டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

1

பத்தாண்டுகள் முன்பு என நினைக்கிறேன். அது ப்ளாக்குகள் பரவலான காலகட்டம். எப்போதும் நிகழ்வதைப்போலசீண்டும் தன்மை கொண்ட, வம்பளக்கும், பண்பாட்டு அரசியல் வம்பு பேசும் ப்ளாக்குகள்தான் நண்பர்களிடையில் அதிகமாக வாசிக்கபட்டன. கல்லூரிகளில் விகடன், நக்கீரன் படித்த தலைமுறை மெல்ல வேலைக்கு வந்ததும் இதன் பக்கம் திரும்பினார்கள். செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் தவிர்த்து தாங்கள் இணையத்தில் படிப்பதாலேயே வெகுஜன அரசியலை தாண்டி தங்களுக்கு மேலதிக அரசியல் தெளிவு இருப்பதாகவும் எண்ணினார்கள் உலக அரசியலில் நடக்கும் சர்வதேச அரசுகளின் (உ.தா : அமெரிக்க ஏகாதிபத்தியம்)  மோசடிகளை பற்றி மிகமிஞ்சிய கவலை கொண்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள்.

 

அனைத்தும் வாரயிறுதியில் நிகழும் மதுக்கூடுகையில் மொத்தமாக கொப்பளிக்கும். முதன்மையாக சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான தாக்குதல் அல்லது வேறு வார்த்தைகளில் பிராமண வெறுப்பு. அடுத்தது திராவிடம் vs ஆரியம். அங்கு ஆரம்பித்து காந்தி மீதான வசை வரை அது நீளும். இறுதியாக ஈழப் பிரச்சனை. அனைத்தும் சலித்து ஓய்ந்து இளையராஜாவின் பார்ட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு போதை எகிறி வாந்தியுடன் சனிக்கிழமை காலை விடியும்.

 

இப்போதும் பெரிதாக நிலைமை மாறவில்லை. ப்ளாக்குகளின் இடத்தை யூடியூப் சேனல்கள் எடுத்துக் கொண்டுள்ளன. நாலு அரசியல் சார்ந்த கேளிக்கை வீடியோக்களை பார்த்ததும் தன்னை அரசியல் விழிப்புணர்வு கொண்டவனாகவும் தந்தி, புதிய தலைமுறை செய்தி சேனல்கள் பார்ப்பவர்களைக் கண்டு பரிதாபம் கொண்டு அவர்களை “அரசியல்படுத்தப்பட” வேண்டியவர்களாகவும் அதற்கான கடமை தனக்கு தனக்கு இருப்பதாகவும் எண்ணிக் கொள்கின்றனர்.

 

எப்போதையும் விட இன்றைய காலகட்டதில் இச்சிக்கல் அதிகமாக உள்ளது. நாம் ஏதாவது ஒரு தரப்பு எடுத்தே ஆகவேண்டும். புதிதாக உருவாகும் நண்பர்களிடையே எழுந்தால் வரும் முதல் கேள்வி பிஜேபி ஆதரவு அல்லது எதிர்ப்பு. இரு பக்கங்களிலும் இருக்கும் எல்லைகளை சொன்னால் நிலையான புத்தி இல்லாத குழப்பவாதி எனவே காணப்படுவோம். சுமூகமான, தனிமனித சுதந்திரம் பாதுகாப்பு நிறைந்த சூழல் உள்ள இப்போதே இந்த நெருக்கடி இருந்தால் 20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்த ரஷ்யாவின் நிலமை எப்படி இருந்திருக்கும்.

 

டாக்டர் ஷிவாகோ நாவல் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நினைவு எழுந்து கொண்டே இருந்தது. தொடர் அரசியல் கொந்தளிப்புகளால் ததும்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் (1901 ~ 1940) நிகழும் நாவலிது. இந்த மொத்த காலகட்டமும் அதிகாரம் பல்வேறு கைகளுக்கு மாறி ருஷ்யாவின் ஒவ்வொரு பகுதியும் அதற்கேயுரிய தனிச் சிக்கல்களுடன் திணறிக் கொடிருந்தது. 1905ல் முதல் தொழிலாளர் புரட்சி, பின்னர் முதல் உலகப் போர்,அதன் விளைவான ராணுவக் கிளர்ச்சியால் உருவாகும் தாராளவாத சோசலிச அரசு, அதை அழித்து எழும் போல்ஷ்விக் புரட்சி, அது உடைந்து வெள்ளை, சிகப்பு ராணுவத்திற்கிடையேயான யுத்தம், அதில் வென்று உருவாகும் சிகப்பு ராணுவத்தின் லெனின் அரசு என மொத்த ருஷ்ய தேசமே நிலையழிந்து கொண்டிருந்த காலகட்டமே இந்த நாவலின் களம்.

