மோடி,அரசியல்,கருத்தியல்

modi

மோடி அரசு, என் நிலைபாடு
பணமதிப்பு நீக்கம், வரி, மோதி

அன்புள்ள ஜெ

நீங்கள் சொல்லிவிட்டதனால் உங்கள் அரசியல் நிலைபாடு குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை. அதைப்பற்றிய விவாதத்துக்கே வரவில்லை. நான் சொல்ல விரும்புவது முழுக்க வேறொன்று. என்னுடைய உண்மையான சந்தேகம். உங்கள் அரசியல் எண்ணம் பற்றி நீங்கள் எழுதியிருந்தவற்றைப்பற்றி என் நண்பர்களும் முகநூலில் உள்ள ‘பிரபலங்களும்’ எப்படி எதிர்வினையாற்றியிருந்தார்கள் என்பதைக் கண்டேன். இங்கே எவருக்கும் அரசியல் சார்ந்த நிலைப்பாடு ஏதுமில்லை. கண்மூடித்தனமான தனிநபர்க் காழ்ப்புகளும் தனிநபர் வழிபாடும் மட்டும்தான். அதற்கு அவர்களின் பொறாமையோ தாழ்வுணர்ச்சியோதான் காரணம். அதோடு சாதிவெறி, மதவெறி. அதையே அரசியல்நிலைபாடுகளாக பொய்யான தார்மீக ஆவேசத்துடன் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

முன்பு உங்கள் ஆதரவை மொழிபெயர்த்துக் கொண்டுசென்று கொண்டாடியவர்கள் நீங்கள் சுயலாபத்துக்காக இப்போது மாறிவிட்டீர்கள் என்று வசைபாடினார்கள். மற்ற தரப்பினர் எதையோ எதிர்பார்த்து திடீரென்று நீங்கள் சுயலாபத்துக்காக தந்திரமாக பல்டி அடிக்கிறீர்கள் என்று எழுதினார். எனக்குத்தெரிந்த ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது ‘ஜெமோ வகையறாக்களின் மூஞ்சியில் கரி’ என்று எழுதினார்கள். நான் பத்தாண்டுகளாக இந்த தீர்ப்புக்காக நீங்கள் தொடர்ந்து வாதாடி எழுதிவந்ததைச் சொல்லி இணைப்புகளை 1. ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும், 2. ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன், 3. ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017 அனுப்பியிருந்தேன். அவற்றை வாசிக்காமல் ஒரு பத்தியை எடுத்து கேனத்தனமாக அர்த்தம் அளித்து தொடர்ந்து திட்டினார். ‘உனக்கு வெறுப்புதான் முக்கியம், இந்தத்தீர்ப்பை அதற்கு பயன்படுத்திக்கொள்கிறாய், என்ன சொன்னாலும் நீ உன் வெறுப்பைத்தான் கொட்டுவாய். உன் தாழ்வுமனப்பான்மைதான் பிரச்சினை. ஜெமோ ஒத்துக்கொள்ளும்படி ஒரு நாலுவரி எழுத முடிந்தால் நீ விடுபடுவாய்’ என்று பதில் எழுதினேன்.

அதேபோல உங்கள்  ‘கிறிஸ்துவின்பெயரால்’ என்ற நூலைப்பற்றி பிளக்கர் ஒருவர் எழுதியிருந்தார்.  உங்கள் நூல் கிறித்தவத் திருச்சபையின் உள்ளூர் பிரச்சாரகர்கள் தாமஸ் இந்தியா வந்ததைப்பற்றி உருவாக்கும் பொய்களை சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம் கிறிஸ்துவின்மீது மிகப்பெரிய ஈடுபாட்டுடன், ஏசுமேல் ஆழ்மான பக்தியுடன் எழுதப்பட்ட பல கட்டுரைகளையும் கொண்டுள்ளது. அவ்வளவு கவித்துவமாக கிறிஸ்து பற்றி தமிழில் எழுத்தாளர்கள் எவரும் எழுதியதில்லை. இந்த பிளாக்கர் அந்நூல் கிறிஸ்தவத்தை கடுமையாகத் தாக்கும் நூல் என எழுதுகிறார். அதாவது ஒருமுறை மேலோட்டமாக புரட்டிவிட்டு  கருத்துச்சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். எவரும் சுட்டிக்காட்டுவதில்லை. சுட்டிக்காட்டினால் இன்னும் வசைதான் வரும்

