இனக்காழ்ப்பும் இலக்கியவாதிகளும்

puthu-tolstoy
அன்புள்ள ஜெ

வணக்கம்.

ஐரோப்பா பயணம் நன்றாகப் போகிறது என்று நம்புகிறேன். குடும்பத்துடன் செல்வதால் வழக்கமான உடனடி பதிவுகள் கிடைப்பதில்லை என்பது எங்களைப் பொறுத்த வரை ஒரு குறையே எனினும் அது எவ்விதமேனும் (பயணக் கட்டுரையாகவோ, கதையாகவோ) எங்களை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை என்பதால் பெரிய வருத்தமில்லை. இதே சூட்டில் ஒரு அமெரிக்கப் பயணமும் இந்த ஆண்டில் உண்டாகும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இனி என் கேள்விக்கு வருகிறேன். எஸ்ரா மற்றும் உங்கள் எழுத்துகள், மற்றும் பேச்சுகளாலும், சுசீலா அம்மாவின் புண்ணியத்தாலும், ருஷ்ய இலக்கியங்களுக்கு புகுந்து, இப்போது சில நாவல்கள், மற்றும் சிறுகதைகள் படித்து முடித்துள்ளேன் (இது வரை படித்தது “தஸ்தயெவ்ஸ்கி கதைகள்”, ”குற்றமும் தண்டனையும்”, “அன்னா கரினினா”, தற்போது படித்துக் கொண்டிருப்பது “கரமஸோவ் சகோதரர்கள்”). முதலில் ”குற்றமும் தண்டனையும்” படித்த போது நெருடிய ஒரு கேள்வி, மீண்டும் அன்னா கரினினாவிலும், இப்போது “கரமசோவ் சகோதரர்களி”லும் மீண்டும் நெருடுவதால், உங்களைக் கேட்கலாம் என்று முடிவெடுத்தேன் (வழக்கம் போல, அதிகப் பிரசங்கித்தனமாகவோ, முட்டாள்தனமாகவோ இருந்தால் மன்னித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்).

கேள்வி இதுதான்: தஸ்தயெவ்ஸ்கியோ, தல்ஸ்தாயோ, தெரிந்தோ தெரியாமலோ தங்கள் படைப்புகள் வழியாக, ஏற்கனவே ஐரோப்பாவில் இருந்து வந்த யூத வெறுப்பை சிறிதளவேனும் ஊதிப் பெருக்கியிருக்கிறார்களா? ஆமெனில், மாபெரும் மானிட தரிசனங்களைத் தங்கள் படைப்புகள் மூலம் வாசகர்களுக்கு அளித்த இவர்கள் தரப்பில் ஏற்பட்ட ஒரு வழுவல் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால், ஒரு விதத்தில் ஹிடலர் தன்னுடைய “Mein Kampf” நூலில் செய்ததை ஒரு சிறிதளவேனும் இவர்களும் செய்தார்கள் என்பது ஒரு கசப்பான உண்மைதானோ?

இக்கேள்வி என்னில் எழக் காரணம் இதுவரை நான் படித்த இவ்வெழுத்தாளர்களின் கதைகளில் யூதர்களைக் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதே. எடுத்துக்காட்டாக, “கரமஸோவ் சகோதரர்களில்” இருந்து ஒரு பகுதி (தந்தை கரமஸோவைக் குறித்து கதைசொல்லி சொல்வதாக வருவது):

Dostoevsky_1872

அவர் பல ஆண்டுகள் ஊரில் இல்லாமல் போனார். அவரது இரண்டாம் மனைவி இறந்து மூன்று அல்லது நான்காண்டுகளுக்குப் பிறகு தெற்கு ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார், ஒதெஸ்ஸாவரை. நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்து வந்தார். அவர் குறிப்பிட்ட மாதிரி ஆண், பெண், குழந்தைகள் எனப்பல யூதரகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். பரதேசி யூதர்களிடம் மட்டுமல்லாமல், பணக்கார யூதர்களிடமும் தொடர்பு வைத்துக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் பணம் உறிஞ்சிச் சேமிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொண்டார்”.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றபின், ஹிட்லர் ஒரு முழு தேசத்தையும் யூதர்களுக்கு எதிராகத் திருப்ப உபயோகித்த அதே பொதுப்படுத்தலே (stereotyping) இங்கும் எனக்குக் காணக் கிடைக்கிறது. வாழ்ந்த காலத்திலேயே ஐரோப்பா முழுவதும் பரவலாக வாசிக்கப் பட்ட எழுத்தாளர் என்ற முறையில் ஐரோப்பிய பொது புத்தியில் சிறிதளவேனும் (ஏற்கனவே இருந்த) யூத வெறுப்பை மேலும் சிறிது வளர்க்க உதவியிருக்கிறாரோ என்ற நெருடல் அரித்துக் கொண்டே இருப்பதனால் இதை கேட்கிறேன். கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை ஆசிரியருடைய கருத்துக்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏனோ இதை ஒதுக்கித் தள்ள முடியவில்லை (இந் நாவலில் கதை சொல்லியும் ஒரு பெயரில்லா கற்பனை கதாபாத்திரம் என்ற போதிலும்). ஒரு வேளை ஒரு இஸ்ரேல் நிறுவனத்தில் பணிபுரிவதால் எனக்குப் பல யூதர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதனாலோ, தெரியவில்லை).