2

 

இந்நாவல் இரண்டு சரடுகளால் பின்னப்பட்டது. ஒன்று டாக்டர் ஷிவாகோவின் ரசனை, அவனுடைய உறவுகள், அதன் உறவுகளால் உருவாகும் அலைக்களிப்புகள் என ஒரு சரடு. இன்னொன்று வெளியே நடக்கும் அரசியல் கொந்தளிப்பு. அதில் சிக்கி தடுமாறும் உதிரி கதாப்பாத்திரங்களின் சித்திரம் என இன்னொரு சரடு.

 

சிறுவயதில் ஹோலோகிராம் அச்சிட்ட ஸ்கேல் கிடைக்கும். இரு வெவ்வேறு கோணங்களின் பார்த்தால் இரண்டு வெவ்வேறு சித்திரங்கள் தெரியும். ஒரு கோணத்தில் இதை முற்றிலும் மனிதர்களுக்கிடையேயான உறவுச்சிக்கல்களைப் பற்றிய நாவல் எனக் கூறிவிடலாம். இதில் வரும் புறம் என்பது மனிதர்கள் சந்தித்துக்கொள்ளவும் அவர்களுக்குக்கான உரசல்களுக்கான நிமித்தம் மட்டுமே எனத் தோன்றும்.

 

இன்னொரு கோணத்தில் இது அரசியல் புரட்சியும் அது உருவாக்கும் வாழ்க்கைச் சூழல் பற்றிய படைப்பு எனவும் கூறலாம். இதிலிருக்கும் அகம் அதை விடப் பன்மடங்கு பெரிய புறத்தால் சுழற்றியடிக்கப் படும் சருகு மட்டுமே எனவும் தோன்றும்.

 

இரண்டு கூற்றுக்களும் வியப்பூட்டுமளாவுக்கு சரியானது. ஒன்றை மறுத்தால் அதே காரணத்தால் மற்றொன்றையும் மறுக்க முடியும். ஒன்று இன்னொன்றால் நிகர் செய்யப்படும் இந்த சமனிலைத்தன்மைதான் இதன் செவ்வியல் அம்சம்.

3

 

இந்நாவலின் மைய தரிசனமென்பது சுற்றி நடக்கும் புரட்சி கோஷங்களுக்கு நடுவே தன் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை கொண்டுவந்து நிறுத்தி அதன்மூலம் எழுப்பப்டும் கேள்விதான். புரட்சி என்பது கருத்தியலின் அதிகாரம் கொண்டது. கருத்தியலென்பது தர்க்கத்தின் அடிப்படை கொண்டது. ஆனால் அதற்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையோ முற்றிலும் தர்க்கத்தில் அடங்காத உணர்வுகளாலும், அறிய முடியாத மனித ஆழங்களாலும் முடிவெடுக்கட்டு முன்னகர்வது. அப்படி இருக்கும் பட்சத்தில் முன்னிலைப்படுத்தப்படும் புரட்சி என்பது மானுடனின் இயல்பான அகச்சிக்கலை உணர்ந்து வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து எழுந்த ஒன்றா? மனித வாழ்விற்கு முன்னிலை தந்து அதற்கேற்ப நெகிழும் தன்மை கொண்டதா? இல்லையென்றால் அது எவ்வளவு உன்னதமான லட்சியம் கொண்டிருப்பினும் நம் வாழ்க்கையுடன் முரண்படுவதினாலேயே பெரும் வன்முறையும் அடக்குமுறையும் பேரழிவையும் நோக்கி மட்டுமே செல்லும் எனக் காட்டுகிறது.

