‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8

bowகௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் அம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து தனக்கு வலதுபக்கம் தேரில் கவசங்கள் ஒளிவிட நின்றிருந்த சம்பனை பார்த்தான். அவன் நெஞ்சில் படைகளின் தேர்கள் வண்ணக்கரைசலாக சிற்றலைகொண்டன. தலைக்கவசத்தில் வானொளி ஒரு துளியென மின்னியது.

அன்று காலை பாசறையிலிருந்து கிளம்புகையிலேயே அவனுடைய தேர்இணையனாகிய சம்பன் “இன்று பார்த்தரும் பிதாமகரும் களம் பொருதுவார்கள். ஒருவேளை இறுதி வெற்றி எவருக்கென முடிவு செய்யும் தருணமாக அது அமையும்” என்றான். சுஜயன் நெஞ்சு படபடக்க “ஆனால் நேற்றும் அவர்கள் பொருதிக்கொண்டனர்” என்றான். “ஆம், அது எருதுகள் கொம்பால் தட்டி ஆற்றல் நோக்கிக்கொள்வதுபோல. நேற்று பார்த்தர் தன் முதல் அம்பால் பிதாமகரின் கால்தொட்டு வணங்கி அருள்பெற்று சென்றார். நேற்றிரவு முழுக்க நெடுந்தொலைவு உள்ளத்தால் சென்று இன்று எதிரியென வஞ்சம் திரட்டி வருவார். உரிய சூழ்கையை இன்று வகுத்திருப்பார்கள். இருவரில் ஒருவர் என முடிவு செய்து போரிடுவது இன்றே நிகழும்” என்றான் சம்பன்.

சுஜயன் பெருமூச்சுவிட்டு “ஒவ்வொரு நாளுமென எதிர்பார்த்திருந்த களம். ஆனால் இன்று காலை ஏனோ சோர்வடைந்தேன்” என்றான். சம்பன் “நானும்தான். நேற்றிரவு முழுக்க கனவுகளால் ஆட்டுவிக்கப்பட்டேன். விந்தையான கனவுகள். பாதாள தெய்வங்கள் எழுந்துவந்து படைகளின் மேல் நின்று கூத்தாடுவதுபோல. பிறிதொரு இடத்தில் பிறிதொரு வகையில் பல்லாயிரம் மடங்கு விசையுடன் இப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என கண்டேன். இறந்தவர்கள் அனைவரும் எழுந்து வந்து அப்போரில் ஈடுபட்டிருந்தனர். வாழ்ந்தபோதெல்லாம் அவர்கள் அனைவரும் விழைந்தது இப்போரைத்தானோ என்று தோன்றியது” என்றான். “போரை தெய்வங்கள் விரும்புகின்றன என்பார்கள். தெய்வமாதலுக்காகவே மானுடர் போர்புரிகிறார்கள்.”

சுஜயன் “எனக்கும் இரவெல்லாம் கனவுகள் அலைக்கழித்தன. ஒருவேளை முதல்நாள் போருக்குப் பின் எப்போதும் இத்தகைய கனவுகள் எழும்போலும் என்று எண்ணிக்கொண்டேன். அவ்வாறுதானா என்று எவரிடமும் கேட்டு அறிந்துகொள்ளக் கூடவில்லை. மூத்தவர் எவரேனும் அறிந்தால் அது நம் கோழைத்தனத்திற்கு சான்றாகிவிடுமென்று தோன்றியது” என்றான். சம்பன் சிரித்து “ஆம், நாம் அஞ்சாதவர்கள் என நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான். எப்போதுமே கற்றறிந்தவனின் மொழியில் மெல்லிய இளக்காரத்துடன் பேசுவது அவன் இயல்பு. “இன்று என்ன நிகழும் என உள்ளம் அலைக்கழிகிறது” என்று சுஜயன் சொன்னான். “இன்று களத்தில் நாம் எவரென்று காட்ட முடியும். இன்று அந்தியில் மீண்டு வந்தால் இனி எவரிடமும் நம்மை நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் சம்பன்.

அவன் சொற்களில் இன்று இன்று என்னும் ஒலி மட்டுமே சுஜயன் காதில் ஒலித்தது. கவசம் அணிகையில், கையுறைகளை இழுத்துக்கொள்கையில், தேரிலேறி விற்பீடத்தில் நின்று நாணிழுத்து விம்மலொலி எழுப்புகையில் இன்று இன்று என்று உளம் ஒலித்துக்கொண்டிருந்தது. “செல்க!” என்று ஆணை வந்தபோது தேர்கள் எழுந்து அரைவட்டமாக பீஷ்மரின் தேரை சூழ்ந்து களமுனை நோக்கி சென்றன. சகட ஒலிகள் இன்று இன்று என்று ஒலித்தன. வில்லை நிறுத்தி நாணைச் சுண்டியபோது ஆம் இன்று ஆம் இன்று என்று அது ஆணையிட்டது. அவன் உள்ளம் முதலில் இருந்த விசையை இழந்து மெல்ல அமைந்து அசைவின்மை கொண்டது. ஒவ்வொரு சொல்லாக வானிலிருந்து பொழிந்து மண்ணில் அமைந்து நிலைகொண்டு அதனாலேயே விழியிலிருந்து மறையும் சிற்றிறகுகள்போல ஒழிந்தன.

