‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-11

bowகதிர் மேற்றிசை அமைந்து களம் ஒடுங்குவதை அறிவிக்கும் பெருமுரசுகள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு திசை எல்லைவரை முழங்கி விரிந்தன. படைக்கலங்கள் தாழ்த்தப்படும் அசைவு அலைகளாக சூழ்ந்து செல்வதை பார்க்கமுடிந்தது. வேல்களையும் விற்களையும் ஊன்றி உடல் தளர்ந்து தலை தாழ்த்தி நின்றனர் வீரர்கள். தெய்வம் மலையேறிய வெறியாட்டர்களைப்போல. பெரும்பாலானவர்கள் மண் நோக்கி விழுந்தனர். சிலர் முழந்தாளிட்டு அமர்ந்தனர். தேரிலோ புரவியிலோ பற்றிக்கொண்டு சாய்ந்தனர். நெடுந்தொலைவு ஓடி நீர் கண்ட புரவிகளைப்போல நீள்மூச்சுவிட்டனர். பயனிழந்த படைக்கலங்கள் ஓசையிட்டபடி உறைகளிலும் தேர்த்தட்டுகளிலும் அமைந்தன. ஒவ்வொருவரும் குருதியை உணர்ந்தனர்.

கௌரவப் படைகளில் ஆங்காங்கே வெற்றி முழக்கங்கள் எழுந்தாலும் முந்தைய நாளிருந்த ஊக்கம் முற்றாக வடிந்திருப்பதை உணரமுடிந்தது. மறுபக்கம் பாண்டவப் படைகளின் மையத்திலிருந்து எழுந்த வெற்றிக்கூச்சல் ஒவ்வொரு படையணியாக பற்றிக்கொண்டு பெருகி செவிநிறைத்து அதிர்ந்தது. தன் தேர்த்தட்டில் பீஷ்மர் காலோய்ந்தவர்போல் அமர்ந்து வில்லை தன் மடியில் வைத்துக்கொண்டார். அமரபீடத்தில் விஸ்வசேனரின் குருதி உலர்ந்து கருமைகொள்ளத் தொடங்கியது. வெண்புரவிகளின் உடலில் மென்மயிர்ப்பரப்பில் தெச்சி மொட்டுகள்போல குருதித் துளிகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. அப்போதும் உலராத குருதித் துளிகள் வழிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து கீழ் நோக்கி சென்றன. தோற்பரப்பை ஆங்காங்கே சிலிர்த்து குருதியின் வழிவை உதற முயன்று கொண்டிருந்தன புரவிகள்.

அவருடைய தேரை நோக்கி புரவியில் வந்த பூரிசிரவஸ் இறங்கி அணுகி “பிதாமகரே…” என்றான். வில்லை தேர்த்தட்டிலேயே வைத்துவிட்டு பீஷ்மர் எழுந்தார். முதிய எலும்புகள் சொடுக்கி உரசிக்கொள்ளும் ஓசைகள் உடலெங்கும் எழுந்தன. படிகளில் கால்வைத்திறங்கி பூரிசிரவஸின் தோள்களில் கைவைத்து நின்று காலை தூக்கி அணிந்திருந்த இரும்புக் குறடின் தோல்பட்டையை சற்று தளர்த்திக்கொண்டார். பின்னர் கையுறைகளை இழுத்துக்கழற்றியபடி நடந்தார். பூரிசிரவஸ் அவருக்குப் பின்னால் வந்தபடி “படைகள் சோர்வுற்றிருக்கின்றன, பிதாமகரே” என்றான். பின்னர் அதை சொல்லியிருக்கலாகாதோ என்று உணர்ந்தவன்போல் “பீமசேனரின் இன்றைய வெறியாட்டு நம் படைகளை அச்சுறுத்தியிருக்கிறது” என்றான்.