மோடி கட்டுரையிலும் இப்படித்தான். நீங்கள் பல்டி அடித்ததாகச் சொன்னவர்களுக்குச் சென்ற ஆண்டே [மிகச்சரியாக ஓராண்டு, செப்டெம்பர் 3 2017]  நீங்கள் எழுதிய கட்டுரையை பணமதிப்பு நீக்கம், வரி, மோதி அனுப்பி சென்ற ஆண்டு சொன்னதைத்தானே இதே கட்டுரையிலும் எழுதியிருக்கிறார், படிப்படியாக இம்முடிவுக்கு அவர் வந்தது தெளிவாகவே தெரிகிறதே என்று கேட்டேன். நீங்கள் ஸ்வச் பார்த் பற்றி எழுதிய கட்டுரைகளையும் குறிப்பிட்டேன். [மாபெரும் குப்பைக்கூடைநாகர்கோயிலும் சுச்சா பாரதமும்]  அந்தக்கட்டுரைகளிலேயே இந்திராகாந்தி அரசுடன் உள்ள ஒப்பீடு உட்பட எல்லாமே சொல்லிவிட்டீர்கள். மோடியின் தனிநபர் பிரச்சாரம், செயலின்மை, அதிகாரிகளின் ஆதிக்கம் எல்லாம் அதிலேயே கடுமையாகச் சொல்லப்பட்டுவிட்டது. தூய்மை பாரதம்? என்ற கட்டுரையில் இந்த அரசின் எல்லா திட்டங்களும் ஏன் காகிதத்திட்டங்களாக எஞ்சுகின்றன என்று சொல்லியிருக்கிறீர்கள். ஓராண்டு முன்பு

அந்த ஏமாற்றம் இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆகியிருக்கிறது. இந்த மனநிலை இன்று சாதாரண மக்களிடம் உள்ளதுதான். கட்சிக்காரர்களுக்கு மனநிலை வேறாக இருக்கலாம். அவர்கள் எப்போதுமே கட்சியின் நிலைபாடுகளைச் சொல்பவர்கள். சாமானியர்களுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் உள்ளது. அந்த உணர்வுகளை மிகச்சரியாக இந்தக்கட்டுரைகள் சொல்கின்றன என்றேன். உடனே மீண்டும் வசை.

இவர்களுக்கு தனிநபர் சார்ந்த வெறுப்புதான் பிரச்சினையே ஒழிய எந்த இஷ்யூவும் அல்ல. அந்த வெறுப்புக்குக் காரணம் இவர்களுக்கு தாங்கள் வெற்று கூச்சல்கள் மட்டும்தான் என்றும் எந்த வகையிலும் பொருட்படுத்தும் எதையும் எழுதுபவர்கள் அல்ல என்றும் தெரியும் என்பதுதான். இவர்களுக்காக எழுதுவது முழுக்க வீண்வேலை.

நீங்கள் அரசியல்செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என எழுதியிருந்தீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சமூக மாற்றத்துக்கான முடிவுகள் அரசாங்கத்தால்தானே எடுக்கப்படமுடியும்? அதில் இலக்கியவாதிக்கு ஈடுபாடில்லை என்றால் அதை எப்படிப்புரிந்துகொள்வது?