உள்ளம் சொல்லடங்கியபோதுதான் அதுவரை அந்த அகப்பெருக்கு புலன்கள்மேல் படிந்து தன்னை திரைபோலச் சூழ்ந்திருந்ததென்பதை அவன் உணர்ந்தான். செவிகளும் கண்களும் மூக்கும் கூர்கொண்டன. உடல் விழியாகவும் செவியாகவும் மாற ஒருகணத்தில் அப்பெருங்களத்தை அணுவணுவாக முற்றறிய முடியுமென்று தோன்றியது. பீஷ்மரின் தேர் சீரான விரைவில் முன்னால் செல்ல அவர்களின் துணைத்தேர்வரி தொடர்ந்தது. படைமுகப்பில் புலரிக்கெனக் காத்து பீஷ்மர் ஊழ்கத்திலென அமர்ந்திருக்க ஊன்றிய வில்லுடன் கைகளை தொங்கவிட்டு அவன் தேர்த்தட்டில் நின்றான். மெல்லிய காற்றில் தேர்களின் முனைகளில் கட்டப்பட்ட கொடிகள் படபடக்கும் ஓசை கேட்டது. தலைக்குமேல் பறவைக்கூட்டமொன்று வந்து சுழல்வதுபோல.

அவன் பீஷ்மரையே நோக்கிக்கொண்டிருந்தான். முதல் கொம்பொலி எழுந்ததும் ஒரு மங்கல சடங்குக்கு முனைபவர்போல அமைதியாக எழுந்து நின்று தன் வில்லை இடக்கால் நுனியால் குமிழ்பற்றி நிறுத்தி வலக்கையால் மேல்முனையைப்பற்றி மிக எளிதாக அவர் நாணேற்றினார். அந்த வில்லை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அதன் எடை தோள் தசைகளை தெறிக்க வைப்பது. எருமைத் தோலில் முறுக்கிய அதன் தடித்த நாண் மூன்றுவிரல் தடிமன் கொண்டது. பெருந்தோள் வீரன் ஒருவன் தன் முழு எடையையும் கையிலாக்கி, ஏறுதழுவலில் பெருங்களிற்றை கொம்பு பற்றி வளைத்து நிலம் தொடத்தாழ்த்தும் முயற்சியுடன்தான் அதை நாணேற்ற இயலும் என்று அவன் எண்ணியிருந்தான்.

பீஷ்மர் தொலையம்பு செலுத்தும் பெருவில்லை கையில் தொட்டு அவன் பார்த்ததேயில்லை. முதல் நாள் போரில் அவ்வில்லை இடக்கையில் பற்றி அவர் எழுந்து நின்றபோது எவ்வண்ணம் நாணேற்றப்போகிறார் என்று ஓரவிழியால் பார்த்துக்கொண்டிருந்தான். வலப்பக்கம் சம்பன் “ஒளி எழுகிறது” என்றான். இயல்பாக திரும்புகையில் எங்கோ ஒரு கேடயத்தின் பரப்பு அவன் கண்ணை அறுத்துச் சென்றது. திரும்பிப்பார்த்தபோது பீஷ்மர் நாணேற்றி முடித்திருந்தார். நெஞ்சு ஓசையிட அவன் அந்த வில்லை பார்த்துக்கொண்டிருந்தான். மெய்யாகவே தேவர்களால் துணைக்கப்படுகிறாரா? எட்டு வசுக்களில் ஒருவரா? ஏழு உடன்பிறந்தார் சூழ களம் வந்துள்ளாரா?

அன்று மாலை போருக்குப் பின் உணவருந்திக்கொண்டிருக்கையில் அதை அவன் சொன்னபோது சம்பன் நகைத்தான். “இன்று மாலை வில்லவர் அனைவருமே அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாலைத்தூணின் உச்சியின் அகல்விளக்கில் சுடர் பொருத்துவதுபோல அத்தனை எளிதாக நாண் பூட்டினாரென்று குணதன் சொன்னான். அது வில்நாண் அல்ல யாழ் நரம்பென்று தோன்றியது என்று மரீசி சொன்னான். அத்தனை எளிதாக பூட்டப்பட்டதனாலேயே அந்த வில் அம்புக்கு போதிய விசையளிக்குமோ என்று ஐயுற்றதாக நாசிகன் கூறினான். களத்தில் பார்த்திருப்பாய், களிற்று மத்தகத்தின் பெருங்கவசத்தையே மும்முறை அறைந்து உடைத்தார். அவர் வில்லிருந்து எழுந்த அம்பின் அறைகொண்டு வீரர்கள் தேரிலிருந்து தெறித்து பின்னால் விழுந்தனர். பலர் தேர்த்தூண்களோடு சேர்த்து அறைந்து நிறுத்தப்பட்டனர். புரவிகள் தலையறுந்து விழும்படி பிறையம்பு செலுத்த முடியுமென்பதை முன்னர் கதைகளில்தான் கேட்டிருப்போம்” என்றான்.

