சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்
தன்மீட்சி
இயற்கைக் கடலைமிட்டாய்
அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,
அலெக்ஸ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு நீங்கள் மதுரை வருவதாய் அறிவித்த நாள் எங்களுக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது.ஏனெனில் சென்ற வருடம் அலெக்ஸ் அவர்களின் மரணத்தை ஒட்டியே நீங்கள் மதுரை வந்து இருந்தீர்கள்.உங்களை மதுரை நோக்கி வர வைக்க அலெக்ஸ் தவிர்த்து வேறு ஒரு வழி இல்லை என மனதிற்கு படுகிறது.
இந்த ஒரு வருட இடைவெளியில் கடந்து வந்த பாதை மிகுந்த நம்பிக்கையானது. சென்ற வருடம் செப்டம்பர் 4,5,6 இந்த மூன்று நாட்களும் உங்களுடன் நெஞ்சார இருந்த நாட்கள்.முதல் இரண்டு நாட்கள் சமணர் தங்களுக்கு சென்றது கல்வி,வரலாறு, குறித்த உங்கள் எண்ணங்களை உரையாடலினை அன்று பதிவு செய்து உள்வாங்கிகொண்டோம், செப்டம்பர் 6 நிச்சயம் மறக்க முடியாத நாள் எங்கள் இந்த வாழ்க்கை பயணத்தில், உங்கள் கையினை இறுக பிடித்து கொண்டோம் அந்த தென்பரங்குன்ற மலையடிவாரத்தில் அந்த உரையாடலின் நீட்சியாய்..
இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களை சந்திக்கவும்,கடிதம் எழுதவும் இல்லை.நண்பர்கள் எங்கள் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குக்கூ உடனான குழந்தைகள் பயணத்திலும் நிறைய நல்ல மாற்றங்கள்,முன் னேற்றங்கள்,புதிய சில உறவுகள் மேலும் சில இழப்புகள் என செல்கிறது
செப்டம்பர் 5 அன்று காலை நீங்கள் வந்து சேர்ந்து விடுவீர்கள் என்ற தகவலை முந்தின நாள் இரவே நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு,காலை முதலே சந்திக்க பிரயத்தனப்பட்டோம். ஆனால் அந்த திருப்பரங்குன்றம் அருகே பசுமலை சிஸ்ஐ சர்ச் வளாகத்தில் தான் உங்களை சந்திக்க வாய்த்தது.5மணிக்கே வந்து விட்டோம் நினைவேந்தல் அரங்கு அப்பொழுது தான் தயார் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் .மனதிற்குள் அத்தனை சஞ்சலம் எதற்காக இப்படி வந்து காத்திருக்கிறோம் என்று. அலெக்ஸ் அவர்களின் குடும்பத்தினர் வந்து கேட்டு விட்டு சென்றார்கள்.சென்ற வருடம் இதே நாளில் ஜெயமோகன் அவர்களுடன் இருந்தோம் இன்றும் அவரின் இணையம் பார்த்தே வந்தோம் என்று கூறினோம்.அவர்களின் முகத்தில் அலெக்ஸ் அவர்கள் குறித்து ஏதேனும் நல்ல நினைவுகளை பகிர்வோம் என அவர்கள் நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. காலை முதல் இரண்டு முறை வாய்ப்பு கேட்டு சந்திக்க தவறவிட்டோம், என்ன நினைத்து கொள்வாரோ? ஏன் இப்படி வேலையினை விட்டு வந்து காத்துகிடக்க வேண்டும் என அந்த ஒன்றை மணி நேரமும் குழம்பிக்கொண்டே இருந்தோம் .நண்பர்கள் நான்கு ஐந்து பேர் வந்துவிட்டோம்
சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து நீங்கள் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தீர்கள்,ஒரு 10நிமிடம் உங்கள் அருகிலேயே இனம் கண்டு கொள்வீர்கள் என காத்திருந்தோம்.தயக்கத்தின் உச்ச கட்டம் குற்ற உணர்வு வேறு .நண்பர்கள் ஒரு பக்கம்,நிகழ்வு துவங்கி விட்டது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்பொழுது இது போன்ற கிறிஸ்துவ அரங்குக்குள் வந்து இருக்கிறேன்.அந்த பாடல்களில் மனம் நின்றுவிட்டது.சிவராஜ் அண்ணே சொல்லுவார் ‘யாரவது ஒருத்தர் கிடைப்பாங்க, சும்மா நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்கடா’ என்று.அந்த அதிசயம் நடக்கும்னு புத்தி நம்பவே இல்லை, மனசோ ரெண்டும் கெட்டானா நம்பி கிடந்தது.