ஆர்.மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்,

ஒன்று சமூகவலைத்தளங்கள் ஒருவகையான மாபெரும் மனக்குமுறல்வெளி. பெரும்பாலும் அன்னியநாடுகளில், அல்லது இங்கே முகமிலா தொழிற்சூழல்களில் தனிமையில் உழல்பவர்கள் வெவ்வேறு வேடங்கள் அணிந்து ஆடும் களம். அங்கே போய் அந்தப் பொய்முகங்களுடன் பேசுவதில் பொருளில்லை. இத்தகைய வெறுப்புகள், பற்றுகள் வழியாக அவர்கள் தங்கள் ‘மாற்று ஆளுமை’களைக் கட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அது தேவையாக இருக்கலாம்

அரசியல் கட்சிகளின் தொண்டர்களைப்பொறுத்தவரை அவர்களுக்கு  ‘மக்கள்’ எப்போதுமே பொருட்டு அல்ல. தாங்கள் கொண்டுள்ள அரசியல் நம்பிக்கையை அப்படியே அச்சுஅசலாக கொண்டிராத அத்தனைபேரும், அதாவது தங்கள் கட்சித் தொண்டர்கள் அல்லாத அனைவருமே, வீணர்கள் அல்லது மடையர்கள்தான். அவர்கள் ஒன்று அடிமடையர்கள் அல்லது தன்னலக்காரர்கள். அவர்களிடம் பிறர் விவாதிக்கவே முடியாது. இன்னொரு கட்சித்தொண்டர்கூட விவாதிக்க இயலாது. மக்களின் கருத்து என எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

நான் எழுதுவது இவர்களுக்காக அல்ல. என்னைப்போல வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியாக அரசியலைக்கொண்டுள்ள, மெல்லிய எதிர்பார்ப்புகளாலும் ஏமாற்றங்களாலும் கொண்டுசெல்லப்படுகிற மக்களை நோக்கியே. அவர்களையே வாசகர்கள் என்கிறேன்.

அரசியல் ஈடுபாடு குறித்து. ஜே.கிருஷ்ணமூர்த்தி சமூக, அரசியல் மாற்றம் எதுவும் கருத்துக்களாலோ, அதிகாரத்தாலோ வந்துவிடாது என்று சொல்கிறார். ஆன்மிகமான மாற்றமே உண்மையான மாற்றம் என்றும், அதுவே உண்மையான புரட்சி என்றும் சொல்கிறார். அது அவருடைய வழிமுறை. ஆகவேதான் அவர் ஆன்மிகத்தளத்தில் செயல்பட்டார். அதேபோல இன்னொருவர் அடிப்படையான கிராமியப்பொருளியலைக் கட்டி எழுப்புவதன் வழியாக மட்டுமே மெய்யான பொருளியல் மாற்றம் உருவாகும் என நம்பலாம். அவர் அந்தத் தளத்தில் செயல்படலாம்.  அவ்வாறு ஒருவரின் நம்பிக்கைக்கு ஏற்ப அவருடைய செயல்தளம் அமைகிறது.

நான் இளமையிலேயே என் செயல்தளம் இலக்கியம் என்று கண்டுகொண்டவன். இது முழுக்கமுழுக்க கருத்துத்தளச் செயல்பாடு. வாழ்க்கையை இயக்கும் உணர்வுநிலைகளையும், கருத்தியல்களையும், நம்பிக்கைகளையும், விழுமியங்களையும், ஆழ்படிமங்களையும் அறிவதும் அவற்றை மாற்றி உருவாக்கிக் கொள்வதும்தான் இலக்கியத்தின் வழி. அதனூடாக உருவாகும் சமூக – அரசியல் மாற்றங்களையே அது நம்புகிறது. அதுவே உண்மையான, நிலையான மாற்றம் என நினைக்கிறது. ஆகவேதான் அந்தத்தளத்தில் செயல்படுகிறேன். அரசாங்கமாற்றம்தான் சமூக – பொருளியல் மாற்றத்தை உருவாக்கும் என எண்ணியிருந்தால் நான் அரசியல்களத்தில் செயல்பட்டிருப்பேன்.