சில கணங்களுக்குப் பின் சுஜயன் “பிதாமகரை வெல்ல இளைய பாண்டவரால் இயலுமா?” என்றான். “வெல்லக்கூடும் என்ற எண்ணம் இன்று போர் தொடங்கும் கணம் வரை பெரும்பாலானோரிடம் இருந்தது. ஏனெனில் இளைய பாண்டவர் களத்தில் தோற்றதே இல்லை. அவருக்குப் பெருந்துணையாக இடிமின்னலின் தேவன் களத்தில் எழுந்தருள்வான் என்றார்கள். இன்று தெரிந்தது, இப்புவியில் எவரும் பீஷ்மர் முன் வில்லுடன் நிற்க இயலாது. ஐயமே கொள்ள வேண்டாம், போர் முடிந்துவிட்டது. போர் முடிந்துவிட்டதென்பதை அவர்களின் தன்முனைப்பு புரிந்துகொள்ளும் வரைதான் இக்களக் கொலை நிகழும். பெரும்பாலும் நாளை அதுவும் இயலும்” என்றான் சம்பன்.

அவர்கள் அன்று இரவு புழுதியில் விண்மீன்களை நோக்கி படுத்திருந்தார்கள். காற்றில் கூடாரங்கள் விலாவிம்மி அமைந்துகொண்டிருக்க, கொடிகளின் சிறகோசை இருண்ட வானில் ஒலித்தது. அருகே படுத்திருந்த வில்லவர்கள் பலரும் துயின்றுவிட்டிருந்தார்கள். நெடுநேரம் விண்மீன்களையே நோக்கி படுத்திருந்த சுஜயன் தொண்டையை கனைத்து மெல்லிய குரலில் எவரிடமென்றில்லாமல் “நான் வழிபடுதெய்வமென உளத்தே நிறுத்தியிருப்பவர் இளைய பாண்டவர் அர்ஜுனர்தான்” என்றான். சம்பன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் என்றோ ஒருநாள் களத்தில் அவருக்கெதிராக வில்லுடன் நிற்பேன் என்றும் எண்ணியிருந்தேன். ஏனெனில் நான் பிறக்கும்போதே எந்தையருக்கும் பாண்டவர்களுக்கும் பூசல் தொடங்கிவிட்டிருந்தது. அப்பூசல் ஒருபோதும் அமைவுறாதென்பது அரண்மனைப் பெண்டிரின் பேச்சில் தெளிவாகவே இருந்தது.”

சம்பன் “உங்களுக்கு மட்டுமல்ல இளவரசே, இன்று பீஷ்மரை சூழ்ந்து வில்கொண்டு செல்லும் நூற்றெண்மரும் இளைய பாண்டவர் அர்ஜுனரை தங்கள் உளத்தே ஆசிரியராக நிறுத்தி வில் தொட்டெடுத்தவர்களே” என்றான். “நீயுமா?” என்றான் சுஜயன். “ஆம், எனது ஆசிரியர் எனக்கு வில் கற்பிக்கையில் அதைத்தான் சொன்னார். காண்டீபத்தை எண்ணி வில்லெடுங்கள். காண்டீபனுக்கு நிகரென ஓர் அம்பையேனும் செலுத்துவேன் என உறுதி கொள்ளுங்கள். அவன் நிற்கும் களத்தில் நின்றிருக்க வேண்டுமென்று மூதாதையரை வேண்டிக்கொள்ளுங்கள். வில்லுக்குரிய தெய்வங்களனைத்தும் உங்களுக்கும் அருள்க என்றார். என் அன்னையரிடமிருந்து இளைய பாண்டவரின் பயணங்களையும் பெண்கோள் கதைகளையும் கேட்டு வளர்ந்தேன். ஆசிரியரிடமிருந்து அவர் வில்திறனை அறிந்துகொண்டேன். இந்நாள்வரை பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் எண்ணியதில்லை. பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் செவிகொண்டதுமில்லை” என்றான் சம்பன்.