அவர் திரும்பிநோக்காமல் நடந்தார். படைவீரர்கள் முதற்தருணத்து உளமழிவிலிருந்து தன்னுணர்வு மீண்டு ஒருவரை ஒருவர் நோக்கினர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த முகம் ஒன்றை விழிதுழாவி கண்டுகொண்டு அணுகி தோளிலும் கைகளிலும் தொட்டுக்கொண்டார்கள். இன்னொரு உடலைத் தொடாது தனித்து நடந்த எவரும் இருக்கவில்லை. அத்தொடுகையினூடாகவே அவர்கள் தங்கள் உடலை உணர்ந்தார்கள். தங்கள் உடலுக்கு எதையோ உணர்த்தினார்கள். ஆனால் அவர்களின் விழிகள் தனிமை கொண்டிருந்தன. நோக்கா வெறிப்புடன் உறைந்த உணர்ச்சிகளுடன் நடந்தனர்.

பூரிசிரவஸ் பீஷ்மருடன் நடந்தபடி “நம் படைசூழ்கையின் கழுத்தை அவரால் முறிக்க முடிந்ததை நம் படைகளால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அரசர் உளம் சோர்ந்திருக்கிறார். அவரிடமிருந்தே இவ்வுளச் சோர்வு நம் படைகளை நோக்கி பரவுகிறது” என்றான். அப்பேச்சும் எதிர்மறையானதாகத் தோன்ற “ஆனால் என் நோக்கில் இன்றைய போரும் நமக்கு வெற்றியே. படைமுகத்தில் அர்ஜுனன் வில்தாழ்த்தி பின்னடைவதை நான் என் கண்ணால் பார்த்தேன். அதுவும் நம் படைசூழ்கை துண்டுபடுத்தப்பட்டு தாங்கள் தன்னந்தனியாக எதிரிகளால் வளைக்கப்பட்டு நின்றிருந்தபோது. பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவர்கள் என்று புகழ்பெற்ற மூவர் ஒருங்கிணைந்து எதிர்த்தும் தங்கள் உடலில் ஒரு கீறலைக்கூட உருவாக்க இயலவில்லை என்பது கண்கூடென தெரிந்தது. இப்போர் எவரால் முடிவு செய்யப்படுமென்பதை இன்று நான் கண்டேன்” என்றான்.

பீஷ்மர் அவன் சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. தலை குனிந்து நீண்ட கால்களை கீழே கிடந்த உடல்கள் மீதும் அப்போதும் குளம்புதறி துடித்துக்கொண்டிருந்த புரவிகளைக் கடந்தும் உடைந்து சிதறிக்கிடந்த தேர்ச்சகடங்களை தாண்டியும் சென்றுகொண்டிருந்தார். அவருடன் செல்ல பூரிசிரவஸ் ஓடவேண்டியிருந்தது. மலைமகன்களுக்குரிய உயரமின்மையால் அவரருகே அவன் சிறுவன்போல் தோன்றினான். “இன்றைய போரில் இன்னொரு வெற்றி துரோணர் அடைந்தது, பிதாமகரே” என்றான். “திருஷ்டத்யும்னன் தன் தந்தை கொண்ட வஞ்சினத்தை தீர்க்கும் எண்ணத்துடன் இன்று களத்தில் துரோணரை எதிர்கொண்டார். மூன்று நாழிகைப்பொழுது அப்போர் நிகழ்ந்தது. தனக்கு எவரும் துணை வரவேண்டியதில்லை என்று ஆசிரியர் தடுத்துவிட்டார். அவரோ தன் முழு அணுக்கப் படையினருடன் அவரை சூழ்ந்துகொண்டிருந்தார். ஆசிரியர் இடத்தோளிலொரு கவச இலையை உடைத்தெறிவது ஒன்றையே அவரால் ஆற்றமுடிந்தது.”

