இரண்டாயிரத்துப்பத்தின் கடைசிநாள் நான் பேருந்தில் கோவைக்குக் கிளம்பினேன். காலையில் கோவையில் அரங்கசாமி வந்து என்னை வரவேற்பதாக ஏற்பாடு. துணைக்கு ராமச்சந்திர ஷர்மாவும் வருவதாக. நான் ஏழு மணி சுமாருக்கு பேருந்து வந்துசேரும் என்று தகவல் சொல்லியிருந்தேன். அதிகாலை நாலரை மணிக்கு இறக்கி விட்டு விட்டார்கள்.கோவைக்குளிரில் போர்வை போர்த்து முண்டாசு கட்டி நின்றேன். நாஞ்சில்நாடனை செல்பேசியில் எழுப்பலாமா என்று எண்ணம் வந்தது. எடுப்பாரா? ஆனால் வந்துகுவியும் வாழ்த்துக்களை ஏற்க கும்பமுனி விடிகாலையிலும் சித்தமாகவே இருப்பார் என்று ஒரு ஊகம். இருந்தார்.
‘ஜெயமோகன் நீங்க எம்மெல்லே சின்னச்சாமி வீட்டுக்கு வாங்க…’’ ‘’எதுக்கு?’’ என்றேன். சின்னச்சாமி விடிகாலையில் ஏதாவது கறிவிருந்து கொடுக்கிறாரா? அவரது வீட்டுக்கு நேர் முன்னால்தான் நாஞ்சில்நாடன் வீடு. இறங்கியதும் ஈரிழைத்துவர்த்தை முந்தானையாக அணிந்து வந்து கதவை திறந்தார். உள்ளே சென்றதுமே ‘அப்டியே படுத்திடுங்க..பாப்போம்’ என்றார். நான் ஆசைப்பட்டதே அதுதான். சௌக்கியமா இருக்கேளா, சங்கீதா எப்டி இருக்கா?’ என்றெல்லாம் பேச அப்போது எனக்கும் திராணியில்லை. மனிதர்களை அவரைப்போல் நுட்பமாக உணர்பவர்கள் குறைவு
காலையில் அரங்கசாமியின் உற்சாகமான குரல் கேட்டு கண்விழித்தேன்.ராமச்சந்திர ஷர்மாவும் வந்திருந்தார். பாடப்போகிறவர் போல தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். ஒரே சிரிப்பொலி. நாஞ்சில் தன் புகழொளியின் வதைகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நாலஞ்சு நாஞ்சில்நாடன் காணாது போலிருக்கு. தெரிஞ்சவரு ஒருத்தர் வந்தார். ஏல, பாலுவாங்கியே ஒருலெச்சம் தீந்திரும் போலுருக்கேன்னு சொன்னார்’ என்றார் நாஞ்சில்.
நாஞ்சில் வீட்டில் காலையுணவு. தோசை, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணை விட்டு குழைத்த தேங்காய்த்துவையல், ரசாயன உரம்போடாத வாழைப்பழம் [ தேடி பிடித்து வாங்கப்பட்டது] ஆகியவற்றுடன். ஷர்மா நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேனே’ என்றார். வாசனையை பார்த்தபின் ‘சரி ஒரு பாதி’ என்றார். ஏழெட்டு சாப்பிட்டிருப்பார் என்று தோன்றியது, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தமையால் எண்ணவில்லை.
காலை பதினொரு மணிக்கு திருவண்னாமலை கிளம்ப திட்டமிட்டிருந்தோம். வழக்கம்போல ஒன்றரை மணி நேர தாமதம். திருப்பூர் சென்று அரங்கசாமி மாமியார் வீட்டுக்கு சென்று இனிப்பு காபி சாப்பிட்டோம். நாஞ்சில் லட்டு எடுத்துக்கொண்டார். ‘ஷுகர்…’ என ஞாபகப்படுத்தினேன் ‘செரி போட்டு, சாகித்ய அக்காதமி வாங்கியாச்சுல்லா?’ என்றார். அங்கிருந்து சந்திரகுமார் வீடு சென்றோம். சந்திரகுமாரின் காரில் ஈரோடு வந்தோம். சாலையோரமாக கிருஷ்ணனும் மோகனரங்கனும் விஜயராகவனும் காத்திருந்தார்கள். காபி சாப்பிட்டுவிட்டு கிருஷ்ணனை மட்டும் ஏற்றிக்கொண்டு திருவண்னாமலை.
