என்று நினைத்து இதை எழுதுகிறோம். — என்ற நண்பரை உங்களுக்குத் தெரியுமா? [புகைப்படம் இணைத்துள்ளோம்] ஏனென்றால் இந்த நண்பர் உங்களுக்கு மிக நெருக்கமானவர் என்று சொல்கிறார். நிறைய முறை உங்களைச் சந்தித்திருப்பதாகவும் பலவேறு அரசியல் விஷயங்களையும் இலக்கியக் கருத்துக்களையும் உங்களிடம் பேசியிருப்பதாகவும் சொல்கிறார்.

இவர்மேல் எங்களுக்கு ஏன் அவநம்பிக்கை வந்தது என்றால் இவருடைய பேச்சில் எப்போதும் இவர் உங்களை எப்படியெல்லாம் மட்டம்தட்டினார், நீங்கள் எப்படியெல்லாம் வாயடைந்து போனீர்கள் என்றுதான் சொல்வார். ‘அப்டீன்னு கேட்டேன். அப்டியே விழுந்து உருள ஆரம்பிச்சுட்டார். சரீன்னு அப்டியே விட்டுட்டேன்’ என்று சொல்வார். அவர் கேட்கும் கேள்விகள் எல்லாமே சாதாரணமாக முகநூலில் புழங்கும் எளிமையான முற்போக்குக் கருத்துக்களாக இருக்கும். முற்போக்கோ திராவிடமோ பேசுபவர்கள் வாயாடித்தனமாக பேசும் வாதங்களாக இருக்கும். அவர்மேல் நம்பிக்கை இல்லை. ஆகவே நேரடியாகவே கேட்கிறோம். பிழையாக நினைக்கவேண்டாம்

அன்புடன்
எம்

navy-it-s-not-me-it-s-you-men-s-tees_design

அன்புள்ள எம்,

ஆமாம், இது சங்கடமான விஷயம்தான். ஆகவே எல்லா பெயர்களையும் நீக்கியிருக்கிறேன். அவரை நான் பார்த்ததே இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அவற்றை எழுத்தில் பதிவுசெய்யாதவரை ஒரு வகையான சின்ன விளையாட்டு மட்டுமே. அவருக்கு ஒரு பிம்பம் தேவைப்படலாம். இருந்துவிட்டுப்போகட்டுமே.

என்னைப் பார்த்ததாகவும் பேசியதாகவும் பலர் இப்படிச் சொல்வதுண்டு, அரிதாகச் சிலர் எழுதுவதும் உண்டு. முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் அவ்வாறு சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் மெல்லிய அறிமுகம் கொண்டவர்களாகவும் நேரில் சந்தித்தால் ஓரிரு சொற்கள் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக நான் எவருடைய தன்னிலையையும் புண்படுத்த விரும்புவதில்லை. அதிலும் இலக்கிய வாசகன் என்பவன் மிகமிக நொய்மையான உள்ளம் கொண்ட தனியன். கூடவே தான் அறிவாளன் என்னும் ரகசிய ஆணவமும் கொண்டவன். ஆகவே அறிமுகம் உடைய எவரிடமும் நெருக்கமாகவும், மதிப்புடனும்தான் பேசுவேன். அவர்களில் மிகச்சிலர் அந்த நெருக்கம், மதிப்பு ஆகியவற்றை இவ்வாறு திரித்துக் கொள்வதுண்டு.

வீட்டுக்குத் தேடிவரும் எவரிடமும் மரியாதை நிமித்தமாக சற்றுநேரம் பேசுவேன். தமிழகத்தில் ஓர் எழுத்தாளனைச் சென்றடைபவன் லட்சத்தில் ஒருவன். பெரும்பாலும் இளம் எழுத்தாளன் அவன். நானே அப்படி பல எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் சென்று சந்தித்தவன். ஆகவே அவர்களிடம் நெருக்கமாகப் பேசுவதும், அவர்களை பேசவைக்க முயல்வதும் என் வழக்கம். அவர்கள் ஏமாற்றத்துடன் செல்லக்கூடாது என நினைப்பேன். நான் மிகப்பெரிய சிக்கல்களில் இருக்கையில் வந்தவர்களைக்கூட அச்சிக்கல்கள் அவருக்குத்தெரியாமல் நேரம் அளித்திருக்கிறேன். அது சுந்தர ராமசாமியிடமிருந்து கற்றுக்கொண்டது

சுந்தர ராமசாமியிடமிருந்து கற்றுக்கொண்ட இன்னொன்று உண்டு. அது கேட்பவரை நன்கறியாமல் விரிவாகப் பேசக்கூடாது என்பது. நான் அவரைப்போல கவனமானவன் அல்ல. உள்ளப்போக்கை அப்படியே எழுதுபவன், பேசுபவன், ஆகவே அடிக்கடிச் சிக்கிக்கொள்பவன். ஆனால் நேர்ப்பேச்சில் கேட்பவரை அறியாது பேசினால் சொற்கள் வீணாகும். திரிக்கவும்படும். ஆகவே உண்மையில் எனக்கு நன்றாகத் தெரியாதவரிடம் கூடுதலாகப் பேசுவதில்லை. பேசினால் ஏற்கனவே எழுதியவற்றி மட்டுமே பேசுவேன். அவர்கள் வாதிட்டால் முழுமையாகவே என் தரப்பைச் சொல்லாமல் தவிர்த்து அவர்களைப் பேசவிட்டு அனுப்பிவிடுவேன். அவ்வாறு சிலர் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