என்றும் அன்புடன்,
சிஜோ,
அடலாண்டா.

புனித தோமஸ் அக்வினாஸ்
புனித தோமஸ் அக்வினாஸ்

அன்புள்ள சிஜோ

இருபதாண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதேபோன்ற ஒரு விவாதத்திற்கு என் மதிப்பீட்டை எழுதியிருந்தேன். அன்று டி.எஸ்.எலியட் எழுத்துக்களில் உள்ள யூத வெறுப்பைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரை ஓர் இலக்கிய இதழில் வெளியாகியிருந்தது. நான் எலியட்டின் தீவிர வாசகன். அப்போது தர்மபுரியில் நான் எம்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து வாரந்தோறும் எலியட்டை வாசித்து விவாதித்துவந்தோம். எலியட்டின் தேர்ந்த கட்டுரைகளை என் விமர்சனக்குறிப்புகள் [ எலியட் சொல்லும் ஆங்கில உதாரணங்களுக்குச் சமானமான தமிழ் உதாரணங்களுடன்] சேர்த்து மொழியாக்கம் செய்தேன். அந்தக் கைப்பிரதி தமிழினி வசந்தகுமாரிடமிருந்து தொலைந்துபோயிற்று. எலியட்டின் கிறித்தவ அடிப்படையிலான நோக்கு சில கட்டுரைகளில் வெளிப்பட்டதுண்டு [christian and pagan] ஆயினும் யூதவெறுப்பு சுட்டிக்காட்டப்பட்டது எனக்கு அதிர்ச்சியை உருவாக்கியது.

அதைப்பற்றி ஆற்றூர் ரவிவர்மாவிடம் பேசியது நினைவுள்ளது. ஆற்றூர் எலியட்டில் மட்டும் அல்ல தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற மாபெரும் மனிதாபிமானிகளின் எழுத்திலும் ஷேக்ஸ்பியர் கதே போன்ற செவ்வியல் படைப்பாளிகளின் ஆக்கங்களிலும் சற்று யூதவெறுப்பை கண்டடைய முடியும் என்றார். அதை ஒட்டி பல முறையாக உரையாடியிருக்கிறேன். என் தெளிவு அதனூடாக அமைந்தது

இது இன்று நமக்கு யூத வெறுப்பு என்று தோன்றுகிறது. யூதர்களை அவர்களின் எதிர்மறை அம்சங்களைக்கொண்டு குறுக்கி மொத்தமாக வரையறை செய்துகொள்ளுதல் என்று மேலும் துல்லியமாகச் சொல்லலாம். ஐரோப்பிய இலக்கியமேதைகள் கணிசமானவர்களில் இதை எங்கேனும் கண்டடைய முடியும். இன்று அவ்வாறு ஆராய்ந்து கண்டுபிடிப்பது அங்கே ஒரு மோஸ்தர். ஏனென்றால் இது ஒரு பரபரப்பை, கவனத்தை உருவாக்குகிறது. அங்கே அறிவுத்துறையில் யூதர்களின் செல்வாக்கு மிகுதி.