திருவண்ணாமலைக்கு மாலையில் சென்று சேர்வோமெனத் திட்டம். ஆனால் செங்கம் வழியாக மணிக்கு நாலரை கிலோமீட்டம் வேகத்தில்தான் நகர முடிந்தது. எட்டரை மணிக்கு திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வரவேற்று எஸ்கெபி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்றார். அங்கே தாளாளர் கருணா வந்திருந்தார். நான் பவாவை ஒரு வருடம் இடைவெளிக்குப் பின் சந்திக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கையிலும் அவரை முதலில் சந்தித்து 22 வருடமாகிறதென நினைத்துக்கொள்வேன்.
1989ல் திருவண்ணாமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். பவாவும், போப்புவும், ஷாஜகானும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலைக் கிளையின் இன்றைய தலைவரான கருணாவும் ஒரே நாளில் அறிமுகமானார்கள். கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் இருந்தார்கள். நல்ல விஷயங்களுடன் எதிர்மறை விஷயங்களும் கலந்துதானே விதியின் முரணியக்க இயங்கியல் பொருள்முதல்வாதம் நிகழ்கிறது? அன்றுதான் ’சிறுகதைக்கிழார்’ ’நாவல்நாயகம்’ மேலாண்மை பொன்னுச்சாமியும் அறிமுகமானார்.
1990ல் ரப்பர் வெளிவந்தது . சிறுகதைகளை தொகுப்பாக கொண்டுவர ஆசைப்பட்டேன். அன்று பிரசுரமாகியிருந்த சிறுகதைகள் அளவுக்கே கைப்பிரதிகளாகவும் பல கதைகள் இருந்தன. ’டேய் பவா கிட்டே கேட்டுப்பார்… அவன் சொன்னா மீரா கேப்பார். பவா அம்மாதான் அவருக்கு வர்ரப்ப எல்லாம் நாட்டுக்கோழி அடிச்சு சோறு போடறாங்க’ என்ற கோணங்கியின் சொற்களை நம்பி என்னுடைய சிறுகதைகளை நூலாக்க முடியுமா என பவாவிடம் நான் கோரினேன். அன்னம் வெளியீடாக ’திசைகளின் நடுவே’ வெளிவந்தது.
அன்று மீரா தமிழிலக்கியத்தின் பிதாமகர் போல. கைப்பணத்துடன் வந்து பதிப்பகம் தொடங்கி நாற்பதுபேருக்குமேல் அறிந்திராத சிற்றிதழிலக்கியவாதிகளின் நூல்களை வெளியிட்டு பதிப்புரிமையும் அளித்து பார்க்கும்போதெல்லாம் சோறும் வாங்கித்தரும் கொடைவள்ளல். அதோடு வெளியிடும் நூல்களை அவரே படிப்பார், மெய்ப்பு பார்ப்பார், நாலுபேரிடம் ‘தம்பி நல்லா எழுதறானே, படிச்சுப்பாக்கிறது’ என்று தள்ளியும் விடுவார்.