“ஆனால் அவர் ஊர்ந்த தேரை ஆசிரியர் உடைத்து தெறிக்கச்செய்தார். அவர் கவசங்களை சிதறடித்து தோளிலும் தொடையிலும் அம்புகளை செலுத்தினார். இன்று அவர் உயிர்பிழைத்து மீண்டது உண்மையில் ஆசிரியரின் உள்ளே குடிகொண்ட அவரே அறியாத கனிவால்தான். ஆம், அதை நான் உறுதியாக சொல்ல இயலும். அப்போரை நான் அருகிருந்து கண்டேன். திருஷ்டத்யும்னன் மேலும் மேலும் வெறிகொண்டார். அனைத்தையும் மறந்து முன்னால் வந்து அவருடைய அம்புவளையத்திற்குள்ளேயே நின்றார். துரோணர் ஏழு முறையேனும் அவர் நெஞ்சை பிளப்பதற்கு நீளம்பை எடுத்தார். ஆனால் செலுத்துகையில் அவரை அறியாமலேயே அவர் தேர்த்தண்டுக்கும் முகடுக்குமே குறிவைத்தார்.”

“ஆம், பிதாமகரே. அவரால் தன் கையால் திருஷ்டத்யும்னனை கொல்ல இயலவில்லை. சூழ்ந்திருந்த அனைவருமே அதை உணர்ந்தோம். ஐயமில்லை, அவரும் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் எட்டாவது முறை அவருள்ளிருந்து அவரே அறியாத பிறிதொரு தெய்வம் கையைப்பற்றி தான் செலுத்திவிடக்கூடும் என்று எனக்குப்பட்டது. மெய்யாகவே அது நிகழுமென்று அஞ்சினேன். அதற்குள் கேடயப்படை வந்து திருஷ்டத்யும்னனை மறைத்து இழுத்து அப்பால் கொண்டு சென்றது” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் போர் முடிந்தபின் நம்மவரேகூட திருஷ்டத்யும்னனையே போற்றினர். பரத்வாஜரின் முதல் மாணவர் முன் நின்றுபொருதும் ஆற்றல் பார்த்தனுக்கும் இல்லை என்பதே நாமறிந்தது. அவர் நின்றார் அல்லவா? அது வெற்றிதான்.”

“ஆனால் அவ்வெற்றியே அவருக்கு இறப்பாகும். அவரை வெல்லமுடியுமென்று எண்ணச் செய்யும். அவரால் சிறுமையுண்டேன் என்று இன்னொரு அகம் சீறும். அவர் வருவார், மிதிபட்ட நாகம் மணம்கூர்ந்து பின்தொடரும். அவர் துரோணரை எண்ணி வாழ்ந்தவர். அவரை கொல்லும்பொருட்டே யாஜரும் உபயாஜரும் அதர்வ வேள்வியில் அவரை சமைத்தனர் என்றார்கள்…” மேலும் பேச பூரிசிரவஸ் விரும்பினான். முதலில் இயல்பாக சொன்ன ஒற்றைச்சொல்லை நஞ்சிழக்கச் செய்யும்பொருட்டே பிற அனைத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்திருந்தான். “இன்று அவர்கள் வெற்றி கொண்டாடுவது இளைய பாண்டவர் பீமனின் பெருஞ்செயலுக்காக. அது பெருஞ்செயல் என்பதில் ஐயமில்லை. ஒருகணமும் அவர் தயங்கவில்லை, எந்நிலையிலும் பின்னடையவில்லை.”

“இன்று அவர் கொன்றுமீள்வேன் என வஞ்சினம் உரைத்தே வந்திருக்கிறார். அது மானுடர்க்களித்த வஞ்சினச்சொல் அல்ல, தெய்வங்களுக்கு அளித்தது என்கிறார்கள். பிதாமகரே, பெருவீரர் அணிநிரந்த நம் படையைச் சிதைத்து உள்ளே நுழைந்து மறுபக்கம் வர அவரால் இயன்றிருக்கிறது. ஆனால் அது படைமடம் அன்றி வேறல்ல. நான் நேரில் பார்க்கவில்லை, ஆனால் இங்கிருக்கும் அத்தனை வீரர்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நூறுமுறையேனும் இறப்பின் கணத்தில் இருந்தார். இறுதியில் உங்கள் ஓர் அம்பின் முன் செயலற்றவராக வந்து நெஞ்சு காட்டினார். பிதாமகரே, இன்று அவரை நீங்கள் வீழ்த்தியிருக்க முடியும். பீமசேனர் விழுந்திருந்தால் பாண்டவர்களின் ஆற்றலில் பாதி அழிந்திருக்கும். ஒருவேளை இன்றே போர் முடிந்தும் இருக்கும். தந்தையென நின்று அவர் உயிரை அவருக்கு அளித்தீர்கள்” என்றான் பூரிசிரவஸ்.