சுஜயன் “நான் இளமையில் மஞ்சத்தில் நீர்கழிப்பவனாகவும் பேய்களையும் நாகங்களையும் கண்டு அஞ்சி துயில் விழிப்பவனாகவும் இருந்தேன். எந்தை என்னை அச்சம் களைந்து படைபயில்பவனாக ஆக்கும்பொருட்டு தவச்சாலைக்கு அனுப்பினார். அங்கு ஒரு செவிலியன்னையிடமிருந்து ஒவ்வொரு நாளுமென இளைய பாண்டவரின் பயணத்தின் கதைகளை கேட்டேன். அவர் நாகருலகுக்குச் சென்றது, விண் புகுந்து தன் தந்தையாகிய இந்திரனை கண்டது, மணிபூரக நாட்டுக்குச் சென்று சித்ராங்கதை அன்னையை மணந்தது என பல கதைகளை நூறுமுறைக்குமேல் சொல்லியிருக்கிறாள். சுபத்ரை அன்னையை அவர் துவாரகைக்குள் புகுந்து தூக்கி வந்த கதையை இன்று எண்ணுகையிலும் மெய்ப்பு கொள்கிறேன்” என்றான். சம்பன் சிரித்து “அது இளங்குழவியருக்கு சொல்வதற்கேற்ற கதைதான். ஒரு நகருக்குள் புகுந்து ஆயிரம் பேரை வீழ்த்தி ஒரு அம்புகூட உடலில் படாமல் மீள முடியுமா என்ற வினா எழும் வரைக்கும்தான் அக்கதைகளை கேட்க முடியும்” என்றான்.

“ஆனால் இன்றுவரை அவ்வினா எழாதவனாகவே என்னை வைத்துக்கொண்டுள்ளேன்” என்றான் சுஜயன். “களம் முற்றிலும் பிறிதொன்று. தேரிலிருந்து தவறி விழுந்து புரவிக்குளம்பால் மிதிபட்டு இறந்த மாவீரர்கள் இங்குண்டு” என்றான் சம்பன். சுஜயன் உடலை நன்கு நீட்டி கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டான். “அவருக்கு காண்டீபம் கிடைத்த கதை… அதை எப்போதும் ஒருமுறை சொல்லும்படி செவிலியன்னையிடம் கேட்பேன். அன்னைக்கும் பிடித்த கதை அதுதான்” என்றான். “காண்டீபம் இளைய பாண்டவரின் விற்திறன் மட்டும் தனியாக பிரிந்து ஒரு பொருளென்று உடல் கொண்டது என எண்ணுகிறேன். நான் ஒருமுறை செவிலியன்னையிடம் கேட்டேன், அவளுக்கு ஏன் காண்டீபம் அவ்வளவு உவப்பானதாக இருக்கிறதென்று. அம்மனிதர் மூப்பும் தளர்வும் கொள்வார், இன்றிருந்து நாளை மறைவார், இப்புவியில் காண்டீபம் என்றுமிருக்கும் என்றாள். அதன் பின் அச்சொல் எனக்கு ஒரு வில்லைக் குறித்ததே இல்லை. என்றும் அழியாத ஒன்று அது.”

“காண்டீபம் என்றுமிருக்கும். இந்த வரியைப்போல என்னை ஊக்கியது பிறிதொன்றில்லை” என்றான் சுஜயன். “செவிலியன்னையுடன் இந்திரப்பிரஸ்தம் சென்று நெடுநாள் அங்கு தங்கியிருக்கிறேன். பாண்டவ மைந்தருக்கு களித்தோழனாக. அன்று இளைய பாண்டவரின் வில்பயிற்சி நிலையம் இந்திரப்பிரஸ்தத்தின் தென்மேற்குக் காட்டிலிருந்தது. பாண்டவ மைந்தருக்கு அங்குதான் விற்பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு படைக்கலங்கள் வைக்கும் இல்லத்தில் சிறு சாளரத்தினூடாக காண்டீபத்தை பார்க்க முடியும். நான் இளையவனாகையால் கம்பிகளைப்பற்றி உடலைத் தூக்கி நுனிவிரலில் நின்று அதை பார்ப்பேன். கால் வலி கொண்டு உடல் தளரும் வரை நிற்பேன். சில தருணங்களில் அது ஒரு பொன்னிற நாகமென நெளிவதாக விழிமயக்கு ஏற்படும். அல்லது கண்ணுக்குத் தெரியாத நரம்புகள் இழுத்துக்கட்டிய ஒரு யாழ். என் கனவுகளில் அது உருமாறிக்கொண்டே இருந்தது.”