அன்னம் நூல்கள் அன்று மிகமிக தரமான அச்சில், தரமாக மெய்ப்பு பார்க்கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தன. மீரா எழுத்தாளர்களிடம் ஒருவகை தந்தைத்தனமான பிரியத்துடன் இருப்பார். கோணங்கி அவரை கேலிசெய்துகொண்டே இருப்பான். ”அக்காவை கல்யாணம் பண்ணினபிறகுதான் அண்ணன் காதல்கவிதைகளையே எழுத ஆரம்பிச்சாரு. நல்லவேளை அக்காவுக்கு இதெல்லாம் தெரியாது. கல்யாணம் முடிச்சு பதினெட்டு வருசம் கழிச்சு அக்காவுக்கு ஒரு சின்ன சந்தேகம். ‘ஏங்க வீடெல்லாம் மீரான்னு ஒரு பொம்புளைப்புள்ளை புக்கா கெடக்கே, அவ ஆரு?’ன்னு கேட்டா. அண்ணன் அப்டியே மலந்துட்டாரு”
எந்த அவையிலும் மீராதான் சாப்பாட்டுக்கு பில் கொடுக்கவேண்டும். அதுதான் வளமுறை. ஏனென்றால் அவர்தானே பதிப்பாளர்? மீராவும் அதை ஏற்றுக்கொண்டிருந்தார். ஒருமுறைகூட ‘ஏண்டா உன் புக்கைபோட்டு மாசம் ஆயிரம் நஷ்டம். நியாயப்படி நீங்கதாண்டா எனக்கு பில் குடுக்கணும்’ என்று அவருக்கு சொல்லத் தோன்றவில்லை. ஒரே ஒருமுறை அவர் ‘எவ்ளோ செலவு’ என்று கொஞ்சம் சினக்க கோணங்கி ‘விடுங்க, அப்பாலே சிற்றிதழ் ரைட்டர்லாம் சேர்ந்து உங்களுக்கு திதி பண்ணிடறோம்’ என்றான்.
மீரா இல்லாவிட்டால் தமிழில் நவீன இலக்கியத்தின் மூன்று அலைகள் உருவாகியிருக்காது. ஒன்று கி.ராஜநாராயணன் அலை. அவர்தான் கி.ராவின் நூல்களை மிக அழகிய ஆக்கங்களாக கொண்டுவந்து தமிழகம் முழுக்க கொண்டுசேர்த்தவர். கி.ராவுக்கு அறுபதாமாண்டு விழாவே அன்னம்தான் நடத்தியது. ராஜநாராயணீயம் என்னும் அழகிய நூலையும் கொண்டுவந்தது. இரண்டு, வண்ணதாசன்- நாஞ்சில்நாடன் அலை. அவர்களின் நூல்களின் முதல்பதிப்புகள் எல்லாமே அழகானவை
என் தலைமுறையின் நான், கோணங்கி ,ராமகிருஷ்ணன் மூவருமே அன்னம் உருவாக்கங்கள்தான். எங்கள் ஆரம்பகால சோதனைமுயற்சிகளை அவர் ஆதரித்தார். ‘மாஜிக்கல்ரியலிசமோ என்ன எழவோ எழுதறானுக, ஆனா வாசிக்க நல்லாருக்கு. தொலையட்டும்’என்னும் இலக்கியவிமர்சனக் கருத்து கொண்டிருந்தார். கோணங்கி அவருடைய மானசபுத்திரன்.
அவ்வருடம் திருவண்ணாமலையில் நடந்த விவாதங்களை இப்போதும் உத்வேகத்துடன் எண்ணிக்கொள்கிறேன். சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அளித்த அதிர்ச்சி எல்லா தோழர்களிடமும் இருந்தது. பழைமையை உதறி புதிதாக எழுந்துவிடவேண்டுமென்ற துடிப்பு. அன்று உருவாகிக்கொண்டிருந்த புது வகை எழுத்துக்களை தமிழில் கொண்டுவர வேண்டும், முற்போக்கு அரசியலின் சுமை அதற்கு இருக்கக் கூடாதென்ற வேகம். ‘ஸ்பானியச்சிறகும் வீரவாளும்’ என்ற தொகுப்பின் விதையை கோணங்கி அந்த இரவில் பவா வீட்டு முற்றத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது உருவாக்கினார்.
ச.தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’ என்ற கதையில் இருந்து அந்த தலைப்பு. நான் ராமகிருஷ்ணன் கோணங்கி ஆகியோருடன் ஷாஜகானும், போப்புவும் அதில் எழுதியிருந்தோம். பிந்தைய இருவரும் வாழ்க்கையின் அலைகளால் எழுதமுடியாது ஆனார்கள். அன்று தொகுப்பின் சிறந்த கதையாக அசோகமித்திரனால் சுட்டப்பட்டது ஷாஜகானின் சிறுகதைதான். அந்த தொகுப்பு அன்று உருவாக்கிய அலை இன்றும் நினைவிருக்கிறது. அது அன்னம் வெளியீடாக வந்தது.