பீஷ்மர் ஒருகணம் நடை தயங்குவதுபோல தெரிய அவன் நின்றான். அவர் சென்றுகொண்டே இருக்க மங்கிக்கொண்டிருந்த மாலையொளியில் எதிரே துரியோதனனும் துச்சாதனனும் வருவதைக்கண்டு அவன் ஓரிரு அடிகள் முன்னே சென்றான். ஆனால் அப்படியே விடுவித்துக்கொள்ளலாம் என்னும் ஆறுதலையே அடைந்தான். துரியோதனன் கவசங்களை கழற்றவில்லை. அவனுடைய கவசங்களை கழற்றும்பொருட்டு அவனுக்குப் பின்னால் வந்த ஏவலர்கள் அவன் விரைந்து பீஷ்மரை அணுகுவதைக் கண்டு தயங்கி நின்றனர். அவர்களின் விழிகளில் அத்தனை தொலைவிலேயே கசப்பையும் ஆற்றாமையையும் பூரிசிரவஸால் பார்க்கமுடிந்தது.

கைகளை விரித்து “பிதாமகரே!” என்றபடி துரியோதனன் அருகணைந்தான். “இதோ சற்று முன்னர்தான் கேட்டேன், நீங்கள் பீமனுக்களித்த உயிர்க்கொடையைப்பற்றி. நன்று! நன்று! உயிர்க்கொடை அளிக்கும்போது நீங்கள் எங்களை எண்ணியிருக்கமாட்டீர்கள். அவர்கள் ஆற்றியதையும் எண்ணியிருக்கமாட்டீர்கள். விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் புகழன்றி வேறேதும் உங்கள் உள்ளத்தில் இருந்திருக்காது. தந்தையர் ஓர் அகவைக்குப் பின் தங்கள் மூதாதையரின் நல்லெண்ணத்தை அன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. விண்புகுதற்குரியவற்றை மட்டுமே மண்ணில் செய்ய எண்ணுகிறார்கள். நன்று!” அவன் பற்களைக் கடித்தபோது தாடை இறுக கழுத்தில் தசைகள் இழுபட்டன. “என் குடி மைந்தர் எண்பத்தேழுபேர் இன்று சிதைந்து இறந்தனர். அவர்களின் குருதி அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு அவன் களியாடினான். நீங்களும் கண்டு மகிழ்ந்தீர்கள். தங்கள் நற்செயலால் இனி இதே களத்தில் என் தம்பியர் தலையுடைந்து சாகக்கூடும். நான் நெஞ்சுபிளந்து விழவும் கூடும்.”

அவன் குரல் ஓங்கியது. “பிதாமகரே, இனி நீங்கள் அவர்களுக்கு அளிப்பதற்கு ஒரே கொடையே உள்ளது, தலைக்கொடை. சென்று அர்ஜுனன் முன் உங்கள் தலையை காட்டுங்கள்” என்றான். போதும் என்பதுபோல் பீஷ்மர் கைகாட்டினார். அவன் தணிந்து இடறிய குரலில் “நான் உங்களை குற்றம் சாட்டவில்லை. அதற்கு எனக்கு என்ன தகுதி? இப்படைமுகம் நின்று எனக்கு வெற்றியை ஈட்டித்தருவதாக சொல்லளித்தவர் நீங்கள். அது உங்கள் கொடை. அதைவிடப் பெரிய கொடையை அவர்களுக்கு அளிக்கிறீர்கள். முதல் நாள் போரில் உங்கள் பெருவீரம் கண்டு மகிழ்ந்திருந்தவன் நான். ஆனால் அந்த வீரமெல்லாம் அயல்குடியின் இளமைந்தரிடமே. தன் குடியை கண்டதும் உங்கள் வில் தாழ்ந்தது” என்றான்.