ஆனால் இதைப்போன்ற பலவகையான முன்முடிவுகள், கசப்புகள் பெரும்படைப்பாளிடம் இருக்கும். தல்ஸ்தோய் படைப்புகளில் ஜிப்ஸிகள் நேரடியான ஒவ்வாமையுடன் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரெஞ்சுப்பண்பாடு பற்றிய கசப்பும் உண்டு. ஐரோப்பிய இலக்கியங்களில் அராபியர்கள் எதிர்மறை உளநிலையுடன் சித்தரிக்கப்படுவார்கள். அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற அந்நியன் நாவலில் மெர்சோவால் கொல்லப்படும் அராபியனுக்குப் பெயர்கூட இல்லை. அந்த அராபியனின் கோணத்தில் அந்நாவலை கமால் தாவூத் என்னும் அல்ஜீரிய எழுத்தாளர் மீள எழுதிய The Meursault Investigation என்ற நாவல் வெளிவந்துள்ளது.

ஜோசப் கான்ராட் போன்றவர்களின் படைப்புகளில் ஆப்ரிக்கா வெள்ளைய இனமேட்டிமை நோக்குடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. நபக்கோவின் புகழ்பெற்ற லோலிதாவை வாசிக்கத் தொடங்கும்போதே ஒவ்வாமையுடன் சொல்லப்படும் கீழ்ருஷ்யப் பகுதியினரைப் பற்றிய குறிப்பு [கழிப்பறையில் நீரூற்றாமல் செல்வது அவர்களின் பண்பாடு] முகத்தில் அறையும் .

இந்தியாவைப் பற்றி எழுதிய மேலைநாட்டினர் பெரும்பாலும் இனமேட்டிமை நோக்குடனும் விலக்கத்துடனும்தான் எழுதியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் ருட்யார்ட் கிப்ளிங். [வெள்ளையனின் சுமை என்னும் புகழ்பெற்ற சொல்லாட்சி அவருடையது] இ.எம்.போஸ்டர் போன்றவர்கள். சீனாவைப்பற்றி மிக எழுதியவர் பேர்ல் எஸ் பர்க். ஆனால் நல்லநிலம் போன்ற நாவல்களிலேயே குனிந்து நோக்கும் பார்வையையும் விலக்கத்தையும்தான் நம்மால் காணமுடியும்.

வாக்னர்
வாக்னர்

சாதாரணமாக இந்த்தகைய கூறுகள் இப்படியே கடந்துபோகும். யூதர்கள் மீதான மாபெரும் இன அழித்தொழிப்பு முயற்சி காரணமாகவே அது உலக இலக்கியத்தளத்தில் பேசப்படுகிறது. மீள மீள ஆராய்ந்து முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு எதிர்மறை நோக்கும் இனப்பேரழிவுக்குக் கொண்டுசென்றது என்னும் நோக்கில் முன்வைக்கப்பாடுகிறது. அந்த வரலாற்றுப் பின்புலத்தால்தான் அது நமக்கு உறுத்துகிறது. ஆப்ரிக்கக் கறுப்பர்களுக்கு எதிரான இனமேட்டிமைநோக்கு அடுத்தபடியாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. கீழைநாடுகளுக்கு எதிரான ஐரோப்பிய ஆசிரியர்களின் மேட்டிமைப் பார்வையையும் குறுக்கல்நோக்கையும் இன்றுகூட பெரிதாக விவாதிப்பதில்லை.

இவற்றை எப்படிப்பார்ப்பது? இந்த வினாவை இப்படி எழுப்பிக்கொள்ளலாம், அரசியல்சரிகள் எழுத்தாளர்களை மதிப்பிட சரியான அளவுகோல்களாக ஆகமுடியுமா? அந்தந்தக் காலகட்டத்து அரசியல்சரிகளைச் சரியாகக் கணித்து அவற்றுடன் இணைந்துகொண்டு எழுதுவதுதான் நல்ல எழுத்தாளனுக்கு இயல்பானதாக இருக்குமா? அதைவிட முக்கியமாக, வரும்காலத்தைய அரசியல் சரிகளையும் முன்னதாகவே அவன் ஊகித்து அதன்படி எழுதவேண்டுமா? அது இயல்வதா?