“அபிமன்யூ அன்று இளையோன். என்னை தூக்கு என்னை தூக்கு என்று கூவுவான். அவனுடைய மூத்தவர்களில் இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தன் சுருதகீர்த்தி அவனுடன் எப்போதும் போட்டியிடுவதுண்டு. பீமசேனரின் மைந்தர் சுதசோமனோ சர்வதனோதான் அவனைத் தூக்கி தோளில் வைத்து காண்டீபத்தை காட்டுவார்கள். கால்களை உதைத்தபடி இக்கம்பிகளை வளைத்துக்கொடுங்கள் மூத்தவரே, நான் உள்ளே சென்று அதை தூக்குகிறேன், அதை என்னால் எடுக்க முடியும் என்று அவன் கூவுவான். பின்னர் ஒருமுறை இளைய பாண்டவர் காண்டீபத்தை எடுத்து அதை மடித்து சிறிதாக்கி அவனுக்கு அளித்தார். அவர் எங்களுக்கு பயிற்சி அளித்த முதல் நாளிலேயே அவன் அதை கையிலெடுத்து முதல் முயற்சியிலேயே நாணேற்றி விண்ணில் பறந்த ஒரு புறாவின் நான்கு இறகுகளை மட்டும் அப்புறா அறியாமலேயே அம்பினால் சீவி நிலத்திட்டான்.”

நான் காண்டீபத்தை தொட விரும்பினேன். விழிகளால் பல்லாயிரம் முறை அதை தொட்டிருக்கிறேன். நீண்ட பயணம் ஒன்றுக்குப் பின் இளைய பாண்டவர் திரும்பி வந்தபோது நான் அங்கிருந்தேன். என் விருப்பத்தை விழிகளிலேயே அறிந்தார். அவர் மைந்தர்கள் இருவரும் சென்று அதை வாங்கி அம்பு தொடுத்து இலக்கில் அறைந்தனர். அவர் திரும்பி என்னைப் பார்த்து அருகே அழைத்தார். நான் நாணியவனாக பின்னடி எடுத்து வைத்தேன். அவர் எழுந்து வந்து என் தோள்களைப்பற்றி “வா” என்றார். “வேண்டாம் வேண்டாம்” என்று நான் சொன்னேன். “அஞ்சுகிறாயா?” என்றார். “இல்லை” என்றேன். “இது ஏந்துபவனுக்கு இணக்கமாகும் படைக்கலம், உன் வாழ்வில் பிறிதெவரும் இதைப்போல் உன்னை புரிந்துகொண்டவராக அமையப்போவதில்லை. எடு!” என்று காண்டீபத்தை நீட்டினார். உடைந்த குரலில் “தந்தையே, என் குறிகள் தவறும். என் கைகளும் விழிகளும் பயின்றவை அல்ல” என்று நான் சொன்னேன். “காண்டீபம் அறியும். பெற்றுக்கொள்” என்று சொல்லி அவர் வலியுறுத்தினார்.

என்னால் அதை வாங்க இயலவில்லை. என் கைகள் எழவில்லை. சற்று கடுமையான குரலில் “வாங்குக!” என்றார். நான் ஆணையை மீற முடியாமல் அதை வாங்கிக்கொண்டேன். நான் எண்ணியதுபோல் அது பேரெடை கொண்டிருக்கவில்லை. ஆனால் என்னை சற்று நிலைதடுமாறவைக்கும் அறியா விசை ஒன்று அதற்கு இருந்தது. “நாணேற்று!” என்றார். அபிமன்யூ என்னிடம் “அதைப்பற்றி எண்ண வேண்டாம், மூத்தவரே. எந்த வில்லையும் எப்படி நாணேற்றுவீர்களோ அதைப்போல நாணேற்றுங்கள். அது உங்களை அறிந்துகொள்ளும்” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு புரியவில்லை. நான் நாணேற்ற முயன்றபோது கன்று கயிற்றை உதறுவதுபோல தலைசிலுப்பி மும்முறை அது என்னை தவிர்த்தது. அதை திருப்பி இளைய பாண்டவரிடம் கொடுக்கச் சென்றேன். அவர் கைநீட்டாமல் “உம்” என்றார். “தந்தையே…” என்றேன் தளர்ந்த குரலில். மேலும் கடுமையாக “உம்” என்றார்.

சூழ்ந்து இருந்த உடன்பிறந்தாரின் விழிகள் என் உடலை சிலிர்க்கச் செய்தன. இன்று சிறுமைகொண்டு கண்ணீருடன் திரும்பப்போகிறேன். இன்றே இங்கிருந்து மீண்டு அஸ்தினபுரிக்கு கிளம்பிவிடவேண்டும். இனி ஒருபோதும் வில்லை கையால் தொடப்போவதில்லை. என் உடன்பிறந்தாரைப்போல இரும்புக்கதைதான் எனக்கான படைக்கலம். எந்த நுட்பமும் அற்றது, தோள் வல்லமையினாலேயே பயிலப்பட வேண்டியது. இது கரவுகள் நிறைந்த படைக்கலம். மானுடனுடன் விளையாடுவது. தன்னுள்ளிருக்கும் கள்ளத்தை எடுத்து இதனுடன் பொருத்திக் கொள்பவனே வெல்கிறான். பாம்பாட்டியின் பாம்பு. அவன் கையிலிருந்தாலும், அவன் பாடலுக்கு நெளிந்தாலும் ஒருபோதும் அவனால் அதை அறிந்துகொள்ள முடியாது.