சமூகத்தைக் கட்டி நிலைநிறுத்தியிருப்பவை கருத்துக்களும் உணர்வுகளும் விழுமியங்களுமே. சமூக அமைப்புகளை மட்டும் அல்ல பொருளியலையுமே அவைதான் முடிவுசெய்கின்றன. அவற்றில் மாற்றத்தை உருவாக்கவே தத்துவவாதிகளும் இலக்கியவாதிகளும் முயல்கிறார்கள். அந்த மாற்றம் சமூகத்தின் சிந்தனை மையத்தில் உருவாகிறது. ஒரு புதிய கருத்து கடுமையான விவாதமாக நிகழ்ந்து பொது ஏற்பு ஒன்றை அடைகிறது. அதன்பின்னரே சமூகத்தின் பெரும்பகுதி அதை ஏற்கத் தொடங்குகிறது. அந்த ஏற்பு வழியாக அந்தக் கருத்து ஒரு சமூக விசையாக மாறுகிறது. அதன்பின்னரே அது ஓர் அரசியல்கோரிக்கையாகிறது. அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்து வென்றெடுக்கிறது. அரசியல் செயல்பாடும் அரசின் நடவடிக்கையும் மிகமிகக் கடைசியாக நிகழ்பவை மட்டுமே. அது தொடங்குமிடத்தில் செயல்படுபவன் இலக்கியவாதி, ஆகவே அவன் பணியே முதன்மையானது.

உதாரணமாக, தமிழகத்தில் பெண்கல்வி குறித்த கருத்தாக்கம் இங்கே தத்துவவாதிகளாலும் இலக்கியவாதிகளாலும் முன்வைக்கப்பட்டது. புனைவுகளினூடாக சமூக ஆழ்மனதில் நிலைநிறுத்தப்பட்டது. நான் முன்னரே எழுதியதுபோல இந்திய மொழிகள் அனைத்திலுமே முதற்கட்ட நாவல்கள் பெரும்பாலானவை பெண்கல்வி தொடர்பானவை [ தமிழில் பி.ஆர்.ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்] அந்த எண்ணம் சமூகத்தின் ஏற்பை அடைந்தபின்னரே ஒரு சமூகக்கோரிக்கையாகியது. அதன்பின்னரே அது அரசியலுக்கு வந்தது. அரசாங்க ஆணை என்பது மிகக் கடைசியாக உருவாவது. அதை மட்டுமே பார்ப்பவர்கள் ஆழ்ந்து நோக்கும் திறனற்றவர்கள், நாளிதழ்களால் வடிவமைக்கப்படுபவர்கள்.

இலக்கியம் மிக விரிந்த தளத்தில் இந்த கருத்தியல் மாற்றத்தைச் செய்கிறது. நேரடியாக கருத்தியலை முன்வைப்பது அதன் வழி அல்ல. வரலாற்றை மீட்டெழுதுவது, வாழ்க்கையைத் தொகுத்து எழுதுவது, விழுமியங்களை விவாதிப்பது , ஆழ்படிமங்களின் அர்த்தங்களை மாற்றியமைப்பது என அதன் வழிகள் பல. அது நேரடியாக ஆழ்மனதுடன் பேசும் கலை

இவ்வாறு ஒரு சமூகத்தில் மாற்றத்துக்காகச் செயல்படும் அறிவாளர்களை இரண்டாகப்பிரிக்கிறார் அண்டோனியோ கிராம்ஷி.  அரசியல் மாற்றத்தை இலக்காகக் கொண்டு செயல்படுபவர்கள் அரசியல் அறிவாளர்.[political intellectual] சமூகத்தின் கருத்தியல் மாற்றத்தை இலக்காகக் கொண்டு செயல்படுபவர்கள் உயிர்நிலை அறிவாளர். [organic intellectual] இவற்றைப்பற்றி விரிவாக முன்னரும் பேசியிருக்கிறேன். கிராம்ஷி இப்பிரிவினையை மார்க்ஸியப் புரட்சி செயல்பாடுகள் சார்ந்து செய்கிறார். நான் அதை மேலும் பொதுவாக, சமூகத்தின் பரிணாமத்தில் அறிவாளர்களின் பங்கென்ன என்ற கோணத்தில் கையாள்கிறேன். இலக்கியவாதிகள் உயிர்நிலை அறிவாளர்கள். புதுமைப்பித்தன் ஏன் விடுதலைப்போரில் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கான மறுமொழி இதுவே.[https://www.marxists.org/history/erol/periodicals/theoretical-review/1982301.htm ]

