கேள்வி பதில் – 53, 54, 55

கதைக்கான கரு எப்போது spark ஆகிறது? எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்?

— மதுமிதா.
கதைக்கான கரு எப்போதுமே ஒரு சிறு அதிர்வாகத் தொடங்குகிறது. எப்போதுமே ஓர் அனுபவம். அபூர்வமாக அது வாசிப்பினால் கிடைத்த அனுபவமாகவும் இருக்கலாம். செய்தியோ கதையோ. ஒரு போதும் ஒரு கருத்துத் தூண்டுதலாக அமைவது இல்லை

பெரிய, தீவிரமான அனுபவங்கள் கதையானதில்லை. உதாரணமாக நான் ஒருமுறை நாமக்கல் அருகே என் முன்னே சென்ற ஒரு பேருந்து விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டேன் பத்து பேருக்கு மேல் பலி. நான் இறங்கி ரத்தக் களத்தில் கிடந்தவர்களைத் தூக்க உதவிசெய்தேன். சதை துண்டான குழந்தைகள், துடிக்கும் பெண்கள். என் உடலெல்லாம் ரத்தம். தொடை துடித்தபடியே இருந்தது. என்னைப் போன்ற ஒருவனால் அத்தனை ரத்தத்தை சாதாரணமாக எதிர்கொள்ள முடிந்தது வியப்பூட்டியது [அதுதான் சாதிக்குணம் என்றார் நண்பர் ஒருவர் பிறகு]. பலகாலமாக அக்காட்சிகள் கனவாக வெளிவந்தன. ஆனால் இன்றுவரை அது இலக்கியத் தூண்டலை அளிக்கவில்லை.

மாறாக சல்லிசான அனுபவங்கள், உதாரணமாக வட இந்தியக் கிராமம் ஒன்றில் விவசாயிகள் கூடைகளில் பூக்களுடன் வீடு திரும்புவதைக் கண்டது இருமுறை எழுதத் தூண்டுதல் அளித்துள்ளது. ஆழ்மனதின் பாதைகள் நிலத்தடி நீர் போல. நிலமேற்தள [ஆர்ட்டீசிய] ஊற்றுப் பக்கத்தில் முந்நூறடி ஆழத்திலும் நீர் இருக்காமலிருக்கலாம்.

ஆனால் ஒரு தர்க்கம் இதில் இருப்பதை உணரலாம். படைப்பாக்கம் பெற ஓர் அனுபவம் உக்கிரமாக இருப்பது அவசியமில்லை. அதில் ஒரு சிக்கல், வினா இருக்க வேண்டும். அது நம் மனதில் வாழ்க்கைபற்றிக் கொண்டிருக்கக் கூடிய புரிதலை சீண்டவேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கை சார்ந்து ஒரு வாழ்க்கைக் கோட்பாடு இருக்கும். நன்மை தீமை சரி தவறு எல்லாமே அதனடிப்படையில் தீர்மானிக்கபடுகின்றன. அது ஒரு தராசு. ஒரு தட்டில் சிந்தனைத் திறன் மறுதட்டில் வாழ்வனுபவம். சமன் அமைந்து முள்நிலைக்கும்போது நிம்மதியாக இருக்கிறோம். அதை மீண்டும் ஆட்டிவிடுகின்றன சில அனுபவங்கள். சிலமணி நேரம், சில நாட்கள், சில மாதங்கள் என நம் முள் ஆடி மெல்ல நிலைக்கிறது. சிந்தித்து கனவுகண்டு அவ்வனுபவத்தை செரிக்க முயல்கிறோம்.

