பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்

ராஜ்-கௌதமன்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

சங்க இலக்கிய நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகத்துறையைச் சார்ந்தவையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளின் ஒழுக்கங்கள் அந்நூல்களில் பேசப்படுகின்றன. மேலும் அந்தந்த நிலப்பகுதிகளுக்குரிய கருப்பொருள் மற்றும் உரிப்பொருள்களும் அகத்துறை நூல்களில்,விரவி வருவதைக் காணலாம். கூடுதல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்குதல் ஆகியன அந்நூல்களில் ஒழுக்கங்களாக பேணப்படுகின்றன.

அகத்துறை நூல்களை ஆய்வு செய்த பெருமக்களெல்லாம் தலைவன், தலைவி, தாய், செவிலித்தாய், தோழி, பாங்கன் ஆகியோரின் மன உணர்வுகளையும், செயல்களையும் அவர்கள்தம் கூற்று வழி வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் ராஜ்கௌதமன் சங்க இலக்கியத்தில் காணப்படும் பாலியல் செய்திகளைத் தம் “சங்க இலக்கியத்தில் பாலியல் குறித்த அறக்கவலை” என்னும் கட்டுரையில் ஆய்வு செய்திருக்கிறார். தொடக்கத்திலேயே அவர், “கூடல், இருத்தல், இரங்கல், பிரிதல், ஊடல் என்ற பாலியல் உறவுகளின் உணர்வுகள் எல்லாம் பெண்ணைச் சார்ந்தவையாகக் கூறப்பட்டுள்ளன. பெண்ணின் நோக்கிலிருந்து பாலியல் விளக்கப்படுவதாகத் தெரிகிறது” என்று எழுதுகிறார்.

தலைவனோ, தாயரோ, தோழியோ பாங்கனோ யார் சொன்னாலும் எல்லாமே அவை தலைவியின் உணர்வுகளாக அவளைச் சுற்றியே வருவது உண்மைதான். அவன் வந்து சென்றதை எண்ணி ஏங்குவது, பிரிந்து ஆற்றி இருப்பது, அவனது பிரிவிற்கு இரங்குவது, அதனால் அவள் உடல் பசலை கண்டு மெலிவது, அதனால் அவளை முன்னிட்டு வெறியாட்டு நிகழ்த்துவது என்றெல்லாம் அவளை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம்.

மேலும், “பாலியல் நடத்தையை ஒழுக்கவியல் பிரச்சனைக்குரியதாக ஆக்கியது சங்க காலத்தில் நிகழவில்லை, சங்க கால இலக்கியத்திற்கு விதிகளை வகுக்க முயன்ற தொல்காப்பிய இலக்கண மரபுதான் பிரச்சினைக்குரியதாக்கிற்று” என்று ராஜ்கௌதமன் கூறுவதை ஏன் திருமணம் அவசியமாயிற்று என்னும் கேள்வி எழுப்பினால்தான் புரிந்து கொள்ள முடியும். எப்பொழுது பாலியல் ஒழுக்க நெறிகளில் பொய்யும் வழுவும் தோன்றத் தொடங்கியதோ அப்போதுதான் திருமணம் என்பது முக்கியமாயிற்று.