போப்புவை நீண்ட இடைவேளைக்குப்பின் பொறியியல் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். கொஞ்சநாள் சிங்கப்பூரில் இருந்தார். அதன்பின் ஓசூரில் ஒரு உணவுவிடுதி நடத்தினார். கட்டிக்கொண்டபோது கொஞ்சம் கண்கலங்கினோம். விடுதியில் அப்போதே அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சிரிப்பும் கொண்டாட்டமும் இலக்கிய விவாதமுமாக. பவா அங்கே சுந்தர ராமசாமி வந்ததைப்பற்றிச் சொன்னார். தரமான மேடை உரையை அப்படியே பதிவுசெய்து கட்டுரையாக ஆக்க முடியவேண்டும் என்று ராமசாமி சொன்னார் என்றார். ராமசாமி பேசியதை அப்படி பதிவுசெய்து கொண்டுசென்றபோது எந்த சொற்றொடைரையும் விடவேண்டும் என்று தெரியவில்லை என்றார் பவா.
நான் அதை ஏற்கவில்லை. என்னுடைய உரைகள் நூலாக வந்திருக்கின்றன. அச்சுக்கு அப்படியே செல்லும்படி செறிவாக உரையாற்றுவது என் வழக்கம். ஆனால் நானோ ராமசாமியோ பேச்சாளர்கள் அல்ல. எங்களுக்கு அகத்தூண்டல் எழுதும்போதுதான். எழுதியவற்றை அப்படியே மேடையில் நினைவுகூர்ந்து சொல்கிறோம், அவ்வளவுதான். நல்ல மேடைப்பேச்சாளர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு மேடையிலேயே அகத்தூண்டல் நிகழும். அங்கேயே கருத்துக்கள் பிறந்துவரும். அத்தகைய பேச்சு மேடையில் தென்றல் போல அலையலையாக அடிக்கும். புயல்போல திடீரெனச் சுழலும். அதன் வடிவம் கட்டுரையின் வடிவமே அல்ல என்றேன்.
குன்றக்குடி அடிகளாரின் பேச்சையும் மபொசியின் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். அவை அத்தகைய பேச்சுகள். மலையாள மார்க்ஸிய அறிஞர் எம் என் விஜயனின் பேச்சு அத்தகையது. பி கோவிந்தப்பிள்ளைக்கு நடந்த வாழ்த்துக்கூட்டத்தில் எம் என் விஜயன் பேச ஆரம்பித்தார். வழக்கமாக பேச்சு எப்படி ஆரம்பிக்கும்? ‘பி கோவிந்தப்பிள்ளையை எனக்கு இருபது வருடமாக தெரியும்.நாங்கள்…’ என்றுதான். ஆனால் சட்டென்று ‘மிக அதிகமாக புல்தின்று மிகக்குறைவாக பால் கறக்கும் ஒரு பசுதான் அழகியல்கோட்பாடு…’ என ஆரம்பித்தார். ஜிவ்வென்று அந்த வரியிலேயே கூட்டம் மேலே சென்றது என்றேன்
பவா மார்க்சிய கட்சியின் பேச்சாளரும் எம்.எல்.ஏவுமான நன்மாறன் அத்தகைய பேச்சாளர் என்றார் . அழகியல் நோக்கு இருக்காதென்றாலும் அரசியல் விமர்சனம் கூர்மையானது. நகைச்சுவை மிக இயல்பானது. ஓசுரில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்குப்பின்னால் யாரோ ஒருவன் ஆரன் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். நன்மாறன் ‘மேடை நவராது தோழர், நீங்கதான் சைடு குடுக்க்ணும்’ என்று பேச்சினூடாகவே சொன்னார் என்றார். நன்மாறனின் மேடைப்பேச்சைப் பற்றி, மேடைப்பேச்சின் நல்ல தருணங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்தோம். கெவின்கேர் பாலாவும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள்.
