முடிவடையாத கலைக்களஞ்சியம்- கடிதங்கள்

amaravati_stupa-759

 

ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

அன்புள்ள ஜெ

ஐரோப்பா-9: பிரிட்டிஷார் உலகம் முழுதிலுமிருந்து கலைப்பொருட்களை எடுத்துச் சென்றது பற்றி எழுதியிருந்தீர்கள். ஐரோப்பியர்கள், தங்களுக்குள் நாசி ஜெர்மனிக்கு மட்டும் அந்த உரிமை இல்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல.

ஹிட்லர் தன் கனவு சாம்ராஜ்யத்தின் தலைநகரான பெர்லினுக்காக பெரும் திட்டங்கள் வைத்திருந்தார். தன் சொந்த ஊரான லின்ஸ்-ல் பெரிய கலைஅருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஜெர்மனி தன் கீழிருந்த பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருங்கொள்ளை நிகழ்த்தியது. மற்ற அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் அரண்மனைகளிலிருந்து கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஜெர்மனியில் பதுக்கப்பட்டன. 2007-ல் எழுதப்பட்ட Monuments Men நூலும் அதைத் தழுவி 2014-ல் எடுக்கப்பட்ட திரைப்படமும் இந்தக் கதையை சொல்கின்றன.

போரின் இறுதியில் ஜெர்மனி தோற்கும் தருவாயில் ஹிட்லரின் படைத்தளபதிகள் பொக்கிஷங்களை தங்களுக்காக திருடிக்கொள்கிறார்கள் அல்லது எரித்துவிடுகிறார்கள். முன்னேறி வரும் சோவியத் ரஷ்யப் படைகளும் இதையே செய்கின்றன.

அமெரிக்க பிரிட்டிஷ் படைகளில் இருக்கும் சில கலை ஆர்வலர்கள் இதை தடுக்க முனைகிறார்கள். கலைப்பொருட்கள் திருடப்பட்டால் மேலை சமூகமே வீழ்ந்துவிடும் என்று சொல்லி மேலிடம் வரை அழுத்தம் தந்து நிதி ஏற்பாடு செய்து முன்னூறு பேர் கொண்ட தனிப்படைப்பிரிவு அமைக்கிறார்கள். அதில் பெரும்பாலும் போர் அனுபவமற்ற அருங்காட்சியக காப்பாளர்கள் கலை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் ஐரோப்பாவில் ஊடுருவிச் சென்று கலைப்பொக்கிஷங்களை மீட்கிறார்கள். கலைக்காக ரத்தம் சிந்தியவர்கள் என்ற வரலாறு பதிவாகிறது.

நாசிக்கள் அடித்த பெருங்கொள்ளை உலகம் முழுவதும் பதுக்கப்பட்டிருக்கிறது என்பதால் கலைப்பொருட்களை மீட்டு மற்ற ஐரோப்பியர்களிடம் ஒப்படைப்பதற்கும் ஆவணப்படுத்துதலுக்கும் தனி பவுண்டேஷனே ஏற்படுத்தப்பட்டுள்ளது, எழுபது ஆண்டுகளாக அந்தப்பணி இன்னும் தொடர்கிறது.

ஆனால் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் தங்கள் மியுசியத்தில் அதே போன்ற பொருட்கள் இருப்பதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இன்று பிரிட்டிஷ் மியுசியம் தன்னிடம் உள்ள லட்சக்கணக்கான கலைப்பொருட்களை டிஜிடல் முறைகளில் ஆவணப்படுத்தி இணையத்தில் வெளியிடுகிறது. அதன் மூலம் நாசிக்களும் தாங்களும் வேறுவேறு என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

மதுசூதன் சம்பத்

Jeyamohan UK visit 232

அன்புள்ள ஜெ

லண்டன் பயணக்கட்டுரையில் லண்டன் மியூசியத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அங்கே சென்றபோது அந்த பிரமிப்பும் பின்பு சலிப்பும்தான் ஏற்பட்டது . அங்கே சென்று அனைத்தையும் பார்ப்பது நீங்கள் சொல்வதுபோல கலைக்களஞ்சியத்தைப் படிப்பதுபோலத்தான் . பயன் கிடையாது

அங்குள்ள கலைப்பொருட்களில் பெரும்பகுதி அவர்களின் உலக ஆதிக்கத்தால் திரட்டப்பட்டவை. ஆகவே அவை ஆதிக்கத்தின் கதையையும்தான் சொல்கின்றன. ஆனால் உலகிலுள்ள எல்லா பெரிய நாகரீகங்களும் அவ்வாறு ஆதிக்கம் வழியாகத் திரட்டப்பட்டவைதான். அவ்வாறு திரட்டப்படாவிட்டால் அவையெல்லாம் அப்படி ஒரே இடத்தில் திரண்டிருக்க வாய்ப்பில்லை