ராஜ்கௌதமன் பாலியல் உறவு மற்றும் அதன் அளவுக்குறைவு ஆகியவற்றையும் ஆய்வு செய்து எழுதி உள்ளார். ஏனெனில் பாலியல் உறவு குறைகின்ற அல்லது இல்லாமல் போகின்ற காலத்தில்தான் உடல் மெலிவு, நோய், தூக்கமின்மை, பசலை போன்றவை ஏற்படுவதைப் பல பாடல்களில் நாம் பார்க்கிறோம். அதே நேரத்தில் பாலியல் உறவு அளவுக்கு அதிகமானால் அதனால் ஏற்படும் விளைவுகளை இன்றைக்கு நாம் சந்திக்கிறோம். சங்க காலத்திலேயே இது பேசப்பட்டுள்ளது என்பது ராஜ் கௌதமன் கருத்தாகும்.
”….நாளும் என்
நெஞ்சுபிணிக் கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே [குறு.280]
இப்பாடலில் தலைவன் தன் தலைவியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு ஈடாகத் தனது அரைநாள் வாழ்க்கையே வேண்டாம் என நினைக்கிறான். ராஜ்கௌதமன், இப்பாடலை எடுத்துக் காட்டி, “புணர்ச்சி ஆணின் வாழ்நாளைக் குறைக்கும் என்று இங்கே நேரடியாகக் கூறப்படாவிடினும், புணர்ச்சி போகத்தால் ஆணின் வாழ்நாள் குறையும் என்ற எண்ணம் அன்று வழக்கில் இருந்தமை மறைமுகமாக வெளிப்படுகிறது” என்று எழுதுகிறார். இக்கருத்து இன்னும் ஆய்வுக்குரியது என்றாலும் அந்தக்காலத்திலும் புணர்ச்சியின் அளவு குறித்த சிந்தனை இருந்தது என்பதைச் சங்க நூல்களின் வழியில் அவர் காட்டுவதாக நாம் புரிந்து கொள்ள் இயலும்.
”அறிவுப் பொதுமையாக்கத்தில் தொல்காப்பியக் கொடை” என்னும் கட்டுரையில் களப்பிரர் காலம் பற்றிய குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. களப்பிரர் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டனர் என்று கூறலாம். பலர் அக்காலத்தை “இருண்ட காலம்” என்கின்றனர். ஆனால் இது “தற்காலச் சைவ வேளாளத் தமிழர்களால் வருணிக்கப்பட்டது” என்று ராஜ்கௌதமன் எழுதுகிறார். இச்சொல்லாடலுக்கு அவர் எந்தச் சான்றும் கூறவில்லையாயினும் அவர் களப்பிரர் காலத்தில் எழுந்துள்ள நூல்களைக் காட்டியே களப்பிரர் காலமானது இருண்டகாலமன்று என நிறுவுகிறார்.
அக்காலத்தில்தான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் காஞ்சி, உறையூர், மதுரை போன்றவை சமண மற்றும் பௌத்த மதங்களின் கல்விக்கூடங்களாக விளங்கின. அவை படைப்பு மையங்களாகவும் விளங்கின. களப்பிரர் காலத்தில்தான் பௌத்தம் சீர் பெற்று விளங்கியது. பிராகிருதம், பாலிமொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பாட்டாலும் தமிழிலும் அப்போது புதிய கருத்தாடல்கள் தோன்றியதை மறுக்க இயலாது. மேலும் ராஜ்கௌதமன், “பிராகிருத, பாலி, தமிழ்மொழி இலக்கியங்கள் அதிகமாகப் படைக்கப்பட்ட காலம் களப்பிரர் காலமே” என்றும் எழுதுகிறார். மணிமேகலையில் சாத்தனார் படைத்துள்ள அறவண அடிகள் என்னும் பாத்திரம் தருமபாலர் என்னும் ஒரு மஹாயானியைக் குறிக்கிறது என்று சோ. நா. கந்தசாமி எழுதியுள்ள, ‘பௌத்தம்’ என்னும் நூலைச் சான்றாகக் காட்டி கௌதமன் கூறி உள்ளது கவனிக்கத்தக்கது.
”பெண்களின் நான்கு வாழ்க்கை நிலைகளும் அவற்றின் சடங்குகளும்” என்னும் கட்டுரை முக்கியமான ஒன்றாகும்.
பெண்களின் வாழ்வில் அவர்கள் அடையும் பருவங்களைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என வகுத்துள்ளனர். ஆனால், ராஜ் கௌதமன், பெண்களுக்குச் செய்யும் பலவகை சடங்குகளின் அடிப்படையில் “பூப்பு, வதுவை, கருவுயிர்த்தல், கைம்மை என வரையறை செய்கிறார். சடங்குகள் மூட நம்பிக்கை; அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் மாறானவை என்பதை ராஜ்கௌதமன் ஏற்கவில்லை. எனவேதான் அவர் சடங்குகள் அடிப்படையில் பெண்ணை வரையறை செய்துள்ளார் எனக் கருதலாம்.
பெண் முதல் பூப்பு அடைந்தால் அவள் நன்கு வெளுத்த மடித்த துகில் போல, அகலின் நறும்புகை கமழும் கபில நிற வீட்டிற்குள் மனையில் வைக்கப்பட்டாள் என்பதை,
”துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில்ஆர் நறும்புகை சென்ற டங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல்…. [புறநானூறு 367:6-12]
என்னும் பாடலை எடுத்துக் காட்டி ராஜ்கௌதமன் சங்க காலத்திலும் பூப்பட்டைந்தால் செய்யும் ஒரு சடங்கு நடைபெற்றதை விளக்குகிறார்.