பத்தரை மணிக்கு பவா கிளம்பிச்சென்றார். அதன்பின்னர் நஞ்சில்நாடனின் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில் இருந்து அரவிந்த் [குரங்குத்தவம் இணையதளத்தை நினைவுகூர்க. கென் வில்பர் பற்றி எழுதியவர். பென்சில்வேனியா பல்கலை ஆராய்ச்சி மாணவர்] செந்தில்குமார் தேவன் [ ஜெர்மனியில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார்] ஆகியோர் வந்திருந்தார்கள். நாஞ்சில்நாடனை அவர்கள் இருவரும் முதல்முறையாகச் சந்திக்கிறார்கள். நாஞ்சில்நாடன் எவரிடமும் சில கணங்களில் இயைந்துவிடக்கூடியவர். நாஞ்சில்நாடன் அவர்களில் ஒருவராக ஆனார். இரண்டு மணிக்கு தூங்கினோம்.
காலையில் ஏழுமணிக்கு எழுந்து கோயிலுக்குச் சென்றோம். கருணா அவரது ஆளை ஏற்பாடு செய்து கோயிலைப்பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பூட்டுவது திருவண்ணமலைக் கோயிலின் பிரம்மாண்டம். கோபுரங்கள் எழுந்து சூழந்த ஒரு சிறிய ஊர் போல. நல்ல கூட்டம், ஆனால் கோயிலின் விரிவு கூட்டத்தைச் சிறிதாக்கிவிட்டிருந்தது. சபரிமலை பக்தர்கள். கோயிலில் இருந்து நேராக ரமணாசிரமம். பத்னொரு மணிக்கு அங்கே அளிக்கப்படும் உணவுக்காக சாமியார்கள் காத்து நின்றிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த வரிசையில் நானும் நின்றிருந்திருக்கிறேன்.
இருபதாண்டுக்காலம் இடைவெளிக்குப்பின் வருகிறேன். ரமணாசிரமம் இன்னும் கூட்டமாக ஆகிவிட்டிருந்தது. எதிரே இன்னும் அதிக கடைகள், கட்டிடங்கள். ஆனாலும் ரமணரின் சமாதி வைக்கப்பட்ட கூடத்திலும் அவர் இருந்த அறையிலும் அவரது அருகாமையை உணர முடிந்தது. அவரது சிலை அவரை நேரில் காண்பது போன்ற ஒரு மன எழுச்சியை உருவாக்கியது. அந்த இடத்தில் அமர்ந்து நான் ஆழமான மனக்கொந்தளிப்புகளை அடைந்திருக்கிறேன். இப்போது அலைகள் அனேகமாக இல்லை. கடல் பனிக்கட்டியானது போல.
மதியம் பவா வீட்டுக்குச் சென்றோம். பவாவின் வீடு நான் காணக்காண வளர்ந்தபடியே செல்கிறது. அங்கே இருந்த சின்ன கூரை வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அவரது இனிய அப்பா அப்போது இருந்தார். ஆளை பார்த்ததுமே கோழி பிடிக்கச் செல்லும் அம்மா. பவாவின் இனிமை அவரது அப்பாவின் பாரம்பரியம். அருண்மொழியிடம் உருவான காதலை பவாவிடம் சொல்வதற்காக வந்து அவர் இல்லாமல் அவர் அப்பாவிடம் நிம்மதியில்லாமல் நெளிந்துகொண்டே பேசியதை நினைத்துக்கொண்டேன். அந்த வீடு கட்டப்பட்டபோது நான் இருந்திருக்கிறேன். அதன் பால்காய்ச்சு விழாவில் அஜிதனுடன் நான் கலந்துகொண்டேன், அஜிதனுக்கு ஒரு வயது. கூடத்தில் சறுக்கி விழுந்த முதல் குழந்தை அவனாகவே இருக்க வேண்டும்.