 

மனிதமனத்தின் விசித்திரத்தை அதன் நடத்தையின் அறியமுடியாமையை கிட்ட்டத்தட்ட அனைத்து கதாப்பத்திரங்களின் வழியாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக நாவலின் இரண்டாவது முக்கிய பாத்திரமான லாராவின் (Lara) வாழ்க்கையை உதாரணமாக கூறாலாம். சிறுவயதிலுருந்தே தாயுடன் மட்டுமே வளரும் லாராவின் குடும்பத்திற்கு வக்கீலான கோமரோவ்ஸ்கி(Komarovsky) பணவுதவி செய்துவருகிறான். கோமராவ்ஸ்கி ஒரு காமுகன். அவள் தாயுடனான உறவில் இருப்பது அவளுக்கு தெரிந்திருந்தும் அவனால் லாராவை தன் வசம் இழுக்க முடிகிறது. பதின் பருவத்து சஞ்சலங்களை நன்கு அறிந்து எங்கு பிடியிறுக்கவேண்டும் எங்கு தளரவிடவேண்டுமென்பதை அறிந்து அவளுடன் உறவை தொடர்கிறான். தன்மேல் வெறுப்புடனும் அதன் எதிர் திசையான கட்டற்ற வேட்கையுடனும் லாராவின் நாட்கள் நகர்கின்றன. அதேசமயம் தன்னிடம் மயங்கிய தன்னை விட இளையவனான பாஷா(Pasha)வின் காதலையும் ஏற்றுக்கொள்கிறாள். தன் படிப்பின் இறுதியாண்டில் தன் தோழி மூலம் கோலோகிரிவோவ் (Kologrivov) குடும்பத்தில் ஆசிரியராக வேலை கிடைக்க அதன் மூலம் கோமோரோவ்ஸ்கி பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகி அதில் வரும் வருமானத்தில் பாஷாவையும் படிக்க வைக்கிறாள்.

 

கோலோகிரிவோவ் குடும்பம் அவளிடம்எவ்வித எதிர்பார்ப்புமற்ற பெரும் அன்புவைத்திருக்கிறது. ஒரு இக்கட்டில் தன் சகோதரனுக்காக ஒரு பெரும்தொகையை அக்குடும்பம் தருவதோடுமட்டுமல்லாமல் அப்பணம் திரும்பப்பெறுவதற்கான எவ்வித எதிர்பார்ப்புமற்று இருக்கிறது.இந்த அம்சம் லாராவை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அந்த வேலையையே விட்டுவிடுகிறாள். லாராவின் இந்த நடத்தைக்கு என்ன காரணம் சொல்ல முடியும்? லாரா மிகச் சிறு வயதிலேயே மனிதனின் கோர முகத்தை கண்டுவிட்டாள். அதன் மூலம் தனக்குளிருக்கும் குரூரத்தையும். துளிராயிருக்கையிலேயே அவளுள் ஒரு கோணல் விழுந்து விட்டது. அவளுடைய அனைத்து இயல்புகளும் அந்த கோணலை சுற்றியே வளர்ந்துவிட்டது. இக்குடும்பத்தின் தூய அன்பு ஒரு வகையில் அவளுக்கு தான் இழந்துவிட்ட ஒருபோதும் அடைய முடியாத அந்த ஒன்றை நினைவூட்டிக் கொண்டேயிருப்பதாலா?

 

இதைவிட இன்னும் விசித்திரமானது பாஷவிடம் அவள் நடந்துகொள்ளும் விதம். லாராவைவிட இளையவன் அவள்  பண உதவியில் படித்தவன். அவனை எப்போதும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட கோமரோவ்ஸ்கியின் இன்னொரு சற்று மேம்பட்ட வடிவம். தான் அனுபவித்த வலியை இருளை வேரொரு வகையில் நிகர்செய்துகொள்கிறாள். பெண்களுக்கேயான தனிப்பட்ட வழியில்.இதேபோன்ற மனிதமன ஆழத்தின் எண்ணற்ற விசித்திர வடிவங்களாக நாவல் முழுக்க மனிதர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.

 

நாவலின் அடுத்த முக்கிய அம்சம் நாவலின் முதன்மை கதாப்பாத்திரமான யூரி ஷிவாகோ மூலம் சொல்லப்படுவது.நாவலின் அடுத்த முக்கிய அம்சம் மையதரிசனம் சார்ந்த கேள்விகளுக்கான விடை நோக்கிய தேடலை முன்னெடுப்பது. அது சார்ந்த சில வெளிச்சங்களை சில பாதைகளை முன்வைப்பது.