மணமாகும் வரை சங்ககாலப் பெண்கள் காலில் சிலம்பு அணிந்திருந்தார்கள் என்றும் மணமான பின் அச்சிலம்பு நீக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது. அதுவும் திருமணம் நடைபெறுவதற்கு முன் பெண் வீட்டில் ’சிலம்பு கழி அயர்தல்’ என்னும் சடங்கின் மூலம் சிலம்பு கழற்றப்பட்டது என்றும் நமக்குத் தெரிய வருகிறது. ஆனால் காப்பிய காலத்தில் மணமான பின்பும் பெண்கள் கால்களில் சிலம்பு அணிந்ததைச் சிலப்பதிகாரம் கண்ணகி மூலம் நமக்குக் காட்டுகிறது.
தற்பொழுது பயன்படுத்தப்படுவதைப் போலவே திருமணம், மற்றும் இறப்பு ஆகியவற்றில் சங்ககாலத்திலும் புதிய மண்பாண்டங்களே பயன்படுத்தப்பட்டன. “அது அவ்வைபவத்தின் விசேடம், தனித்தன்மை, தூய்மை முதலிய பண்புகளைக் குறிப்பதற்காக ஆகலாம்” என்ற ராஜ்கௌதமன் கூற்று கவனிக்கத்தக்கது