கலைடாஸ்கோப் பிரபாகர் அய்யா,பாரி அண்ணன் இப்பிடி தெரிஞ்ச முகம் இரண்டு தட்டுப்பட்டுச்சு.அலெக்ஸ் அவர்களோட குடும்பத்தை பத்தி நீங்க சொன்னது ஏதோ மனசுக்குள்ள வந்து வந்து போச்சு.அலெக்ஸ் அவங்களோட அம்மா பேச ஆரம்பிச்சு கடைசியா அவங்க மனைவி பேசுன அந்த இரண்டரை மணி நேரத்துக்கு மேலான கூட்டம் எங்களை வேற ஒரு கட்டத்துக்கு கூட்டிட்டு போச்சு.
சமூகம் சார்ந்து வாழ்ந்த ஒரு மனுஷன் அகாலத்துல இறந்து போன ஒருத்தர் பத்துன நினைவுகள்.தனிநபரா,குடும்பமா,மதம் சார்ந்தவரா,மாற்று அரசியல் பேசுரவரா,களப் போராளியா,பதிப்பகம் நடத்துனவரு, நேரம் தவராதாவரு,51 வயசுல காழ்ப்பு இல்லாம சிரிச்ச முகத்தோட எல்லாத்தையும் அனுகுணவரு,தெளிவானவரு,ரொம்ப கறாரான ஆளு,நல்ல தகப்பன். உண்மையிலே அந்த கடைசி பத்து நிமிஷம் அலெக்ஸ் அவங்களோட மனைவி ஒவ்வொருத்தருக்கா நன்றி சொன்ன விதம் இருக்கே.சண்டை போட்டு என்னோட மனைவியை இந்த நிகழ்வுக்கு கூட்டிட்டு வந்து இருந்தேன்,எதோ ஒரு வகையில அவ நிறைவாயிருப்பா.
நிகழ்ச்சி முடிஞ்சு மறுபடியும் உங்களை பார்க்க தயக்கத்தோட காத்திருந்தோம்.என்ன ஒரு நிம்மதினா எங்களை மாதிரி இணையம் பார்த்துட்டு உங்களுக்கு ஒரு புத்தக்கப் பரிசோட ஒரு நண்பர் காத்துகிட்டு இருந்தார், அவர் கூட நாங்க நின்னுகிட்டோம்.
மனசு இலகுவாயிருந்தது எப்படியோ உங்களுடன் அறிமுகமாகி பேசி,அடுத்த நாள் உங்களை சந்திக்க அனுமதியும் வாங்கிட்டோம்.அலெக்ஸ் அவங்களோட பொண்ணை காமிச்சு அவரை மாதிரியே இருக்கா என நீங்க அந்த குட்டிபொண்ணை அணைச்சுகிட்ட தருணம்,நிறைவு.
மறுநாள் காலையிலும் சொன்ன நேரத்த விட அரைமணி நேரம் லேட், அப்பவும் ஹோட்டல் அறையின் வாசக்கதவை யார் தட்டுவது என்ற யோசனையோட போனோம்.சிவகுரு,அருண்,பொன்மணி நானு மொத்தம் நாலு பேரு போயி உங்க எதிர்த்தாப்புல உர்கார்ந்தப்ப,எங்க தயக்கத்தை புரிச்சுக்கிட்டு குக்கூ காட்டுப்பள்ளியோட கல்விமுறை பத்தி கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க.அடுத்த நாலு மணி நேர உரையாடல் கல்வியின் இன்றைய தேவை,ஆங்கில மொழி அறிவோட உச்ச கட்ட தேவை, parallel education அதுல இந்தியா என்னவா இருக்கு, முக்கிய உலக நாடுகளோட நிலைப்பாடு,ஐரோப்பா ஆசிய நாடுகளின் கல்வி ஒப்பீடு,எது இன்னைக்கு தேவை,எங்களுக்கு என்ன தேவை இப்படி தான் போச்சு.உண்மையிலே கல்வி குறித்த அத்தனை தரவுகள் எவ்வளவு உள்வாங்க முடியுமோ வாங்கிட்டோம்.
சுயம்பு வந்தாங்க தனிப்பட்ட விதமா எங்க எல்லோரோட விருப்பம் ஆசை அதுக்கு உறுதுணையா இருக்க உங்களோட இணையம் , நீட்சியா வாசிப்பு,காந்தியவாதிகளின் குண நலன்கள்,தன்னறம் பதிப்பகம்,தன்மீட்சி தன்வழி கட்டுரை தொகுப்பு,குரு சிஷ்ய மரபு,வெண்முரசு,யதி அவர்களின் வாழ்க்கை,உலக அளவிலான காந்தியவாதிகள் என யானை முன் எறும்பு போல பெற்று கொண்டோம்.