இலக்கியப்படைப்புகளுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை மட்டுமல்லாமல் ஒன்றோடொன்று முரண்பட்டு இயங்குபவையும் கூட. இலக்கிய ஆக்கங்களில் இருந்து இந்த முரணியக்கத்தை சற்றேனும் புரிந்துகொள்ளாதவர்களுக்கு நான் சொல்வதை உள்வாங்குவது இயலாது. ஒரு தளத்தில் படைப்பு வாழ்க்கையின் ஒருபகுதி. வாழ்க்கையைச் சித்தரிப்பது, விளக்குவது. மக்களுடன் மக்களாக, மக்களின் மிகச்சரியான பிரதிநிதியாக நின்றுதான் எழுத்தாளன் அதை எழுதமுடியும். மக்களின் எல்லாவகையான அசட்டுத்தனங்களும் நம்பிக்கைகளும் அவனிடம் இருக்கக்கூடும். இன்னொரு பக்கம் படைப்பு வாழ்க்கைக்கு அப்பாலென தேடிச் செல்வது. வாழ்க்கையை தொகுத்து வாழ்க்கையின் சாராம்சத்தினூடாக வரலாற்றை , பிரபஞ்சமெய்மையை நாடுவது. அங்கே எழுத்தாளன் மக்களின் தளத்தில் இருந்து மேலெழுந்த தத்துவவாதியோ ஞானியோ ஆவான்.

நீட்சே
நீட்சே

மரத்தின் வேர் மண்ணில் இருக்கிறது, கிளைகள் வானில் விரிந்துள்ளன. அவற்றில் மலர்களும் கனிகளும் எழுகின்றன. பெரும்பாலும் இவ்விரண்டாம்தளம் அவனை மீறி நிகழ்வது. அவனிலூடாக வெளிப்பாடு கொள்வது. அவன் ஆழ்மனம் அது. ஆகவேதான் படைப்பைவிட படைப்பாளி மிகச்சிறியவன் எனப்படுகிறது. பெரும்படைப்பாளர் பலர் மிகச்சிறிய விஷயங்களில் ஈடுபட்டு உழன்றவர்களாக, சில்லறைக் காழ்ப்புகளும் முன்முடிவுகளும் கொண்டவர்களாக, ஒட்டுமொத்தமாக அற்பர்களாக இருந்ததை நாம் வாசிக்கிறோம். அதை இவ்வாறுதான் புரிந்துகொள்ளமுடியும்

யூதர்களைப்பற்றியும் ஜிப்ஸிகளைப்பற்றியும் அராபிய முஸ்லீம்களைப் [மூர்] ப்பற்றியும் ஐரோப்பாவில் இருந்துவந்த எதிர்மறைப்படிமம் மிக வலுவானது. அன்றைய மக்களின் சிந்தனைப்போக்கில் இரண்டறக் கலந்தது அது. அது முழுக்கமுழுக்க பொய்யும் அல்ல. யூதர்கள் பெரும்பாலும் பணத்தொழில் செய்தவர்கள். எங்கும் அத்தொழில் செய்பவர்களைப்பற்றி எதிர்மறைச் சித்திரம் இருக்கும். இங்கே தமிழ்நாட்டில்கூட மார்வாடிகள், பட்டாணிகள் [ஈட்டிக்காரன்] பற்றிய உளப்படிமங்கள் அப்படிப்பட்டவையே. ஜிப்ஸிகள் கட்டற்ற நாடோடி வாழ்க்கை கொண்டவர்கள். உறுதியான கிறித்தவ வரைமுறைகொண்ட ஐரோப்பிய சமூகத்தின் புறனடையாளர்கள் அவர்கள். அன்று ஒருபாலினத்தோர் ஆணிலிகள் போன்ற புறத்தோர் எப்படி வெறுக்கப்பட்டார்களோ அப்படி அவர்களும் வெறுக்கப்பட்டார்கள். பாலைப்பண்பாடு கொண்ட அராபியர்களும் ஐரோப்பியருக்கு அயலாரே. அவர்களுடன் நெடுங்காலச் சிலுவைப்போரின் வரலாற்று நினைவும் அவர்களுக்கு உள்ளது.

இந்த உளப்பதிவுகள் தல்ஸ்தோய் அல்லது தஸ்தயேவ்ஸ்கி காலகட்டத்தில் வலுப்பெற்றவை அல்ல. அவை 12 ஆம் நூற்றாண்டில் புனித தாமஸ் அக்வினாஸ் போன்றவர்களாலேயே ஐரோப்பிய மதச்சார்புகொண்ட உள்ளங்களில் வலுவாக நிலைநாட்டப்பட்டவை.

பொதுச்சமூகம் சாதாரணமாக இந்த வகையான உளப்பதிவுகளை உடைத்து ஆராய்வதில்லை. புறவயமான சான்று தேடுவதுமில்லை. பொதுமைப்படுத்தலின் விளைவான எளிய படிமங்கள் வழியாக வாழ்க்கையைக் கொண்டுசெல்லவே அது முயல்கிறது. நம் சமூகச்சூழலிலேயே சாதிகள், மதங்கள் பற்றிய நம்முடைய உளச்சித்திரம் எத்தகையது என்று பாருங்கள். இங்கே இன்றுகூட ‘பார்ப்பனப்புத்தி’ என ஒரு எளிய பொதுமைப்படுத்தலைச் செய்வது முற்போக்காகக் கருதப்படுகிறது.