 

4

 

அது நாவலின் மையக்கதாபாத்திரமான யூரியின் வாழ்க்கை மூலம் சித்தரிக்கிறது. முதன்மையாக அது தனிமனிதனை, அதன் தனித்தன்மையை முன்வைக்கிறது. நம்மை சுற்றி ஒரு பெரும் சுழலென கருத்தியலதிகாரம் சூழ்ந்திருக்கும் போதும் தன் நுண்ணுனர்வெனும் சிறு மெல்லிய சுடரை அணையாமல் தன் பலவீனமான கரங்களைக் கொண்டேனும் காத்துக் கொள்வது. சுழலின் பெருவிசையயைத் தாண்டி நம்மால் செல்ல முடியாவிடினும் நம் பாதையும் இலக்கும் தடை படினும், அச்சூறாவெளியின் கொடூரக் கரங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நம் சுயத்தை தொலைத்துவிடாமலிருக்க நம் கைச்சுடரொளி போதும். அங்கேயே மடிய நேரிட்டாலும் இச்சுடரின் மெல்லிய கதக‌தப்பில் நம் உயிர் பிரியும்.

 

யூரி அப்படி தன் பற்றுகோலாக, தன் சுயமாக, இயற்கைமீதான லயிப்பும், கவிதையும் அதன் புறவடிவமான லாராவும் இருக்கிறது. அவனால் ஒரு மேலான வாழ்வை வாழ முடியவில்லைதான். கடைசியில் அவனும் மக்கி அழிகிறான் தான். ஆனால் ஒரு போதும் அவன் சுயத்தை இழப்பதில்லை. நாவலில் வரும் “வெற்றிகரமாக” வாழும் மற்றவர்களைப் போல் ஒரு போலி முகமூடி அணிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு அது போலி என்றுகூட தெரியாத அளவிற்கு, உள்ளுள்ள குரல் எழ முடியாத அளவிற்கு அதன் மீது கோட்பாட்டையும், தர்க்கத்தையும் அள்ளி அள்ளி மூடுகின்றனர். இத்தனைக்குமடியிலிருப்பது வெறும் உயிர்வாழும் இச்சை மட்டுமே. அவர்களனைவருக்கும் உள்ளூரத் தெரியும் தடம் மாறி நடந்து கொண்டால் தன் உயிர் நிச்சயமில்லையென. அதைமறைக்கத்தான் இத்தனை போலி முற்போக்குவாதமும், வர்க்க ஒழிப்புக் கூச்சலும்.

 

யூரி ஷிவாகோ சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து அவனுடைய மாமாவின் பொறுப்பில் சிறிதுகாலம் வளர்கிறான். பின்னர் மாஸ்கோவில் க்ரோமெகோ குடும்பத்தினரிடம் அடைக்கலம் பெற்று அவர்களின் ஒருவனாக டோன்யா(Tonya) மற்றும் மிஷாவுடன் வளர்கிறான். தன் மாமாவைப் போல் இலக்கியத்திலும் கவிதையிலும் ஈடுபாடுள்ள யூரி மருத்துவம் படித்து டாக்டராகிறான். எதேச்சையாக லாராவின் தாயின் உடல் நலமினமைக்காக டாக்டருடன் வரும் ஷிவாகோ பார்த்த கணமே அவள் ஈர்ப்பில் லயிக்கிறான். ஆனால் அடுத்த சந்திப்பு நிகழாமலே போகிறது. தன்னை வளர்த்தவர்களின் விருப்பத்திற்கேற்ப டோன்யாவை மணந்துகொள்கிறான்.

 

உலகப் போரின் போது அரசின் சார்பாக ‍‍‍‍‍‍‍‍‍‍‍போர்முனையில் மருத்துவப் பணிபுரிந்துவிட்டு வந்து மீண்டும் மாஸ்கோ வருகிறான். இப்போது அங்கு நிலைமை மாறிவிட்டது. அதிகாரம் அரசிடமிருந்து போல்ஸ்விக்குகளுக்கு(Bolsheviks) மாறி வருகிறது. இதை உணர்ந்து தன்னுடன் மருத்துவமையில் பணிபுரிந்த சக ஊழியர்கள் விலகி விடுகின்றனர். யூரி மட்டும் தொடர்ந்து செல்கிறான். அவனுக்கு தாராளவாத சோஸலிஸ்டுகளின் மீதும் பெரிய அபிமானம் இல்லை. ஆனால் அவனுடைய நுண்ணுணர்வு சொல்கிறது அப்போது செய்ய வேண்டியது எதுவென. அப்போது எது முக்கியமென. அரசியல் நிலைப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தான் செய்ய வேண்டியது தன் கடமையை. அப்போது போல்ஷ்விக்குகள் அரசு அமைத்தாலும் அவன் அதைத் தான் செய்துகொண்டிருப்பான். அவன் பதில் கூற வேண்டியது வெளியிலிருக்கும் அரசுக்கல்ல. உள்ளிருக்கும் ஒன்றுக்கு. எது அவனை இயற்கையின்பால் கவிதையின்பால் கொண்டு சென்றதோ அதற்கு. ஆனால் அவன் சக ஊழியர்களோ கொதிக்கின்றனர். அவனை முற்போக்கு மனநிலையற்ற, மேலான அரசியல்விழிப்புணர்வற்ற சுயநலவாதியென வசைபாடுகின்றனர். ஆனால் யூரிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது அவர்களை ஆட்டுவிப்பது வெறும் உயிர்பயம் மட்டுமேயென. எழுந்து வரும் போல்ஸ்விக்குகளுக்கெதிராக செயல்பட்டால் உயிராபத்தென. அதை அவர்களிடமிருந்தே மறைக்க அவர்கள் கொள்ளும் பாவனைகளை எண்ணி உள்ளூர எரிச்சலடைகிறான்.

