அன்பு ஜெயமோகன்,
ஆனந்த விகடன் இதழில்(29.08.2018) வெளியான அ.முத்துலிங்கம் அவர்களின் எகேலுவின் கதை எனும் சிறுகதையைப் படித்தேன். சமீபமாய் என்னை ஈர்த்த கதைகளில் அது முக்கியமானதாகப் பட்டது. மிக எளிய கதைதான்; எனினும், தவறவிடக்கூடாத கதை என்பதாகவும் தோன்றியது.
மழையைப் பற்றி எகேலு சொல்வதாக அக்கதையில் ஒரு வாக்கியம் இடம்பெற்றிருக்கும் – “அதற்கு, உருவம் கிடையாது; நிறம் கிடையாது; எல்லை கிடையாது; திசை கிடையாது. தொடலாம். ஆனால், பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் இருக்கும்!”
சில நாட்கள் எகேலுவின் மழை எனக்குள் பெய்து கொண்டே இருந்தது.
கதையின் இறுதியில் எகேலுவிடம் அவன் அம்மா இப்படிச் சொல்வாள் –” மகனே, நாளைக்கு நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம், தத்துவவாதி ஆகலாம், படைப்பாளி ஆகலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஓர் ஏழை சோமாலிப் பெண்ணின் கணவரை, சாவிலிருந்து காப்பாற்றினாய். அதுதான் பெரிது. அந்த நேயம் உன்னிடம் இருக்கிறதே. நான் பெருமைப்படுகிறேன்!”
சில நாட்கள் எகேலுவுடைய அம்மாவின் மழையும் எனக்குள் பெய்து கொண்டே இருந்தது.
கதையின் இணைப்பு : எகேலுவின் கதை
உயிர்நலத்தை விரும்பும்,
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.