அங்கே நீங்கள் சொல்வதுபோல பெரிய அனுபவம் என்பது வெவ்வேறு கலைப்பள்ளிகளை வரிசையாகப்பார்ப்பதுதான். அவை ஒன்றுடன் ஒன்று வேறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன

ராமச்சந்திரன்

Jeyamohan UK visit 320

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஐரோப்பா பதிவுகள் அற்புதமாய்; ரம்மியமாய் செல்கிறது. மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தையின் பாதையோ, அதி வேகத்தில் செல்லும் ஐரோப்பிய பறவையோ ; உங்களுடைய பயணக்கட்டுரைகள் அனைத்தும் கலை, இலக்கியம், மதம், பண்பாடு, அரசியல், சரித்திரம் , அறிவியல், தொன்மம் என பல்வேறு துறைகளை தொட்டு விரிந்து, எங்களுக்கு பல திறப்புகளை, திருப்புமுனைகளை காண்பித்தபடி செல்கிறது.

குறிப்பாக லண்டன் பற்றிய பதிவுகள் அனைத்திலும் இந்தியாவையும் இணைத்தே எழுதியுள்ளீர்கள். நமது காந்தியை திரைப்படமாக இயக்கி காண்பிக்க ரிச்சர்ட் அட்டன்பரோ தேவைப்படுகிறார். எலிசபெத் ராணியை

திரைப்படமாக இயக்கி காண்பிக்க நம்மூர் சேகர் கபூர் தேவைப்படுகிறார். இந்தியாவும் இங்கிலாந்தும் பின்னி பிணைந்து விட்டதை, அதன் சிக்கல்களை , சரடுகளை அழகாக பிரித்து காண்பிக்கிறீர்கள்.

ரோம் வாட்டிகன் சபையிடமிருந்து துண்டித்துக்கொண்ட இங்கிலாந்து, ரோமன் கத்தோலிக்கம் (48%), சீர்திருத்த கிருத்துவம் (48%) என இரண்டாக உடைகிறது. நம்மூர் எம்எல்ஏக்களை கடத்துவதை போல் நாலு முக்கிய ஓட்டுக்களை கடத்தி சென்று, எலிசபெத் மகாராணியை (சீர்திருத்த கிருத்துவம்) அரியணையில் ஏற்றிவிடுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் ஐநூறு வருடங்கள் கழித்து ஐரோப்பாவிடமிருந்து துண்டித்து கொள்ள இங்கிலாந்து சமீபத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தியது. அதே நாலு சதவீதம் ஊசலாடி, கடைசியில் துண்டித்துக்கொள்ளலாம் (52%) என்று BREXIT முடிவாகிவிட்டது. History Always Repeats. கலைகிறதா ஒற்றை மானுடத்தின் கனவு? என்று நீங்கள் தமிழ் ஹிந்துவில் ஒரு அருமையான கட்டுரை எழுதியதாக ஞாபகம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பைரன் மற்றும் கவிஞர்கள் பற்றிய பதிவுகள் அருமை. யானை டாக்டர் சிறுகதையில் டாக்டர் கே சொல்லுவார் ”Man, Vain Insect” என்று. வெள்ளை யானை நாவல் நெடுக்க பைரன் கவிதைகள் வரும்.

பைரன் மகள்தான் Ada Lovelace. கவிஞனின் மகள் கணிதத்தில் புலி. உலகின் முதல் பெண் கணிப்பொறியாளர். கணிப்பொறியின் தந்தை எனப்படும் Charles Babbage உடன் சேர்ந்து கணிப்பொறித்துறையின் எதிர்காலத்துக்கு அடித்தளமிட்டவர். ”Poetic Science” என்று அறிவியலை கவிதை மூலமாகவும் அணுகலாம் என்று சொன்னவர்.

அதன் பிறகு நூறு வருடங்கள் கழித்து Alan Turing கணிப்பொறி கனவுகளை சாத்தியமாக்கினார். இன்றைய உலகம் java, python என்று வந்துவிட்டாலும், எண்பதுகளில் அமெரிக்கா, பைரன் மகள் நினைவாக ஒரு கணிப்பொறி மொழிக்கு ADA என்று பெயர் வைத்தது. விமானக் கருவிகளில், Satellite தொலைத்தொடர்புகளில் ADA மொழியின் பயன்பாடு அதிகம்.

நீங்கள் சொல்வது போல், அறிவும், ஞானமும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் அழைத்து செல்கிறது. அதன் பிறகு சிகரங்களை உச்சங்களை கனவுகளை அடைவதற்கு கவிதையால் மட்டுமே முடிகிறது. கணிப்பொறியில் இன்று நாம் சாதிப்பதற்கு, ஒரு கவிதையோ, கவிஞரோ, கவிஞரின் மகளோ அன்று தேவைப்பட்டிருக்கிறது.
நன்றி.

அன்புடன்,

ராஜா.

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள்- விமர்சனம்
அடுத்த கட்டுரைகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்… சுபஸ்ரீ