“களத்தில் அளியும் நெறியும்கூட கோழைத்தன்மையின் பிறிது வடிவமே. வெற்றி நோக்கி செல்லா எச்செயலும் வீண்செயலே. இளமையில் நீங்கள் கற்பித்த நூல்களிலிருந்து சொல்கிறேன்” என்றான் துரியோதனன். ஒன்றுடன் ஒன்று பொருந்தா சொற்களென அவனுக்கே தோன்ற இரு கைகளையும் விரித்து “இனி தாங்கள் எண்ணுவது என்ன என்று மட்டும் சொல்க! நாளை களம்காணவிருக்கிறீர்களா? எவ்வண்ணமெனினும் மீண்டும் மீண்டும் பாண்டவர் ஐவரையே நீங்கள் களத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் அவர்களை கொல்லமாட்டீர்கள் என்றால் அவர்கள் உங்களை கொல்லமாட்டார்களென்று சொல்லுறுதி உள்ளதா? உங்களை நம்பி இதோ இத்தனை படைகள் திரண்டு நிற்கின்றன. நீங்கள் அவர்களுக்கு அளித்தது அவன் உயிரை மட்டுமல்ல, உங்களை நம்பி வந்த இப்பல்லாயிரவரின் உயிர்களையும்தான்” என்றான்.

“மெய், உங்களுக்கு அந்த உரிமை உண்டு. உங்களை நம்பி வந்தமையால் நாங்கள் உங்கள் உடைமை. நாளை எங்கள் தலைகளையும் அவர்களிடம் உருட்டிவிடுங்கள். ஒன்று செய்கிறேன், அவர்களால் அது நிகழவேண்டியதில்லை. உங்கள் அம்புகளாலேயே அதை செய்க!” என்றான் துரியோதனன். உறுமலோசையுடன் “போதும், நிறுத்து!” என்று பீஷ்மர் சொன்னார். துரியோதனன் தளர்ந்து “நான் உங்களை வருத்தமுறச் செய்யவில்லை. அதற்கு எனக்கு உரிமையில்லை என்று இப்போது உணர்கிறேன். பிதாமகரே, இன்று நீங்கள் உயிர்க்கொடை அளித்து திருப்பி அனுப்பிய அவன் நம் படைகளுக்குச் செய்தது என்ன என்று அறிவீர்களா? என் உடன்பிறந்தார் மூவர் இன்று களத்தில் விழுந்துள்ளனர். அவர்கள் உயிர் பிழைப்பார்களா என்று தெரியவில்லை. பிழைத்தெழுந்தால் அவர்கள் பெற்ற மைந்தர் மறைந்ததை எண்ணி மீண்டும் இறக்கவே துணிவர்” என்றான்.

“குலத்தானை கொல்லலாகாதென்று நீங்கள் கொண்ட நெறி அவனால் பேணப்படவில்லை. குலாந்தகனுக்கு உயிர்க்கொடை அளித்தீர்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? என்னையும் என் தம்பியரையும் என் குலத்தையும் முற்றழிப்பதற்கு நீங்கள் அவனுக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்றன்றி வேறென்ன?” பீஷ்மர் ஏதோ சொல்ல கையெடுக்க உடைந்த குரலில் துரியோதனன் “அளிகூருங்கள், பிதாமகரே. நாங்கள் உங்களை நம்பி வந்த உங்கள் பெயர்மைந்தர். முதுவேங்கை மைந்தரை கொன்று தின்னும் என்பார்கள். உங்களை அவ்வாறு கண்டு அஞ்சுகிறோம். பிதாமகரே, எங்களை காத்தருளுங்கள்” என்றான்.