சமன் குலைக்கும் அனுபவங்களே படைப்பிலக்கியத்துக்கான சீண்டலை அளிக்கின்றன. படைப்பிலக்கியம் என்பதேகூட அவ்வனுபவத்தை சமன்படுத்திக் கொள்வதற்கான யத்தனமேயாகும். அவ்வனுபவத்தை அதுவரை நாம் பெற்ற அனுபவங்களின் நீட்சியாகப் பொருத்திக் கொள்கிறோம். நம்முள் உள்ள அகநிலக்காட்சியில் அதை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். அதை விதையாக ஆக்கி நம் ஆழ்மனதுக்கு அனுப்பி அது மரமாக மீண்டுவரச் செய்கிறோம். அதுவே இலக்கியமாகும். சிப்பிக்குள் விழுந்த தூசு அதன் சதைச்சாறால் முத்தாவதுபோல படைப்பாகிறது அவ்வனுபவம்.

சரி, இதெல்லாமே சொற்கள். இது ஒரு விளக்கம். இத்தனை விளக்கத்துக்குப் பிறகும் அது தன் இயல்பான மர்மங்களுடந்தான் இருக்கிறது. அம்மர்மம் நீடிப்பதுவரையே படைப்புகள் எழுதப்படும்

-*-
 

தங்கள் “டார்த்தீனியம்” படித்து ஒருவாரம் இரவு முழுவதும் கருமையாகவும் நாகமாகவும் என்னைச் சூழ தூக்கமின்றி திடுக்கிடலுடன் விழித்துக் கிடந்தேன். கண்ணாடியிலும் நானே கருமையாக உணர்ந்தேன். இக்கதையையே உதாரணமாகக் கொண்டு கதை வளரும் விதம் முடிவை நோக்கி நகரும் தன்மையைக் குறித்து சொல்லுங்கள்.

— மதுமிதா.

என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். பிற்பாடு யோசித்தபோது அந்தத் தற்கொலைகள் நிகழ்வதற்கு வெகுகாலம் முன்னரே அதற்கான காரணங்கள் உருவாகி திரண்டு வலுப்பெற்று வந்திருப்பதைக் காண முடிந்தது. ஒரு நல்ல திரைக்கதை போல. அந்தத் தற்கொலைகள் நிகழாமலிருக்கவே முடியாது என்பதுபோல. ஒரு பெரிய பாறை மலைச்சரிவில் உருள ஆரம்பிக்கிறது, ஒன்றும் செய்வதற்கில்லை.

இது என்னை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தபடி இருந்தது. மனிதர்களைச் சூழ்ந்து கண்ணுக்குத் தெரியாத இயக்குநர், மேடை அமைப்பாளர், கதையாசிரியர் ஆகியோர் இருப்பதைப் போலப் பட்டது. அப்போது ஒரு மனச்சித்திரம் எழுந்தது. அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டின் பெரும்பகுதி மாற்றிக் கட்டப்பட்டது. ஆகவே பலஅறைகளில் மரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். இதனால் வீடு முழுக்க ஒரே இருள் இருக்கும். அவ்விருள் என் வீட்டில் குடியேறி, மெல்ல மெல்ல வளர்ந்து, வீட்டையே விழுங்கியது என எண்ணினேன். இருளையே குறியீடாக ஆக்கி அந்நாவலை எழுதினேன். எழுத எழுத அதன் தளங்கள் உருவாகி வந்தன. கருமை விஷத்தின், அழிவின் நிறமாக ஆயிற்று. அழிவை நாம் வெளியே இருந்து அடைவதில்லை, நாமே நட்டு வளர்க்கிறோம் என்ற சித்திரம் அதில் இருந்தது.

மிக அகவயமான இருளின் சித்திரம் டார்த்தீனியம். அதன் அச்சம், பதற்றம், அதைத் தவிர்க்க முடியாமை எல்லாமே அதில் உண்டு. அத்தளத்திலேயே அதை வாசகர்கள் படித்தார்கள். ஆனால் தமிழின் ஒரு சிறு கும்பல் அது கருமை எனக் குறிப்பது தலித்துக்களையே என்றும் அவர்களின் வளர்ச்சியைப் பற்றிய அச்சமே அது என்றும் சொல்லிக் கொண்டிருந்தது முன்பு. தலித்துக்கள் அப்படிச் சொல்லவுமில்லை. கருமை என்பதற்கு இலக்கிய உலகில் மாறாப்பொருள் ஏதும் இல்லை. படைப்புக்குள் பொருள்படுத்தப்படும் ஒரு படிமம் மட்டுமே. படைப்பு உருவாக்கும் உணர்வுதளமே அதை பொருள் கொள்ளச் செய்கிறது. இப்போது வந்துள்ள ‘காடு’ நாவலில் கருமையானது காட்டின், பசுமையின், கடவுள்களின் நிறமாகக் குறியீடாகியுள்ளது.