என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் நின்றிருந்தேன். “நாணேற்றுக!” என்றார் இளைய பாண்டவர். என்ன செய்கிறேன் என்று அறியாமல் நாணை தொடுத்தேன். காண்டீபம் அதை ஏற்றுக்கொண்டது. சூழ நின்றிருந்த உடன்பிறந்தோர் வாழ்த்தொலி எழுப்பி சிரித்தபோதுதான் நாணேற்றிவிட்டிருப்பதை நானே உணர்ந்தேன். நாணேற்றிவிட்டேன். இதோ என் கையில் அமர்ந்திருக்கிறது காண்டீபம். பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு வில்லவரும் தங்கள் வில்லை காண்டீபத்தின் மறுவடிவமென்றே எண்ணுகிறார்கள். என் கையில் இதோ இருக்கிறது வில்லென்று மண்ணில் வந்த சிவம். என்னால் நிற்க இயலவில்லை. “அந்தத் தவளை இலக்கை அடி” என்று தந்தை சொன்னார். தொலைவில் மரத்தாலான சிறுதவளையொன்று கயிற்றில் கட்டப்பட்டு தொங்கியது. நாணை இழுத்து குறி நோக்கி அதை அறைந்தேன். அம்பு அணுகுவதற்குள்ளே தவளை துள்ளி அப்பால் சென்றது.

அன்று நான் வில்பயிலத் தொடங்கி ஓராண்டாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை குறி தவறுகையிலும் முதலில் ஒரு சோர்வும் பின்னர் எரிச்சலும்தான் எழும். மும்முறை ஒரு குறிதவறிவிட்டதென்றால் வில்லை தாழ்த்திவிடுவது என் வழக்கம். அன்று என் ஆணவம் சீறி எழுந்தது. என்னை வென்று ஒரு இலக்கு நின்றிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அடுத்த அம்பு மேலும் விசையுடன் சென்றது. தவளை துள்ளி தவிர்த்தபோது மேலும் வெறி எழுந்தது. பின்னர் பலமுறை அத்தருணத்தை எண்ணியிருக்கிறேன். அது காண்டீபம் என்னும் ஆணவம் எனக்கு ஆணையிட்டதனால்தான். என்னை எடுத்துச்சென்றது அதன் விழைவு. மூன்றாம் முறை தவளை என் அம்பை ஒழிந்தபோது பற்களை இறுகக்கடித்து வெறிக்குரலெழுப்பியபடி நான்காவது அம்பால் தவளையை சிதறடித்தேன். ஐந்தாவது அம்பால் அச்சிதறலை மேலும் சிதறடித்தேன். மீண்டும் ஏழு அம்புகளால் ஒவ்வொரு துண்டையும் சிதறடித்தேன். என்னையறியாமலேயே போர்க்குரல் எழுப்பி கொந்தளித்துக்கொண்டிருந்தேன்.

தன்னுணர்வு கொண்டபோது காண்டீபத்தை தாழ்த்தி தலைவணங்கினேன். “வந்து என் கால்தொட்டு வாழ்த்து பெற்றுக்கொள்” என்று தந்தை சொன்னார். “காண்டீபத்தை பீடத்தில் வைத்துவிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து அவர் காலடியில் தலைவைத்து வணங்கினேன். பெருவில்லவனாவாய் என்று அவர் என்னை வாழ்த்தினார்” என்றான் சுஜயன். சம்பன் “பிறர் தங்களை அணுவணுவாக வெற்றி நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறர்கள், இளவரசே. நீங்கள் இப்பிறவியின் முழு வெற்றியிலிருந்து வாழத்தொடங்கியிருக்கிறீர்கள்” என்றான். சுஜயன் “அதன் பின் நான் இந்திரப்பிரஸ்தத்துக்கு செல்ல நேரவில்லை. பாண்டவ மைந்தர் எவரையும் நேரில் பார்க்கவுமில்லை. அஸ்தினபுரிக்கு மீண்டேன். ஆயிரத்தவரில் தனித்தவனானேன். என் காண்டீபத்தை நானே அமைத்துக்கொண்டேன்” என்றான்.