அதன்பின் பவாவுக்கும் ஷைலஜாவுக்குமான காதல். பவா என்னை ஷைலஜா வீட்டுக்கு இயல்பாகக் கூட்டிச்சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததுமே எனக்கு விஷயம் தெரிந்துவிட்டது. பவா சிரித்துக்கொண்டே இருந்தார். அதன்பின் அவர்களின் திருமணம். நான் மீண்டும் வந்தபோது மாடி கட்டப்பட்டிருந்தது. இப்போது வீட்டை ஒட்டி கருங்கல்லால் ஒரு இணைப்புவீடு கட்டியிருக்கிறார். விசித்திரமான ஒரு விரிவுணர்ச்சியை அந்த இடம் அளித்தது.குளிர்ந்த குகைக்குள் செல்லும் எண்ணம். அல்லது புராதன கோட்டை ஒன்றுக்குள் இருக்கும் எண்ணம்.
மதியம் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தூங்கிவிட்டு மாலை ரமணாசிரமம் எதிரே உள்ள கோவாடிஸ் என்ற நிறுவனத்தின் அரங்குக்குள் சென்றோம். அது ஒரு சர்வமத பிரார்த்தனை நிலையம். ஏழு மணிக்கு அதன் பிரார்த்தனை முடிந்தபின் அதன் வட்டவடிவ அரங்கில் கிட்டத்தட்ட எண்பதுபேர் கூடியிருந்தார்கள். பவா செல்லத்துரை ஒருங்கிணைக்க நாஞ்சில்நாடனைப்பற்றி தோழர் சந்துருவும் நாஞ்சிலின் நண்பர் லிங்கமும் பேசினார்கள். நான் பத்து நிமிடங்களில் நாஞ்சில்நாடனின் படைப்புலகைப்பற்றிப் பேசினேன்.
மிஸ்டர் முத்து நாகர்கோயில் நகருக்கு வந்திறங்கும்போது இருட்டாக இருந்தது. கறுப்புக்கண்ணாடியை கழட்டினால் வெயில் என ஆரம்பிக்கிறது நாஞ்சிலின் கதை ஒன்று. எதிரே இயற்கை உபாதையைச் சுட்டிக்கொண்டு கையில் பையுடன் ஒருவர் சிலையாக நின்றார். முத்து மாலையிலேயே ஊருக்கு போயிருக்கலாம். ஆனால் கோலமிடும் பெண்கள் எழுந்து திரும்பிப்பார்க்காமல் ஊர் புகுந்தால் அது என்ன ஊர்புகுதல்?
முத்து மறுநாள் கிராமத்திற்குள் செல்கிறான். அம்மைக்காரிக்கு பெருமை பிடிபடவில்லை. மைத்துனன் வாட்சையும் தம்பிகள் சட்டை பாண்ட்களையும் உரிமையுடன் எடுத்துக்கொண்டார்கள். அம்மைக்காரி அங்கே இங்கே கடன் வாங்கி கொடுத்த ரூபாய்க்குத்தான் முத்து கிளம்ப வேண்டியிருந்தது. பக்கத்து படுக்கைக்காரனின் வாட்சையும் அறைக்காரர்களின் சட்டைபாண்ட்களையும் கடன்கழிக்க எத்தனை மாதம் இன்னும் ‘தோசை இடியாப்பம் வடை’ என்று ஒப்புவிக்க வேண்டும் என்று எண்ணியபோது முத்துவின் கண்கலங்கியது. ‘சவம் அம்மையை பிரியுதேன்ணு அழுவுது’ என்றாள் அம்மைக்காரி
ஏழை எளிய மக்களின் நுண்ணிய அவலங்களை தர்மசங்கடங்களை நெஞ்சில் தைப்பது போலச் சொல்வதே நாஞ்சில்நாடனின் கலை. ஆனால் அதை அவர் அப்பட்டமாக கோபமாக சொல்லியிருந்தால் பிரச்சாரகராகி இருப்பார். முற்போக்காக ஆகியிருப்பார். அவரது நகைச்சுவையே அவரை கலைஞனாக்குகிறது என்று சொல்லி முடித்தேன்.