இலக்கியவாதிகளில் அரசியலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் உண்டு, பாரதிபோல. ஆனால் அச்செயல்பாடு இலக்கியத்துக்கு வெளியே ஒரு தனிச்செயல்பாடாகவே இருக்கிறது. இலக்கியம் தன்னளவில் அரசியல்செயல்பாடாக ஆகமுடியாது என்பது என் எண்ணம். ஏனென்றால் இலக்கியம் ஆழ்மனதுடன் பேச முயல்வது, ஆகவே நுட்பமானது, அதனாலேயே பெருவாரியானவர்களிடம் பேச முடியாதது. அரசியலில் மிகையாக ஈடுபடும் இலக்கியவாதி தன் எழுத்தையும் அதற்கென ஆள்வான் என்றால் வெற்றுப்பிரச்சாரகனாகவே முடிவான். இது என் உறுதியான நிலைபாடு

அனைத்தையும் விட இன்னொன்று உண்டு, இலக்கியவாதி மக்களில் ஒருவனாக மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும். அவனிடம் வெளிப்படும் தத்துவமும் தரிசனமும் அந்த மக்கள்வாழ்வு சார்ந்த அடித்தளம் மீது நிகழவேண்டியவை. அதை முன்முடிவுகள் இன்றி இயல்பாக உளம் ஒன்றி அவன் நோக்கவேண்டும். அதை நோக்கி அவன் நேரடியாக பேசவும் அதை மாற்றவும் முயன்றான் என்றால் அதை அறிவதற்கான உணர்கொம்புகளை இழப்பான். அவன் உறுதியான நிலைபாடு கொண்ட அரசியல்வாதி ஆகிவிட்டான் என்றால் தன்னை எல்லைகட்டிக்கொள்கிறான். அவன் அறிபவை எல்லைக்குட்பட்டவை. அறிந்தவற்றை தன் நிலைபாட்டுக்கு ஏற்ப அவன் திரிக்கவும் தொடங்கிவிடுவான்.

இலக்கியவாதி மக்களில் ஒருவனாக ஆகி, அவர்களின் கனவுகளையும் தடுமாற்றங்களையும் தானும் கொள்வதன் வழியாகவே அவர்களை அறிகிறான், அவர்களை எழுதுகிறான். அதேசமயம் அவனுடைய ஆழ்மனம் அவர்களுடன் இல்லை. அது மேலும் கனவுகளும் இலட்சியங்களும் கொண்டுள்ளது. எழுதுகையில் அவன் அவர்களைவிட மேலெழுகிறான். அவர்களில் இருந்து அவர்களின்பொருட்டு காலத்தில் முன்னெழுபவனே இலக்கியவாதி. ஆகவே எந்நிலையிலும் இலக்கியத்திற்கு ஒரு வகையான தன்னிச்சையான ஒழுக்கு தேவை. தன் உள்ளத்திற்கு தோன்றியதை அவ்வப்போது அப்படியப்படியே வெளிப்படுத்துபவனே மெய்யான இலக்கியம் நோக்கிச் செல்லமுடியும்.

ஆகவேதான் அவன் அதிகார அரசியலை விட்டு விலகி நிற்கவேண்டும் என்றும் எனக்குத்தோன்றுவதை இழப்புகள் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வெளிப்படுத்தவேண்டும் என்றும் சொல்கிறேன். சென்றகாலங்களில் ஒவ்வொருமுறையும் எனக்கு நானே அறிவுறுத்திக்கொண்டு இம்முடிவை எடுத்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான்.

ஜெ

***
ஒருபாலுறவு, தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்
ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்
ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017
முந்தைய கட்டுரைகம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-1