அவ்வாறு வருபவர்களில் அறிவார்ந்த தகுதியற்ற வம்பர் சிலர் எப்போதும் இருப்பதுண்டு. மிகையான ஆணவம் கொண்டவர்களும் உண்டு. அவர்கள் நேரில் பேசும்போது மிகமிக மதிப்புடன் பணிவுடன் இருப்பார்கள். சென்றபின் அவர்கள் எங்கேனும் பேசியது காதில் விழும். அது பெரும்பாலும் அவர்களின் விருப்பக் கற்பனையாக இருக்கும். வாய்வார்த்தையாக அப்படிச் சொல்லிக்கொள்பவர்களை நாம் ஒன்றும் சொல்லமுடியாது. எழுதப்படுமென்றால் மறுக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அதுகூடத் தேவையில்லை என்று தோன்றுகிறது

முன்பு திண்ணை இதழில் ஒருவர் என்னுடன் அவர் கொண்ட நட்பு, எனக்கு அவர் சொன்ன ஆழ்ந்த அறிவுரைகள், என்னை ஆற்றுப்படுத்தியது, கண்டித்தது, மட்டம்தட்டியது என ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அவர் எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுபவர். மரியாதைக்காக ஓரிருவரி பதில்கள் எழுதியதுண்டு. ஒருமுறை இரண்டுநிமிடம் நேரில் சந்தித்ததுண்டு. அவர் முகமே எனக்கு நினைவில் இல்லை. நான் என் மறுப்பை எழுதி அனுப்ப திண்ணை அதை நீக்கிக் கொண்டது. உடனே இன்னொரு இணையதளம் அதை வெளியிட்டது. அந்த இணையதளத்துடனான என் உறவை விலக்கிக் கொண்டேன்.

ஆனால் இன்று சமூகவலைத்தளங்கள் உள்ளன. எங்குவேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். அதற்கும் நான்குபேர் வாசகர்கள் வருவார்கள். இவ்வெழுத்துக்களில் வாசகர்கள் நோக்கவேண்டியது, நீங்கள் நோக்கியதுபோல, சொல்பவரின் தகுதியும் இடமும்தான். அவருக்கு நானோ இன்னொரு எழுத்தாளரோ அந்த இடத்தை அளித்திருக்க வாய்ப்புண்டா என்பது மட்டுமே. அறிவுச்சூழலில் ஒருவர் ஒன்றைச் சொல்லும் தகுதியை ஈட்டுவது எளிதல்ல

என்னைப்பற்றி எழுதப்படும் கணிசமானவற்றுக்கு நான் மறுப்போ விளக்கமோ சொல்வதில்லை. அதன்பொருள் அவர்களை நான் எவ்வகையிலும் மதிக்கவில்லை என்பதே. பெரும்பாலானவர்கள் வெறும் சாதிமதக் காழ்ப்பை கருத்துக்களாக்குபவர்கள். போலிவேடங்களைப் புனைபவர்கள். வெறுமே சொல்லாடிக்கொண்டிருப்பவர்கள். அவர்களிடம பேசுவதே வீண் aஉழைப்பு.

சிலசமயம் என்னைப்பற்றிய கதைகளை நானே கேட்கும்போது திகைப்பாக இருக்கும். முன்பு ஒருவர் எழுதியிருந்தார். வல்லிக்கண்ணன் தலைமையிலான ஒரு கூட்டத்தில் நான் பேச வந்தபோது “ஏய் மூடர்களே, தன்னலம் கொண்ட அயோக்கியர்களே’ என்று ’சற்றும் பண்பில்லாமல்’ பேசினேனாம். அவர் கேட்டு கூசிப்போனாராம். நான் வல்லிக்கண்ணனை நேரில் பார்த்ததே இல்லை என அதை எழுதியவருக்கு விளக்கம் அளித்தேன். அந்நிகழ்ச்சியை  நேரில் கண்டதாக எனக்கே அவர் பதில் எழுதினார்.

இன்னொருவர் என்னை சாலையில் சந்தித்தாராம். அப்போது ஓர் இலக்கியக்கூட்டத்தில் என்னை அவமானம் செய்திருந்தார்களாம். நான் அவர் தோள்மேல் சாய்ந்து குமுறிக்குமுறி , விளையாட்டாக இல்லை மெய்யாகவே குமுறிக்குமுறி அழுதேனாம். அவர் அணைத்து ஆறுதல் சொன்னாராம். அதுவும் சென்னை மவுண்ட்ரோட்டில் மதிய வேளையில். எனக்கே என்னை சிவாஜி போல கற்பனைசெய்ய கஷ்டமாக இருந்தது.

ஆனால் இன்னொருவர் எழுதியது பிடித்திருந்தது. என்னை அவர் வீட்டில் சந்திக்க வந்தபோது நான் கால்மேல் கால்போட்டுக்கொண்டு அமர்ந்து ‘தமிழிலக்கியத்தின் அகோரி நான். என்னை எதிர்ப்பவர்களைக் கொன்று தின்பேன்’ என்று சொல்லி பயங்கரமாக, பி.எஸ்.வீரப்பா போலச் சிரித்தேனாம். வாசித்தபோது எனக்கே மெய்சிலிர்த்தது.

அருண்மொழியிடம் சொன்னேன், இந்த பிம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது, இதையே தொடரலாம் என நினைக்கிறேன் என்று. ”அதுக்கு சிரிச்சுப் பழகணுமே” என்றாள். நாலைந்துமுறை சிரித்துப்பார்த்தேன். நெஞ்சடைத்தது. இருமலும் வந்தது. ”ஜெயமோகனுக்கு டிபி நான்தான் மாத்திரை வாங்கிக்குடுத்தேன்னு எவனாம் காஞ்சபய எழுதிரப்போறான், பேசாம இரு” என்றாள் அருண்மொழி. நமக்கு கட்டுப்படியாகாது என்று அமைந்தேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஈர்ப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6