அதை காண்டீபம் என்றே சொன்னேன். ஒருமுறை நான் வில் பயின்றுகொண்டிருக்கையில் அங்கே மூத்த தந்தை துரியோதனர் வந்தார். அவருடன் அங்கரும் இருந்தார். பன்னிருமுறை ஒரே இலக்கை அடித்து வானில் நிறுத்தி மீண்டபோது பெரிய தந்தை ஓடிவந்து என்னைத் தூக்கி தோளுடன் அணைத்துக்கொண்டார். உரக்க நகைத்தபடி “நம் குடியில் ஒரு பெருவில்லவன்! எண்ணியதே இல்லை! நம் தோள்கள் வில்லுக்குரியதென எவரும் சொன்னதுமில்லை” என்றார். நான் “காண்டீபம் குறிதவறுவதில்லை, தந்தையே” என்றேன். அவர் புருவம் சுளித்து “காண்டீபமா?” என்றார். “இது எனது காண்டீபம்” என்று நான் சொன்னேன். அவர் என்னை கீழே இறக்கி சினத்துடன் குனிந்து நோக்கி “என்ன உளறுகிறாய்? காண்டீபம் அவனுடையது மட்டுமே” என்றார்.

அங்கர் பெரிய தந்தையின் தோள்மேல் கைவைத்து “இப்புவியில் இன்று பல்லாயிரம் காண்டீபங்கள் இருக்கின்றன, அரசே” என்றார். சினத்துடன் “அது அவன் பெற்ற தவப்பரிசில். அவன் பெற்றதாயினும் நம் குடிக்கு தெய்வங்கள் அருளியது. பிறிதொன்றிலாதது அது” என்றார். அங்கர் நகைத்து “பிறிதொன்றிலாதது எத்தனை வடிவம் கொண்டாலும் மாறாது, அரசே” என்றார். பெரிய தந்தை அதை புரிந்துகொள்ளவில்லை. அங்கர் “இது அவன் அளிக்கும் நல்வாழ்த்து. நம் மைந்தருக்கு ஆசிரியரும் தந்தையுமாக அவன் அமைவது நன்றே” என்றார். பெரிய தந்தை மீசையை நீவியபடி “நன்று, அது உன்னிடம் எப்போதுமிருக்கட்டும்” என்றார்.

சம்பன் சிலகணங்கள் மறுமொழி சொல்லவில்லை. பின்னர் “அவர் ஏன் சினந்தார்?” என்றான். சுஜயன் “அவரை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல” என்றான். “என்னை இந்திரப்பிரஸ்தத்திற்கு வாழ்த்தி அனுப்பியவர் அவர். தன் செவிபட பாண்டவர்கள் எவரையும் பிறர் இழித்துரைக்க ஒப்பமாட்டார்” என்றான். “ஆம், ஒருமுறை அவையிலேயே யுதிஷ்டிரரை பேரறத்தான் என்றும் பீமசேனரை பெருந்தோளர் என்றும் அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றான் சம்பன். “இக்குடிகளில் எவராலும் பீமசேனரை எண்ணாமல் அரசரை எண்ணமுடியாது. அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள்.”

சுஜயன் “ஒவ்வொரு நாளும் அவர் எண்ணும் உடன்பிறந்தான் பீமசேனர் மட்டுமே. அவருடைய தனி மாளிகையில் பீமசேனரின் உடல் அளவுகளுடன், அதே தோளாற்றலுடன் கைவிடு பாவை ஒன்றை செய்து வைத்திருப்பதாகவும் அதனுடன் போர்புரிந்தே தன் தோள் ஆற்றலை பெருக்கிக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். யவன நாட்டிலிருந்து பொறியாளர் வந்து உருவாக்கியது அப்பாவை. அதை அங்கே அரண்மனைக்குள் ஓர் ஆலயத்தில் நிறுத்தி பூசனைகள் செய்வதாகக்கூட சூதர்கள் நகரில் பாடி அலைகிறார்கள். எவரும் அதை பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் பீமசேனருடன் தோள்கோப்பவர். உளம்கோக்காமல் தோள் இணையவியலாது என்பதே மற்போரின் நெறி என்பர்” என்றான்.

சம்பன் “பிறகெதற்கு போர்புரிகிறார்கள்?” என்று கேட்டான். “அதனால்தானோ என்னவோ” என்று சுஜயன் சொன்னான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “காண்டீபத்துக்கு எதிர்நிற்கிறோம்” என்று சுஜயன் தனக்குள் ஒலிக்க சொல்லிக்கொண்டான். “ஆம்” என்றான் சம்பன். “இப்போருக்கு அணிதிரண்டபோது பெருவில்லவராகிய பீஷ்மரையும் ஜயத்ரதரையும் அஸ்வத்தாமரையும் துரோணரையும் கிருபரையும் சூழ்ந்திருக்கும் தேர்வில்லவர்களை தெரிவு செய்தனர். ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் தங்கள் நாட்டிலிருந்தே அணுக்கர்களை கொண்டுவந்திருந்தார்கள். துரோணருக்கும் கிருபருக்கும் அவரவர் மாணவர்கள் அணுக்கர்களாக அமைந்தனர். பீஷ்ம பிதாமகர் நெடுங்காலமாக எவரையும் பயிற்றுவித்ததில்லை. ஆகவே அவருக்கான வில்லவர்களை படைகளில் இருந்து அவரே தெரிவு செய்தார்.”