பீஷ்மர் குருதிப்பசையால் சடைத்திரிகளெனத் தொங்கிய தாடியை கையால் தடவியபடி “இன்று ஒரு கணம் என் கைதாழ்ந்தது உண்மை. எவ்வண்ணம் அது நிகழ்ந்ததென்று என் உள்ளம் இப்போதும் திகைப்பு கொண்டிருக்கிறது. நம்முள் நிகழ்வதென்ன என்பதை நாம் முன்னரே அறிய இயலாது” என்றார். எரிச்சலுடன் “தன் உள்ளத்தின்மேல் ஆணை இல்லாதவன் வீரனல்ல. இது தாங்கள் எனக்கு சொன்ன சொல்” என்றான் துரியோதனன். “மெய். ஆனால் போர்க்களமென்பது தனிக்கணங்களாக சிதறிப்போன காலத்தாலானது. ஒவ்வொரு கணத்திலும் முன்பும் பின்பும் அற்ற ஒன்று நிகழ்கிறது. முழு வாழ்க்கையையும் துலங்கச் செய்கிறது” என்றார் பீஷ்மர். “எண்ண எண்ண சித்தம் பேதலிக்கிறது. எத்தனை ஆயிரம், லட்சம், கோடி மெய்யறியும் தருணங்களின் தொகை இது! இன்று எனக்கும் ஒன்று வாய்த்தது. அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.”

“பிதாமகரே, நான் கேட்பது ஒன்றே. தங்களை நாங்கள் நம்பினோம். எங்களை கைவிடுகிறீர்களா? எங்களை எதிர்த்து படைகொண்டு வந்து நின்றிருக்கும் பாண்டவர்கள் அனைவருக்கும் இதேபோல் அளிகூரவிருக்கிறீர்களா?” என்றான் துரியோதனன். “இல்லை” என்று பீஷ்மர் சொன்னார். “அந்த ஐயம் உனக்கு தேவையில்லை. இன்று நான் என்னை கண்டடைந்தேன். ஆயிரம் கடிவாளங்களால் அங்ஙனம் கண்டடைந்த என்னை அணைகட்டி நிறுத்துகிறேன்.” அவன் தோளைத் தொட்டு “ஐயம் தேவையில்லை. நாளை பாண்டவரைக் கொன்று களத்திடுவேன். நாளை படையென்று எழுந்துவருபவர்களில் பாதிபேர்கூட திரும்பிப்போகப் போவதில்லை. இது நான் உனக்களிக்கும் சொல்லுறுதி” என்றார்.

துரியோதனன் வெற்று விழிகளுடன் நோக்கி நின்றான். அவர் துரியோதனனின் தோளில் மெல்ல அறைந்துவிட்டு நடந்து அப்பால் சென்றார். பின்னால் நின்ற பூரிசிரவஸை பார்த்து துரியோதனன் “படைகள் சோர்ந்துள்ளன. இன்று துயின்று நாளை எழுகையில் அவர்களது உள்ளம் எவ்வண்ணமிருக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லை” என்றான். பூரிசிரவஸ் “நேற்றைய எழுச்சி இன்று சோர்வாகிறது. எனவே இன்றைய சோர்விலிருந்து நாளை எழுவார்கள். நாளை விடிவதற்குள் இன்று பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் அடைந்த களவெற்றியின் கதைகளை படைமுழுக்க பரப்புவோம். புலரியில் அவர்கள் இருவரும் கவசம் அணிந்து வில்லுடன் தேர்த்தட்டில் நிற்கையில் நமது வீரர்கள் விசைகொண்டெழுவார்கள்” என்றான்.

bowபீஷ்மர் தன் பாடிவீடு வரை தனியாக நடந்து சென்றார். அவர் செல்வதை முதலில் எவரும் உணரவில்லை. தற்செயலாக நிமிர்ந்து பார்த்த ஒரு வீரன் தலைக்குமேல் தேவனென அந்தியொளியில் சிவந்த அவர் முகம் செல்வதைக்கண்டு கைதூக்கி கலைவோசையிட்டுக் கொண்டிருந்த தன் தோழர்களை அடக்கினான். அந்த அமைதியே அவர்கள் அனைவருக்கும் கேட்க அவர்கள் ஒருவரை ஒருவர் அடக்கி அவர் செல்லும் வழியை ஓசையடங்கச் செய்தனர். பாடிவீடு திரும்பும் படைவீரர்களின் கூச்சல்களால் முழங்கிக்கொண்டிருந்த அந்த மானுடப்பரப்பில் அவர் சென்ற வழி மட்டும் குளிர்ந்து இறுகியதென அமைதிகொண்டபடியே நீண்டது.