 

 

5

ஆனால் அவனாலும் மொத்த புறச்சூழலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள இயல்பான எல்லைகளினால் மெல்ல தன்னை சிதைத்துக் கொள்கிறான். மருத்துவம் செய்வதை நிறுத்திக் கொள்கிறான். போதைப் பொருள்(Weed) உபயோகிக்கிறான். கடைசியில் மாஸ்கோவின் தெருவில் விழுந்து இறந்து போகிறான். ஆனால் ஒரு போதும் அவன் தன்னை ஏமாற்றிக்கொள்வதில்லை. கருத்தியல், முற்போக்கு என்ற பேரில் தன் பலவீனங்களை மறைப்பதில்லை.

 

மீண்டும் மீண்டும் அவன் முன்னெழுந்து வரும் இயற்கையின் பேரெழிலும் தான் கவிதை படைக்கும் போது நிகழும் அபூர்வத் தருணங்களும் அவன் சுயத்தை நிறைத்துக் கொண்டேயிருக்கிறது. மேலும் அவ்வுணர்களின் புறவடிவமான லாரா. மரங்களும் ஓடைகளும் மீண்டும் மீண்டும் அவனை லாராவை நோக்கியே செலுத்துகின்றன. போர்முனையில் பணிபுரியும் போது அங்கு நர்ஸாக லாராவும் இருக்கிறாள். ராணுவத்திலினைந்த தன் கணவனிடமிருந்து பதிலேதும் வராததால் ஆசிரியை வேலையைத் துறந்து மருத்துவம் படித்து நர்ஸாகிறாள். அவர்களிருவரும் தொடர்ந்து இணைந்து பணிபுரிந்தாலும் யூரி லாராவிடம் பழக தயக்கம் காட்டுகிறான். எங்கு அவள் மீதான தன் லயிப்பு தன்னை மீறி வந்துவிடுமோவென நினைக்கிறான். அதுவும் ஒரு நாள் நடந்துவிட லாராவும் யூரியும் அதை புன்னகையடன் கடந்துவிடுகிறார்கள். தன் கணவனை தேடி வந்த லாராவிற்கு பேரதிர்ச்சியாக பாஷா எதிர்படைவீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு விட்டானென  அவன் படையில் உடன் பணிபுரிந்த கலீலின் கூறுகிறான். அதற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் லாரா தன் ஊருக்கே திரும்பிகிறாள்.

 

அவர்களிடையெயான அடுத்த சந்திப்பு மேன்டும் யூரியாடின் என்ற ஊரில் நிகழ்கிறது. போரினால் மாஸ்கோவில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்படவே யூரி தன் குடும்பத்தினருடன் தன் மனைவியின் அன்னை ஊரான யூரியாட்டினருகேயுள்ள வாரிகினோ(Varykino)விற்கு செல்கின்றனர்.செல்லும் வழியில் யூரி சிகப்பு ராணுவத்தின் வீரன் ஒருவனால் சந்தேகப்படும் குற்றவாளியென கைது செய்யப்பட்டு அவனுடைய அதிகாரி ஸ்டெர்லின்கோவ்(strelnikov) முன்பு நிறுத்தப்படுகிறான். மாஸ்கோவிலிருந்து கிளம்பி வரும் வழியிலேயே ஸ்டர்லின்கோவ் பற்றி நிறைய கேள்விப்படுகிறான். கண்டிப்பான, ஈவு இரக்கமற்ற, கறாரான கொள்கைகளின் படி நடப்பவென அவனைப்பற்றி சொல்லப்படுகிறது. அப்படியான அதிகாரி முன்பு வந்து நிற்கும் யூரி பெரும் அதிர்ச்சி அடைகிறான். அவன் பார்ப்பது அங்கு பாஷாவை. லாராவின் காதலான அறிமுகமாகும் போது அவன் பெண்மைத்தன்மை நிறைந்தவனாக, உணர்ச்சிகரமானவனாக இருக்கிறான். திருமணமான அன்று லாரா தனக்கு கோமரோவ்ஸ்கியுடனான கடந்த கால வாழ்வை சொல்லக்கேட்டு அறிந்ததிலிருந்து மெல்ல வேறொருவனாகிறான். மொழியிலிருந்த ஆர்வம் மாறி அறிவியல் பக்கம் திரும்புகிறது.

