தன்மீட்சி
இயற்கைக் கடலைமிட்டாய்
செப்டெம்பர் 3 அன்று மதுரை சென்றபோது தலித் இயக்கத்தவரும் அலெக்ஸின் அணுக்கமான நண்பர்களுமான பாரிசெழியன், கொண்டவெள்ளை, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரைச் சந்தித்தேன். நண்பர் வேணு வெட்ராயன் சென்னையிலிருந்தும், மயிலாடுதுறை பிரபு மாயவரத்திலிருந்தும் வந்திருந்தனர். மாலையில் பசுமலை சி.எஸ்.ஐ தேவாலயத்திற்கு சென்றோம்.
அலெக்ஸ் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். ஓராண்டுக்குப்பின் அலெக்ஸின் மனைவியையும் மகனையும் மகளையும் சந்தித்தது துயரையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவர்களுடன் தொடர்ச்சியாக பல வகையிலும் தொடர்பில்தான் இருக்கிறேன். அலெக்ஸின் அழகிய புகைப்படம் பொறிக்கப்பட்ட மேடை. அலெக்ஸைப்பற்றிய இனிய நினைவுகளை மட்டும் பேசவேண்டும் என முன்னரே முடிவெடுத்திருந்தேன்
மதுரை தீக்கதிர் அலுவலகம் அருகே உள்ள ஹெரிட்டேஜ் ரெஸிடென்ஸி விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் அறைக்கு வந்தார்கள். மறுநாள் கள்ளிப்பட்டி ஸ்டாலின் , சென்னிமலை சிவகுருநாதன் , அருண்குமார் ஆகியோரை அவர்களின் நண்பர்கள் சுயம்புச்செல்வி, பொன்மணி ஆகியோருடன் சந்திக்க முடிந்தது இப்பயணத்தின் இனிய அம்சம். அலெக்ஸின் நினைவுப்பிரார்த்தனைக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.
ஸ்டாலின்,சிவகுருநாதன், அருண் ஆகிய மூவருமே குக்கூ சிவராஜ் அவர்களால் உந்துதல் பெற்றவர்கள். வழக்கமான தொழில் -குடும்பம் என்றவகையில் அல்லாமல் வேறுவகையில் படைப்பூக்கத்துடனும் சேவைமனநிலையுடனும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டவர்கள். வெவ்வேறு துறைகளில் நல்ல பணியில் இருந்தவர்கள் அவ்வாழ்க்கையை உதறி தங்கள் உள்ளம் கோரும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.
ஸ்டாலின் கருப்பட்டிக்கடலைமிட்டாய் தயாரிக்கும் குடிசைத்தொழில் ஒன்றை ஆரம்பித்தார். இன்று நிறைவூட்டும் வகையில் அது சென்றுகொண்டிருக்கிறது. கருப்பட்டி சம்பந்தமான பொருட்களை சந்தையில் வாங்குவதன் மிகப்பெரிய இடர் என்னவென்றால் கருப்பட்டி [பனைவெல்லம்] இன்று விலையேறிய இனிப்புப்பொருள். அஸ்கா எனப்படும் மாவுச்சர்க்கரை மலிவானது. ஆகவே அஸ்காவை கருப்பட்டியில் கலப்படம் செய்வது சாதாரணம்
முன்பெல்லாம் கருப்பட்டியை ஒன்றுடன் ஒன்று மோதிப்பார்த்து மரக்கட்டை போல் ஒலி எழுந்தால் நல்ல கருப்பட்டி என முடிவெடுப்பார்கள். பதம்கெட்ட கருப்பட்டி, அல்லது தவிடு கலந்த கருப்பட்டி அந்த ஓசையை எழுப்பாது. ஒரு விள்ளல் வாயிலிட்டு இனிப்பு உள்ளதா என்று பார்ப்பார்கள். இன்று இவ்விரு சோதனைகளுமே பிழையானவை. அஸ்கா கலந்த கருப்பட்டி மரக்கட்டை ஒலி எழுப்பும். சாதாரண கருப்பட்டியை விடவும் இனிப்பாகவும் இருக்கும்
இன்று நல்ல கருப்பட்டியை மணத்தையும் சுவையையும் வைத்தே கண்டுபிடிக்கமுடியும். நல்ல கருப்பட்டி நாவில் சற்று பருபருவென தட்டுப்படும். சீனிபோலன்றி மிதமாகவே இனிக்கும். நல்ல மணம் இருக்கும். கிட்டத்தட்ட சாக்லேட் போலவே சுவைக்கும், படிகம்போல் உடையும்தன்மை கொண்டிருக்காது, கொஞ்சம் மெத்தென்றே இருக்கும்.
ஸ்டாலினின் வெற்றி தூய்மையான கருப்பட்டியைப் பயன்படுத்தியதில் இருக்கிறது. அவருக்கு தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கருப்பட்டி மருத்துவகுணம் கொண்டது. சீனி அமிலத்தைத் தூண்டி வயிற்றுப்புண்ணை உருவாக்கும், கருப்பட்டி காரத்தன்மை கொண்டது, ஆகவே வயிற்றுப்புண்ணுக்கு மருந்து. சீனி ஒரு ரசாயனம், ஆகவே உடனடியாக செரிக்கும்.கருப்பட்டி இயற்கையான உணவுப்பொருள், ஆகவே குடலில் நீடித்துச் செரிக்கும். ஆகவே சீனியின் தீயவிளைவுகள் அற்றது.