முதல் வில்லவன் அவர் முன் சென்று நின்று மூன்று தாவும் மீன்களை விற்களால் அறைந்து உடைத்துக் காட்டியதும் “நீ எங்கு பயின்றாய்?” என்று அவர் கேட்டார். “நான் என் சிற்றூர் ஆசிரியரிடம் பயின்றேன்”  என்று அவன் சொன்னான். “அவர் எங்கு பயின்றார்?” என்று அவர் கேட்டார். “அதே சிற்றூரில் பிறிதொரு ஆசிரியரிடம்” என்று அவன் சொன்னான். “உங்கள் குருமரபில் எவரேனும் வில்முனிவராகிய சரத்வானிடம் பயின்றிருக்கிறீர்களா?” என்றார். “இல்லை பிதாமகரே, நாங்கள் எளிய ஷத்ரியர்கள்” என்றான். சில கணங்களுக்குப் பின் அவர் “நீ அர்ஜுனன் வில்பயிலுமிடத்தில் இருந்திருக்கிறாயா?” என்றார். “அவரை நான் பார்த்ததே இல்லை” என்று அவன் சொன்னான். “ஆனால் ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும் பொழுதெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கிறேன். என் ஆசிரியர் அவர் வில்வென்ற கதைகளைச் சொல்லி என்னை பயிற்றுவித்தார். என் உள்ளத்தில் அவரை வரைந்துகொண்டேன். அவரென என்னை நிறுத்தி முதலம்பை எடுத்தேன். இங்கு சற்று முன் எய்த இறுதி அம்புவரை என்னுள்ளிருந்து எய்தது அவரே” என்றான். “உம்” என்று பீஷ்மர் தலையசைத்தார்.

தொலைவிலிருந்து நோக்கியபோது அவர் அதை விரும்புகிறாரா சினம் கொள்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நூற்றெட்டு வீரர்களை அவர் தெரிவு செய்தார். இறுதியாக நான் சென்று நின்றேன். புருவம் சுளித்து “நீ வில்லவனா?” என்று அவர் கேட்டார். பின் என் விரல்களைப் பார்த்து “ஆம், விரல்கள் வில்லறிந்தவை” என்று சொல்லி தலையசைத்தார். “நானும் பார்த்தரே” என்று சொன்னேன். “ஆம், இந்நூற்றெண்மரும் அவனே” என்று சொல்லி அவர் தலையசைத்தார். “நன்று, களத்தில் நாம் அவனை எதிர்கொள்ளப் போகிறோம். அவனே பெருகி அவனுக்கு எதிர்நிற்றல் நன்று” என்றார். முகத்தில் அப்போதும் புன்னகை எழவில்லை. ஆனால் விழிகளில் கனிவு இருந்தது.

சம்பன் “முதல் நாள் நானும் அதையே எண்ணினேன். போர் முரசுகள் ஒலிக்க படைகிளம்பி நம்மை நோக்கி வந்தபோது பல்லாயிரம் இளைய பாண்டவர்கள் வில் பூண்டு எதிர்வருவதாகத் தோன்றியது. அவருடைய படையினர் ஒவ்வொருவரும் அவரென்றே ஆகிவிட்டிருக்கின்றனர்” என்றான். “அது நம் உளமயக்கல்ல. மெய்யாகவே அப்படையில் ஒவ்வொருவரிலும் ஒருதுளியேனும் அவர் இருக்கிறார்” என்றான் சுஜயன்.

போர் தொடங்குவதற்கான கொம்போசை எழுந்தபோது மெல்லிய விதிர்ப்பொன்று அவன் காலில் ஓடிச்சென்றது. ஆனால் உள்ளத்தை அது அடையவில்லை. சொல்லின்றி அது உறைந்து கிடந்தது. போர்முரசுகள் எழுந்து அடங்கிய பின்னரும் முதல் அம்பு எழவில்லை. கௌரவப் படைகளின் போர்க்கூச்சல் எழுந்து சற்று நேரம் கழிந்து பாண்டவப் படைகளில் எதிர்க்கூச்சல் எழுந்தது. சம்பனின் நாணில் காற்று கிழிபடும் ஒலியை சுஜயன் கேட்டான். அவன் புரவிகளில் ஒன்று பொறுமையிழந்து காலெடுத்து வைக்க தேர் அசைந்தது. எதிரே பாண்டவப் படைகளின் முகப்பு இடிந்து சரியும் பெருங்கோட்டை என அவர்களை நோக்கி வந்தது. “காண்டீபம் எழுகிறது” என்று சம்பன் சொன்னான்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்
அடுத்த கட்டுரைசென்னை தல்ஸ்தோய் விழா