திரும்பவும் உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்கிறோம் இந்த வாழ்வை அழகாக்கி கொள்ள..
பா.ஸ்டாலின்
அன்புள்ள ஸ்டாலின்
என்னால் உங்களுக்கு என்ன பயன் விளைகிறதோ அதைவிட பலமடங்கு பயன் உங்களைப்போன்றவர்களிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. சொற்களில் கருத்துக்களில் சென்றுகொண்டிருப்பவன். பிறர் உருவாக்கிய தடத்தில் வசதியாகச் செல்பவன் அல்ல. தத்துவவாதி அல்ல, இலக்கியவாதி. ஆகவே உணர்ச்சிகளால் அவ்வப்போது தடுமாறுபவன்.ஆகவே சஞ்சலங்களும் கொண்டவன். அன்றாடத் தெளிவின்மையிலிருந்து அகத்தெளிவுநோக்கிச் செல்லும் தத்தளிப்பு கொண்டவன். எல்லா எழுத்தாளர்களும் சொற்களின் இருளிலும் கனவின் ஒளியிலுமாக அலைக்கழிபவர்கள்.
வாசகர்கள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறார்கள். எளிய அரசியல், மத நிலைபாடுகளை ஒட்டி என்னிடம் வருபவர்கள். ஓரிரு படைப்புகளை படித்து ஒர் உரையாடலுக்காக வருபவர்கள். ஆழ்ந்த வாசிப்புக்குப்பின் அணுக்கமாகிறவர்கள் என அவர்கள் பலவகை. அதே போல கணிசமானவர்கள் விலகியும் செல்வார்கள். தன் அரசியல்நிலைபாட்டுக்கு மாறாக நான் ஏதாவது சொல்லிவிட்டால் உச்சகட்ட வெறுப்புக்குச் சென்று வசைபாடுபவர்கள் உண்டு. தன் ஆணவம் புண்படும்படி ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதேபோல விலகிச்செல்பவர்கள் உண்டு. ஒவ்வொருநாளுமென வசைகள், சிறுமைகள் வந்துகொண்டிருக்கின்றன
பொதுவாக இலக்கிய- கருத்தியல் செயல்பாட்டுக்குள் வருபவர்களில் கணிசமானவர்கள் தன்முனைப்பு மிக்கவர்கள். அவர்களுக்கு பிற எவருமே உண்மையில் முக்கியமல்ல. தங்கள் முக்கியத்துவத்தை நிறுவும்பொருட்டே வருகிறார்கள். ஆகவே எனக்கு வாசகர்தரப்பிலிருந்து ஏமாற்றங்கள் அடிக்கடி வந்தபடியே இருக்கும். மிகமிகச்சிலரே வாசித்தவற்றை வாழ்க்கை எனக்கொள்பவர்கள். வாசிப்பை வெறும் ஆணவச்செயல்பாடாக கொள்ளாதவர்கள். அத்தகையோர்தான் எழுத்தின் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்கிறார்கள்.
வெறும் பேச்சும் வெற்று விவாதங்களும் ஓங்கி நின்றிருக்கும் சூழலில், எதிர்மறைப்பண்புகளே மையமாக ஒலிக்கும் தருணத்தில் உங்களைப்போன்றவர்கள் அளிக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. நீங்களும் குக்கூ சிவராஜ் போன்றவர்களும் எனக்கு அளிப்பது எழுதுக எனும் ஊக்கத்தை.
அலெக்ஸ் நினைவுநாளில் மேலும் தனிமையும் சோர்வும் கொண்டிருந்தேன். மறுநாள் உங்களைச் சந்தித்தது என்னை மீட்டது.நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
வரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விழா நிகழ்கிறது. நீங்களும் நண்பர்களும் கலந்துகொண்டு ஒரு ஸ்டால் போட்டாலென்ன? அணுக்கமான, நிகரான உளநிலைகொண்ட ஏராளமான நண்பர்களைச் சந்திப்பீர்கள்
ஜெ
ஸ்டாலின் மின்னஞ்சல்:
[email protected]
முகநூல் :
ஸ்டாலின்.பா
(9994846491).
*
சிவகுருநாதன்
www.nurpu.in | fb: Nurpuhandlooms
====================================================