சிவகுருநாதன் கைத்தறி ஆடைகள் தயாரிக்கும் தொழிலுக்குச் சென்றார். அவரே உருவாக்கிய கைத்தறி ஆடைகளுக்குரிய சந்தையை கண்டுகொண்டார். இங்கே இன்று கிடைக்கும் கணிசமான கைத்தறி ஆடைகள் உண்மையில் விசைத்தறி ஆடைகளில் உள்ள மூன்றாம்தரமானவை. சிவகுருநாதனின் கைத்தறி ஆடைகள் அவருடைய தனிப்பட்ட உறுதிப்பாடு கொண்டவை என்பதனால் அவற்றுக்கான சந்தையை கண்டடையமுடிந்தது. வெற்றிகரமாக செயல்படுகிறார்

இந்த வேறுபாடு ஏன் முக்கியமானது என்றால் நம் மரபின்படி இறைப் பூசைகள், வைதிகச்சடங்குகளுக்குக் கைத்தறி ஆடைகளையே அணியவேண்டும் என்னும் நம்பிக்கை உள்ளது. கைத்தறிநெய்பவரின் கைகளிலிருந்து ஆடை வந்திருக்கவேண்டும். இன்றும் இதில் உறுதியாக இருப்பவர்கள் உள்ளனர். யோகசாதனை செய்பவர் சிலர் கைத்தறி ஆடைகளை மட்டுமே எப்போதும் அணிவதை கண்டிருக்கிறேன்.இதன் குறியீட்டு முக்கியத்துவம் எனக்குப்புரிகிறது, அதற்குமேல் என்ன முக்கியத்துவம் என பிடிகிடைக்கவில்லை. ஆனால் அத்தகையவர்களுக்கு இந்தவகையான ஆடைகள் உகந்தவை.
நண்பர் அருண்குமார் அம்பரம் என்னும் பெயரில் சிறுகுழந்தைகளுக்கான ஆடைகளைச் செய்து விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்துவருகிறார். செயற்கைச் சாயமூட்டிகள், அழுக்குநீக்கிகள் பயன்படுத்தப்படாத ஆடைகள் இவை. உடல்நலம் என்பதுடன் அவற்றைச் செய்பவரின் அக்கறையும் கொண்டவை. இன்று இத்தகைய ஆடைகளுக்கு வணிகமதிப்பு உருவாகியிருக்கிறது. அவருடைய தங்கை பொன்மணி வந்திருந்தார். சென்ற முறை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர். சென்றமுறை நேசன் என்பவரைப்பற்றி எழுதியிருந்தேன். மருத்துவத்துறையில் பணியாற்றியவர். அதிலிருந்த ஊழலைக்கண்டு அதை உதறி மாற்றுக்கல்வி இயக்கத்துக்கு வந்தவர். நேசனை பொன்மணி திருமணம் செய்துகொண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலேயே தங்கியிருக்கிறார். சென்றமுறை கணிப்பொறித்துறையில் இருந்து பகுதிநேர தன்னார்வ ஊழியராக மாற்றுக் கல்வித்தளத்திற்கு வந்த சுயம்புச் செல்வி சென்றமுறை புகைப்படம் எடுத்த நண்பரை திருமணம் செய்யவிருக்கிறார்.
ஸ்டாலினும் னுநண்பர்கள் இன்று குழந்தைகளுக்கான இதழ் ஒன்றை நடத்துகிறார்கள். தன்னறம் என்ற பேரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி மாற்றுப்பொருளியல் தொடர்பான நூல்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
சென்ற ஆண்டு செப்டெம்பர் 8 அன்று அவர்களை திருப்பரங்குன்றம் சந்திப்பில் பார்த்தேன். அலெக்ஸ் மறைவால் சோர்ந்திருந்த தருணம். காந்தியில் தொடங்கி தன்னறம் வரை விரிவான ஓர் உரையாடல். நான் அன்று சொன்னதை நினைவுறுகிறேன், வெற்றிகரமான செயல்பாட்டாளர் எதற்கும் ‘ எதிராகச்’ செயல்படுபவர் அல்ல. எதிர்ச்செயல்பாடு என்றாயினும் உளச்சோர்வையே அளிக்கும். காந்தி கிராமியப் பொருளியல் செயல்பாடுகளை கிராமநிர்மாணம் என்றே அழைத்தார். கட்டி எழுப்புதல், உருவாக்குதல். அது முழுக்கமுழுக்க நேர்நிலைச் செயபாடு. இன்று நண்பர்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியுடன், மேலும் வெற்றிகரமாக இருப்பதைக் கண்டபோது ஏற்பட்ட மனநிறைவு மிகமிகப் பெரிய பரிசு
அலெக்ஸ் என்றும் இத்தகைய நேர்நிலைச் செயல்பாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர். அலெக்ஸ் நினைவுடன் அந்நிறைவும் கலந்துகொண்டது
ஜெ
ஸ்டாலின் மின்னஞ்சல்:
[email protected]
முகநூல் :
ஸ்டாலின்.பா
(9994846491).
*
சிவகுருநாதன்
www.nurpu.in | fb: Nurpuhandlooms
====================================================