 

பின்னர் அரசின் சார்பாக முதல் உலகப் போரில் பங்கேற்கும் போது அவன் சக வீரனாக இருக்கும் யூரியின் மூலமாக அவனது சித்திரம் காட்டப்படுகிறது. இப்போது பாஷா திடமான‌, குழப்பமற்ற அறிவாளியாகக் காட்டப்படுகிறான். பாஷா எதிர்ப்படையிணரால் சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து அவனுடைய மற்றத்திற்கான காரணாம் முழுக்க முழுக்க யூகத்திற்கு விடப்படுகிறது.

 

பாஷாவின் இத்தொடர் மாற்றங்களுக்கான காரணங்கள் என்ன? தன் திருமண இரவில் நடந்த அந்த சறுக்கல்தான் முதல் புள்ளி. தான் உபயோகப்படுத்தப்பட்டு  விட்டோமோ என்ற எண்ணம். அதிலிருந்து வெறொரு ஆளுமையை மெல்ல மெல்ல புனைந்து எடுக்கிறான். தன்னிலிருக்கு இயல்பான மெல்லுணர்வுகளை நசுக்குகிறான். தன்னை இரவும் பகலுமாக முயன்று “அறிவாளியாக” ஆக்கிக் கொள்கிறான். மேலும் மேலும் ஆண்மையானவனாக மாற்றிக் கொண்டு அரசு ராணுவ அதிகாரியாக மாறி அதிலிருந்து ஒரு சந்தர்ப்ப சுழிப்பில் அரசுக்கெதிரான சிகப்பு ராணுவ அதிகாரியாகிறான். எல்லாம் அந்த ஒரு முள்ளால். அது உண்டாக்கிய ரணத்தால். தன்னுடைய அத்தனை அரசியல், அறிவுச் செயல்பாடுகளும் அந்த ஒன்றுக்கான எதிர்வினையாக, அந்த ஒன்றை கடக்கும் முனைப்பாக. இப்படைப்பு தரும் திறப்பென்பது இப்படி எத்தனை மக்களால், அதிகாரிகளால் புரட்சி நிகழ்கிறது. அன்று ருஷ்ய புரட்சியாளர்களின் எத்தனை உள்ளங்கள் இப்படியான சறுக்கல்களால், அவமானங்களால், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்களால் “புரட்சி” வேடம் அணிய நேரிட்டிருக்கும். எத்தனை புரட்சியாளர்களுக்கடியில் இத்தகைய உறவுச்சிக்கல்கள் ஆதாரப்புள்ளியாக இருந்திருக்கும். இப்போது படிக்கும்போதே இந்த அபத்ததின் விசித்திரத்தின் வீரியம் திகைக்க வைக்கும்போது, கிட்டத்தட்ட அதன் சமகாலத்தில் எழுதிய அதன் ஆசிரியன் பைத்தியமாகாமல் இருந்ததே ஆச்சிரியம் தான்.

 

ஸ்டெர்லின்கோவின் முடிவு வரலாற்றின் வெறுமையை நோக்கி நம்மை இழுத்துச் செல்வது. நாவலின் இறுதி பகுதியில் லாராவைத் தேடி ஸ்டெர்லின்கோவ் யூரியிடம் வருகிறான். இப்போது “கட்சியிலில்லாத” ராணுவத்தின் தலைவர்களை புதிய சிகப்பு ராணுவத்தின் அரசு வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அதில் அவனும் ஒருவன்.