நாஞ்சில் கடைசியாகப் பேசினார். மிக உற்சாகமான பேச்சு. நாஞ்சிலின் நகைச்சுவை அப்படி வெளிப்பட்ட தருணங்கள் மிகவும் குறைவு. வெடிச்சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது. என் எஸ் கிருஷ்ணனின் படத்தில் வரும் கதை ஒன்று உண்டு என்றார் நாஞ்சில். ஒரு கிளி வாயில் ஒரு பைசாவை வைத்துக்கொண்டு ‘எங்கிட்ட ஒரு பைசா இருக்கே, யாருக்குமே வேண்டாமா?’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது. சள்ளை தாளாமல் மன்னன் அதை வாங்கிக்கொண்டான் ‘ பிச்சைக்கார ராஜாவுக்கு ஒரு பைசா கடன் குடுத்தேனே’ என்று கிளி ஊரெல்லாம் போய் பாட ஆரம்பித்தது. மானம் போவதரிந்த ராஜா பைசாவை திருப்பி கொடுத்தார் ‘ அய்யய்யே ராஜா பயந்துபோய் பணத்தை குடுத்திட்டாரே’ என்று கிளி ஆரம்பித்தது. சாகித்ய அக்காதமியை விடப்போவதில்லை என்று சொன்னபோது அரங்கு சிரித்து கொந்தளித்தது.
எஸ் கெ பி கல்லூரியில் இரவுணவு. அதன் பின்னர் நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் அரசியல், நிறைய சிரிப்பு. ஒரு மணிக்கு நாஞ்சில் படுத்துக்கொண்டார். இரண்டு மணிக்குத்தான் விஜயராகவனும் அரங்கசாமியும் வந்து சேர்ந்தார்கள்– கூட்டத்துக்காக ஈரோட்டில் இருந்து கிளம்பிய குழு. அதன்பின் மேலும் பேச்சு. நான் நாலரை மணிக்கு சென்று படுத்துக்கொண்டேன். காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தால் அதே சோபாக்களில் அமர்ந்து அத்தனைபேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்து கொண்டேன்.
எட்டரை மணிக்கு கருணாவின் காரிலும் அரங்கசாமியின் காரிலுமாக சென்னைக்கு கிளம்பினோம். செல்லும்போது போப்பு கூப்பிட்டார். மிக நெகிழ்ச்சியாக பேசினார். ’இருபத்திரண்டு வருஷம் முன்னாடி எப்டி இருந்தியோ அப்டியே இருக்கே. நினைக்க நினைக்க நெகிழ்வா இருக்கு. அதே உற்சாகமான சின்னப்பையனா…அப்ப நாங்க உன்னை கிண்டல் பண்ற மாதிரி இப்ப சின்ன பசங்க உன்னை கிண்டல் பன்றாங்க…அந்த எடம் தான் உன்னோட அடையாளம்’ என்றார்
‘என்னால ஒரு ராத்திரி முழுக்க இலக்கியம் பேச இப்ப முடியுமான்னு எனக்கே சந்தேகமா இருந்தது. பேசிப்பேசி விடியவைச்ச நாட்களெல்லாம் எங்கியோ கனவு மாதிரி போய்ட்டுது. இப்ப நான் இந்த அளவுக்கு இலக்கியம் பேசியிருக்கேன்ங்கிறது நினைக்க நினைக்க எனக்கே நம்ப முடியலை. வீட்டுக்கு வந்து ஜெயஸ்ரீ கிட்டயும் ஷைலஜாகிட்டயும் சொல்லிட்டே இருக்கேன். தூங்க முடியலை…இந்த நாள் என் லைஃப்ல ஒரு பெரிய நாள்’
அந்த குரல் என்னை என்னவோ செய்தது. 1991ல் சுபமங்களாவில் போப்புவின் தொகுப்பைத் தமிழின் பெரும் நம்பிக்கை ஒன்றின் தொடக்கம் என்று எழுதியிருந்தேன். என் நண்பன் அவனைச் சூழ்ந்த விதியைத் தாண்டி ஒரடி எடுத்து வைக்க முடிந்திருந்தால் தமிழிலக்கிய உலகமே அவனைப்பற்றிப் பேசியிருக்கும். ஆனால் இன்னமும் நாளிருக்கிறது. எத்தனையோ மரங்கள் கிளை கனத்தபின் காய்த்துக்குலுங்க ஆரம்பிப்பதில்லையா?