உண்மையில் மக்களிடமிருக்கும் இந்த முன்முடிவுகள், காழ்ப்புகளில் இருந்து உணர்வுபூர்வமாக மக்களில் ஒருவராகச் செயல்படும் படைப்பாளி முழுமையாக விடுபடுவது எளிதல்ல. பலவற்றை அவன் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்து விலக்கக்கூடும். அவனை மீறி பல அவன் ஆக்கங்களில் இடம்பெறவும்கூடும். இவ்வாறு இந்தியப் படைப்பாளிகளைப் பார்த்தால் பலவகையான அறப்பிழைகளை சுட்டிக்காட்டமுடியும்.

இன்னொன்று உண்டு, எழுத்தாளனின் அறிதல்முறை என்பது புறவயமான தரவுகளைத் திரட்டி பொதுமைப்படுத்தி கொள்கைகளை உருவாக்கிக் கொள்வது அல்ல. தன் சொந்த அனுபவத்தினூடாக அறிதல்களை ஒருவகை தர்க்கமற்ற பயணம் வழியாக, உணர்ச்சிகரமாகச் சென்றடைவதே. அதுதான் அவனை பொதுவான ஆய்வுகளுக்குச் சிக்காத அரிய மெய்மைகளைச் சென்றடையச் செய்கிறது. அவனுடைய புனைவியக்கத்தை அறிவியக்கம் பொருட்படுத்த அதுவே காரணம். ஆனால் இதே இயல்பினால் தன் தனி அனுபவத்திலிருந்து அசட்டுத்தனமாக முன்முடிவுகளுக்கோ காழ்ப்புகளுக்கோ அவன் சென்றடையவும் கூடும்.

மார்ட்டின் லூதர்
மார்ட்டின் லூதர்

உலகப்புகழ்பெற்ற தத்துவசிந்தனையாளர்கள் பலரிடம் இந்த வகையான முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் வெளிப்படையாகவே காண்கிறோம்.இசைமேதை வாக்னர், போன்றவர்களிடம் நேரடியான யூத வெறுப்பு வெளிப்பட்டது. அதற்குரிய பொதுச்சமூக உளவியல் அன்றிருந்தது. இன்றைய கிறித்தவ மதத்தின் அடிப்படைகளை அமைத்தவரும் மாகவிஞர் தாந்தேயின் ஞானாசிரியருமான புனித தாமஸ் அக்வினாஸ் இஸ்லாமியர்களையும் யூதர்களையும் குறித்த எதிர்மறைச் சித்திரத்தை உருவாக்கியவர்களின் முன்னோடி. புனித அகஸ்டின், மார்ட்டின் லூதர் போன்ற பல கிறித்தவ மெய்யியலாளர்கள் மீது இக்குற்றச்சாட்டு வலுவாகவே உள்ளது. உண்மையில் ஆற்றல்மிக்க மதப்பிரச்சாரகர்களான இவர்கள் உருவாக்கிய எதிர்மறைக் குறுக்கல், காழ்ப்புகள் மக்களிடையே பொதுக்கருத்தியலாக நீடித்தன. அவற்றையே நாம் இயல்பாக தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் தொலைதூர எதிரொலியாகக் காண்கிறோம்.

தல்ஸ்தோய் போன்ற இலக்கியமேதைகளின் ஆக்கங்களில் அவ்வாறு நேரடியான வெறுப்பு வெளிப்படவில்லை, தன்னியல்பாக பதிவான சமூகப்பொதுவான எண்ணமே உள்ளது. அவர்கள் எவ்வகையிலும் ஐரோப்பாவை யூதவெறுப்பு நோக்கிச் செலுத்தவில்லை, ஐரோப்பாவின் யூதவெறுப்பின் கீற்றுகள் அவர்களில் வெளிப்பட்டன. அத்தகைய மேலும் பல கூறுகளை நாம் காணமுடியும். அவர்களின் வேரிலிருந்து வந்தது அது. அவர்களின் மலர்களையும் கனிகளையுமே நாம் கருத்தில்கொள்ளவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகைநெசவும் தனிவழியும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3