 

அப்போது லாரவின் நலனுக்குகாகவும், அவள் மகளின் நலனுக்காகவும் கோமரோவ்ஸ்கியுடன் கிழக்கு ரஷ்யாவிற்கு யூரி அனுப்பி விட்டதை அறிகிறான். தன் மேல் லாராவிற்கிருக்கும் அன்பை யூரியிடமிருந்து கேட்டு நெகிழ்கிறான். அக்கணத்தில் லாராவிடன் வெளிப்பட்ட சிறு சிறு அசைவையும் நுணுக்கமாக கேட்டுத் தெரிந்துகொள்கிறான். ஆனால் இத்தனை நாட்களை தான் கட்டியெழுப்பிய முகத்தை மாற்றாமல் யூரியிடம் வெற்றுச் செருக்குடன் பேசுகிறான். லாராவிற்கும் தன் மகளுக்கும் நேர்ந்த இன்னல்களுக்கான பலனை முழுதாக திருப்பியளிக்காமல் லாராவை சந்திக்க மாடேனென்கிறான். மறுநாள் காலையில் அவன் படுக்கையில் இல்லாதைக் கண்டு வெளிவரும் யூரி வீட்டின் பின்புரம் உறைந்த அடர்சிவப்புப் பனியில் முகம் புதைந்து இறந்து கிடக்கும் பாஷாவைப் பார்கிறான். அன்று அதிகாலையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். வெறுமையின் உச்சத்தில் முடியும் வாழ்க்கை. எந்த பக்கமும் நகர முடியாமல் நாலாப்புறமும் நெருக்கடி அழுத்த விரக்தியில் முடிவடையும் வாழ்க்கை!

 

யூரி வாரிகினோவிற்கு இடம்பெயர்ந்தபின்பு அருகிலுள்ள யூரிடியான் நூலகத்தில் லாரவை மீன்டும் சந்திக்கிறான். இம்முறை அவர்களிடையே வலுவான உறவு உண்டாகிறது. அவ்வுறவின் பிணைப்பு இறுக இறுக யூரி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். மேலும் தனக்கும் டோன்யாவிற்கும் இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கும் செய்தி அறிந்ததும் அவ்வுணர்வு மேலும் வலுப்பெறுகிறது. இறுதியில் லாராவின் கண்ணீருடன் விடைபெற்று திரும்பும் போது வழியில் சிகப்பு ராணுவத்திற்கு ஆதரவான புரட்சிக்குழு ஒன்றிடம் சிக்கிக் கொள்கிறான்.

 

அங்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளும் வகுத்துக் கொள்ளவியலா அபத்த நிகழ்வுகளுடன் காலம் செல்கிறது. சில வருடங்களில் அங்கிருந்து தப்பி மீண்டும் லாராவின் இல்லத்திற்கு வந்து அவளுடன் வாரிகினோவிற்கு சென்று அங்கு இருக்கிறார்கள். வாரிகினோவில் லாராவுடன் இருக்கும் அந்நாட்கள் அவனுடைய நாட்களின் பொற்கணங்களாக இருக்கின்றன. நீண்ட நாட்களாக ஆரம்பித்து நிறுத்திய தன் படப்பாற்றல் மீன்டும் தன்னை சூழ்ந்து கொள்ள இரவுகள் முழுவதும் கவிதைகள் எழுதுகிறான். தன்னை முழுதும் கரைத்து தனக்கேயான வெளியில் திளைக்கிறான்.

 

அங்கு தான் லாராவை முழுமையாக அறிய வாய்ப்பு அமைகிறது. அவர்களின் பேச்சு பாஷாவைப் பற்றியும் கோமொரோவ்ஸ்கி பற்றியும் நீள்கிறது. அப்போது ஒரு கலைஞனுக்கேயான உள்ளுணர்வுடன் கூறுகிறான். இப்போது வந்து கோமரோவ்ஸ்கி அழைத்தால் அவனுடன் சென்றுவிடுவாள் என. முதலில் லாரா அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு அவன் கூறியது சரியென ஒப்புக் கொள்கிறான். அது மேலும் விளக்கப்படவில்லை. ஆனால் அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தன் சுயம் முதிரும் முன்னரே அப்போதைய தன் எல்லைக்கு பன்மடங்கு மேலான ஒரு உலகை காட்டிய ஒருவன். தந்தையும் காதலனுமாக இருந்த ஒருவன். அது கீழ்மையாக இருந்தாலும் அதுவும் ஒரு ஆற்றலே. மேன்மையில் தூயதில் கிடைக்கும் அதே வீரியமான அனுபவம் கீழ்மையிலும் கிடைக்கிறது. இத்தனை நாள் யூரியுடன் கிடைத்த அனுபவத்திற்கு நேரெதிரான ஒன்று அதேயளவு வலிமை கொன்டது. சிகரமுனையை பார்த்த மனம் அதேயளவு பாதாளத்தில்தலைகுப்புற விழவும் ஏங்குகிறது.