தன் பாடிவீட்டுக்கு வந்து எழுந்தோடி எதிர்கொண்ட ஏவலனிடம் கையசைவாலேயே நீர் எடுத்து வைக்கும்படி அவர் ஆணையிட்டார். அவன் மரக்குடுவையில் நீரை கொண்டுவைத்ததும் அதன் அருகே சென்று நின்றார். அவன் நிலத்தமர்ந்து அவரது கால் குறடுகளை தோல்பட்டையை அவிழ்த்து அப்பால் வைத்தான். வெறுந்தரையில் கால் பட்டதும் அவர் நிறைவுணர்வை அடைந்தார். அதுவரை கால் கீழில் இருந்த தேரசைவு அகன்றது. கைகளின் உறைகளை ஏவலன் கழற்றினான். கைகள் வீங்கியமையால் அவை இறுகியிருந்தன. கைமூட்டுகள் சிறுபந்துகளென்றாகியிருந்தன. அவன் இட்ட முக்காலிமேல் அமர்ந்து தன் கவசங்களை அவன் கழற்றுகையில் கண்மூடி சூழ்ந்தொலித்த படை முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.

ஏவலன் கவசங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டதை அறிவிக்கும்பொருட்டு “வணங்குகிறேன், பிதாமகரே” என்றதும் விழிதிறந்து ஒருகணம் எங்கிருக்கிறோம் என்பதை உணராமல் “ஆம், ஆம்” என்றார். தலை சற்று நடுங்கிக்கொண்டிருந்தது. தாடியை சற்று நீவியபடி “என்ன நிகழ்கிறது?” என்றார். அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம் அவருக்கு நிகழ்ந்தவை புரிந்து இரு கைகளும் தொடை நோக்கி விழ, தாடை தொய்ந்து வாய் திறக்க அசைவிழந்து நின்றார். ஏவலன் தலைகுனிந்தான். “ஆம்” என்று சொன்னபடி அவர் திரும்பி குடுவையிலிருந்த நீரை நோக்கி சென்றார்.

நீர் குளிர்ந்திருந்தது. அந்தியின் இருள் அதில் அலைகொண்டது. நீரை அள்ளி தன் கைகளை கழுவிக்கொண்டார். சுண்ணம் கலந்த மணல்பொடி ஒரு சிறு மரக்கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை அள்ளி கைகளில் உரசி முழங்கால் வரைக்கும் தேய்த்து நீர்விட்டு கழுவினார். கருமை கொண்டிருந்த குருதி கரைந்து மீண்டும் செந்நிறமாக சொட்டத் தொடங்கியது. உடம்பிலும் தலையிலும் சுண்ணப்பொடி போட்டு கழுவினார். கழுவும்தோறும் குருதி வழிந்தபடியே இருந்தது. பலமுறை கழுவியதும் விரல்களைக் குவித்து ஒரு சொட்டுவிட்டு நோக்கியபோது சற்றே தெளிந்த செங்குருதியாகவே அது முகிழ்த்தது. நீள்மூச்சுடன் அவர் நிமிர்ந்து தரையிலிருந்து மண்ணை காலால் திரட்டி உள்ளங்காலிலும் விரல்களிலும் பூசிக்கொண்டு கால்களை ஒன்றுடன் ஒன்று உரசி நீர்விட்டு கழுவினார்.