வளவ துரையன் கடலூர்

ராஜ்கௌதமன் எடுத்துக் காட்டும் குறுந்தொகை 287-ஆம்பாடல் ஒரு வியப்பான செய்தியைக் கூறுகிறது.
”முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகலிர்………..”
என்று வரும் அந்தப்பாடல் வரிகள் கருவுற்ற மகளிர்க்கு புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும் என்று காட்டுகின்றன. ஆனால் கருக்கொண்ட பெண் பன்னிரண்டு மாதங்கள் தன் வயிற்றில் கருவைச் சுமக்கிறாள் என்பதுதான் வியப்பாக உள்ளது. இதைக் காட்டும் ராஜ்கௌதமன் “ஒரு மாதத்திற்கு எத்தனை நாள்கள் என்று அன்று கணக்கீடு செய்தார்கள் என்பதைப் பொருத்ததாக இப்புதிரின் தீர்வு அமையும்” என்று எழுதுவது ஆய்வுக்குரியதாக உள்ளது.
’புனிறு’ என்ற சொல் கூறித்து ராஜ்கௌதமன் செய்துள்ள ஆய்வு குறிப்பிடத்தக்கது. குழந்தை பெற்ற பெண்ணோடு தொடர்புபடுத்தப்பட்ட சொல்லாக இதைச் சங்க நூல்கள் காட்டுகின்றன. ’புனிற்று ஆ’ என்று கன்றை ஈன்ற பசு குறிக்கப்படுகிறது. ‘புனிறு’ என்றால் தீட்டு அசுத்தம் என்ற பொருள் கூறப்படுவதற்கான நேரடிச்சான்று இல்லாவிடினும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் [99] புலால் நாற்றம் என்ற பொருள் உள்ளது” என்று அவர் காட்டுகிறார்.
எனவே புனிறு என்பதைப் பிரசவித்த பெண்ணின் இழிவான தீட்டு என்று பொருள் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குழந்தை பெற்ற பெண் குறிப்பிட்ட காலம் வரைத் தனியே வைக்கப்படுவாள். பின் அவளது ‘புலவுப் புனிறு’ காலம் தீர்ந்த பிறகு அவள் உறவினரோடு சென்று நீர்நிலையில் நீராடி வருவாள் என்று ஒரு சடங்கும் இருந்தது தெரிகிறது. இதற்குச் சான்றாக மதுரைக்காஞ்சியில் [600-603] வரும் கீழ்க்கண்ட பாடல் அடிகளை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
’கணவர் உவப்ப்புதல்வர்ப் பயந்து
பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற
புலவுப் புனிறு தீர்ந்து
பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீர் அயர”
சங்கப் பாடல்களில் கைம்மை பற்றி ஆய்வு செய்யும் ராஜ்கௌதமன் பல்வேறு பாடல்களை எடுத்துக் காட்டி கணவனை இழந்த பெண்கள் வாழும் முறைகளைக் கூறுகிறார். அப்பெண்களில் பெரும்பாலோர் போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களின் மனைவிகளே ஆவர். ஆனால்
“ஆள்இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண்பனுவல் போல….” [நற்றி.353]
என்ற ஒரே பாடலில் மட்டும் விதவைப் பெண்கள் பஞ்சில் நூல் நூற்ற பெண்டிராகக் கூறப்பட்டுள்ளனர்” என்று அவர் காட்டுகிறார்.
மேலும் “வைதீகத்தாக்கத்தினால் ஏற்பட்டது ‘உடன்கட்டை’ வழக்கம்” என்னும் ராஜ்கௌதமன், சங்க காலத்தில் ஆய் அண்டிரன் மனைவி உடன் கட்டை ஏறியது பற்றியும், பூதப் பாண்டியன் மனைவி உடன்கட்டை ஏறியது பற்றியும் உள்ள இரு பாடல்கள்தாம் நமக்குக் கிடைத்த சான்றுகள் எனக் கூறுகிறார்.
”சங்க காலத் தமிழர் நாகரிகத்தில் உணவு” என்னும் கட்டுரையில் மகாபாரத்தின் பீமன் பற்றிய ஒரு குறிப்பு கவனிக்கத்தக்கது. சிறுபாணாற்றுப்படையில் [240-245] ஓய்மான் நாட்டு அரசன் தன்னைத் தேடி வந்து பாடும் பாணர்களுக்கு,
“பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”
விடுவான் என எழுதப்பட்டுள்ளது. இப்பாடலில் வரும் ‘பனிவரை மார்பன்’ என்பது மகாபாரதத்தில் வரும் பீமன் என ராஜ்கௌதமன் காட்டுகிறார்
”புறநானூற்றில் இனக்குழுச் சமூக எச்சங்கள்” என்னும் கட்டுரையில் வரும், “புறநானூறு சைவ-வேளாளத் தமிழர்களின் பொற்காலத்தைப் பற்றிய சரித்திர நூலாகவே அங்கீகாரம் பெற்றது” என்ற அவர் கூற்றுக்கு எந்தச் சான்றையும் ராஜ் கௌதமன் கூறாதது வியப்பளிக்கிறது.
இந்நூலில் உள்ள மற்ற கட்டுரைகளும் சங்க நூல்கள் பற்றிய நுண்மையான ஆய்வை வெளிப்படுத்துகின்றன. விரிவஞ்சி அவை இங்கு விளக்கப்படவில்லை.
ராஜ் கௌதமனே முன்னுரையில் கூறி இருப்பது போல சங்க கால அறிவு மரபிலும், பின் வந்த தொல்காப்பிய அறிவு மரபிலும் பேசப்பட்டவை பற்றித் தெளிவான ஒரு பார்வையை இந்நூல் அளிக்கிறது என்று துணிந்து கூறலாம்.
=================================================================
[பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்—ராஜ் கௌதமன்—வெளியீடு: தமிழினி, சென்னை 600 051; 93442 90920;—பக்: 288—-விலை ரூ;250]
==================================================================================

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைஒருபாலுறவு, தீர்ப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅது யார்? கடிதங்கள்