 

 

7

அதேபோல் கோமரோவ்ஸ்கி வந்து தனக்கு கிழக்கு ருஷ்யாவில் அரசுப் பதவி கிடைத்திருப்பதாகவும் அவர்களை அழைத்துப் போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் கூறுகிறான். யூரி வர மறுக்கவே கோமரோவ்ஸ்கியின் யோசனையில் தானும் வருவதாக பொய் சொல்லி லாராவை அனுப்பிவிடுகிறான்.இறுதியில் மீண்டும் மாஸ்கோவிற்கான வந்து சில படைப்புகளை எழுதி பிரசுக்கிறான். தனக்குள்ளேயே மீண்டு எழுந்து தன் ஆரம்பகால மருத்துவ வாழ்வை தொடர வேண்டுமென எண்ணிய போதும் அது இறுதித் தருவாயில் ஏற்படும் கடைசி உத்வேகமாகவே அமைந்து விடுகிறது. தன் பணிக்குச் செல்லும் வழியில் அவனுடைய மரணம் நிகழ்கிறது. ஆனால் அவனுடய கவிதைகள் தனக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டு சாஸ்வதமாக்கிக் கொள்வதோடு நாவல் நிறைவுறுகிறது.

 

நாவலின் இறுதி நெருங்க நெருங்க ஒருவிதமான அசௌகரியத்தை கொடுத்துக் கொண்டேயிருந்தது. அதற்குக் காரணம் வரலாற்றின் பிரம்மாண்டத்தை அருகில் உணர்ந்த திகைப்பென இப்போது தோன்றுகிறது. அதன் பிரம்மாண்டத்தின் முன்பு மானுடம் துரும்பாக மாறிப் போகும் தருணங்களைச் சொல்வதால். மனிதன் தன் சக்தியை விட பலமடங்கு உக்கிரமான பூதத்தை தொட்டெழுப்பி விட்டதன் அவலத்தைக் காட்டுவதால். அது கேட்கும் பலியில் மானுடம் முழுதையும் கொடுத்துவிட நேர்வதால் அவ்வுணர்வு வெளிப்படுகிறது போலும். மானுட மேன்மைக்காக தொடங்கப்படும் செயல் அதன் நேரெதிரான திசையில் செல்வதைக் கண்டும் தடுக்க முடியாமல் மானுடன் செயலற்று நிற்கிறான். வன்முறை என்னும் ஆதி மிருகம் அனைவரையும் தன் கருவிகளாக்கி குருதியாடி ஓயும் சித்திரத்தைக் கண்டு மனம் போடும் அரற்றலது.

 

நாவலின் இறுதி அத்தியாயத்தில் யூரியின் நண்பர்களிருவர் ஒரு மலையுச்சியிலிருந்து மாஸ்கோவைப் பார்க்கின்றனர். அவர்களின் கைகளில் யூரியின் கவிதைப் புத்தகங்கள். அனேகமாக அப்போது தான் மாஸ்கோவைப் பற்றிய ஒரு கவிதையைப் படித்திருப்பார்கள். அவர்களின் பார்வையில் மாஸ்கோ ஒரு அழகிய பெண்ணாக தன் பல்லாயிரம் வெளிச்சப்புள்ளிகளால் புன்னகைப்பதாகத் தோன்றுகிறது. அதன் மேல் பெருங்காதல் அவர்களுக்கு பொங்குகிறது. பேரழிவுகள் நிகழ்ந்த களம் ஆனாலும் இயற்கை தன் ஆற்றலை வெளியிட்ட இடம். பெரும் செழிப்பில் உறைந்திருக்கும் அந்த ஒன்றே பேரழிவிலும் குடிகொண்டுள்ளது. அத்தனை வாழ்க்கைச் சிக்கல்களையும் அகநெருக்கடிகளயும் மூழ்கி எழுந்து இறுதியில் ஆசிரியன் வந்து சேர்ந்திருக்கும் இடமது. அது எப்போதும் நேர் நிலையாகவே இருக்கும். அந்தச் சிரிப்பு போல.

 

இப்போது நினைத்துக் கொள்கிறேன் மாஸ்கோவும் லாராவைப் போலத்தான் என. கோமரோவ்ஸ்கியையும் யூரியையும் தன்னுள் சம அளவில் வைத்திருக்கும் லாரா.

 

முந்தைய கட்டுரைமோடி அரசு, என் நிலைபாடு
அடுத்த கட்டுரைஅண்ணாவின் ஓய்வு