தன் அருகே ஏவலன் வந்து நிற்பதைக் கண்டு “இன்னும் சற்று நீர்” என்றபடி நிமிர்ந்து பார்த்தார். ஒருகணம் திகைத்த பின்னரே அவனை அடையாளம் கண்டுகொண்டார். அவரைப் போன்ற தோற்றத்துடன் நின்றிருந்த தரன் “இன்று நான் விடைபெற்றேன், இளையோனே” என்றான். “ஆம், உணர்ந்தேன்” என்று பீஷ்மர் சொன்னார். “இனி இக்களத்தில் எனக்கு பணியில்லை. விண்ணேகுகிறேன். எழுவரில் அறுவர் உன்னுடன் இருப்பார்கள்” என்றான். பீஷ்மர் விழிகளை தாழ்த்தி தலையசைத்தார். “அனைத்தையும் பொறுத்துக்கொள்பவன் என்பதனால் எனக்கு இப்பெயர். என் அன்னை புவிமங்கை. எழுவதனைத்தும் திரும்பிச்செல்லும் மடி அவள். சொல் பொறுப்பவள். செயல்கள் அனைத்தையும் ஏற்பவள்” என்றான் தரன்.

பீஷ்மர் விழியிமைகள் சரிய கேட்டுக்கொண்டிருந்தார். “நான் மானுடரின் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளவும் அவர்களின் துயர்களை ஆற்றவும் எப்போதும் உடனிருப்பவன். எங்கெல்லாம் உளம்விரிந்து மானுடர் துயரையும் சிறுமையையும் வலியையும் பொறுத்துக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் நான் உடனிருப்பேன்” என்றான். பீஷ்மர் “இன்று நான் பொறுத்துக்கொண்டதற்கு சினந்து நீங்கள் கிளம்புகிறீர்கள், மூத்தவரே” என்றார். “இல்லை” என்று தரன் புன்னகைத்தான். “பொறுத்துக்கொண்ட மறுகணமே அதன்பொருட்டு நீ நாணினாய். உன் ஆணவம் சினந்தெழுந்து மறுமுறை பொறுப்பதில்லை என்று முடிவு செய்தது. உன்னைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை நான் எடுத்தது அப்போதுதான்” என்றான்.

பீஷ்மர் பெருமூச்சுடன் “என் கடமை அது” என்றார். “என்னை இருக்கச்செய்ய உன்னால் இயலும். அதை சொல்லிச் செல்லவே நான் வந்தேன்” என்றான் தரன். “இச்சிறு மரக்கொப்பாரையிலிருப்பதும் நம் அன்னையே. அவளைத் தொட்டு நீ ஆணையிடவேண்டும், அனைத்துத் தருணங்களிலும் நான் உன்னுடன் இருக்க வேண்டுமென்று.” பீஷ்மர் “இல்லை, இனி ஒருமுறை படையில் எதிர்வரும் எவரிடமும் அளிகொள்ள நான் எண்ணவில்லை” என்றார். “எனில் இது நம் பிரிவுத் தருணம்” என்றான் தரன். பீஷ்மர் நிமிர்ந்து ஆடிப்பாவை போலிருந்த அவன் விழிகளை நோக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவர் கைவணங்க வாழ்த்தளிக்காமல் தலைதாழ்த்தி மூன்று அடிவைத்து பின்னால் நகர்ந்து காற்றுத்திரைக்கு அப்பால் தரன் மறைந்தான்.

பீஷ்மர் திரும்பி ஏவலன் கொப்பரையில் நீர் கொண்டுவருவதை பார்த்தார். அவன் அதை ஊற்றிவிட்டு “தங்களுக்கான உணவும் மாற்றாடையும் பாடிவீட்டிற்குள் உள்ளன, பிதாமகரே” என்றான். “நன்று” என்றபடி பீஷ்மர் மீண்டும் குருதியை கழுவத் தொடங்கினார். உடலில் இருந்து குருதி ஊறிவந்தபடியே இருந்தது. நகக்கண்களில் உறைந்திருந்தது. மீண்டும் கைதூக்கி துளிகளை நோக்கினார். புதுக்குருதிபோல துளித்து வந்தது.

முந்தைய கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை
அடுத்த கட்டுரைநம்பிக்கை -கடிதங்கள்-2