டார்த்தீனியம் மனிதனின் சொந்த இச்சைகள் மற்றும் பலவீனங்களுக்கு முன்னால் மனிதன் எத்தனை சிறியவன் பாதுகாப்பற்றவன் என்பதைக் காட்டும் கதை என்பதே என் கோணம்.

-*-
 

இப்போதைய இலக்கியச் சூழலில் கருத்து வேறுபாடுகள் சகஜமே. இருந்தும் குழுக்களாகப் பிரிந்து, வெறுப்பைப் பரப்பிடும் சேவையை எழுத்தாளர்கள் செய்யலாமா?

— மதுமிதா.

இக்கேள்விக்குத் திண்ணை இணைய இதழில் இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் என்ற கட்டுரையில் விரிவாகப் பதில் சொல்லியிருந்தேன். இலக்கியப் படைப்பு கேளிக்கை அல்ல. அது தான் சார்ந்துள்ள சமூகத்தை உலுக்க, உடைக்க, மாற்ற விரும்புகிறது. ஆகவே அது வாசகர்களுடனும் பிற ஆக்கங்களுடனும் அறிவுச் சூழலுடனும் மோதுகிறது. இலக்கியப் படைப்பு உருவாக்குவது ஒருவகையான சமனிழப்பையே. அதனால் விவாதங்கள், தாக்குதல்கள் இயல்பாக உருவாகும். அப்படைப்பால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தரப்பும் தன் அனைத்து சக்திகளாலும் அதை எதிர்க்க முயலும். தன்னை அழிக்கக் கூடுமென அஞ்சப்படும் ஒரு சக்தியை எதிர்ப்பதில் நியதிகளையும் எல்லைகளையும் கடைபிடிக்கும் திராணி பொதுவாக எவருக்குமே இருப்பது இல்லை. ஆகவே உலகமெங்குமே முக்கியப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் வசை, அவதூறு, வன்முறை ஆகியவற்றால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. தல்ஸ்தோய் முதல் இக்கணம் வரை இதுவே நடைமுறை உண்மை.

எழுத்தாளன் தன் தரப்பின் உண்மை மீதுகொண்ட நம்பிக்கையால் மௌனமாக இருக்கவேண்டும், அல்லது தர்க்க ரீதியாக விவாதிக்கவேண்டும். இதுவே அவசியமானது. ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களால் அது முடிவது இல்லை. காரணம் சராசரிக்கும் மேலான உணர்ச்சிகர மன அமைப்பு கொண்டவர்கள் எழுத்தாளர்கள். மிகைப்படுத்திக் கொள்வதும், நிலை தடுமாறுவதும் எல்லை மீறுவதும் பின் அதற்காக வருந்துவதும் அவர்கள் இயல்பு. ஆகவே இப்படி நிகழ்ந்தபடியே இருக்கிறது, உலகமெங்கும். அதைத் தவிர்க்க முயல்வதுதான் நல்லது. பரவலாகக் கவனிப்பும் அங்கீகாரமும் பெறும்போது எழுத்தாளர்களுக்கு சற்று சுயக்கட்டுப்பாடு வருவது பொதுவாகக் காணப்படுகிறது. ஆனாலும் இந்தக் கட்டுப்பாடின்மையை எழுத்தாளர்களின் ஆளுமையின் ஒருபகுதியாகவே காணவேண்டும்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 51, 52
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 56